அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடு முழுவதிலுமுள்ள பொதுமக்கள் மற்றும் அமைப்புக்களிடம் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு நாட்டின் சகல மாவட்டங்களிலும் பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக அமர்வுகளை நடத்தி வருகின்றது.
அதற்கமைவாக கொழும்பில் இந்த அமர்வு இடம்பெற்ற போது மிகக்குறைந்தளவிலான தமிழர்களே தங்களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களையும் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் அதிகளவிலான தமிழ் பேசும் மக்கள் வாழும் அதேவேளை, இதற்கப்பால் கொழும்பிலேயே அதிகளவிலான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ்பேசும் மக்களின் சார்பாக சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி தெரிவிக்க முன்வராமை கவலைக்குரியது.
அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக ஆய்வாளர்கள் ,சமூக அபிவிருத்தியாளர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கொழும்பை மையமாகக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்ய தவறியிருப்பது வருந்தத்தக்கது.
இதுபோன்றதொரு சந்தர்ப்பம் இனியும் கிடைக்காது என்றே கூற வேண்டும். எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீண்டும் கொழும்பில் மக்களின் கருத்துக்களை பதிவு செய்யும் செயற்பாடு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தையாவது கொழும்பிலுள்ள சங்கங்கள், மன்றங்கள், அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், சமூகவியலாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டின் சகல கட்சிகளும் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் தமது அமைப்பு சார்பில் நிபுணர் குழுக்களை நியமித்து அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பான கருத்துக்களைப்பெற்று ஆராய்ந்து, அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழ் மக்களும் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, மலையக மக்கள் இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிடக்கூடாது.
மலையக மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதையும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன என்பதையும் அரசியல் யாப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும். ஏனைய இன மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் உள்ளன என்பதை இதனூடாக உத்தரவாதப்படுத்த வேண்டும்.
காலத்துக்குக் காலம் மாறி மாறி ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வாய்மூலம் அல்லது காகிதங்கள் மூலம் வழங்கும் உறுதி மொழியினால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அனைத்து உரிமைகளும் அரசியல் யாப்பு மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
ஏனெனில், மாறி மாறி அரசுகள் தங்கள் வசதிக்கேற்ப வாக்குறுதிகளை மாற்றிக்கொண்டாலும் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படும் உரிமைகளை மாற்றவோ மறைக்கவோ முடியாது.
இந்திய வம்சாவளித்தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பவற்றை அரசியல் யாப்பினூடாக மாத்திரமே உறுதி செய்து கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி, இந்திய வம்சாவளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய பிராந்திய சபையொன்றையோ அல்லது அதற்கீடான முறைமையொன்றையோ முன்வைக்க வேண்டும். அதன் மூலம் இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசங்களை உறுதிப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் மக்கள் மேம்பாட்டை முன்னெடுக்க முடியும்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் 52 வீதமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற போதும், ஒரு தமிழ் பேசும் அரச அதிபரை நியமிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. அரச அதிபர் மட்டுமல்ல, மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் ஒரு தமிழ் உதவி பிரதேச செயலாளரைக்கூட அரசாங்கம் நியமிக்க மறுத்து வருகிறது.
தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் தமிழ் அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நியமனம் என்பது வெறும் கனவாகவே இருக்கின்றது. சிங்கள மொழி தெரியாத தமிழ் தொழிலாளர் வாழும் தோட்டப்பகுதிகளில் கூட சிங்கள கிராம உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது போன்றே ஒவ்வொரு துறையிலும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்திய வம்சாவளி மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பல்கலைக்கழக அனுமதி (கல்வியில் அபிவிருத்தியடைந்த மாவட்டங்களுடன் ஒப்பிடாமல் குறிப்பிட்ட காலத்துக்கு சலுகை வழங்க வேண்டும்.) அரச வேலைவாய்ப்புக்கள், தொழில் முயற்சிகள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் யாப்பினூடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதன் மூலமே மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீட்சி பெற முடியும். இதனை அரசியல் யாப்பினூடாக உறுதி செய்ய வேண்டும். இந்நாட்டில் 200 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளித் தமிழர்கள் இதுவரை தேசிய சிறுபான்மை இனமாக அரசியல் யாப்பினூடாக அங்கீகரிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள சிங்களவர், இலங்கைத்தமிழர், முஸ்லிம்கள் ஆகியோருடன் ஏனைய இனத்தவர்கள் என்ற பதத்தின் கீழ் மலாயர், பறங்கியர், இந்தியத் தமிழர் என்ற அடிப்படையிலேயே இந்திய வம்சாவளித் தமிழர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது மாற்றப்பட வேண்டும். இந்திய வம்சாவளி தமிழரும் இலங்கையின் சிறுபான்மை தேசிய இனமாக அரசியல் யாப்பினூடாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஏனைய இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் காணியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்திய வம்சாவளித் தமிழருக்கு காணி பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதேபோன்றே கல்வி பொருளாதார உரிமைகள் கிடைக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் இந்திய வம்சாவளித் தமிழருக்கான உரிமைகள் அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கம், விருப்பம் சகல இந்திய வம்சாவளித் தமிழர்களிடையேயும் தற்போது ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். இந்த சந்தர்ப்பத்தை நம்மவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் ஆலோசனைகள் குழு எதிர்வரும் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் கூடி அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்களையும் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், யோசனைகள், பிரேணைகள் என்பவற்றை மாவட்ட மக்களிடம் கோரவுள்ளது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மன்றங்கள், பொதுஅமைப்புக்கள், சமய நிறுவனங்கள், புத்திஜீவிகள், சமூகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் மேற்படி குழுவிடம் தமது யோசனைகள் பிரேரணைகள் என்பவற்றை முன்வைக்கலாம்.
இதேவேளை, மலையகத்தின் இரு பிரதான அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தத்தமது நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளன. இந்தக் குழுக்கள் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிபுணர் குழுவில் ஆர் .சிவராமன், கே.மாரிமுத்து (சட்டத்தரணி), கே.விஜயநாதன், ஆர்.ரவீந்திரன், எஸ்.கணேசமூர்த்தி, ஏ.பி.சக்திவேல், கணபதி கனகராஜ், துரை மதியுகராஜா, எஸ். அருள்சாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்தக் குழு சுமார் மூன்று தடவைகள் கூடி ஆராய்ந்துள்ளது.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர்குழு பி.முத்துலிங்கத்தை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர்களான சோ.சந்திரசேகரன், எம்.எஸ்.மூக்கையா, எம். சின்னத்தம்பி, தை.தனராஜ், கலாநிதி எஸ்.சந்திரபோஸ், எஸ்.விஜேந்திரன் (விரிவுரையாளர்), கெளரி பழனியப்பன், ஏ.லோரன்ஸ், அருட் தந்தை பொன்கலன், ப.உமாதேவி, கே.யோகேஷ்வரி, எம். வாமதேவன், பி.கணபதிப்பிள்ளை மற்றும் அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோகணேசன், இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், வேலுகுமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு குழுக்களும் மலையக இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகள் தேவைகள், அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களை ஆராய்ந்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் இரண்டு குழுக்களும் தமது சிபாரிசுகளை அரசியலமைப்புச் சீர்திருத்தக் குழுவிடம் முன்வைக்க வேண்டும்.
மலையகத்தின் ஏனைய கட்சிகளும் அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட தத்தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். எனவே ,இந்த சந்தர்ப்பத்தை மலையக இந்திய வம்சாவளித் தமிழர் நலன்சார்ந்த விடயங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...