அறிமுகம்
மலையகக் கவிதை இலக்கியம் பற்றிய பார்வையை செலுத்தவதற்கு ‘மலையகம்’ எனும் தொடர் பற்றிய சிறு அறிமுகத்தைச் செய்துகொள்ளவேண்டியுள்ளது. ‘இலங்கைத்தமிழ் வழக்கில் இன்று மலையகம் என்பது இலங்கையின் மலைப்பிரதேசங்களில் உள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச்சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளி தமிழரைக் குறிப்பதாகும். மலையகப் பகுதிகளைச்சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல், தென் மாகாணங்களைச் சார்ந்த இறப்பர் பெருந்தொட்டங்களில் வாழ்பவர்களையும் மலைசார் பகுதிகளில் இருந்து சென்று வடகிழக்கு பகுதியின் விவசாய பிரதேசங்களிலும் (கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில்) கொழும்பிலும் வாழ்பவர்களையும் கூட மலையகத்தமிழர் என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கில் உள்ளது’ என்கிறார் பேராசியரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. (இலங்கை மலையகத்தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் - தொகுதி 1 (1993-உதயம் வெளியீடு) ஆய்வு முன்னுரை பக்.11-). மலையகப் பண்பாட்டுத்தளம் பற்றிய முற்றிலுமாக கவனம் செலுத்தப்பட்டு செய்யப்பட்ட ஆய்வுத்தொகுப்பு என்ற வகையில் நாம் ‘மலையகம்’ எனும் தொடருக்கான விளக்கமாக இந்த கூற்றினைக் கொள்ள முடியும். எனினும் இந்த ஆய்வுகூற்றுக்கு மேலதிகமாக பின்வரும் வகுதியினரையும் ‘மலையகம்’ என்ற தொடருக்குள் உள்ளடக்கிப்பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளமை தற்காலத்தில் விவாதிக்கப்பட்டுவரும் விடயமாகிறது.
அவையாவன,
1964 ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டும் இன்றுவரை இந்திய தமிழ்நாட்டில் சிலோன்காரர்களாகப் பார்க்கப்படும் ‘மலையகத்தமிழர்கள். இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தினால் (மேற்கூறிய ஆய்வுக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள) வடகிழக்கு பகுதியில் வாழ்ந்த மலையக மக்களின் புலப்பெயர்வு. இவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு சென்று இன்றைய நாள் வரை இந்தியாவிலும் ‘மலையகத்தவர்களாக’ அகதி வாழ்க்கை வாழ்கின்றமை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் இந்த மக்கள் தொகையினர் ஏறக்குறைய முப்பதினாயிரம் அளவினருக்கு 2009 ம் ஆண்டு 5ம் இலக்க நாடற்றவருக்கான பிரஜாவுரிமை வழங்கும் (திருத்தச்) சட்டத்தின் பிரகாரம் ‘இலங்கைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளமை.
இப்படியாக இந்தியாவில் வாழும் இலங்கை குடியுரிமைப் பெற்ற ‘மலையக மக்கள்’. சுதந்திரத்துக்குப்பின்னான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதான புலப்பெயர்வுகள் வடக்கு, கிழக்கு மற்றும் பூர்வீகத்தமிழர்களை மலையகம் நோக்கியும் மலையகத்தமிழர்களை வடகிழக்கு மற்றும் மேற்குலக நாடுகள் நோக்கியும் இடம்பெயரச்செய்ததன் விளைவாக தோன்றியிருக்கக்கூடிய சமூகக்குழுமங்கள்.
இதில் மலையகம் நோக்கிய இலங்கை பூர்வீகத்தமிழர்களின் புலப்பெயர்வை இரண்டுவிதமாகப்பார்க்கலாம்.
ஒன்று, பிரித்தானியர் காலம்தொட்டே வியாபாரம் மற்றும் தொழில் நிமித்தம் மலையகம் நோக்கி புலம் பெயர்ந்து அங்கேயே தம்மை நிலைநிறுத்திக்கொண்டும் அங்கிருந்து வெளியேறியும் மலையக அரசியல், சமூக, இலக்கிய துறையில் இவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பங்களிப்பு.
இரண்டாவது, இலங்கையில் இடம் பெற்ற மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தினால் மேற்குலக நாடுகள் நோக்கி புலம் பெயர்ந்தது போன்று மலையகம் நோக்கிய இலங்கை பூர்வீகத்தமிழர்களின் புலப்பெயர்வும் அங்கு (மலையகத்தில்) அவர்கள் தனிப்பட்டரீதியாகவும் சமூகக்ககுழுமமாகவும் மலையக அரசியல், சமூக, இலக்கிய துறையில் கொண்டிருக்கும் வகிபாகம். மற்றையது மலையகத்தைச்சார்ந்தவர்கள் மேற்குலக நாடுகளுக்குச் சென்று அங்கு மலையக மக்களின் குழுமமாக செயற்படுவதன் மூலம் மலையக அரசியல், சமூக, இலக்கிய துறைகளில் வகிக்கக்கூடிய பங்கு.
(இது பற்றிய விரிவான கட்டுரை: இந்திய வம்சாவளி மலையக மக்கள் - ஒரு மீளாய்வு எனும் தலைப்பில் ‘இந்திய பூர்வீக இலங்கை தமிழர் பேரவை கனடா’ கனடாவில் வெளியிட்ட ‘குறிஞ்சிமலர் 2012’ எனும் இதழில் இதே கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது. பின்னர் நோர்வேயைத் தளமாகக்கொண்டு இயங்கும் நமதுமலையகம்.கொம் எனும் இணையத்தளத்தில் அந்தக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள விடயதானம் அந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சமூகக்குழுமங்களின் செயற்பாடுகளின் விளைவாக எழுந்த பிரசுர செயற்பாடுகளினூடே வெளிவந்திருப்பது இங்கு முக்கியத்துவமானது)
மலையகக் கவிதை இலக்கியம் பற்றி பேசவந்தவிடத்து மேற்சொன்ன ‘மலையகம்’ என் தொடர் பற்றிய ஆய்வு கூற்றும் அதன் பின்னரான அந்த சமூக்ககுழுமம் கண்டிருக்கக்கூடிய ‘மலையகத்தின்’ வீச்சு எல்லை சம்பந்தமாகவும் சற்று விரிவாக நோக்கியதன் தேவை யாதெனில், இந்த உள்ளடக்கத்திற்குள் வருவோரிடம் இருந்து வரக்கூடிய ஆக்க இலக்கிய படைப்புகளும் ‘மலையக இலக்கியம்’ என்ற பரப்புக்குள் உள்ளடங்கிவிடுவதன் அல்லது உள்ளடக்கபடுவதன் தேவை இருப்பதனாலாகும். மலையக இலக்கியத்தில் இப்படியானதொரு செல்நெறி தொடர்ச்சியாகவே இடமபெற்றுவந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.. எதிர்வரும் காலங்களில் ‘மலையக’ வீச்செல்லையை மையப்படுத்தி ஆய்வுகள் வெளிவரவேண்டியதன் தேவையை வலியுறுத்தியே இந்தக்குறிப்பு இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
மலையக கவிதை இலக்கியத்தின் தோற்றுவாய்:
இலக்கியத்தில் மூத்தது கவிதை என்பார்கள். ஆக்க இலக்கியம் உணர்வுகளின் பிரக்ஞையின்பாற்பட்டது. எனவே உணர்ச்சியின் வெளிப்பாடாக ஒன்றை சொல்ல வருகின்றபோது அதன் முதல் உந்துதலாக கவிதை அமைந்து விடுகின்றது. பல எழுத்தாளர்கள் தாம் முதலில் கவிதை எழுதுபவர்களாகவே வெளிப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.
மலையக கவிதை இலக்கியமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. மலையக இலக்கியத்தின் மூத்ததாகவும் முதன்மையானதாகவும் கவிதை இலக்கியமே அமைகின்றது எனலாம். எனினும் நேரடியாக எடுத்த எடுப்பிலேயே ‘கவிதை’ என்ற கட்டுகோப்புக்குள் வந்துவிடாமல் வாய்மொழி பாரம்பரியத்துக்குள் இருந்து புறப்படும் ஒரு சிறப்புத்தன்மையை மலையகக் கவிதை இலக்கியத்தில் தரிசிக்கலாம். அதாவது மலையக நாட்டார் பாடல்களே மலையகக் கவிதை இலக்கியத்தின் ஊற்றுக்கண்களாக இருந்துள்ளன.
மலையகக் கவிதைப்பாரம்பரியத்தில் நாட்டார் பாடல்களின் சாயல் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு அல்லது சிறப்புப்பண்பு அதன் வேர் அதுவாகவே அமைந்துவிடுவதனாலாகும் என கொள்ளலாம்.
இந்த மலையயக நாட்டார் பாடல்கள் பற்றிய பார்வையை செலுத்தாமல் மலையகக் கவிதை இலக்கியம் பற்றிய பார்வைக்குள் வரமுடியாது. இந்த அம்சத்தை மலையகக் கவிதை இலக்கியத்தின் பலமாக பார்ப்போரும் பலவீனமாகப் பார்ப்போரும் உள்ளனர். எது எவ்வாறாயினும் மலையக இலக்கியம், மக்கள் இலக்கியத்திலிருந்து மாறுபட்டு நிற்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போய் உள்ளது. மக்கள் இலக்கியம் படைக்காத மலையக இலக்கியவாதிகளை யாரும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மலையகத்தின் மூத்த இலக்கியம் என்றவகையில் மலையக நாட்டார் பாடல்களே மலையகக் கவிதை இலக்கியத்தின் ஆரம்பமாக அமைகின்றன.
தொடரும்
+ comments + 1 comments
....yaa superb. continue .....
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...