மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை இன்று சர்வதேச நாடுகள் போற்றும் அளவுக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது. இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உறுதிப்படுத்த தேவையாக உள்ள முக்கிய அம்சம்தான் அனைத்தின மக்களும் முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு நிலையான ஜனநாயகத்தின் உறைவிடமாக இருக்கக் கூடிய அரசரமைப்பு.
தற்போதைய நல்லிணக்க அரசாங்கம் இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பிலான பேச்சுகள் தற்போது மிகத் தீவிரக்கட்டத்தை எட்டியுள்ளன. சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டுமென்ற முனைப்புடனும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைகுத் தீர்வுகாண வேண்டுமென்ற நோக்குடனும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடனும் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் அத்திபாரம் இடப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக மக்கள் கருத்துகளுடன் கூடிய ஓர் அரசமைப்பு உருவாக்கப்படுவதாக இலங்கை அரசு பெருமிதம் கொண்டுள்ளது. ஓர் அரசமைப்பு என்பது தனிமனித சுதந்திரத்தின் உறைவிடமாகவும், ஓர் இனத்தின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்பதே அரசமைப்பின் அடிப்படைத் தத்துவமாக அமைய வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலக்கத் துடிக்கும் மலையக மக்களை காலங்காலமாகப் புறந்தள்ளப்பட்டது போன்று இந்த நல்லாட்சியிலும் புறந்தள்ளிவிடக் கூடாது.
200 வருடங்கலாக அபிவிருத்தியற்ற அடிமை சமூகமாக நடத்தப்பட்டுவந்த மலையக மக்களின் மீது இலங்கையை ஆட்சிசெய்யும் இரு தேசிய கட்சிகளின் பார்வையும் வெறும் 30 வருட வரலாற்றைக் கொண்டதேயாகும். காரணம் மலையக மக்களுக்குப் பிரஜாவுரிமை (வாக்குரிமை) கிடைத்தமைதான். இதன் பின்னரே எமது தேவைகள் பற்றிய எண்ணங்கள் தோன்றலாயின. மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் முதல் அவர்களது அனைத்து சுதந்திரமும் ஏற்படுத்தப் போகும் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பு.
ஒரு நாடு சுதந்திரமடைந்தப் பின்னர் அந்த நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்த பெருமை இலங்கைகே உள்ளது என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சிங்கள இனவாதத்திலும், பௌத்த தேசியவாதத்திலும் இலங்கையில் 67 வருடமாக சுதந்திரக் காற்று வீச வில்லை. இந்த மைத்திரி ரணில் நல்லாட்சி அரசில் ஜனநாயகத்தின் விதை விதைக்கப்படும் என்றே சர்வதேச ஆரூடர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.
அடிமை வாழ்வுக்குச் சொந்தகாரர்களாகவுள்ள மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப் போகும் அரசமைப்பிலாவது நிலையானக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்று முறையை ஒழித்தில், தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்ற முக்கிய நான்கு காரணங்கள் தொடர்பில் அரசு கூடுதல் கரிசனையோடு செயற்பட உள்ளது.
தொகுதிவாரி முறையையும், விகிதாசார முறையையும் உள்ளடக்கிய தேர்தல் முறைமையே கொண்டுவரப்படும் என்று இரு தேசியக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. எவ்வாறான முறை கொண்டுவரப்பட்டாலும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அரசு வகுக்க வேண்டும். இந்த நாட்டில் 15 இலட்சத்திற்கு அதிகமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கானப் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராடசிமன்றம் என அனைத்து மட்டத்திலும் குறைவாகவே உள்ளன.
நுவரெலியா மாட்டத்தை தாண்டி மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் மாகாண சபைக்குத் தெரிவாவது என்பது சிம்ம சொப்பனமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக கேகாலை, இரத்தினப்புரி மாவட்டங்களில் மலையக மக்கள் சார்பில் பிரதிநிதி ஒருவர் அல்லது இருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் வாக்குபலம் இருந்தும் விருப்பு வாக்கு, விகிதாசார முறை காரணமாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக் கனியாகவே உள்ளது.
இந்த இரு மாவட்டங்களிலும் மாகாண சபைக்கே இரு தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த முறைதான் ஒருவர் என்ற வீதத்தில் தெரிவாகியிருந்தனர். அதேபோல், ஊவா மாகாணம், கண்டி மாவட்டம், கொழும்பு போன்ற இடங்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் என்பது சொற்ப அளவே உள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஓர் இணக்கப்பாட எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதேபோல் நீண்டகாலமாக மலையக மக்களின் அபிவிருத்திக்குத் தடையாகக் காணப்பட்ட பிரதேச சபை சட்டங்களாக 15, 34ஆம் இலக்கச் சட்டங்கள் திருத்தியமைக்க உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு இணங்கியுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் கல்வித்துறையிலும் பலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இம்மாற்றங்கள் நிலையானதாக மாற வேண்டும்.
