சொந்த வீட்டில் இருப்பதிலேயே நிம்மதியும் ஆத்மா திருப்தியும் கிடைக்கும்
கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் 2014 ஒக்டோபர் 29 ஆம் திகதி கோர மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி 39 பேர் பலியானார்கள். 12பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஏனையோர் மண்ணோடு மண்ணாகிப்போயினர்.
நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் இடம்பெற்று 15 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், மண்சரிவிலிருந்து உயிர்தப்பி அகதி முகாமில் தங்கியிருக்கும் மக்களின் தற்போதைய நிலை என்ன?
உறவுகளையும் உடைமைகளையும் இழந்த 346 பேர் கொஸ்லந்தை ஸ்ரீகணேஷா வித்தியாலயத்திலும் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் இன்றுவரை பூனாகலை மாக்கந்தை பழைய தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறு சிறு அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு வாழ்கின்ற மக்களின் நிலைமையை பற்றி ஆராய்ந்த போது மாரிமுத்து செல்வராஜ் (64), தாதன் ராஜகோபால் (65), மல்லன் ஆண்டி (66) போன்றவர்கள் தமது தற்போதைய நிலைமையைப்பற்றி கூறுகையில்,
பாதிக்கப்பட்ட அனைவருமே இங்குள்ள (தேயிலைத் தொழிற்சாலை) 10க்கு 10 அறைகளிலே வசிக்கின்றோம். எங்களின் உணவு தேவைக்காக தோட்ட நிர்வாகம் கூப்பன்களை வழங்குகின்றது. அதன் மூலம் கூட்டுறவு சங்கக்கடையில் தேவையான பொருட்களைப்பெற்று கொள்கின்றோம். 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் 6,000 ரூபா வீதம் கூப்பன் வழங்கப்படுகிறது. 4பேர் கொண்ட குடும்பத்திற்கு வாரத்திற்கு 1,400 ரூபா வீதம் 5,600 ரூபா மொத்தமாக கிடைக்கின்றது. மின்சாரம், நீர், சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை அருகில் உள்ளது. அங்கு சென்று எங்கள் பிள்ளைகள் பயின்று வருகின்றார்கள். அவர்களுக்கு உணவுகள் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
மண்சரிவு ஏற்பட்ட நாள் முதல் இன்றுவரை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் உதவிகள் செய்து வருகின்றன. அண்மையில் கூட தனியார் நிறுவனம் ஒன்று அதிகளவிலான உதவிகளை வழங்கியமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இன்றைய நிலையில் அனைத்துவித வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எங்களுக்கென்று சொந்த வீடுகள் இதுவரை கிடைக்காமல் இருப்பதே பாரிய குறையாக உள்ளது. கடவுளின் கோரப்பார்வை எம்மை இந்தளவு சிரமத்திற்கு ஆளாக்கி விட்டதோ தெரியவில்லை. நாங்கள் தொடர்ந்து இதேபோல் தேயிலை தொழிற்சாலை அறைகளுக்குள்ளேயே வாழ முடியாது.
எமக்கான வீடுகள் மிக விரைவில் கிடைக்க வேண்டும்.
அதுதான் எமக்கு நிம்மதியையும் ஆத்ம திருப்தியையும் கொடுக்கும்.
பெண்கள், நோயாளிகள் போன்றோர் இந்த சூழலில் வாழ்கின்றமை சற்று அசௌகரியமாக உள்ளது. எனவே, கூடிய விரைவில் வீடுகள் கிடைக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும். அதுவே போதுமானதாக இருக்கும்.
நாங்கள் தற்காலிகமாக தங்கியுள்ள தேயிலைத்தொழிற்சாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரவு வேளையில் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பொலிஸாரும் பகல் நேரத்தில் கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் இருக்கின்றமை பெரும் உதவியாக இருக்கின்றது.
முகாமில் உள்ள சிதம்பரம் ஜெயலட்சுமி, உருமன் சரோஜா ஆகியோர் கூறுகையில்,
நாங்கள் இருந்த லயன் குடியிருப்பில் ஒருபகுதி சேதமடைந்து விட்டது. மறுபகுதியில் இருந்தவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மண்ணுள் புதையுண்டு மீண்டு வந்து விட்டோம். பக்கத்தில் ஓடி திரிந்த பலர் புதையுண்டு போனார்கள்.
9 ஆம் இலக்க குடியிருப்புத்தொகுதியில் யாருமே பலியாகவில்லை. ஆனால், 10 ஆம் இலக்க குடியிருப்பு தொகுதியில் 11 பேரும் 12 ஆம் இலக்க தொகுதியில் 7 பேரும் மருத்துவதாதியின் குடும்பத்தில் 5 பேரும் 7 ஆம் இலக்க தொகுதியில் ஒருவரும் 13 ஆம் இலக்க தொகுதியில் 3 பேரும் உடலுவத்தை தோட்டத்திலிருந்து வந்த இரண்டு மாணவிகளும் மேலும் ஒரு மாணவி அடங்கலாக 39 பேர் பலியாகி விட்டார்கள்.
12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், ஏனையவர்கள் அங்கேயே உறங்குகின்றார்கள். உரிய நேரத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் எங்களை வெளியேற்றி வேறு இடத்தில் வீடமைத்து குடியேற்றி இருந்தால் இத்தனை சேதம் ஆகியிருக்காது. மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த உடமைகளும் பணமும் புதையுண்டு போயிருக்காது. இனியும் காலம் கடத்தாது வெகு விரைவில் வீடமைப்பு திட்டத்தை பூர்த்தி செய்து எமக்கு வீடுகள் கிடைப்பதற்கு உதவி செய்தால் அதுவே பாரிய உதவியாக இருக்கும்.
