Headlines News :
முகப்பு » , » பதுளை மாவட்ட மக்கள் தமக்கான தேர்தல் தொகுதிகளைக் கோரவேண்டும் - திலகர் எம்.பி

பதுளை மாவட்ட மக்கள் தமக்கான தேர்தல் தொகுதிகளைக் கோரவேண்டும் - திலகர் எம்.பி

எஸ்.எம்.சுப்பையாபுரம் வீடைமைப்பு திறப்புவிழா நிகழ்வில்


நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமல்ல பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். எங்கெல்லாம் மலையக மக்கள் செறிவாக வாழ்கிறார்களோ அங்கே ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. அத்தகைய தொகுதிகளை அடையாளம் காணும் கடப்பாடு நமக்கு உள்ளது. எனவே தான் 1947 ஆம் நாடாளுமன்றத்தில் பதுளைத் தொகுதியில் இருந்து தெரிவாகி மலையக மக்களின் பிரதிநிதியாக குரல் கொடுத்த எஸ்.எம். சுப்பையாவின் பெயரை நிவ்பேர்க் வீடமைப்புத்திட்டத்திற்கு சூட்டி நினைவுபடுத்தியுள்ளோம். பதுளை மாவட்ட மக்கள் இந்த வரலாற்றை உள்வாங்கி புதிய அரசியலைமைப்பு உருவாக்கத்தின்போது தமக்கான தேர்தல் தொகுதிகளைக் கோரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். 

பதுளை மாவட்டம் எல்ல பிரதேசத்திற்கு உட்பட்ட நிவ்பேர்க் தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள 42 வீடுகளைக்கொண்ட புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் பதுளை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.இராஜமாணிக்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு முன்பு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சாக செயற்பட்ட காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  அப்போது அமைச்சின் இணைப்புச் செயலாளராக பணயாற்றிய நான் இந்த வீடமைப்புத் திட்டத்தை இங்கே அமைப்பதற்காக வருகைதந்திருந்தேன். இங்கே வாழும் மக்கள் மண்சரிவு வெள்ள அபாயத்தினை எதிர்கொண்டவர்களாக முகாம்களிலே வாழந்து வந்தார்கள.; இவர்களைச் சந்திக்கும்போது இரவு நேரத்திலேயே கூட்டத்திலேயே நடாத்தினோம். அப்போது மீரியபெத்தை மக்களுக்கான வீடமைப்பு காணித்தெரிவினை செய்வதற்காக மலை மலையாக ஏறி இறங்கிவிட்டு வந்தோம். அந்த இடத்தில்தான் இப்போது அங்கே வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த கட்டுமானப்பணிகள் அரசியல் காரணங்களினால் இப்போது இடர் முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பில் கட்டப்பட்டு வருகின்றது.

எமது அமைச்சர் திகாம்பரத்தின் பொறுப்பிலேயே தொடர்ந்தும் நடைபெற்றிருந்தால் இப்போது அந்த மக்கள் புதிய வீட்டில் குடியமர்த்தப்பட்டிருப்பார்கள். அதே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம்தான் இன்று இங்கே யைளிக்கப்படுகின்றது. நாம் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறையோடு செய்றபட்டு வருகின்றோம். சிலர் தமது அரசியல் லாபத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத விடயங்களில் தலையிட்டு மீரியபெத்தை வீடமைப்பினை தாமதாக்கியுள்ளார்கள். அதேநேரம் அங்கே நான்கு வீடுகளே கட்டப்பட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அமைச்சர் திகாம்பரத்தின் பொறுப்பில் அங்கே வேகமாக 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அதன் பின்னர் அமைச்சு கைமாற்றத்திற்கு அந்த திட்டம் உள்ளானதால் இன்று தாமதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. 