அபிவிருத்தியில் நீண்ட பின்னடைவில் உள்ள இலங்கை முன்னோக்கிச் செல்லக் கூடிய வகையில் நிலையான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. நின்று நிலைக்கும் சமத்துவமான அரசமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகவே மேற்குல நாடுகளில் சமாதானமும், அபிவிருத்தியும் உலகம் வியக்கும் வகையில் வலுவடைந்துள்ளன.
புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மலையகத் தலைமைகளும் மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமாகச் செயற்பட வேண்டுமென மலையக மக்கள் எதிர்பார்க்கின்றனர். எமது சுதந்திரம் இந்த நாட்டில் பறிக்கப்பட்ட போது எவரும் எமக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.
1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட வாக்குரிமை 2003ஆம் ஆண்டுதான் முழுமையாகக் கிடைத்தது. அதுவரை காலமும் மலையக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் சஅழுத்தமாக ஒலிக்க போதுமானப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கவில்லை. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது 4, 5 இலட்சம் மலையகத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது 10ஆயிரத்திற்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் கொள்ளப்பட்டனர். வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதியிலும் மலையகத் தமிழர்களுக்காக குரல் ஒலிக்கவில்லை என்பதே நிதர்சம்.
மலையக மக்களுக்கான உரிமைகளும், அங்கீகாரமும் முறைமைப்படுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறு இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். எனவே மீண்டும் அந்த கசப்பான வரலாற்றை மலையக மக்கள் அனுபவிக்கத் தயாரில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை மலையக தலைமைகள் விடுவார்களாயின் இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் பாரிய கேள்வியெழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது மலையகத்தில் மக்கள் அபிலாஷைகளைப் பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளே புதிய அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கக் கூடிய அதிகாரத்தில் காணப்படுகின்றன.
புதிய அரசமைப்புத் தொடர்பில் தமது யோசனைகளையும், கோரிக்கைகளையும் உள்ளடக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், வடக்கில் தற்போது உருவான தமிழ் மக்கள் பேரவை, சில சிறிய கட்சிகள் கூட தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆனால், மலையகத் தலைமைகள் இன்னமும் முழுமையாக கண் விழிக்க வில்லை. கடந்த புதன் கிழமைதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசமைப்புத் தொடர்பில் தமது யோசனைகளை முன்வைக்க 11 பேர் கொண்ட குழுவொன்றை முன்மொழிந்துள்ளது.
1972, 1978 போன்ற அரசமைப்புகள் தன்னிச்சயாக சிங்கள் மக்களின் ஆதிக்கத்தை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருந்தது. அதன் விளைவே, வடக்கில் ஆயுதப் போராட்டமொன்று வெடித்தது. எங்கும் ஒரு சமூகம் அடிமைப்படுத்தப்படும் போது அங்கு போராட்டம் வெடிக்கும் என்பதே உலக நியதி. எனவே, இந்த நாட்டில் உருவாகும் அரசமைப்பு என்பது மலையக மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அதனை இலட்சியமாகக் கொண்டு எமது தற்போதைய தலைமைகள் முழுவீச்சுடன் செயற்பட வேண்டும். ஆனால், அதற்கு இன்னுமும் மலையகத் தலைமைகள் தயாராகவில்லை என்பதே உண்மை. இ.தொ.கா. 11 பேர் அடங்கிய குழுவொன்று நியமித்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னமும் இது தொடர்பில் முறையானத் திட்டமொன்று வகுக்கவில்லை. காலங்காலமாக மலையக தொழிற்சங்கங்களின் அரசியல் போட்டி, பொறாமைக் காரணமாக மக்கள்தான் கஷ்டப்படுகின்றனர் என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமொன்று இலங்கையில் வாழக் கூடிய ஒட்டு மொத்த மக்களுக்கும் கிடைத்துள்ளதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ள நிலையில் மலையக மக்களின் தேவைகள் தொடர்பில் தற்போதைய தலைவர்கள் கூடிய அக்கரைக் காட்ட வேண்டிய முக்கியமான காலகட்டமாக இது அமைந்தள்ளது. ஏற்படுத்தப் போகும் அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாவிடின் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாகவே வாழ வேண்டும். எனவே, மலையகத் தலைமைகள் சிந்தித்துச் தீர்க்கமாகச் செயற்பட முன்வர வேண்டும் என்பதே மலையக மக்களினதும், மலையக புத்திஜீவிகளினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...