Headlines News :
முகப்பு » , » புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் - தா. மனோகரன்

புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் - தா. மனோகரன்



மலையகப் பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளரை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் அத் தொழிலாளர் சமூகம் நாட்டின் சமவுரிமையுள்ள, சகல வளங்களும் பெற்ற சமூகமாக நிலைநிறுத்தப்பட்டுவிடுமா என்பது விடைக்குரிய வினாவாகும்.


அரசியல் மற்றும் தொழிற்சங்கப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் மலையகப் பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களின் நிலையை, அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை, நிறைவு செய்யப்பட வேண்டிய தேவைகளை மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டிய பொறுப்பை நாகரிக சிந்தனை கொண்டவர்கள் கொண்டுள்ளார்கள்.


இந்நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட அயராது உழைத்தவர்கள் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களே என்பது வரலாறு. காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கியவர்கள், புகையிரதப் பாதைகளை, பெருந்தெருக்களை அமைக்க காடுகளையும் மேடுகளையும் செம்மைப்படுத்தியவர்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்ற உழைத்தவர்கள், இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களேயன்றி வேறொருவருமில்லை. இந்த இலங்கை நாட்டிற்காக உழைத்தவர்கள், நாட்டை வளப்படுத்தி உயர்த்தியவர்கள் இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்களே என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.


நாட்டின் வளத்திற்குப் பாடுபட்ட அம்மக்களின் பரம்பரைக்கு இந்நாடு இருபெரும் பரிசுகளை வழங்கித் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டமையும் வரலாற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது.


ஆம். முதலாவது பரிசு அம்மக்களை நாடற்றவர்களாக்கி அவர்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமையை பறித்தது. மற்றைய பெரும் பரிசு அவர்களில் ஆறு இலட்சம் பேரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. நாட்டின் நலனுக்கும் வளத்திற்கும் உழைத்த மக்கள் கூட்டத்திற்கு உலகில் எங்குமே கிடைக்காத பரிசை இலங்கை வழங்கித் தன்னை இழிவுபடுத்திக் கொண்டது.


நடந்தது நடந்துவிட்டது. மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் இன்றைய பொதுவான நிலையை நோக்க வேண்டியது நமது கடமை. வேதனையாக இருப்பினும், அதை வெளிக்கொண்டுவருவது சமுதாய கடமை. உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.

அத்துடன் அம்மக்களுக்காகத் தாமே தலைமை தாங்குவதாக தம்பட்டமடிக்கும் தொழிற்சங்கத் தலைமைகளும், அரசியல் அரங்காடிகளும் தமது பொறுப்பை உணர்ந்து மேடைப் பேச்சுகளுக்கும்அறிக்கைகளுக்கும் அப்பால் செயற்பட வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள்.


முதலிலே பெருந்தோட்டத் தொழிலாளரின் குடியிருப்பு பற்றிக் கவனிப்போம். தோட்டங்களின் நடுவே வரிக்குடில்கள் எனப்படும் லயன் அறைகளே பெரும்பாலும் அவர்களது குடியிருப்புகள். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு நூறாண்டுகள் கடந்துவிட்ட அக்குடியிருப்புகள் பழுதுபார்க்கப்படாதவையா, கூரைகள் ஒழுங்கற்றவையாயுள்ளமையும், மின்சார ஒழுக்கால் பெருந்தொகை குடியிருப்புகள் தீக்கிரையாகியதால் அங்கு வாழ்ந்த மக்கள் பல ஆண்டுகளாகியும் இன்றும் அனாதரவான நிலையில் அகதிகளாக வாழ்வதையும் எவரும் பொறுப்புடன் நோக்கவில்லை.


மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத கூரைகளே பெரும்பாலான வரிக்குடில்களின் கூரைகளாயுள்ளன. மழைநீர் உட்புகவும் சூரிய ஒளி உட்புகவும் காற்றில் பறக்கவும் கூடியதாயுள்ள கூரைகளைத் திருத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பைத் தோட்ட நிர்வாகங்களோ, அரசோ மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அதுபற்றிய கவலை அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் தலைமைகளிடமும் காணப்படவில்லை.


நாட்டுக்கே வீதிகளை அமைத்த பரம்பரையினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது குடியிருப்புகளுக்குச் செல்லும் வீதிகள் செப்பனிடப்படுவதில்லையென்பது பெரும்குறையாகும். அவசர தேவைகளுக்கு பயணிப்பதற்கோ, பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கோ வீதிச்சீரின்மை தோட்டப்பகுதிகளில் பெரும்பாதிப்பாயுள்ளது.


மருத்துவ வசதிகளும் சீரற்றேயுள்ளன. பல மைல்கள் சென்று மருத்துவமனைகளை அடையவேண்டிய நிலையும் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் குறைபாடும் மருந்துத் தட்டுப்பாடும் அறிக்கையிடப்பட்டுள்ளன.


பொருளாதார நிலை பெருந்தோட்டத் தொழிலாளரை வாட்டி வதைக்கின்றது. நாட்கூலித் தொழிலாளர்களான அவர்களே இந்நாட்டில் மிகக் குறைந்த சம்பளம் பெறுபவர்களாயுள்ளனர். வேலைசெய்யும் நாட்களுக்கு மட்டும் கூலி பெறும் அவர்களுக்குப் போதிய நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை.

