நடேசய்யர் தம்பதிகள் தொடங்கிவைத்த துண்டுப்பிரசுர இலக்கிய இயக்கம் பின்னர் பெரும்பாலான மலையகக்கவிஞர்களால் தொடரப்பட்டு வந்துள்ளது. நாவலப்பிட்டியைச் சேர்ந்த பிறவிக் கவிஞர் பெரியாம்பிள்ளை, எட்டியாந்தோட்டை எஸ்.கோவிந்தசாமி தேவர், பி.ஆர் பெரியசாமி. கா.சி.ரெங்கநாதன், சீனிவாசகம், ‘தொண்டன்’ ஆசிரியர் எஸ்.எஸ்.நாதன், ஜில் ஜில் சுல்தான், சிட்டுக்குருவியார், பதுளை ஞானப்பண்டிதன், பாவலர் வேல்சாமி தாசன் முதலானோர் இவ்வாறு துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு தோட்டம் தோட்டமாக பாடி விற்றுள்ளனர் என அந்தனிஜீவா தனது ‘மலையகம் வளர்த்த கவிதை’ (மலையக கலை இலக்கிய ஒன்றியம் வெளியீடு 2002) நூலில் ஒரு பட்டியலைத் தருகின்றார்.
பாவலர் வேல்சாமிதாசன் எழுதி தனது கணீரென்ற குரலில் பாடும் வல்லமையையும் பெற்றிருந்தார் என சொல்லப்படுகின்றது. அவரது பாடல் ஒன்று பின்வருமாறு அமைகிறது.
‘காலைமணி ஐந்துக்கெல்லாம்
தப்படிப்பாங்கோ
கணக்கு புள்ளை ஆறுக்கெல்லாம்
பெரட்டெடுப்பாங்கோ
வேலையிலே ஏழுக்கெல்லாம்
இல்லாவிட்டாங்கோ
வேலை இல்லை என்று
சொல்லி விரட்டிடுவாங்கோ’
இதில் வரும் சொல்லாட்சியும் சந்தமும் மக்களை கவர்வனவாக உள்ளதுடன் மக்களின் வாழ்வியலையும் காட்டி நிற்கின்றன.
திருமதி மீனாட்சியம்மாள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச்சிந்து’-1931 சகோதரி அச்சகம் ஹட்டன்). என்று பாடியதன் தாக்கம் பின்னாளில் வேல்சாமிதாசன் அவர்களை ‘இலங்கை தொழிலாளர் இம்சைக்குரல்’ என்ற பாடற் தொகுப்பை எழுதத் தூண்டியுள்ளது.
1930களில் கண்டியில் வாழ்ந்து பின்னர் தமிழகம் சென்றுவிட்ட கவிஞர் சிதம்பரநாத பாவலரை மலையகக் கவிதை ஆளுமைகளில் முக்கியமானவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி அடையாளம் காட்டுகிறார். ‘மலையகத்திலே இன்றும் வாய்மொழிப் பாடல்களுக்கு இடமுண்டு. இந்த பாரம்பரியத்திலேயே இதுவரை வந்த பல மலையகத்து கவிஞர்களை இனம்கண்டு சொல்லவேண்டும் போல தெரிகிறது. சக்தீ பால ஐயா, குறிஞ்சித்தென்னவன், சிதம்பரநாத பாவலர் போன்றோரின் ஊடே ஒரு வாய்மொழிப்பாரம்பரியம் உணர்த்தப்படுகின்றது என்றே கூறவேண்டும்’ (திலகரின் ‘மல்லியப்பு சந்தி’ பின்னுரை பேராசிரியர் கா.சிவத்தம்பி (பக்xxiv)– பாக்யா வெளியீடு 2007).
மலையகக் காந்தி என போற்றப்படும் மறைந்த தொழிற்சங்கவாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவருமான ஆர் ராஜலிங்கம் பற்றி பாவலர் சிதம்பரநாதன் எழுதியிருக்கும் கவிதையின் ஒரு பகுதி இவ்வாறு அமைகிறது.
