பெருந்தோட்டங்களை கையேற்கும் திட்டத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டு சுமார் 26 தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டன.
மிகுதியானவை அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரப்பட்டன. அவை பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கம் SPC போன்ற அரச நிறுவனங்களின் கீழ் முகாமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான தோட்டங்கள் தற்போது மிகவும் பின்னடைந்த நிலையில் இயங்கிவரும் அதேவேளை, நஷ்டத்தையும் கண்டு வருகின்றன. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
அவ்வாறான அரச தோட்டங்களில் ஒன்றே புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம். இத்தோட்டம் 7 பிரிவுகளைக் கொண்டது. இந்த தோட்டத்தின் புப்புரஸ்ஸ மேற்பிரிவு மக்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்தத்தோட்டத்தொழிலாளர்களுக்கு தேவையான வேலை நாட்கள் வழங்கப்படுவதில்லை. தோட்டம் முறையாக பராமரிக்கப்படாததால் புல் வளர்ந்து பற்றையாகக் காணப்படுகிறது. தேயிலைச் செடிகளுக்கு உரம் போடுவதில்லை. மருந்தும் தெளிப்பதில்லை. இதன் காரணமாக அநேகமான தேயிலை மலைகள் காடாகக் காட்சியளிக்கின்றன. கொழுந்தின் வளர்ச்சியும் குறைவாகும். எனவே, தோட்டத்தில் வேலை வழங்கப்படுவது குறைவாகும். வேலை நாட்கள் குறைவடைந்து காணப்படுவதால் தொழிலாளர்களுக்கான வருமானமும் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது.
இந்தத் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்படுவதாகத் தெரிவித்து அண்மையில் சில பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவை நடைமுறைக்கு வரவில்லையென்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழங்கப்பட்ட காணியும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. வீடமைப்புத்திட்டங்கள் தற்போது அமைக்கப்பட்டு வந்த போதும் அவையும் முறையாக செயற்படவில்லை. அநேகமானோர் தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இருக்கும் வீடுகள் மழைக்காலத்தில் ஒழுகுகின்றன. பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
தற்போது அங்கு ஒரு மருந்துச்சாலை காணப்படுகின்றது. அதுவும் கைவிடப்பட்டு குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலை இல்லை. அவசர தேவையின் பொருட்டு கலஹா போன்ற பிரதேசங்களுக்கே செல்ல வேண்டியுள்ளது. தோட்டத்தில் அம்புலன்ஸ் வசதி காணப்பட்ட போதும் அவை சில நேரங்களில் கிடைப்பதில்லை. அம்புலன்ஸ் இந்திய தூதரகத்தினால் வழங்கப்பட்டதாகும். தற்போது காணப்படும் மருந்தகத்தில் தேவையான மருந்துகள் இல்லை. மருந்துகள் தேவைப்படுமிடத்து பணம் கொடுத்து பிரத்தியேகமாகவே பெறவேண்டும்.
மலசலகூடம், சுத்தமான நீர் விநியோகம், நோய்த்தடுப்பு வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளின்றி தோட்ட மக்கள் அவதிப்படுகின்றனர்.
இத்தோட்டம் 7 பிரிவுகளைக் கொண்டது. LEWALON, HERMITAGE, COLGRAIN, GALLOWAY KNOWE, NEW FOREST, POPRASSIE TOP, POOPRASIE L/D என்பனவே அவையாகும். இந்தத் தோட்டப்பிரிவுகளில் மொத்தமாக சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். இவர்களில் தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 1000 ஆகும். ஆண் தொழிலாளர்கள் சுமார் 400 பேராகவும் பெண் தொழிலாளர்கள் சுமார் 600 பேராகவும் காணப்படுகின்றனர். மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,500 ஆகும். தற்காலிக குடியிருப்புக்களில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்தத் தோட்டங்கள் 3 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும். அவற்றில் பிட்டவல கிராம சேவகர் பிரிவு, உனுகல கிராம சேவகர் பிரிவு, புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு போன்றவை அடங்கும். இங்கு தோட்ட வேலையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்குரிய ஓய்வூதிய கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கின்றதாகவும் ஓய்வு பெற்ற தோட்டத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். பல வருடங்கள் ஆகியும் சிலருக்கு ETF மற்றும் EPF கிடைக்கவில்லை. சிலர் தினமும் நாள் சம்பளத்துக்கு வேலை செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பெரும்பாலானோர் வெளி இடங்களிலேயே தொழில் செய்து வருகின்றனர்.
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம்வரை படித்தவர்கள் சுமார் 150க்கும் மேல் உள்ளனர்.
இவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லை. இந்நிலையில், என்ன செய்வது என்று அறியாத இவர்கள் தோட்டத்தில் கைக்காசுக்கு தொழில் செய்து வருகின்றனர். க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்கள் உயர்தர கல்விக்காக கலஹாவிற்கு நீண்ட தூரம் பஸ்ஸில் செல்ல வேண்டும். பஸ்ஸும் முறையாக இல்லை. பஸ் போக்குவரத்துக் குறைவு காரணமாக மாணவர்களினதும் கல்வி நிலையிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
அதேவேளை, இப்பிரதேசத்தில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு தொழிற்சாலைகளை அமைத்தால் தொழில் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்குமென்று தோட்ட மக்கள் கூறுகின்றனர். இதற்கும் அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் நலன் சார்பான விடயங்களில் தோட்ட நிர்வாகம் அக்கறை காட்டாததால் அவர்களின் சந்ததியினரும் பாதிப்படையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். மேற்படி தோட்ட மக்களின் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், தொழிலாளர்கள் சார்பாக தொழில் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலையக தோட்ட தொழிலாளர்களின் உரிமையை பொறுத்தவரையில் எதையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது தோட்டத்திற்கு தோட்டம் வித்தியாசமாகவே காணப்படுகின்றது. தோட்டங்களோ இலாபத்தையே முக்கியமாகக் கருதுகின்றன.
தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை. இந்நிலை தொடருமாயின் தொடர்ந்தும் இவர்களின் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு மலையக தலைவர்கள் உடனடியாகத் தீர்வினைப்பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...