Headlines News :
முகப்பு » » வெளிநாட்டு வேலைவாய்ப்பின் வெற்றி தந்தையர் குடும்பப் பொறுப்பை ஏற்பதிலேலே தங்கியுள்ளது - எஸ். வடிவழகி

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் வெற்றி தந்தையர் குடும்பப் பொறுப்பை ஏற்பதிலேலே தங்கியுள்ளது - எஸ். வடிவழகி


பொதுவாகவே குடும்பங்களில் தந்தைமார் குடும்பத்துக்காக உழைப்பதைத் தவிர, குடும்பத்தை நடத்துவதில் உள்ள ஏனைய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதில்லை. வீட்டு வேலைகள் அனைத்தும் மனைவியுடைய அல்லது தாயுடைய பொறுப்பாகவே கருதப்படுகிறது. பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த நிலைமை வெளியிடங்களை விட மோசமாக காணப்படுவதற்கு கணவன் அல்லது தந்தையர் வீட்டு வேலை தொடர்பாக தமக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற மனப்பாங்கில் வாழ்ந்து வருவதே காரணமாகும்.

சில குடும்பங்களில் பொறுப்புள்ள கணவர்மார் வீட்டு வேலைகளை பொறுப்புடன் செய்யும் போது, அயலவர்கள் அவ்வாறானவர்களை முதுகெலும்பில்லாதவன்,மனைவிக்குப் பயந்தவன் என்றெல்லாம் கூறி கேலி பண்ணும் நிலை காணப்படுகிறது. இதனால் இதனை ஒரு கெளவரப்பிரச்சினையாக கருதி சில கணவன்மார்கள் வீட்டு வேலைகளை தவிர்த்துக் கொள்கின்றனர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று மனைவிமார் வெளிநாடு செல்லும் போது கணவர்கள் மேலதிக பொறுப்பை ஏற்க தயாரில்லாத போது அல்லது தயங்கும் போது குடும்பத்தில் பாரதூரமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தலைவிகளாவர். இந்த குடும்பத்தலைவிகளே குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர்கள். அவர்களே பிள்ளைகளை வளர்த்து பாதுகாத்தவர்கள். பிள்ளைகளுக்கு நோய்கள் இருந்தால் அது தொடர்பான வைத்திய அறிக்கைகள் கிளினிக் அட்டைகள் அவர்களுடைய பொறுப்பிலேயே இருந்தன. பொதுவாக குடும்ப செலவுகளை அவர்களே கவனித்துக் கொண்டார்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான எல்லா விடயங்களையும் அவர்களே தெரிந்து வைத்திருந்தார்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பணிகளை தயார் செய்தவர்களும் அவர்களேயாகும்.

உணவு சமைப்பதில் இருந்து உடைகளை தூய்மைப்படுத்துவது வரை முழுக்குடும்பப் பொறுப்பையும் ஏற்று குடும்பத்தை நடத்தி வந்த குடும்பத் தலைவிகளான தாய்மார்கள் வெளிநாடு சென்றவுடன் அவர்கள் இல்லாததால் ஏற்பட்ட இடைவெளியை கணவன்மார்களால் அல்லது தந்தைமார்களால் நிரப்ப முடியாத நிலை ஏற்படும் போது குடும்பம் கடுமையான சவால்களை எதிர்நோக்குகிறது. குடும்பத் தலைவிகள் வெளிநாடு சென்றவுடன் அவர்கள் வகித்து வந்த அத்தனை பொறுப்புக்களையும் யார் ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பான தெளிவு விளக்கம் இல்லாததால் பல குடும்பங்கள் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கின்றன.

இதனால் தாய் வெளிநாடு சென்றவுடன் பிள்ளைகளுக்கு போதிய கவனிப்பின்றி அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. பிள்ளைகள் பாடசாலையில் இருந்து இடை விலகுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். அது மாத்திரமன்றி சரியான வழிகாட்டலும் ஆலோசனையும் இன்மையால் இளவயது காதல் திருமணம் என்பவற்றில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தையே பாழாக்குகிறார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

மனைவி அல்லது தாய் குடும்பத்தில் இல்லாத சூழலில் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய கணவர்களில் சிலர் மனைவி அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து தாங்கள் இதுவரை செய்து வந்த தொழிலுக்கு செல்லாமல் வீணாக பொழுதை கழித்து வாழ்க்கையை வீண் விரயம் செய்கிறார்கள். சிலர் வேறு பெண்களுடன் தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு குடும்ப உறவையே சீரழிக்கிறார்கள். இதன் விளைவாக பல தியாகங்கள் செய்து சிரமத்தோடு மனைவி வெளிநாட்டில் உழைத்து அனுப்பும் பணம் வீண் விரயமாகின்றது. மனைவி அல்லது தாய் வெளிநாடு சென்றதன் அடிப்படையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு பல குடும்பங்கள் சிதைந்து சின்னா பின்னமாகிப் போகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்ப சம்மதிக்கும் கணவர், தாம் இதுவரை செய்து வந்த கடமையோடு மனைவி இதுவரை செய்து வந்த அத்தனை கடமைகளையும் ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதிப்பாட்டுடனேயே தனது மனைவியை வெளிநாடு அனுப்புகிறார்.

ஏனென்றால், இருவருமே தங்கள் குடும்பம் முன்னேற வேண்டும் என்பதற்காகதான் இந்த சிரமமான தீர்மானத்தை எடுக்கிறார்கள். அதாவது கணவர் அல்லது தந்தை தனது மனைவி வெளிநாடு செல்லும் போது தான் குடும்பத்தின் தந்தை ,தாய் ஆகிய இருவரினதும் பொறுப்பை ஏற்றுக்கொண்டே மனைவியை வெளிநாடு அனுப்புகிறார்.

ஆனால்,பல தந்தைமார் அல்லது கணவன்மார்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாததாலும். அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை எவரும் ஏற்படுத்தாததாலுமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற பல குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகின்றன. சிறுவர் உரிமை சமவாயத்தின் 18 சரத்து என்று கூறுகிறது. தமது பிள்ளையை வளர்ப்பதில் பெற்றோர் இருவரும் கூட்டாகப் பொறுப்பேற்றல் வேண்டும். பெற்றோர் இதனை நிறைவேற்றுவதற்கு அரசு ஆதவளித்தல் வேண்டும். எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது மட்டுமின்றி, சாதாரண சூழலில் கூட குடும்ப பொறுப்பை கணவன் மனைவி இருவரும் ஏற்க வேண்டும் என்பதே நியதியாகும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு தங்கள் மனைவிகளை அனுப்பி வைத்த குடும்பங்களிலுள்ள ஆண்களுக்கு அவர்களது பொறுப்பை உணர்த்த பிரிடோ நிறுவனம் குடும்ப முன்னேற்ற அட்டையை அறிமுகம் செய்தது. இந்த அட்டையிலுள்ள அட்டவணையில் தங்கள் மனைவிகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய இரட்டைப் பொறுப்புக்கள் எவை என்பது அட்டவணையிடப்பட்டது.

காலையில் நேரத்தோடு எழும்புவது முதல் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்புதல், உணவு தயாரித்தல் உட்பட மாலையில் நேரத்தோடு வீடு திரும்பி பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் வரை அனைத்து பொறுப்புக்களும் அட்டவணை இடப்பட்டு தங்கள் இந்தப்பொறுப்பை சரியாக செய்கிறார்களா என்பதை தாங்களே கண்காணித்துக்கொள்வதற்கு கணவன்மார்களுக்கு வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதன் பலனாக தங்கள் மனைவியை வெளிநாட்டுக்கனுப்பிய பல கணவன்மார்கள் தமது குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தில் தந்தையும் தாயுமாக இருந்து பிள்ளைகளின் கல்வியிலும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்துகிறார்கள். ஒழுங்காக வேலைக்குச் சென்று உழைத்து குடும்பச் செலவை சமாளிக்கிறார்கள்.

மனைவியின் பணத்தில் தங்கியிருக்காமல் அதை சேமிக்கிறார்கள், அநாவசியமாக வெளியில் காலத்தை செலவழிக்காமல் நேரத்திற்கு வீடு திரும்புகிறார்கள். இதனால் இந்த குடும்பங்கள் தற்போது நன்றாக முன்னேறி வருகின்றன.

அண்மையில் நானுஓயாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மனைவிகள் வெளிநாட்டில் இருக்கும் சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தில் இரட்டைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயற்பட்டு வரும் சில கணவர்கள் கௌரவித்துப் பாராட்டப்பட்டார்கள்.

இந்த பின்னணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற குடும்பங்களிலுள்ள தந்தையர்கள் இந்த இரட்டைப்பொறுப்பை முறையாக ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் குடும்பம் நிச்சயமாக முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறே தந்தை வெளிநாடு சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் தாய்மார்கள் இந்த இரட்டைப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டால் குடும்பம் நிச்சயமாக முன்னேறும்.

அதேவேளை, மனைவிகள் வெளிநாடு சென்றால் மாத்திரமே கணவர்மார் குடும்பப்பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று எவராவது கூறுவார்களானால், அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. மனைவி வெளிநாடு சென்றாலும் உள்ளூரில் இருந்தாலும் தந்தைமார்கள் அல்லது கணவர்மார்கள் எல்லா வேலைகளையும் மனைவிமார் மீது சுமத்தாமல் குடும்பப் பொறுப்பை சரி சமனாக ஏற்றுக்கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தால் குடும்பம் சிறப்பாக முன்னேறும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates