மலையக கவிதை இலக்கிய செல்நெறியில் கடந்து செல்ல வேண்டிய ஒருவர் ஆபிரஹாம் ஜோசப் என்பவர். இவர் எழுதிய பாடல்கள் ‘கோப்பிக்கிருஸி கும்மி’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. கோப்பித்தோட்டங்களில் தொழிலாளர்கள் சலுகைகளை அனுபவிப்பவர்களாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களாகவும் இங்கு வருமுன் தாய் நாட்டில் மோசமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள் தற்போது சந்தேஷமாக வாழ்வதாக கோப்பித் தோட்ட எசமானர்களுக்கு விசுவாசமாகவே இந்த பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. காரணம் ஆபிரஹாம் ஜோசப் ஒரு காப்பித்தோட்ட கண்டக்டர், ஆகவே அவருடைய பணி எசமானர்களுக்காக பாடல் இயற்றுவதாக இருந்துள்ளது. எனினும். ‘தோட்டத்தொழிலாளரக்ள் பாடித்திரியும் ஆட்சேபகரமான நாட்டார் பாடல்களுக்கு மாற்றீடாக இந்தப்பாடல்களை எழுதியுள்ளதாக தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த ‘கோப்பிக்கிருஸி கும்மிபாஉத்திகள் டல்கள்’ நாட்டார் பாடல்களிடம் மண்டியிட்டு மறைந்து போகிறது. ஆனாலும் ‘1869 ல் மலையகத்தில் இருந்து வந்த முதல் நூல் என்ற பெருமையை இந்த கோப்பிக்கிருஸிகும்மி’ பெறுகின்றது. 145 ஆண்டுகளுக்கு முன் எழுந்த மலையகத்தின் முதல் நூல் கோப்பிக்கிருஸி கும்மி என தனது தொடர்கட்டுரையில் ஒரு விரிவான ஆய்வினைத்தந்துள்ளார் ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன் அவர்கள். இந்நூலின் தலைப்பு (Cummi poem on coffee plantation) என ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டுள்ளதாகவும் குறித்துச்சொல்கின்றார் நித்தியானந்தன்’ (மூலம்: மலையகம் எனும் அடையாளம்: மலையக இலக்கியத்தின் வகிபங்கு தெளிவத்தை ஜோசப் அமரர் இர.சிவலிங்கம் நினைவப்பேருரை 2011). மலையக இலக்கியத்தின் முதல் நூலாக மலையகத்தில் அச்சு கூடங்கள் ஏதும் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் ஸ்ட்ரோங் அன்ட ஆள்பரி பிரிண்டர்ஸ் எனும் அச்சகத்தில் இந்த நூல் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்ட்டுள்ளது. அந்த வகையில் அந்த முதல் நூல் ஒரு கவிதை ஊருஆஆஐ Pழுநுஆ அமைந்திருப்பது மலையக கவிதை இலக்கிய வரலாற்றில் பதிவு பெறவேண்டிய அம்சமாகிறது. இந்த ஆபிரகாம் ஜோசப் பின் பாடல்கள் மட்டுமின்றி அவரது பிற செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராய்கிறது மு.நித்தியானந்தன் எழுதியுள்ள ஆய்வு நூலான 'கூலித்தமிழ்).
1916ல் அச்சேற்றம் பெற்ற தங்கப்பாட்டு மாலை தந்தவர் கோட்டாற பாவா புலவர். இவரது 17 கவிதை நுல்கள் வெளிவந்துள்ளதாக அந்தனிஜீவா அவர்கள் தனது 'மலையக இலக்கியத்துக்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு' எனும் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே இந்தியாவில் பிறந்து இங்கு வந்த வாழ்ந்த சதக்கத்தம்பி புலவரையும் நாம் இந்த பட்டியலில் பார்க்கலாம்.
நடேசய்யர் தம்பதிகளின் வருகை
1920களில் பின்னரே மலையகக் கவிதை முயற்சிகள் மலையக பிரதேசங்களிலே பரவலாக வரத்தொடங்கின. அதுவும் இந்தியாவில் இருந்து வருகைதரும் இந்த மக்கள் சார்ந்த இன்னுமொரு செயற்பாட்டாளர்களோடு ஆரம்பிக்கிறது எனலாம். அவர்கள் நடேசய்யர் தம்பதிகள். பத்திரிகையாளரும் இந்திய சுதந்திர போராட்ட ஆர்வலருமான நடேசய்யர் அவர்கள் ஒரு பத்திரிகையாளராக இலங்கைவந்து பின்னர் மலையக மக்களோடு தொழிற்சங்கம், இலக்கியம், அரசியல் என இரண்டரக் கலந்தவர். அன்றைய மலையக மக்களின் நிலை கண்டு இந்த தம்பதியர் பல சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் பிரதானமானது துண்டு பிரசுரங்கள் மற்றும் வாய்மொழி பாடல்கள். பெரிதும் தொழிலாளர்களாகவும் பாமரர்களாகவும் இருந்த இந்த மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் இலக்கியத்தை கருவியாகக் கையாண்டுள்ளனர்.
‘இந்து மக்கள்
சிந்தும் வேர்வை
ரெத்தக்காசு தானே அடா
இரவு பகல் உறக்கமின்றி
ஏய்த்துப்பறிக்கலாமா..?
என மக்களது வாழ்நிலை குறித்த பாடியுள்ளனர்.
இவர்களது பாடல்கள் ‘இந்தியர்களது, இலங்கை வாழ்க்கை நிலைமை’ (1940 கணேஸ் பிரஸ் ஹட்டன்), என்ற தலைப்பில் தொகுதியாக வந்துள்ளது. இவர்களது எழுத்துநடை ஏற்கனவே இந்த மக்களிடத்தில் பழக்கப்பட்டிருந்த நாட்டுப்பற பாடல்களுடன் ஒத்துப்போனமை அவற்றின் பிரபலத்திற்கு காரணமாகியது. இத்தம்பதியருள் திரு நடேசய்யர் தொழிற்சங்க பணிகளிலும், திருமதி நடேசய்யர் மக்கள் பாடல்களைப்பாடி அவற்றை துண்டு பிரசுரங்களையும் வெளியிடுவதிலும் அதிகம் ஈடுபட்டுள்ளதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் திருமதி மீனாட்சியம்மாள் எழுதிய வரிகள் பின்வருமாறு அமைகின்றன.
சிங்கள மந்திரிகள் செய்திடும் சூழ்ச்சி
சேதியில்லாமல் வேறில்லை காட்சி
போங்கவே தொழிலாளர் ஒற்றுமைக் மாட்சி
பொலிவு கொண்டாடுவர் அடைகுவர் தாட்சி
சிங்கள மந்திரிகள் கூற்று மிக
சீருகெட்டதென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று சிந்திய
சமூகம் நெருப்பாய் வரும் காற்று
நன்றி கெட்டுப் பேசும் மந்திரிமாரே உங்கள்
நியாயமென்ன சொல்வீரே
இன்றியமையாதவொரு பேரே செய்ய
இடமுன் மாக்கின்றீர் நீரே
அந்த வகையில் இலங்கை அரசியல்வரலாற்றில் பேரினவாதத்திற்கு எதிரான பார்வையை அரசியல் தளத்தில் முதன் முதலில் முன்னெடுத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சிம்மாள் தம்பதிகளாவர் என்கிறார் திறனாய்வாளர் லெனின் மதிவானம். (‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ பாக்யா பதிப்பக வெளியீடு 2012) திறனாய்வு நூல் பக்38)
மலையக ஆய்வு எழுத்தாளர் சாரல் நாடன், இலக்கிய செயற்பாட்டாளர் அந்தனிஜீவா முதலானோர் திருமதி மீனாட்சியம்மாள் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். திருமதி சித்திரலேகா மௌனகுரு தனது பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளில் மீனாட்சியம்மாள் நடேசய்யரைப்பற்றி எழுதியுள்ளார். புலம் பெயர்ந்து வாழும் மலையகப் பேராசிரியர் மு.நித்தியானந்தன் ‘மீனாட்சிம்மாளும் மேடைப்பாடல்களும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியள்ளார்.
பேராசிரியர் செ.யோகராசா திருமதி மினாட்சியம்மையை ‘ஈழத்த முதல் பெண் கவிஞர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளதாக திறனாய்வாளர் லெனின் மதிவானம் அவர்கள் தனது ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ திறனாய்வு நூலில் (பக்31) குறிப்பிட்டுள்ளார். பேராசியரியர் செ.யோகராசாவின் கூற்றுப்படி ஈழத்தின் முதல் பெண் கவிஞராகவே ஒரு மலையகக் கவிஞரை அடையாளம் காட்டியிருப்பது மலையகக் கவிதை இலக்கியத்தின் ஒரு சிறப்பம்சமாகக் கொள்ளலாம். இதன் மூலம் மலையக நாட்டார் பாடல் வடிவங்கள் தாம் மலையக கவிதை இலக்கியத்தின் தோற்றுவாய் என்பதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.
தொடரும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...