புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இம்முறை மலையக அரசியற்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துக் கொண்ட கூட்டணிக்கு நாடு முழுவதிலும் குறிப்பாக, மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்திருந்தது.
இதன் காரணமாக கூட்டணியில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவை தலா இரு உறுப்பினர்கள் வீதம் 6 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டன.
அவர்களில் மூவர் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் மலையக மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பவற்றுடன் தொடர்புடைய அமைச்சுகளை தம்மகத்தே கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு காரணமாக அமைந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமைந்த அரசாங்கத்திலும் இவர்கள் அமைச்சுப் பதவிகள் வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக கூட்டணி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடர்களின் போதும் குழு நிலை விவாதங்களின் போதும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அனைவரது கவனத்திற்கும் கொண்டு வரும் வகையில் உரையாற்றி வருவதானது பாராட்டத்தக்க விடயமாக உள்ளது.
எனினும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழு மலையகத்தின் அபிவிருத்தியையும் இலக்காக கொண்டதாகவே காணப்பட்டது. மலையக மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கல்வி பொருளாதார அபிவிருத்தி என பல்வேறு முன்மொழிவுகள் தேர்தல் பிரசார மேடைகளில் கூட்டணி வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டன.
தேர்தலுக்குப்பின் புதிய பாராளுமன்றம் அமைந்து ஆறு மாதங்களை எட்டப் போகின்ற போதிலும், கூட்டமைப்பின் பெரும்பாலான செயற்பாடுகள் மத்திய மாகாணத்தை மாத்திரம் இலக்காக கொண்டு இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
காபந்து அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய வீ.இராதாகிருஸ்ணன் மலையக தமிழ் பாடசாலைகளின் ஆளணி பெளதீக வசதிகளை மேம்படுத்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை போராடிப் பெற்றுக் கொடுத்தமை அவரின் ஒரு சாதனையாக கொள்ளப்பட வேண்டும்.
எனினும், பதுளை, இரத்தினபுரி உட்பட மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள உயர்தர வகுப்புக்களை கொண்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் (தெரிவு செய்யப்பட்ட) கணித, விஞ்ஞான வகுப்புகளை அங்க சம்பூர்ணப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார். இது தொடர்பாக பதுளை மாவட்டத்தில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் தலைமையில் அதிபர், ஆசிரியர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை பாடசாலைகளில் ஸ்தாபிப்பது தொடர்பாக முன்மொழிவுகளும் பெறப்பட்டன.
இந்நடவடிக்கை இடம்பெற்று பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இம்முறையும் உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகளுக்காக மாணவர்கள் வெளிமாவட்டங்களை நாடிய வண்ணம் உள்ளனர். இதேபோன்று மலையக தமிழ் மொழி பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் பாடசாலைகளை இதுவரை சென்றடையவில்லை.
அமைச்சர் திகாம்பரம் பதுளை மாவட்டத்துடன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளார்.அவரது தொழிற்சங்கத்தின் சார்பாக அதிபர் இராஜமாணிக்கம் இரு தடவைகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் பதுளை மாவட்டத்தின் அபிவிருத்தியில் தமது பங்களிப்பை வழங்குவதாக தமது நெருக்கமான ஆதரவாளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். பூனாகலை, மீரியபெத்த வீடமைப்பு திட்டத்திற்கு புறம்பாக எல்ல நிவ்பர்க் தோட்டத்தின் ஒரு பிரிவில் மாத்திரமே புதிய தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தொலைபேசியூடாக கூட தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன. அமைச்சின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிட்ட சில இணைப்பாளர்களாலே பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித்தலைவர் தமது அமைச்சின் ஊடாக தேசிய பிரச்சினையாக கருதப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதில் அதிகம் முனைப்பு காட்டி வருகின்றார்.
தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்த விடயத்திலும் கூட்டணி எட்ட நின்றே காய் நகர்த்தி வருகின்றது. கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து ஒரு வருட காலத்தை எட்ட போகின்ற போதிலும் அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான கூட்டணியும் இதுவரையும் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்றே கூற வேண்டும்.
மலையக மக்கள் தொடர்ந்தும் சுயநல அரசியல் காரணமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலை தொடர வேண்டும் என்பதாலோ என்னவோ தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கூட இ.தொ.கா பொதுசெயலாளருக்கு அமைச்சு வழங்கப்பட வேண்டுமென ஆதங்கப்பட்டுள்ளார். இதை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.
கூட்டணி தொடர்பாக மலையக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பொய்த்து போகக்கூடாது. அவர்களின் செயற்பாடுகள் முழு மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அவர்களிடையே மாவட்ட ரீதியாக அபிவிருத்தி பணி பகிர்வு இடம்பெற வேண்டியது அவசியமாகும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...