எங்கள் அனைவரினதும் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் புதையுண்டு போனமையினால், அவற்றினை மீளவும் பெற்றுக்கொள்ள கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலாளரும் பாரிய உதவிகளை செய்தனர். அதன் காரணமாக அதிகமானோருக்கு ஆவணங்கள் பல இன்றளவிலும் கிடைத்தவண்ணம் உள்ளன.
மீரியபெத்த மண்சரிவில் பாதிப்படைந்து முகாம்களில் உள்ளவர்களுக்கான வீடமைப்பு திட்டம் நடைபெறும் மக்கள் தெனிய சந்தியில் கடமையில் இருக்கும் இராணுவ உயர் அதிகாரி கெப்டன் குமாரவிடம் வீடமைப்பு திட்டம் தொடர்பாக கருத்து கேட்ட போது,
இவ்விடத்தில் மொத்தமாக 75 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இன்றுவரை 48 வீடுகளுக்கான வேலைகள் 85 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. 13 வீடுகளுக்கான வேலைகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளன. மிகுதி 14 வீடுகளுக்கான நிலம் பற்றாக்குறையாக இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட கம்பனிகளுடன் பேசி தற்போது தான் பெற்றுக்கொண்டோம். இந் நிலத்தில் உள்ள மரங்களை முதலில் அகற்றிய பின்னர் தான் அடித்தளமிடும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். தற்சமயம் மரங்களை வெட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் இந்தளவு தாமதமாக காரணம் என்ன?
வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடம் சீரான அடித்தளம் அமைக்கும் அளவிற்கு இருக்கவில்லை. சற்று மலைப்பாங்கான இடமாகவே இருக்கின்றது. சமதரையில்லை.
அத்தோடு, பெரிய கற்பாறைகள் அதிகளவில் காணப்பட்டதுடன், மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டி இருந்தது. கற்களை தோண்டி உடைத்து சீர் செய்வதற்கு சில காலம் ஆனது. அதன் பின்னரே அடித்தள வேலைகளை ஆரம்பித்தோம். ஆரம்பித்த சில வாரங்கள் முதலே தொடர் மழையும் ஆரம்பித்து விட்டது. சீரற்ற காலநிலையும் பெரும் தடையாக இருந்தது. அது மட்டு மல்ல, இவ்வீடுகளுக்கு பயன்படுத்தும் பலகைகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
இந்த பலகைகள் மலையக காலநிலைக்கும் வளையாமல் இருக்கும் தன்மை உடையதாகும்.
இவற்றினை தேவைக்கேற்ப பயன்படுத்த தற்போது முடிகின்றது. இவ்வாறான பல்வேறு காரணங்களே வேலைத்திட்டம் தாமதமடைய பிரதான காரணமாகுமே தவிர, வேறு எதுவும் இல்லை.
தற்போது தேவையான பொருட்கள் அனைத்தும் உடனடியாக கிடைக்கின்றனவா அல்லது சிக்கல்கள் எதுவும் உண்டா?
வீடுகள் அமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் மாவட்ட செயலாளர் தலைமையில் பிரதேச செயலாளர் ஊடாக எமக்கு கிடைக்கின்றன. வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளில் 300 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றுக்கு இத்திட்டம் மாறி மாறி கையளிக்கப்பட்டதால்தான் இத்திட்டம் தாமதமடைந்ததாக பொதுவான கருத்து கூறப்படுகின்றது. இதுபற்றி தாங்களின் கருத்து என்ன?
நான் 2015 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 திகதிக்கு பின்னர் தான் கடமைகளை பொறுப்பேற்றேன். அதனால் அமைச்சுக்களைப்பற்றி எதுவும் கூற முடியாது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு, மாவட்ட செயலாளர் போன்ற அனைத்து தரப்பினரும் மிகவும் வேகமாகவும் பொறுப்புடனும் செயற்படுகின்றமையும் தேவையான அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்து தருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
மக்கள் தெனிய வீடமைப்பு திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடு ஒன்றிற்கு 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வீட்டின் முற்றம் முதல் அனைத்தும் மிகவும் சீரான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டின் அறைகளுக்கும் 5 கதவுகள் வீதம் பொருத்தப்பட்டுள்ளன. அத்தோடு, விறாந்தை படுக்கையறை, சமையலறை, குளியலறை என அனைத்து அம்சங்களுடன் மின்சாரம் மற்றும் நீர் வசதிகளுடன் வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.
பூச்சு (பெயின்ட்) வேலை, யன்னல், கதவு பொருத்தும் வேலை, கூரை தயாரிக்கும் வேலை என அனைத்து வேலைகளுக்கும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தினமும் வேலைகள் நடந்த வண்ணமே உள்ளன. அனைத்து வேலைகளும் வெகு விரைவில் பூர்த்தியாக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என இராணுவ அதிகாரி கெப்டன் குமார தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் சிதறி வாழ்பவர்கள் சேர்ந்து ஓரிடத்தில் வாழ்வதனையே ஊர் என்போம். அவ்வாறான மீரியபெத்த என்ற ஊரையே மண் விழுங்கியதால் மக்கள் சிதறிப் போய்விட்டார்கள்.
மீண்டும் ஒரே இடத்தில் வீடமைப்பு திட்டத்தை உருவாக்கி அங்குள்ள வீடுகளில் மக்களை மீள குடியமர்த்தி மீரியபெத்த என்ற ஊரினை மீண்டும் விரைவில் உருவாக்க அதிகாரிகள், மலையக அரசியல் வாதிகள் அக்கறையுடனும் சமுதாய பொறுப்புடனும் விரைந்து செயற்பட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...