Headlines News :
முகப்பு » » ஏழ்மையால் தோட்டங்களை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள் - ஆய்வுரையில் கலாநிதி நிஷான் டி மெல் - என்.செழியன், ஜெ.ராஜன்

ஏழ்மையால் தோட்டங்களை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள் - ஆய்வுரையில் கலாநிதி நிஷான் டி மெல் - என்.செழியன், ஜெ.ராஜன்


இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சமூகப், பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் ஏழ்மை நிலைமை காரணமாக தோட்டங்களிலிருந்து வெளியேறி, வெளியிடங்களில் தொழில் தேடிச்செல்லும் போக்கினை கொண்டிருக்கின்றனர். அதேவேளை, நிலம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை என்பன உற்பத்தியை குறைத்துள்ளன. இதற்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும் என்று வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி நிஷான் டி.மெல் தனது ஆய்வுரையில் தெரிவித்தார்.

வீரகேசரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் "பெருந்தோட்டத் தொழில்துறையை வலுப்படுத்தவதில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் நிகழ்வு கடந்த முதலாம் திகதியன்று கொழும்பு லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு வீரகேசரி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில்,

இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களின் பிரச்சினைகளை வெளியிடவும் எந்தவொரு பத்திரிகையும் இல்லை என மகாத்மா காந்தி 1928 ஆம் ஆண்டில் இலங்கை வந்தபோது சுட்டிக்காட்டியிருந்தார். இதனையும் கருத்திற்கொண்டே 1930 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 85 ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரிப்பத்திரிகை விரிவடைந்து ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் முன்னணி தேசியப் பத்திரிகையாக இன்று வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சமூக, பொருளாதார ரீதியிலான இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இன்றைய பெருந்தோட்டத்துறையின் வலுவற்ற நிலை காரணமாக இரண்டு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத்தொழில்களிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் தொழிலைத்தேடுதல் மற்றையது உற்பத்திக்கான நிலம் மற்றும் தொழிலாளர்கள் குறைவடைதல் என்பவையாகும் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் ஆகியோரும் பேராசிரியர்களான சோ.சந்திரசேகரன், எம்.சின்னத்தம்பி, கலாநிதி எஸ்.சந்திரபோஸ், மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகர் எம். வாமதேவன், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் றொஷான் ராஜதுரை, மேல்மாகாண சபை உறுப்பினர் கே.டி.குருசாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ். அருள்சாமி மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

''பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கு தொழிற்சங்கங்களின் வகிபாகங்கள்" என்ற தலைப்பில் கலாநிதி நிஷான் டி.மெல். தன் ஆய்வுரையை அங்கு நிகழ்த்தினார். தனது ஆய்வுரையில் அவர் தெரிவித்ததாவது,

பெருந்தோட்டத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய தீர்வென்ன? பெருந்தோட்டத்துறை வழங்கக்கூடிய தீர்வென்ன? என்பதை ஆராயாமல் இதற்கு தொழிற்சங்கங்கள் வழங்கக்கூடிய தீர்வென்ன என்பதைப் பற்றிய கருத்தே இவ்வாய்வுரையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தேயிலைத் தொழில்துறையில் தொழிலாளர்களின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கள் ஆற்றவேண்டிய வகிபாகங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் மூன்று முக்கியமானவை.

1. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடன் நல்லுறவைப் பேணுதல் வேண்டும்.

2. தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் நல்லுறவை கொண்டிருக்க வேண்டும்.

3. தொழிற்சங்கங்கள் தேசியக்கொள்கைகளுக்கேற்ப செயற்பட வேண்டும் என்பவையே அவையாகும்.

பொதுவாக பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே, தொழிற்சங்கங்கள் தங்களுடைய பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றுவதில்லையெனவும் பணத்துக்காக பக்கச்சார்புடன் நடந்து கொள்கின்றன என்ற கருத்துக்களும் காணப்படுகின்றன. பெரும்பாலான தொழிலாளர்கள் தமது கருத்துக்களை நிறுவும் வகையில் அதற்கான காரணங்களையும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, பெருந்தோட்டத்துறையின் பின்னடைவிற்கு மூன்று பிரதான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன, தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள் அல்லது மோதல்கள், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றது தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் காணப்படும் பிரதான முரண்பாடாக சம்பளப் பிரச்சினையே முதலிடம் பெறுகிறது. தோட்ட நிர்வாகங்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குவதில்லையென தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேவேளை, தோட்ட நிர்வாகங்களோ தேயிலை உற்பத்திக்கான செலவு அதிகரித்துக் காணப்படுவதாகவும், சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாதெனவும் கூறுகின்றன. இரு தரப்பினருக்கும் இடையில் இதுவே பிரதான முரண்பாடாக விளங்குகிறது.

தோட்டத்தொழிலாளர்களுக்கும் தற்போது நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக 450 ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன், விலைக்கேற்ற கொடுப்பனவாக 30 ரூபாவும் ௧௯ நாட்களுக்கு மேல் வேலை செய்தால் மட்டுமே வரவுக் கொடுப்பனவாக 140 ரூபாவும் வழங்கப்படுகிறது. இவர்களின் அடிப்படை சம்பளமான 450 ரூபாவிற்கு 18 கிலோ தேயிலை பறித்தல் வேண்டும். ஆனால், இவர்கள் மேலதிகமாக பறிக்கும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் 20 ரூபாவே கொடுக்கப்படுகின்றது. இதன் விலையானது சராசரியாக இவர்கள் பறிக்கும் ஒரு கிலோ தேயிலைக்கான விலையிலும் பார்க்க குறைவானதாகும். இது ஒரு நியாயமற்ற கொடுப்பனவாகும்.

