அரசியல் நடவடிக்கைகளின் போது, நாம் சிந்திக்கும் விதத்தினை விட மறு தரப்பு என்ன சிந்திக்கின்றது என்ற விடயம் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறே சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடான அரசின் எண்ணப்பாட்டை கருத்திலெடுக்காமல், மலைநாட்டு வாழ் பெருந் தோட்டத்துறை தொழிலாளர்களின் காணியுரிமை தொடர்பான கோரிக்கைகளும் நடவடிக்கைகளும், சிறுபிள்ளை பந்தெறிந்து விளையாடுவது போல் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் இருந்தே ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரா ஒரு கருத்தை வலியுறுத்தி வந்தார். இலங்கையின் மலையக பிரதேசம் பிராதன நீரேந்தும் பகுதியாகும், இப்பகுதியில் விவசாயமோ, கைத்தொழில் நடவடிக்கைகளோ இடம்பெறக்கூடாது, மக்கள் குடியிருப்புக்கள் அமைக்க கூடாது, அப்பகுதியை வனாந்திரங்களாக பாதுகாத்திட வேண்டும், அதற்கும் மேலாக தற்போது விவசாய, பெருந்தோட்ட பயிர்ச்செய்கை நடைபெரும் இடங்களையும் காடாக்கம் செய்தல் வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தியதாகும்.
இந்த கொள்கை மலைநாட்டு வாழ் தமிழ் பேசும் தொழிலாளர்களின் புரட்சிகர பாத்திரத்தை ஜேவிபி மறுதலித்ததற்கும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருப்பதற்கும் ஒரு காரணியாகும். அன்று விஜேவீரா கூறியதையே இன்றைய அரசும் செய்து வருகின்றது.
1997 ஆம் ஆண்டு முதல் திட்டம் தீட்டி 2011 -2030 வரைக்குமான தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள அரசின் 20 ஆண்டு திட்டத்தில் விஜேவீரா கூறியது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பாராளுமன்றத்தில் மகிந்த ராசபக்சவின் முன்னைய அரசாங்கம் சமர்பித்தது.
பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களின் வலைப்பின்னல்(PAN), மத்திய சூழல் கூறுணர்வான பிரதேசங்கள்(GPA) என பிரதேசங்கள் சிலவற்றை அடையாளப்படுத்தி அப்பிரதேசங்களில் அபிவிருத்தியை மட்டுபடுத்தல், மற்றும் குடியிருப்புகளை அகற்றல் மூலம் இலங்கையின் சூழல் வளத்தை பாதுகாக்கபோவதாக தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டம் கூறுகின்றது.
இவ் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களிலும், மத்திய கூருணர்வு பிரதேசங்களிலும் தமிழ் தொழிலாளர்கள் வாழும் பிரதேசங்களே பெருமளவில் உள்ளடங்கியுள்ளன. அடையாளப்படுத்தப்பட்ட இவ்வலயங்களில் அபிவிருத்தியை தடுத்து, சனத்தொகை மற்றும் பெருந்தோட்ட துறையை வேறு இடங்களிற்கு நகர்த்துதல் தேசிய பௌதீக திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாகும்.
மேலும் மஸ்கெலியா, நுவரெலியா, தெனியாய,தியதலாவை, ஹப்புத்தளை, நாவலப்பிட்டிய, நிவித்திகல, புசல்லாவ,இரத்தினபுரி, உடபுசல்லாவ, உலப்பனை ஆகிய இடங்கள் சூழல் கூருணர்வான பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன். இப்பிரதேசங்களில் குடியிருப்புகளின் விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரநாயக்கா, பதுளை, ஹற்றன், பண்;டாரவளை, பலாங்கொடை, தெரணியகலை, திகன, ஹாலிஎல, ஹற்றன்,டிக்ஓயா, யடியன்தோட, இறக்குவானை, பூண்டுலுஓயா,லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, கொத்மலை, கஹவத்தை, ஆகிய இடங்களில் குடியிருப்புக்களின் விரிவாக்கம் மட்டுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் பேசும் மக்களின் குடித்தொகை செறிவுஅதிகமாக காணப்படும் பகுதிகளாகும்.
வரலாற்றில் நட்சா திட்டம், குடியுரிமை பறிப்பு என பல மோசடிகளால் மலையக வாழ் தமிழர்களின் குடித்தொகை செறிவு சிதைக்கப்பட்டதை நாம் அறிவோம். தற்போதைய நிலையில் திட்டமிட்ட கருக்கலைப்பு நடப்பதையும், புத்தளம் மாவட்டத்தில் போல சிங்களமயமாக்கல் நடந்து வருவதையும்; இலகுவாக கண்கூடாகவே அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது.
