இனவாத ஆட்சியில் புரையோடிப் போய்கிடந்த இலங்கை இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைய பல்வேறு அரசியல் சீர்த்திருத்தங் களையும்,பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச உறவுகளையும் சக்திவாய்ந்த ரீதியில் கட்டி யெழுப்பிவருகின்றமை வரவேற்கத்தக்கதும் காலத்தின் கட்டாயத் தேவையுமாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களால் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டுத்தப்பட்டதன் விளைவே இன்று சுதந்திரமான ஜனநாயக சூழலொன்று உதயமாகியுள்ளது. இந்த சமாதான சூழலை ஏற்படுத்த மலையக மக்களும் தங்களது முழு ஆதவரை வழங்கியிருந்தமை நிதர்சனம். ஜனநாயக சூழலும், கருத்துச் சுதந்திரமும் ஏற்பட்டிருந்தாலும் மலையக மக்களின் வாழ்வில் கடந்த ஆண்டும் ஒரு துன்பரமான ஆண்டாகவே அமைந்தது.
வறுமையின் கோரதாண்டவத்திலும் இவர்களின் துன்பகடல் ஓயவில்லையே. பொருளதாரச் சுமைகள், வறுமை, வேலையின்மை, கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை, அரசியல் மாற்றங்கலென சொல்லொன்னா துயரங்கள் நிறைந்த ஆண்டுக்கு ஒரு புறத்தில் விடைகொடுத்தாலும் கடந்துவந்த ஞாபகத்தை நினைவுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
200 ஆண்டுகளாக ஒரு சமூகம் இனவாதத்திலும், அடிமைவாதத்திலும், அடிப்படைவாதத்திலும் ஒரு கட்டமைப்பின் கீழ் நிருவகிக்கப்பட்டமை பெரும் வரலாற்று சோகமாயினும் அத்தகைய அனுபவங்கள் முன்நோக்கிச் செல்வதற்கான படிக்கல்லாக மாற்ற வேண்டிய தேவையொன்றே தற்போது எம் முன்னே நிற்கின்றது.
கடந்த ஜனாதிபாதித் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மலையகத்தில் அள்ளி வீசனப்பட்டன. ஆட்சிக்கு வந்ததும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் முதலில் தீர்க்கப்படுமென்று தீர்க்க தரிசனம் போல் தெரிவித்தார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஒருவருடம் பூர்த்தியாக இன்னமும் ஐந்து நாட்கள்தான் உள்ளன. இதுவரை ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
காலங்காலமாக சிங்களத் தலைமைகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் மலையக மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வரலாறாகக் காணப்படுகிறது. இதற்கு மைத்திரிரணில் அரசாவது முற்றுப்புள்ளி வைக்குமென்ற நோக்குடனே மலையக மக்கள் வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு நல்லாட்சி ஏற்பட ஒன்றுதிரண்டு வாக்களித்திருந்தனர். நல்லாட்சிக்கு வழிவகுத்த இவர்களது கோரிக்கையை அரசு இன்னமும் உள்வாங்கவில்லையென்ற ஆதங்கம் ஒட்டுமாத்த மலையக மக்களின் மனங்களிலும் பதிவாகியுள்ளது என்பதே உண்மை.
தொழிற்சங்கங்கள் இதுவரைகாலமும் இல்லாத அளவுக்கு கூட்டு ஒப்பந்த விடயத்தில் விடாப்பிடியாக உள்ளமையால் தோட்டத் தொழிலாளர்கள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுவருகின்றனர். கடந்த காலங்களில் மக்களின் உழைப்பை பேரம் பேசிய தொழிற்சங்கங்கள் 1,000 ரூபா சம்பளக் கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கதே ஆனால், அதற்கானப் பொருளாதாரச் சூழல் தற்போது இலங்கை காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் தொழிற்சங்கங்கள் சிந்திக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கடந்த காலங்களில் பாரிய வருமானத்தை ஈட்டித்தந்த துறையாகப் பெருந்தோட்டத்துறை காணப்பட்டது. அப்போது தொழிலாளர்களின் உழைப்பை பேரம் பேசிவிட்டு தொழிலாளர்களின் சந்தாவையும் அபகரித்த தொழிற்சங்கங்கள் மக்களுக்குகாகக் குரல் கொடுத்திருந்தால் ஒட்டுமொத்த மலையக மக்களும் வரவேற்றிருப்பார்கள்.
இன்று அவர்கள் சம்பள விடயத்தில் உறுதியாக இருக்கின்றமையை எவரும் எதிர்க்கவில்லை ஆனால், காலத்தின் தேவை கருதிச் செயற்பட வேண்டுமென்பதே முக்கியம். மலேசியா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகளில் செயற்கை இறப்பர் முறை அறிமுகப்படுத்தப்பட்டத்ன் விளைவாக செயற்கை இறப்பர்கள் மலிவான விலைக்குச் சந்தைக்கு வருகின்றன.