மலையாத உள்ளத்திற் கெடுத்துக் காட்டாம்
மனிதர்களின் பண்பாட்டிற் கவனே சான்று
நிலையான கொள்கையிலே வழுவல் இன்றி
நிற்பதிலே இமயம் என்றால் மிகையே அல்ல
பலநாடும் சென்றாயந்தான் மக்கள் வாழ்வும்
பரிணமிக்க சேவை செய்யும்
விரதம் பூண்டான்
விலையடங்கா நலமுத்தாம் ராஜலிங்க
வித்தகனின் திரு நாமம் என்றும் வாழும்
(‘மாவலி’ - தொழிலாளர் தேசிய சங்க வெளியீடு- 1973 ஆகஸ்ட்)
மலையக மக்களை நாடற்றவராக்கிய இலங்கை சட்டவாக்க ஏற்பாடுகள் பற்றி தனது கவிதையில் குறிப்பிடும் பாவலர் சிதம்பரநாதன் அதனை இவ்வாறு எழுதுகின்றார்.
பிறந்ததும் இங்கே /வளர்ந்ததும் இங்கே போவது மெங்கே வெளியேறி/ இறந்தவர் போலே நடைபிணமாகி /இழிவு செய்வதம் முறைதானோ
புத்தகச்சட்டம் எதைப்பகர்ந்தாலும் /
பிறந்த பொன்னாடே தாய்நாடு
எத்தனை ஆட்சி இயற்றிய போதும்/எழும்பதற்கில்லை குடிநீங்கி… (சங்கு 1962 ஜீன்)
என இலங்கை நாட்டை விட்டு மலையக மக்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என பாடிவைத்துள்ளார்.
நாட்டார் பாடல் வடிவத்தில் இருந்து தமக்கேயுரிய சுயபாடல்களை எழுதத் தொடங்கிய மலையக கவிதை இலக்கிய வரலாற்றில் அவை கவிதைகளா? பாடல்களா? என்ற கருத்து மயக்கம் இருந்தே வந்துள்ளது. பாடல் மரபில் இருந்து ஊற்றெடுத்த மலையகக் கவிதை இலக்கிய பாரம்பரியம் அந்த பாடல் மரபில் இருந்து முழுமையான கவிதை வடிவத்துக்குள் வருவதற்கு மூன்று தலைமுறைகளை கடக்கவேண்டியிருந்தது உண்மையே.
அந்த வகையில் பாடல்களாக தமது படைப்புகளை எழுதி அச்சிட்டு விநியோகம் செய்த எட்டியாந்தொட்டை கோவிந்தசாமி தேவர், கா.சி.ரெங்கநாதன். ஜில்.ஜில், கே.கே.ஜபார், முதலானோரின் பாடல் படைப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இதே போல 1954 ஆம் ஆண்டு ‘இசைத்தேன்’ எனும் கவிதைத் தொகுதியை கி.மு.நல்லதம்பி பாவலர் வெளியிட்டுள்ளார். கம்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரது ‘இசைத்தேன்’ 200 ஆம் ஆண்டு அவரது மகன் ஹைதர் அலி யினால் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளதாக அந்தனிஜீவாவின் மலையகம் வளர்த்த கவிதை (பக்.20) குறிப்பிடப்பட்டுள்ளது. அ.செ.வெள்ளசாமியினால் எழுதப்பட்ட பலவர்ண ஒப்பாரியும் பாரத நாட்டுப் பயணச்சிந்தும், மற்றும் பாட்டாளியின் பாடலும், ராசுவின் கணவன் பழனியின் மரண தண்டனையும் போன்ற படைப்புகளும் இந்த வகையினைச் சார்ந்தன.
பதுளை யூரி பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளியான (1960களில்) எம்.எஸ்.கிருஸ்ணம்மாள் மலையகமெங்கும் தொழிலாளர் உரிமை மற்றும் பெண்விடுதலையை வலியுறுத்தும் பாடல்களை எழுதி பாடியுள்ளார். இவர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க தலைவியாகவும் இருந்துள்ளார். இவரது பாடல் ஒன்று இவ்வாறு அமைகிறது.
நாம் வசிக்கும் இலங்கையிலே
நாடு போகும் வேகத்திலே
நாலு பேர்க்கும் நடுவினிலே
நசிங்கிடுறோம் ஈழத்திலே
கருணையற்ற முதலாளிமார் காட்டுகிறார் குரோதமதை
கங்காணிமாருக்கு அடங்கி….கணக்குப்பிள்ளைக்கு நடுங்கி.. கண்டிப்பாக வேலைசெய்தும் கருணையில்லை முதலாளிக்கு… (அவரது சிந்தையை கவரும் சீர்திருத்த பாடல் தொகுப்பிலிருந்து –
(மூலம்: ‘சபதம்’ (சன-மார்ச் 2013) உழைக்கும் பெண்களின் முன்னணியின் செய்தி ஏடு) இந்தப்பாடல் மூலம் ஒரு தொழிலாளி தனக்கெதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துவித அடக்குமுறைகளையும் வெளிக்காட்டுகின்றார்.
இன்றும் வட்டகொடை பிரதேசத்தில் வாழ்ந்தவரும் கபாலி செல்லன் என்பவரும் தோட்டப்புற பாடல்களில் அதிக நாட்டம் கொண்டவர். மலையகத் தோட்டங்களுக்கு திருவிழா காலங்களில் பிரதம பாடகராக அழைத்துவரப்படும் அவர் அந்த தோட்டத்தின் இயல்புகளை வைத்து பாடல்களை உடனடியாக இயற்றிப்பாடும் வல்லமை பெற்றவர் (கட்டுரையாளர் இவரது பாடல்களை நேரடியாக கேட்டிருக்கிறார்). மட்டக்களப்பில் இருந்து திரு.மைக்கல் கொலினை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மகுடம் சிற்றிதழின் மலையகச் சிறப்பிதழில் (2012 ஒக்-டிசம்) பேராசிரியர்.செ.யோகராசா கவிஞர் கபாலி செல்லன் கவிதைகள் - சில குறிப்புகள் எனும் பதிவினைச் செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கவிஞர்.கபாலி செல்லனது நம்ப படும் பாடு…சொல்லவே வெக்கக் கேடு எனும் பாடல் 1980 களில் தோட்டத்திருவிழாக்களில் கொடிகட்டிப்பறந்த பாடல்.
எந்த நாடு நம்ப நாடு
நம்பி வாழ சொந்த நாடு
அந்தரத்திலே வாழச்சொல்லி
அனுப்பியிருக்கான் சிட்டிசன் காடு …
எனும் பாடல் இன்றும் கூட மலை
யக தேசியம் குறித்து முன்வைக்கப்படும் ‘வாக்குரிமை’ –‘பிரஜாவுரிமை’ வேறுபாட்டை நான்கே வரிகளில் சொல்லி காட்டிய வலிமை கொண்டது. ‘ஓட்டுரிமை ஒன்று மட்டும் கிடைச்சிருக்கு… ஓட்டு போட்ட மறு கிழமை பம்பர மாட்டம்…நம்ம கதி பம்பரமாட்டம்’……. சட்டம் போட்டு நசுக்கிறாங்க திட்டம் போட்டு வதைக்கிறாங்க… என ஆளும் வர்க்கத்தினர் மலையக மக்களுக்கு தமது நலனுக்காக வாக்குரிமையை மாத்திரம் வழங்கியிருப்பதையும் மக்கள் நலனுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படாததையும் எளிய பாடல் மூலம் பாடி வைத்தவர் கபாலி செல்லன். இவரது பாடல்கள் முழுமையாக நூலுருப் பெறவெண்டியதன் தேவை யை பேராசிரியர்.செ.யோகராசா தனது குறிப்பிலே வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...