மேலும் தேயிலை, இறப்பர் பெருந் தோட்டத்துறைகளில் நவீன காலத்திற்கு ஏற்ப எவ்வகை அபிவிருத்தியும் செய்யப்படவில்லை, அல்லது உற்றபத்தி பொருட்களுக்கு பெறுமதி சேர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. உலக சந்தையிலும் வேறு நாடுகளின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேயிலை, இறப்பர்களுக்கு பதிலாக வேறு மாற்று பொருட்களின் அறிமுகம் ( செயற்கை இறப்பர், வேறு பானங்கள்) இலங்கையில் பெருந் தோட்டத்துறையின் எதிர்காலத்தை தெளிவாக கேள்வி குறியாக்கியிருக்கின்றது.
இந்த நிலையிலே மலைநாட்டு வாழ் தமிழர்களின் காணியுரிமை தொடர்பான தூர நோக்கற்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. முன்பு பலமுறை நடந்தது போல் வாக்குகளிற்காகவும், போராட்டங்களை மழுங்கடிப்பதற்காகவும் அவ்வப்போது காணி உரித்து வழங்கும் நாடகங்கள் நடத்தப்பட்டுகள்ளன.
தேசிய பௌதீக திட்டத்தின் அடிப்படையிலும், ஏனைய நாடகங்கள் மூலமும் மலைநாட்டு தமிழர்கள் ஒரு சமூகமாக ஒழுங்கமையாத வண்ணம் சிதைக்கப்பட்டு குடியமர்த்தப்படவே போகின்றார்கள். இதுவே அரசின் எப்போதும் மாறா உறுதியான நிலைப்பாடு.
எனவே காணியுரிமை கோரிக்கை மலைநாட்டு தமிழர்களை விலாசமற்ற சமூகமாக்கி அழிக்கும் நடவடிக்கைகளிற்கு துணைநிற்கும் வகையில் முன்னெடுக்கப்படல் கூடாது. மலைநாட்டு வாழ் தமிழர்களால் இரத்தத்தையும் வியர்வையையும் உரமாக்கி செழிப்பாக்கப்பட்ட மண் அவர்களுக்கே சொந்தமானது. ஆகவே தம் சொந்த பூமியை, தம்மால் வளமாக்கப்பட்ட பூமியை அவர்கள் சட்டரீதியாகவும் உரித்தாக்க உரிமையுடையவர்கள். ஆகவே அற்பமான துண்டு நிலத்திற்காக அவர்களின் உடமைப்பாட்டை அடகுவைத்திட கூடாது. அவர்கள் வளப்படுத்திய பூமியை அவர்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும். ஏனெனில் காணியுரிமை என்பது ஒரு சமூகத்தின் இருப்பையும் உடமைபாட்டையும் உறுதி செய்வதற்கு அவசியமானதாகும்.
ஆனால், அது வெறுமனே ஆங்காங்கே அழிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளின் திட்டப்படி அற்ப துண்டு நிலமாக கிடைக்கப் பெறுவதால் ஒரு பலனும் இல்லை.எனவே நாம் மொழிவாரி அடிப்படையில் குடித்தொகை தொடராக ஒழுங்கமையும் வகையிலும், உடமைபாட்டு உரிமை உறுதி செய்யப்படும் வகையிலும் காணியுரிமை போராட்டடம் அவர்கள் வளப்படுத்தி நிலத்தின் மீதான உடமைப்பாட்டு போரட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.
வழங்கப்படும் காணிகள் மீதான உாிமையும் இதனை கருத்திலெடுத்தே முன்னெடுக்கப்படல் வேண்டும். இதுவே மலையகம் வாழ் தமிழர்களின் சமூக இருப்புக்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும். மாறாக ஆங்காங்கே தனிநபர் முயற்சிகளாக தற்போதைய குடியிருப்பு முறைகளில் சிறுசிறு மாற்றங்கள் செய்யும் வகையிலும், அல்லது எவ்வித கிராம கட்டமைப்பும் இன்றி கிராமம் என்று பெயர் சூட்டி ஆர்பரிப்பதானாலோ நீண்டகால நோக்கில் எவ்வித நன்மைகளும் ஏற்படாது.
மாறாக பாரிய அழிவு கிடங்கை நாமே தோண்டி வைக்கின்றோம். இத்தகைய அரசில் ஞானம் அற்ற ஜனரஞ்சக நடவடிக்கைகள் சமூகத்திற்கான இருப்புக்கும் நலனுக்கானவை அல்ல, அவை வெறுமனே அரசியல் வாதிகளின் அதிகார இருப்பிற்கான தனிப்பட்ட ஆர்வங்களே ஆகும். அதனை சலுகைகளாக விளம்பரப்படுத்தி மக்களின் சலுகை மீதான ஆர்வத்துடன் பொருத்தி தம்மை வீரர்களாக சித்திாிக்க முயலும் சிறுபிள்ளை வேளான்மையே ஆகும்.
நன்றி - பழ றிச்சர்ட் பக்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...