அதேபோல், தொழில்நுட்ப வளர்ச்சியால் தேயிலைத் தொழில்துறையும் ஏனைய நாடுகளில் நவீன முறையில் மேற்கொள்ளப்டுகின்றன. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அசுர வேக வளர்ச்சியால் உற்பத்தியானது சந்தையையும், வருமானத்தையும் மாத்திரம் மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றமையால் வினைத்திறனான உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன் தாக்கமே இலங்கை போன்ற கலப்புப் பொருளாதார நாடுகளின் உற்பத்திகளுக்கும், ஏற்மதிகளுக்கும் கேள்வி குறைவாக உள்ளது. அத்துடன், ஐரோப்பி நாடுகளுக்கான ஏற்றுமதித் தீர்வை பெற்றுதரும் எகுக சலுகை கடந்த மஹிந்த ஆட்சியில் இல்லாமல் போனமையும் பெருந்தோட்டப் பயிர்களின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்தது.
எனவே, இலங்கையின் பொருளாதாரமும், தொழில்நுட்பமும் வலுவடையும் வரை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கத் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இணங்க வேண்டும் என்பதுடன், அரசு நடுநிலைமைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.
வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 1,000மில்லியன் ரூபா மலையக மக்களின் வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது நல்லெண்ண அடிப்படையில் மேற்கொண்ட கண்துடைப்பாகவே பார்க்கப்படுகின்றது.
200 வருடங்களாக புறந்தள்ளப்பட்டு வந்த மலையகத் தமிழர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 1,000 மில்லியன் ரூபாவில் வெறும் 1,000 வீடுகளைக் கூட அமைக்க முடியாது. இந்த ஐந்து வருடத்தில் மலையக மக்களின் லயத்து வாழ்வுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய சூழல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மழுங்கடிக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.
ஐ.நாவின் பத்தாண்டு திட்டம், இந்திய அரசின் 4000 ஆயிரம் வீடுகள் திட்டமென மலையக மக்களையும் தேசிய அபிவிருத்தியில் உள்வாங்க அத்திவாரம் இடப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சியில் மலையகத்தை நோக்கி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை திருப்திகரமாக அமைந்துள்ளது. அதேபோல் இந்த ஐந்தாண்டு நல்லாட்சி அரசில் மலையக மக்களும் நாட்டின் ஏனைய மக்களுக்குக் கிடைக்க கூடிய சமவுரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த மக்களின் தாகமாக உள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள மைத்திரி ரணில் அரசு 1978ஆண்டு கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை தேசியவாத அரசமைப்பை மாற்றி அனைத்தின மக்களும் சமரிமையுடன் வாழக் கூடிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அத்திவாரமிடப்பட்டுள்ளதாப அரசின் உயர்வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
அரசமைப்பொன்று உருவாக்ககப்படும் போத பெருபான்மை தேசிய வாதத்தால் சிறுபான்மை மக்கள் அடைந்த துன்பங்களைத் தீர்ப்பதை தற்போதை அரசு முழூவீச்சாகக் கொள்ளவேண்டும். 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டத்தால் ஏற்பட்ட விளைவு, சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தால் மலையக மக்கள் அடைந்த துயரங்களை இனியும் அடையாதவகையில் புதிய அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகளும் பிரதிபளிக்க வேண்டும்.
மலையக மக்கள் பெருப்பான்மையாக வாழும் பிரதேசங்ளில் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எல்லை நிர்ணயம், உள்ளூராட்சிமன்ற சிக்கல்கள் தொடர்பில் விசேட கவனங்களை அரசு செலுத்த வேண்டும். 2016ஆம் ஆண்டில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற அடிப்படையில் செயற்படும் இலங்கை அரசு அனைத்தின மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது அவசியமாகவுள்ள நிலையில் காலங்காலமாக மலையக மக்களைத் தட்டிக்கழித்தது போல் இம்முறையும் தட்டிக்கழிக்கக் கூடாத என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.
சி.பி வேலுப்பிள்ளை, சௌமிய மூர்த்தி தொண்டமான் போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் வாழ்ந்த மலையக மண்ணில் அண்மைக்காலம்வரை ஒரு தூர நோக்கற்ற மக்கள் நலனைச் சிந்திக்காத அரசியல் கபட நாடகங்களே அரங்கேற்றப்பட்டுவந்தன. இன்றை இந்த ஜனநாயக சூழலின் ஏனைய சமூகங்களின் உரிமைகளை அவர் தம் தலைவர்கள் பெற்றுக்கொள்ள போராடும் அளவுக்கு மலையகத் தலைமைகள் போராடுகின்றார்களா என்பதும் கேள்விக்குறியே. ஆனால், ஒரு சில தலைமைகள் மலையக மக்களின் பிரச்சினைக்குத் இந்த தசாப்தத்தில் தீர்வுக்காண வேண்டுமென்றே நோக்குடன் செற்படுகின்றமையை மறுக்க முடியாது.
2016ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான ஆண்டாக அமையுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேபோல் மலையக மக்களின் வாழ்விலும் இந்த ஆண்டு என்பது 200வருட அடிமை வாழ்வுக்கு விமோசனம் கிடைக்கும் ஆண்டாக அமைய வேண்டும். கூட்டு ஒப்பந்தம் முதல் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் மலையகத்திலிருந்து ஒழிப்பதற்கு தற்போதை மலையகத் தலைமைகள் கைகோர்க்க வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...