இதேவேளை, வெளியிடங்களில் வேலைக்குச்செல்லும்போது சம்பளமாக 600 ரூபா முதல் 700 ரூபா வரை வழங்கப்படுவதாகவும், அதன் காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் வெளியிடங்களை நோக்கி வேலைக்குச்செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்தொழிலாளர்கள் தோட்டங்களில் நியாயமான ஊதியம் கிடைக்காத காரணத்தால் தோட்டங்களை விட்டு வெளியேறி வெளியிடங்களில் வேலைக்கு செல்வதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் தோட்டக்கம்பனிகள் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி காணப்படுவதாகவும், தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கூறி மாற்றுப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன. இங்கு இரு தரப்பினரும் இரு வேறு திசையில் பயணிக்க முற்படுவதனால் பெருந்தோட்ட தேயிலைத்துறையே பின்னடைவை எதிர்கொள்கிறது. பெருந்தோட்டக்கம்பனிகள், தேயிலை உற்பத்திக்கான செலவு அதிகமாக காணப்படும் அதேவேளை, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறுகின்றன. இதற்கு தேயிலை உற்பத்தி குறைவு மற்றும் தேயிலையின் தரம் உயர்ந்ததாக இல்லையெனவும் கூறுகின்றனர். இதற்கு தொழிலாளர்கள் சோம்பேறிகளாகவும் உற்பத்தித்திறன் குறைந்தவர்களாகவும் காணப்படுவதே காரணமென்றும் கம்பனிகளிடம் ஒரு கருத்து உள்ளது.

ஆனால், இக்கருத்தில் இரு வேறு விடயங்களை அவதானிக்க வேண்டியுள்ளது. முதலாவது நிலத்தின் தன்மையும் அதன் உற்பத்தித்திறனும். இரண்டாவது தொழிலாளரின் உற்பத்தித்திறன்.

நிலம் சிறப்பானதாகவும், தேயிலை உற்பத்திக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்குமானால், அந்த நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உயர் ரகத்தினை கொண்டதாக இருக்கும்.

அதேவேளை, தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுமானால் தொழிலாளர்களால் சோம்பேறித்தனமின்றி தமது உற்பத்தித்திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

பெருந்தோட்டத்துறைக் கம்பனிகள் தேயிலையின் தரத்தை அதிகரிப்பதற்குரிய செயற்பாடுகளில் குறைவான அக்கறையை காட்டுவதாகவே கூறப்படுகிறது. மேலும் பல புதிய தொழில்நுட்பங்களை கம்பனிகள் மேற்கொள்ள வேண்டும்.

தேயிலைத்தோட்டங்களிலிருந்து இளந்தலைமுறையினர் வெளியேறுவதிலிருந்து தடுத்து, அவர்களை தோட்டங்களில் வேலைசெய்வதற்கு ஊக்குவிக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கி தேவையான நலன்புரி விடயங்களை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களாகவே இருக்கவேண்டிய நிலையில், வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தோட்ட முகாமையாளர்களாகவும் உத்தியோகத்தர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு இடைவெளி காணப்படுகிறது. பரம்பரையாக தோட்டத்தில் தொழில் செய்யும் தாம் தொடர்ந்தும் அடிமைகளாக இருப்பதுடன், வெளியிலிருந்து வருபவர்கள் தம்மை அடக்கியாள முற்படுகின்றனர் என்ற எண்ணம் தொழிலாளர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. இதனை இல்லாதொழிப்பதற்கு பெருந்தோட்டத்துறையில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் பதவிகளை வழங்க வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்கள் தேயிலை உற்பத்திக்கு அடிப்படை காரணமாக இருந்த போதிலும், அவர்களுக்கு தரம் குறைந்த தேயிலையே மாதாந்தம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு ஒருபோதும் உயர் ரகத் தேயிலை விநியோகிக்கப்படுவதில்லை. இதுவும் ஒரு நியாயமற்ற செயலென தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், தொழிற்சங்கங்கள் தோட்டத்தொழிலாளர்கள் பக்கம் நின்று உண்மையாக செயற்படுவதில்லையென்ற எண்ணக்கருத்து தொழிலாளர்களிடையே நிலவுகிறது. மட்டுமின்றி, பல ஆண்டுகள் கழிந்தும் கூட இன்றும் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இல்லை. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகவே நோக்குகின்றனர். தோட்ட முகாமைத்துவம் தொழிலாளர்களை அடிமைகளாகவே நடத்த முற்படுவதாகவும் தோட்டத்தொழிலாளர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளான வீடு, சுகாதார நிலையங்கள், பாடசாலை, கிராம சேவகர் அலுவலகம், உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுடைய இருப்பிடங்களுக்கு அருகிலேயே சகல தேவைகளும் நிறைவு செய்யக்கூடிய ஒரு இடமாக மாற்றியமைத்தல் வேண்டும். இரு மொழிகளிலும் பணியாற்றக்கூடிய அரச அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மேலும் வலுப்பெறல் வேண்டும். தொழிற்சங்கங்கள் மீதான தோட்டத்தொழிலாளர்களின் பார்வை முழுமையான நம்பிக்கையை வழங்கும் வகையில் தொழிற்சங்கங்கள் செயற்பட வேண்டும். ஆரம்ப காலத்தில் தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் வைத்திருந்த நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். தொழிற்சங்கங்களில் நிபுணத்துவம் மிக்க உத்தியோகஸ்தர்களை நியமித்தல் வேண்டும். அதன் மூலமே தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தோட்ட நிர்வாகங்களிடமிருந்து சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்.

இந்த விடயங்களில் தொழிற்சங்கங்கள், தோட்டக்கம்பனிகள், அரசாங்கம் ஆகியன ஒன்றுக்கொன்று புரிந்துணர்வுடன் செயற்படுவதன்மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்றார்.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates