Headlines News :
முகப்பு » » தொழிற்சங்கங்கள் தோன்றிய தேவை என்ன? மறந்துவிட்டனவா? : சு. நிஷாந்தன்

தொழிற்சங்கங்கள் தோன்றிய தேவை என்ன? மறந்துவிட்டனவா? : சு. நிஷாந்தன்


பெருதோட்டத்துறையையும், தோட்டத் தொழிலாளர்களையும் மையமாகக் கொண்டே இந்த நாட்டில் தொழிற்சங்கங்கள் உதயமாகியிருந்தன. ஆனால், தொழிற்சங்கங்கள் எதற்குத் தோன்றியதோ அவற்றில் 50வீதமானப் பணிகளையாவது நிறைவேற்றுகின்றனவா என்பது கேள்விக்குறியே.

மலையக மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகத் தொழிசங்கங்கள் அவர்களின் வாழ்விலும், ஏனைய அச்சங்களை நிறைவேற்றுவதிலும் கலந்துள்ளன.  1920களில் பெருந்தோட்டங்களை மையமாகக் கொண்டு தொழிற்சங்கங்கள் உதயமாக அத்திபாரம் இடப்பட்டது.

தென்னிந்தியாவிலிருந்து பெருந்தோட்டப் பயிர்செய்கைகளுக்காக மலிவானக் கூலிகளாகவும்,  அடிமைகளாகவும் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி மக்களை பாதுகாப்பதற்கு எந்தவொரு பிரதிநிதியும் ஆங்கிலேய காலனித்துவத்தில் இருந்திருக்கவில்லை. இந்திய தமிழர்கள் என்பதால் இந்தியாவிலிருந்து இவர்களை பாதுகாக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலேயரைத் தாண்டி அவர்கள் தொடர்பில் பேசுவதற்கு அந்தப் பிரதிநிதிக்கு அதிகாரம் இருந்திருக்கவில்லை.

அதன் காரணமாகவே மலையகத்தில் தொழிற்சங்க வரலாறு உதயமாகியது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்தப் பத்திரிகையாளரான கோ. நடேசய்யர் இந்த மக்களின் அடிமை வாழ்வுக்கு மீட்சித் தேவையெனக் கருதி மலையக மக்களுக்காக முதல் தொழிற்சங்கத்தை 1931ஆம் ஆண்டு அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தார்.

இதன் பின்னரே இந்திய இலங்கைத் தொழிலாளர்   காங்கிரஸ், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி என தற்போது 50இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சில் பதியப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனை முதன்மையாகக் கொண்டே ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால், அதற்குப் பின்னரான செயற்பாடுகள்தான் மக்களை ஏமாற்ற வைக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும் ஒரு யாப்பு வடிவம் இருக்கும் அதனை ஒழுங்கமைப்பாகக் கொண்டே தொழிற்சங்க கட்டமைப்பு( தேர்தல் அறிக்கை போன்று) உருவாக்கப்படுகின்றன. சர்வதேச உறவுப் பிரிவு, பெருந்தோட்டங்களினன் கண்காணிப்பு, அமைப்பும் செயற்பாடும், நிர்வாகப் பிரிவு, நிதிப் பிரிவு, தொழிலாளர் உறவுப் பிரிவு, சட்டப் பிரிவு, மகளீர் விவகாரப் பிரிவு, தொழிலாளர் கல்விப் பிரிவு, சவால்களுக்கு முகங்கொடுக்கும் பிரிவு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுடன் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும்  நோக்காகக் கொண்டே தொழிற்சங்கள் உதயமாகின.

ஆனால், அத்தகைய செயற்பாடுகளில் தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை என்பதே உண்மை. உதாரணமாக சர்வதே உறவு, சட்டப் பிரிவு, மகளீர் விவகாரப் பிரிவு என்பனவற்றை எடுத்துக்கொண்டால், என்ன நடைபெறுகின்றது என்று எவருக்கும் தெரியாது. தொழிற்சங்களில் எவ்வாறான  அமைப்புகள் உள்ளன அதற்கும் சேர்த்துதான் நாங்கள் சந்தா கட்டுகின்றோம் என்று மலையக மக்களுக்குத் தெரியுமா? என்பதும் கேள்விக்குறியே.

மேற்கூறப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள்தான் தற்போது மலையகத்தை அட்டிப்படைக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் பொதுச் செயலாளராகவிருந்த இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் என்பன. ஆனால், சம்பள பேச்சை  தவிர்ந்து  மேற்கூறப்பட்ட எந்த நடவடிக்கையும் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவில்லை துளியளவும் முன்னெடுக்கவில்லை.

உண்மையில் தொழிற்சங்கத் தலைவர்கள் எண்ணுவதாவது, தொழிலாளர்கள் சம்பளத்தை மட்டும்தான் எதிர்பார்க்கின்றனர் என்ற மமதையில் உள்ளனர். இனிவரும் காலங்களில் தொழிலாளர்களை எவரும் ஏமாற்ற முடியாது என்ற உண்மை வெகுவிரைவில் தொழிற்சங்கள் உணரும். தொழிற்சங்கங்களில் காணப்படும் சட்டப் பிரிவில் இதுவரை எந்தத் தொழிலாளியின் சட்ட விவகாரங்களைத் தீர்த்து வைத்துள்ளது? அதேபோல் சர்வதேச உறவுப் பிரிவில் என்னத்தை சாதித்துள்ளது? மகளீருக்கு செய்தது என்ன? தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குச் செய்தது என்ன?

தொழிலாளர்களின் நலன் கருதி செயற்பட்ட சி.பி வேலுப்பிள்ளை, நடேசய்யர், சௌமிய மூர்த்தித் தொண்டமான் போன்ற தலைமைகளின் மத்தியில்  இன்றைத் தலைமைகளின் பங்கு என்ன? வெறும் அட்ப அரசியல் நாடகங்கள் மாத்திரமே இந்த நான்காம் தலைமுறை இந்திய வம்சாவலி அரசியலில் நடைபெற்றுகின்றன  நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இன்று அமையப்பெற்றுள்ள தேசிய அரசில் மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பிரதான நான்கு தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இந்தத் தொழிற்ங்கங்கள் காலங்காலமாகச் செயற்படுவது போல் இனிவரும் காலங்களில் செயற்படக் கூடாது என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பு.

தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல் ரீதியில் வளர்ச்சியடைந்தப் பின்னர் மக்களுக்குச் சம்பள உயர்வை மட்டும் பெற்றுக்கொடுத்தால் போதுமென்ற நிலைப்பாட்டை மறந்து தொழிற்சங்கங்களை மலையக மக்களின் அவையாக மாற்றியமைக்க வேண்டும். மறைந்த தலைவர் வேலாயுதம் பொதுச் செயலாளராக பதவி வகித்த இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் மாத்திரமே குறிப்பிடத்தக்களவும் சர்வதேச உறவுப் பிரிவை கட்டியெழுப்பியிருந்தது. இத்தொழிற்சங்கம் பிரட்ரிக் ஈபர்ட் மன்றம், ஒறுமைக்கான மத்திய நிலையம், தெற்காசியப் பிராந்தியத் தொழிற்சங்க அமைப்பு, சார்க் நாட்டு தொழிற்சங்க அமைப்பு மற்றும் சர்வதேச கூட்டு தொழிற்சங்க அமைப்புகளான சர்வதேச கூட்டு சம்மேளனம், சர்வதேச கட்டிட மரத் தொழிலாளர் அமைப்புகளிலும் அங்கத்தும் பெற்றுள்ளது.

இதேபோன்று ஏனைய தொழிற்சங்கங்களும் இவ்வாறு அங்கத்துவம் பெற்றுள்ளன. ஆனால், இவ்வாறு அங்கத்துவம் பெற்றிருந்து எந்தவொரு தொழிற்சங்கமும் இதுவரை சர்வதேச உறவை வலுப்படுத்தவில்லை. முறையான உறவை பேனும் பட்சத்தில் அவற்றின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுத்தவும் முடியும். மக்களின் தேவைகளை சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பவும் முடியும்.

இந்த நாட்டில் தனிச் சமூகமாக வாழும் மலையக மக்களின் தேவைகளை மலையக மக்களின் உண்மை பிரதிநிதிகள் என்று சொல்லும் தொழிற்சங்கவாதிகள் இன்னமும் உள்வாங்கவில்லை. தொழிற்சங்கத்தில் காணப்படும் அனைத்துப் பிரிவுகளும் நடைமுறைக்கு வர வேண்டும். இவை இயங்குவதற்குத்தான் மக்களிடமிருந்து சந்தா பெறப்படுகின்றது என்ற ஞாபகம் தொழிற்சங்கங்களுக்கு நினைவில் இருக்க வேண்டும்.

தொழிற்சங்கங்கள் தமது உதயத்தின் நோக்கம் உணரப்படுவதுடன், தொழிற்சங்க ரீதியிலான கட்டமைப்புகளின் பிரதிபலனை மக்கள் அனுபவிக்கும் நடைமுறையும் ஏற்படுத்த வேண்டுமென்பதே இங்கு சுட்டிக்காட்டமுயன்ற விடயமாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates