சாதியச் சாடல் என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும்.
ஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூழலையும் எனது தனிமையையும் மறக்க இயலாது.
இன்று தோழர் ரவிக்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் பேருக்கு பொதுத்தளங்களில் தினசரி நிகழ்கிறது. தோழர் ரவிக்குமார் போன்றோர் பிரமுகர்களாக இருப்பதால் உடனடியாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது வெறும் ரவிக்குமார் சம்பந்தப்பட்ட விடயம் இல்லையென்பதாலும், ரவிக்குமாரோடு நின்றுவிடப்போவதில்லை என்பதாலும் நாம் இது விடயத்தில் நமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவது முக்கியமானது.
ரவிக்குமார் முகநூலில் பதிவு செய்திருந்த “இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்” என்கிற பதிவொன்றிற்கு கீழ் நடந்த உரையாடலில் பின்னூட்டமிட்ட துரைரட்னம் “பற நாயே” என்று மோசமாக சாதியத்தை கக்கியிருக்கிறார்.
ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் அதி கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது. அப்படிப்பட்ட வசவுகளில் பெண்ணுருப்பயையும், தாயையும் சாடி புண்படுத்தும் வசவுகள் தூசனங்களாக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன. அதற்கடுத்தபடியாக பெரும் பாத்திரம் வகிப்பது சாதிய அடையாள வசவுகள் தான். எப்படி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள பெண்ணாதிக்க சொல்லாடல்கள் ஆணாதிக்கத்துக்கான கருவிகளில் ஒன்றாக இருக்கிறதோ அது போல தான் சாதியாதிக்கத்தின் நிலைப்புக்கும் சாதிய வசவுகள் ஒரு முக்கியமான காரணியாக இருக்கின்றது.
தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் இன்று ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.
மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவை சாடுகின்ற தூஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.
"கீழ்சாதி வெறுப்பு" கட்டமைக்கப்பட்டதென்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறளுக்கு எல்லைபோட இந்த புனைவு மிக அவசியமானது. கூடவே... ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்டவேண்டும். “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல...” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்த போக்கை பலமூட்டவேண்டும் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்தும் திரும்பத் திரும்ப செய்தும், புனைந்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்று தான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதை புழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.
உயர்சாதிகளையும், அது கட்டமைத்துள்ள கருத்தாக்கங்களையும், அது சமூகத்தில் திணித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக எற்படுத்திவிடிருக்கிற கற்பிதங்களையும் இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனிதங்களை உடைத்தல் (De-canonization) என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவுகளையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.
சாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்நிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயனிக்கவேண்டியவை அல்ல. இணைந்தே மேற்கொள்வது, தலித் விடுதலைக்கு வழிவகுக்கும்.
எனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டுகொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தோழர்களே.
இதில் உள்ள மிக அவலகரமான நிலை என்னவென்றால் சமூக மாற்றத்துக்காக பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியாமலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிபோயுள்ள இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை சூழ இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்தவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக இதிலிருந்து விடுபட முடிகிறது.
சக்கிலியர், பறையர் பள்ளர், நளவர் போன்ற சாதிய அடையாளங்கள் இன்று மற்றவர்களை இகழத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துரைரத்தினத்தை மன்னிப்பு கோரச்சொல்லி சேரன் போன்றவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட சற்றும் குற்ற உணர்வில்லாமல் துணிச்சலுடன் தொடர்ந்து வம்பிழுதத்தை குறித்த விவாதத்திலிருந்து காணக் கூடியதாக இருந்தது. அப்படி என்றால் அவருக்கு போதிய அளவு நமது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் கட்டாயம் பதிவு செய்து அவரை புறக்கணிப்பதும் புறக்கணிக்கச் செய்வதும் தேவையாக இருக்கிறது தோழர்களே.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...