வேலை வழங்கப்படும் ஒருநாளின் அடிப்படைச் சம்பளம்460 ரூபாவாகவும் மேலதிக கொடுப்பனவு 20 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் வேலை வழங்கப்பட்ட நாட்களில் எழுபத்தைந்து வீத நாட்களுக்கு மேல் வேலை செய்தால் மட்டுமே மேலதிகமாக ஒரு நாளுக்கு 140 ரூபா வழங்கப்படுகின்றது.


வேலை வழங்கப்பட்ட நாட்களில் எழுபத்தைந்து வீத நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளியின் நாட்சம்பளம் 620 ரூபாவாக இருக்க எழுபத்தைந்து வீத நாட்களுக்கு ஒருநாள் குறைவாக வேலை செய்த தொழிலாளியின் நாட்சம்பளம் 480 ரூபா மட்டுமே. ஒரே உழைப்பிலும் சம்பளம் வழங்கப்படுவதில் வேறெந்த தொழிற்றுறையிலும் இல்லாத பாகுபாட்டிற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுத்துள்ளனர். இது உழைப்பை, உழைப்பாளிகளை அவமதிக்கும் செயல். 


திட்டமிட்ட முறையில் கருத்தடை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது இன்று நேற்றல்ல, 1960 காலப்பகுதிகளில் வெளிநாட்டு நிதியுதவியுடன் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தோட்டப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.

குடும்பக் கட்டுப்பாட்டிற்கு வெளிநாடுகள் வழங்கிய நிதி பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது. இன்று அரசுசாரா நிறுவனங்களும் இந்த இனவொழிப்பு கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபடுவது வெறுப்புக்குரியது. கண்டனத்துக்குரியது.


பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமையின் பாதிப்பால் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களென்றால் அவர்களது வறுமை நிலையை உணரமுடிகின்றது. இலங்கையில் உயிர்வாழும் வயதெல்லையில் குறைந்தவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களே என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.


மருத்துவமனைகளோ, பாடசாலைகளோ, நூல் நிலையங்களோ, பொழுது போக்கு வசதிகளோ மலையக தோட்டப்பகுதிகளில் உருவாக்குவதைவிட மதுபானசாலைகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு ஒத்துழைக்கும் அம்மக்களின் பிரதிநிதிகளென்று மார்தட்டும் புள்ளிகளும் அவமானத்தின் பங்குதாரராவது அசிங்கமாயுள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறிக் கொண்டு பெருந்தோட்ட தொழிலாளரின் குடிகளை நாமமாக்கும் மது விற்பனைக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கப்படுகின்றது.


மனிதவாழ்வுக்கு ஆதாரமானது நீர். அதுவும் குடிநீர். பல தோட்டங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. குடிநீருக்காகவும், குளிப்பதற்காகவும் நீண்டதூரம் மலைகளில் ஏறியிறங்கும் நிலைக்கும் பெருந்தோட்ட மக்கள் ஆளாகியுள்ளமை தினமும் செய்திகளாக வெளிப்படுகின்றன.


கல்வியைப் பொறுத்தவரை நாட்டின் ஏனைய சமூகங்களை விட மிகவும் பின்தங்கிய சமூகமாகவே பெருந்தோட்டத்துறை சமூகமுள்ளது. அரச தொழில்வாய்ப்புகளும் உரியபடி கிடைப்பதில்லை. கிடைப்பவையும் தட்டிப்பறிக்கப்படுவதைக் காணமுடிகிறது.


பிரதேச சபைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இன்று பெருந்தோட்டத் தொழிலாளருக்குள்ளது. ஆனால் உள்ளூராட்சி சபைகளால் மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தியையும் அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கில்லை.


கிடைக்கும் நாட்சம்பளத்தில் உணவுக்கும், உடைக்கும் மருத்துவத்திற்கும், போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிள்ளைகளின் தேவைக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஒரு தோட்டத் தொழிலாளி பெற்றுக் கொள்ளும் சம்பளம் போதுமா என்பதை எவரும் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் நாகரிக எண்ணமும் இல்லையெனலாம்.

எத்தனை நாள் வேலை செய்தாலும், எவ்வளவு சம்பளம் பெற்றாலும் தொழிற்சங்கங்களுக்குரிய உறுப்புரிமை சந்தா சம்பளப் பட்டியலிலிருந்து அறவிடப்படுவது மட்டும் நிச்சயம். குறைந்த சம்பளம் பெறும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டிலுள்ள அதுவும் தமிழ்த் தொழிலாளரது நலன்களுக்கெதிராகச் செயற்படும் அரசியல்வாதிகளுக்கு தங்கச் சுரங்கமாயுள்ளனர். எது எப்படியிருந்தாலும் சந்தா அறவீட்டில் கண்ணும் கருத்துமாயுள்ளனர்.


மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் படும் இன்னல்களை, எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைகளை நாமறிந்து கொள்ள வேண்டும். நாடறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் எமது இனத்தவர்களில் ஒருபகுதியினர் புறக்கணிக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் வேதனை அனுபவிக்கிறார்கள் என்பதை நாட்டில் எப்பகுதியிலிருந்தாலும் ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்.


இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர் அனைவரும் ஒரே இனத்தவர்கள். அதைப் பிளவுபடுத்தவோ, சிதைக்கவோ, அதன்மூலம் இலாபம் பெறவோ எவரும் முயலக்கூடாது. இன்றைய தேவை மலையகப் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் வாழ்வை வளப்படுத்தி, வலுப்படுத்தி அவர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த சீர் செய்யும் வழிகளைக் காண்பதாகும். வெறும் அறிக்கைகளாலும் மேடைப் பேச்சுகளாலும் அம்மக்கள் வாழ்வை உயர்த்தி விடமுடியாது.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates