மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன?
அரசியலமைப்பு சபை விவாதத்தில் திலகர் எம்.பி கேள்வி
மலையக மக்களின் பிரச்சினைகளை நாங்கள் இந்த சபையிலே முன்வைத்து உரையாற்றுகின்றபோது சக ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் உங்கள் மக்களுக்கு இந்தளவு பிரச்சினை இருக்கிறதா என எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். மலையக மக்களின் பேசப்படாத பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் நாட்டின் ஏனைய மக்களுக்கு 'V' எழுத்து குறிப்பிடப்படும்போது மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் 'X' எழுத்து இடப்படுவதன் அர்த்தம் என்ன? இவைதான் மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை அரசியல் உரிமைப் பிரச்சினைகள். இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்துவதற்கான வாய்ப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குதற்காக தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான பொறிமுறையாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றியமைக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1947ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த, பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அரசியலமைப்பில் தமது வாக்குகளைப் பயன்படுத்தி பிரதிநிதிகளைத் தெரிவு செய்த மலையக மக்கள், 1948 ஆம் ஆண்டு சுதேச அரசாங்கத்தினால் சட்டம் இயற்றப்பட்டு வாக்குரிமை பறிப்புக்கு உள்ளானார்கள். எனவே தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான பொறி முறைகளில் ஒன்றாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றும் பொறிமுறையின் ஊடாக மலையக மக்களுக்கு அவசியமான உரிமைகளை அரசியலமைப்பு ஊடாக உறுதிபடுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையில் இதற்கு முன்னதான அரசியலமைப்பு உருவாக்கங்களின்போது அதில் பங்கேற்பதற்கல்ல, ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு கூட வாய்ப்பற்றிருந்த மலையக மக்களுக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகும்.
குறிப்பாக இன்று மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையிலே அங்கம் வகிக்கின்றோம். இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே என்னைப் போன்றவர்கள் இந்த பாராளுமன்றத்தில் எமது மக்களுக்காக குரல் எழுப்ப வழிசெய்துள்ளது. எனவே இலங்கையில் பரவலாக, குறிப்பாக தென்னிலங்கை மற்றும் மலையக பகுதியில் வசிக்கும் 15 லட்சம் அளவான இந்திய வம்சாவளியினரான மலையக மக்களின் உரிமைகளை, பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபையின் ஊடாக உறுதி செய்யும் பொறுப்பு இந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கின்றது. ஏற்கனவே, மக்கள் கருத்தறியும் குழுவினர் மாவட்டம் தோறும் கருத்தறிந்து வருகின்ற நிலையில் மலையக மக்கள் தாமாக முன்வந்து அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல இந்த பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுகின்ற போது அந்த மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பவர்களாக செயற்பட்டு மலையக மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் உரிமைகளை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தக் கூடிய வாய்ப்பினை இந்த பிரேரணை வழங்குகின்றது. அந்த வாய்ப்பினை பொறுப்புடன், கடப்பாட்டுடன் ஆற்றவேண்டியவர்களாக நாம் உள்ளோம்.
தவிரவும் மலையக மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகள் குறித்து இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக அறியாதவர்களாகவே உள்ளனர். நாங்கள் உரையாற்றுகின்றபோதோ அல்லது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளைக் கொண்டு வரும்போதோ உங்கள் மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் காணப்படுகின்றவா என கோரும் நிலைமையே காணப்படுகின்றது. உங்கள் மக்களுக்கு பிறப்புசான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை கிடைப்பதில் கூட பிரச்சினை இருக்கின்றதா எனக் கேட்கின்றனர். நாட்டில் ஏனைய சமூகத்தினருக்கு பிறப்பு பதிவாளரினால் வழங்கப்படுகின்ற பிறப்பு சான்றிதழ் மாத்திரமே உள்ள நிலையில் மலையகப் பெருந்தோட்ட மக்கள் தோட்ட அதிகாரிகள் வழங்கும் பிறப்பு பதிவு அட்டையை பெறும் நிலைமை நீண்டகாலமாக இருந்து வந்தது. இன்றும் கூட அதனை மாத்திரம் கொண்டவர்கள் எமது மக்களிடையே உள்ளனர். நான் கூட க.பொ.த (சாஃத) பரீட்சைக்கு தோற்றும் போதுதான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழைப் பெற்றேன். அதேபோல தேசிய அடையாள அட்டை என்று வரும்போது இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களுக்கு அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதியில் வரும் எழுத்து ''V' எனக் காணப்பட மலையக மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 'X' எனும் எழுத்து குறியிடப்படுவதன் அர்த்தம் என்ன? இதுதான் மலையக மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைப் பிரச்சினைகள். இதனை சக எதிர்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் புரிந்துகொளவதற்கான வாய்ப்பினை பாராளுமன்றம் அரசிலமைப்பு சபையாகவும் மாறுகின்றபோது ஏற்படும்.
எனவே இந்த நாட்டின் ஏனைய இன மக்களுக்கு கிடைக்கும் சம உரிமைகள் எவ்வித பேதப்படுத்தல்களும் இன்றி மலையக மக்களுக்கும் கிடைக்கப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் கலந்தரையாடமுடியும். அதற்கான வாய்ப்பு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும்போது கிடைக்கப்பெறுகின்றது. எனவே இந்த பிரேரணையை நாம் ஆதரிக்க வேண்டியவர்களாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...