தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி இப்போது எந்தவொரு தொழிற்சங்கமும் வாய்திறப்பதில்லை. அனைத்து தொழிற்சங்கங்களுமே தானுண்டு தனது சொந்த வேலையுண்டு என்ற நினைப்பில் இருக்கின்றன.தொழிலாளர்களோ திரிசங்கு நிலையில் இருக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் சரி, ஏனைய சங்கங்களும் சரி தொழிலாளரின் சம்பள உயர்வைப்பற்றி பேசாமல் தொடர்ந்தும் மெளனம் காத்து வருகின்றன. தொழிலாளரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கான சம்பள உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் இலட்சணம் இதுதானா என்று தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத மலையகத் தலைவர்கள், தோட்டங்களில் தொழிலாளர்களால் நடத்தப்படும் விழாக்கள், பொது நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள் என்பவற்றில் எவ்வித குற்ற உணர்வுகளுமின்றி சிரித்த முகத்துடன் கலந்து கொள்வதுதான் வேடிக்கையானது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத, தாம் அவர்களால் நடத்தப்படும் விழாக்களிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வது சரிதானா? என்பதைப் பற்றி சிறுதும் சிந்திப்பதில்லை. இவ்வாறான தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு புறம் மிகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.
சம்பள உயர்வு மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கும் ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 2013 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் (2015) மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது.
எனவே, குறித்த காலப்பகுதிக்குள் இரு தரப்பினராலும் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அது 2015 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 10 மாதங்களாகின்ற இவ்வேளை வரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்தான்.
தொழிலாளருக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு இதுவரை கிடைக்கவில்லை. நலன்புரி விடயங்களும் இல்லை. நாட்டின் தற்போதைய விலைவாசிக்கேற்ப தொழிலாளருக்கான சம்பளம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை சம்பளம் உயர்த்தப்படாததால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ள மூன்று தொழிற்சங்க அமைப்புக்களே இவ்வளவு காலமாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர் வினையும் ஏனைய நலன்புரி விடயங்களையும் பெற்றுகொடுத்து வந்தன. இப்போதும் கூட அந்தத் தொழிற்சங்கங்களுக்கே முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கின்றது.
அந்தவகையில் இந்த முன்று தொழிற்சங்கங்களும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றியிருக்கின்றனவா? பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட இச்சங்கங்கள் அதனை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் அந்தப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?
முதலாளிமார் சம்மேளனத்துடன் சுமார் ஆறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்திய இந்தத் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்பதற்காக பேசாமல் இருந்து விடுவதா? தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாமா?
கம்பனிகள் சம்பள உயர்வைத் தருவதற்கு மறுத்துவிட்டன. எனவே, அவர்களுடன் மேலும் பேசுவதில் எந்தவிதமான பயனும் இல்லையென ஒதுங்கிக்கொண்டால் யார்தான் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பது? இது பற்றி இந்த சங்கங்கள் சிந்தித்துப் பார்த்தனவா?
இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே தொழிலாளருக்கான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது என ஏனைய தொழிற்சங்கங்கள் இலகுவில் ஒதுங்கிக் கொள்ள முடியாது. தொழிலாளர்களைப் பிரதிநிதிதுவப்படுத்தும் ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கும் அந்தக் கடமை உள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அதிகாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புக்களுமே பெற்றுள்ளன.
அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது பல பெரிய சிறிய தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி போன்ற பெரிய தொழிற்சங்கங்களும் உள்ளன. இந்தச் சங்கங்களின் தலைவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் இந்தத் தலைவர்கள் அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இவ்விடயத்தில் தமக்கு பொறுப்பு இல்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களுக்கே அந்த பொறுப்பு உள்ளது என்று ஒதுங்கிக்கொள்ள முடியாது. 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து இ.தொ.கா. வுக்கே அந்தப் பொறுப்பு உள்ளது என்று இனியும் தட்டிக்கொள்ள முடியாது. எல்லோருக்குமே இந்த விடயத்தில் பொறுப்புக்கள் உள்ளன.
அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசினுடாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அல்லது தமே கம்பனிகளுடன் பேச்சுவார்தை நடத்தி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. தவிர அரசுடனோ அல்லது கம்பனிகளுடனோ பேச்சுவார்தை நடத்துவதற்கு துணிவில்லையா?
அந்த வகையில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல விவேகமானவர். தோட்டத்தொழிலாளருக்கு பெருந்தோட்டக் கம்பனிகளால் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியும் அதற்கான இலாபம் கம்பனிகளுக்கு கிடைக்கிறது என்று உறுதிப்படத் தெரிவித்து வருகிறார். மட்டுமின்றி தோட்டங்களை நடத்த முடியாவிட்டால் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறலாம் என்று பல முறை பகிரங்கமாக கம்பனிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ஆனால் தொழிலாளர் பலத்தை வைத்துக் கொண்டிருக்கும் மலையக தலைவர்களோ வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர்.
இதேவேளை தனியார் துறையினருக்கு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத்தொழிளாருக்கும் வழங்க வேண்டுமென்று தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்தன அறிவிப்பு விடுத்துள்ளமையும் பாராட்டத்தக்க விடயமாகும். தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரு இணக்கப்பாடு எட்டப்படாத நிலையிலேயே அவர் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தார்.
ஆனால் தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர்களான அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோர் சம்பள உயர்வு விடயத்தில் தொழிலாளர்களுக்கு என்ன செய்திருக்கின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் எதனையும் சும்மா செய்து செய்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சம்பளமாக சந்தாப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றன. எனவே பெற்றுக் கொள்ளும் சந்தாப் பணத்துக்கு உண்மையாக மனசாட்சியுடன் சேவை செய்வது கடமையாகும். சம்பளம் (சந்தா) பெறாமல் இலவசமாக சேவை செய்யவதானால் தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணிக்க முடியும்.
தொழிற்சங்கங்கள் இனிமேலும் மெளனம் சாதிக்காமல் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முதாலாளிமார் சம்மேளனத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுவே தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...