எனினும் நாம் பாராளுமன்றத்தில் பிரேரணைடியான்றை கொண்டு வந்து குரல் கொடுத்து அந்த வீடமைப்புத்திட்டத்தை கட்டி முடிப்பதில் இடர் முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பினை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் மீரியபெத்தை வீடமைப்பு விடயத்துடன் எவ்வித பணியையும் செய்யாதவர்கள் அதனை வெறுமனே சென்று பார்வையிட்டுவிட்டு தங்களது முயற்சியில் நடைபெறுவதுபோன்று பாவனைக்காட்டி அரசியல் செய்ய முற்படுகிறார்கள் இ;ங்கேயும் அப்படி வரலாம். அப்படி வந்தால் அவர்களது கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் 42 வீடுகள் தெரியும். இல்லாவிட்டால் 100 நாள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட அதிகளவான வீடுகளைக் கொண்ட இந்த திட்டத்திலும் 4 வீடுகளே கட்டப்பட்டுள்ளதாக பொய் சொல்லுவார்கள். 

நாங்கள் தனியே வீடுகளை மாத்திரம் கட்டிக்கொண்டு செல்லவில்லை. அதனை ஒரு உரிமைக்கோரிக்கையாக முன்வைத்துள்ளோம். அவ்வாறு கட்டப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கு நமது முன்னோடிகளின் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் நமது வரலாற்றை மீளுருவாக்கம் செய்கின்றோம். வீடமைப்புத்திட்டங்களுக்கு முன்னைய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், தியாகிகள் பெயரைச் சூட்டி மலையக மண்மீதான நமது உறவை அரசுக்கும் சக சமூகங்களுக்கும் நினைவுபடுத்தி வருகின்றோம். அதில் அரசியல் பேதங்களோ, இன மத முரண்பாடுகளோ பார்ப்பதில்லை. அக்கரப்பத்தைன டொரிங்கடன் வீடமைப்புத்திட்டத்திற்கு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாப். அப்துல் அஸீஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. டயகம வீடமைப்பிற்கு சிங்கள தொழிலாளியான தியாகி ஆபிரகாம் சிங்ஞோ வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக தலைவர் சந்திரசேகரன் மற்றும் உபதலைவர் வி.டி.தர்மலிங்கம் ஆகியோரின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

அதேபோலத்தன் இன்று எஸ்.எம். சுப்பையாபுரம் இன்று திறந்துவைக்கப்படுகின்றது. எஸ்.எம்.சுப்பையா   1947ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 7 மலையக உறுப்பினர்களில்  ஒருவராக பதுளை தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்தவர். அவரது துணைவியார் கோகிலம் சுப்பையா ‘தூரத்துப்பச்சை’ நாவல் மூலம் மலையக வாழ்வியலை எழுத்தில் பதிவு செய்தவர். இந்த தூரத்துப்பச்சை நாவல் தொடர்பாக பதுளை மண்ணின் மைந்தரான மு.நித்தியானந்தன் அண்மையில் கூட ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். நாம் வரலாற்றைப் படிக்கும்போதுதான் அதனை படைக்கவும் முடியும்.

புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்கள் கருத்தறியும் குழு பதுளை மாவட்டத்திற்கு வரவள்ளது. அதில் பதுளை மண்ணின் மைந்தரான சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்விஜேசந்திரனை தமிழ் முற்போக்கு கூட்டணி பிரேரித்துள்ளது. எனவே நம்மவரும் அங்கம் வகிக்கும் அந்தக் குழுவில் நம்மவர்கள் தயக்கமின்றி சென்று அரசியலமைப்பில் தமக்கான தேவைப்பாடுகள் குறித்து பிரேரணைகளை முன்வைக்க வேண்டும். அதன்போது பதுளை மாவட்டத்தில் மலையக மக்களுக்கான தனியான தேர்தல் தொகுதிகள் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும். அதறகாக எஸ்.எம். சுப்பையாவை நினைவுபடுத்த வேண்டும். இந்த வீடமைப்பு ஒரு வரலாற்று அடையாளம். நமது முகவரிகள் மாறுவதனைக்குறிக்கிறது. இங்குவாழும் மக்கள் இனிமேல் மக்கள் எஸ்.எம். சுப்பையாபுர கிராமத்தின் மக்கள் எனவும் தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates