Headlines News :
முகப்பு » » பூச்சாண்டி காட்டும் போராட்டங்கள் - ஜே. ஜீ. ஸ்டீபன்

பூச்சாண்டி காட்டும் போராட்டங்கள் - ஜே. ஜீ. ஸ்டீபன்


தோட்டத் தொழிலாளர்களை காட்சிப் பொருளாக்கி அவர்களுக்கு பூச்சாண்டிகாட்டும் நிலைமை இன்றைய காலகட்டத்திலும் நிலைத்திருக்கிறதே என்பதை எண்ணி வெட்கித்தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

நாளாந்த வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பது போதாது என்ற நிலையில் தான் தொழிற் சங்கத்தலைமைகளும் இன்று வீதிகளில் அமர்ந்து போராட்டம் என்ற முஸ்பாத்தி விளையாட்டுக்களை விளையாடி மகிழ்கின்றனர் போலும்.

தோட்டத் தொழிலாளர்கள் என்ற இரு சொல் அடைப்புக்குள் வரையறுக்கப்பட்டுள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கையில் அவர்கள் வேலை செய்ததற்கான கூலியைப் பெற்றுக் கொள்வதற்கும் போராட்டம் நடத்த வேண்டியவர்களாகிவிட்டனர். சம்பள உயர்வு என்ற பேச்சை எடுத்தாலோ அல்லது அதற்கான காலம் நெருங்கினாலோ போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் என்ற சொற்றொடர்களும் ஒட்டிக் கொண்டே வந்து விடுகின்றன.

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நாள் ஒன்றுக்கு கிடைக்கப் பெறுகின்ற 620 ரூபா என்ற சம்பளத்தை முழுமையானதாகப் பெற வேண்டுமானால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனையான 22 நாள் வேலை என்பது கட்டாயமாக நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் பார்ப்போமானால் தோட்டத் தொழிலாளி ஒருவர் 22 நாட்களும் தொழிலுக்கு சென்றிருப்பாரேயானால் அவர் கழிக்கப்படாத சம்பளமாக 13640 ரூபாவைப் பெறமுடியும்.

அதில் கொடுப்பனவுக்கழிவுகள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு சந்தா உள்ளிட்ட இதர கழிவுகள் போக எஞ்சிய தொகையிலேயே ஒரு மாதத்துக்கான அடிப்படை, அத்தியாவசியம் மற்றும் மேலதிக செலவினங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தத் தொகையானது குறைந்த நாள் வேலைக் கொடுப்பனவு எனும் போது அது மேலும் சில மடங்குகளால் குறைவடைகிறது. இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுத்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவையிலேயே சம்பள அதிகரிப்பு இடம் பெறுகிறது. அரச மற்றும் தனியார் துறைகளில் வருடத்திற்கொரு தடவை வருடாந்த சம்பள அதிகரிப்பு என்ற நிலைமை தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் என விளிக்கப்படுகின்ற தேயிலை உற்பத்தி செய்யும் சமூகத்துக்கு மாத்திரம் இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை என்ற ரீதியிலேயே சம்பள அதிகரிப்பு இடம் பெறுகிறது.

அற்பமான இந்த விடயத்தில் கூட தோட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் இரண்டாம் பட்ச நிலைக்குள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளனர். அரசதுறைகளில் உள்வாங்குதல், முக்கிய தருணங்களில் கௌரவத்துக்குரிய ஸ்தானங்களில் என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் புறங்கணிக்கப்பட்டுள்ளவர்கள் சம்பள அதிகரிப்பு விடயத்திலும் மாற்றானாக அல்லது தீண்டத்தகாதவனைப் போன்று நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கதாகும். முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய முறையின் கீழான சம்பளத்திட்டத்தின் பிரகாரம் தோட்டத் தேயிலை உற்பத்தியாளர்கள் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வாரத்தில் முதல் மூன்று தினங்களுக்கு 550 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக நிர்ணயித்து, 15 கிலோவுக்கு மேலதிகமாக பறிக்கப்படுகின்ற தேயிலைக்கு 40 ரூபா வீதம் வழங்குவதாகவும், வாரத்தில் முதல் மூன்று நாட்களைக் கடந்த பிந்திய வேலைநாட்களில் அடிப்படைச் சம்பளம் இல்லாதவகையில் பறிக்கப்படும் தேயிலைக்கு கிலோவுக்கு 40 ரூபா என்ற அடிப்படையிலும் கொடுப்பனவை வழங்குவது என்ற ரீதியிலுமான சம்பளத்திட்டமானது தேயிலை உற்பத்தியாளர்களை முதலாளிமார் சம்மேளனம் எந்தளவில் எடைபோட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் எனப்படுகின்ற தேயிலை உற்பத்தியாளர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஒருபுறத்தே இருந்தாலும் இங்கு 1992 ஆம் ஆண்டு காலத்தின் பின்னர் முதலாளிமார் சம்மேளனமானது தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துப் பிழைப்பு நடத்தி சுகபோகம் அனுபவிக்கின்றது என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பது கிடையாது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பளக் கோரிக்கையானது இப்போது வரையில் ஒரு முன்மொழிவு விடயமாக அமைந்துவிட்டது என்பதால் எந்த வழியிலேனும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கோ அல்லது 1000 ரூபா என்ற தொகையை கிட்டிய சம்பள உயர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கோ முயற்சி செய்திருக்க வேண்டும்.

முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடுகளை கையெழுத்திடுகின்ற தொழிற் சங்கங்கள் இதுவரையிலும் வெளிப்படுத்தியிராத போதிலும் காலா காலத்திலும் அதாவது சம்பள உயர்வு காலகட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்படுகின்ற முரண்பாட்டுத் தர்க்கங்கள் அண்மையில் இடம்பெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகளின் போது இ.தொ.கா. பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறியதன் மூலம் உணரக்கூடியதாக இருக்கின்றது. முதலாளிமாரைப் பொறுத்தவரையில் கொடுப்பதில் கருமியாகவும் எடுப்பதில் புத்திசாலியாகவுமே திகழ்ந்துவருவது நடைமுறைக்காலத்தில் இயல்பானதுதான். அந்த வகையில்தான் முதலாளிமார் சம்மேளனமும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில்தான் மேலே கூறப்பட்டது போன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியதாக குற்றம் சாட்டப்பட்டாலும் அல்லது தேர்தலுக்காகவே இ.தொ.கா. இவ்வாறு செயற்படுகிறது என்றாலும் தொடர்ச்சியாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு தலை சொறிந்து நிற்பது தகாத காரியம்தான். 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் கூட்டு ஒப்பந்தப் பங்காளிகள் இருக்கின்ற இத்தருணத்தில் இ.தொ.கா. தன்னிச்சையாக தீர்மானித்து வெளியேறியது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். மாறாக ஏனைய இருதரப்புக்களையும் இணைத்துக் கொண்டு வெளியேறும் வகையில் தொழிற்சங்கங்கள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறில்லாது இ.தொ.கா தன்னிச்சையாக வெளியேற ஏனைய இரு தொழிற்சங்கங்கள் பேச்சுக்களில் தொடர்ந்திருக்க அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. 1000 ரூபா கோரிக்கையை நிறைவேற்றியே தீருவது என்ற உண்மையானதும் மனிதாபிமானதுமான தீர்மானம் ஒன்று தொழிற்சங்கப் பங்காளிகளுக்கு இருந்திருந்தால் இ.தொ.கா.வுடன் இணைந்து ஏனைய தொழிற்சங்கங்களும் வெளியேறியிருக்கும். அதன் மூலம் முதலாளிமார் சம்மேளனத்துக்கு சாவுமணி அடித்ததைப் போன்று தமது சமூகத்துக்கு பெரு வெற்றியை தேடிக் கொடுப்பதற்கான அடித்தளத்தை இட்டுவிட்டதைப் போன்றும் அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.

அப்படியொரு நிலைமை ஏற்பட்டிருந்தால் இன்று மலையகத்தில் கூப்பாடுகள் இருந்திருக்காது. எனினும் மலையகத் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஈ.கோ மனப்பான்மை வேரூன்றி விட்டதால் விட்டுக் கொடுப்புகளுக்கு அங்கு இடமில்லாதுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் இழுபறி மற்றும் இடியப்பச் சிக்கல் நிலைமையானது இன்றைய தேர்தல்கால நிலவரத்துக்குள் பாரிய அனுகூலங்களைப் பெற்றுக் கொடுத்து விட்டது. தேர்தலில் / வெற்றி கொள்வதற்கு தற்போது நடந்து முடிந்துள்ள விடயங்கள் தாராளமானவை எனலாம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக அட்டனிலும் தலவாக்கலையிலும் பதுளையிலும் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு முன்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் "மெதுவான பணி" எனும் போராட்டம் மலையகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இ.தொ.கா. வின் ஆதரவுத் தொழிலாளர்கள் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டது போல் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய தலைமைகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கம்பனிகளுக்கு நட்டம், தொழிற்சாலைகளை மூடுதல், தோட்ட உத்தியோகத்தர்கள் பணியில் இல்லாமை, காரியாலயங்கள் மூடப்பட்டமை மற்றும் பறிக்கப்பட்ட தேயிலையை பொறுப்பேற்காமை உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றன. இதனால் கம்பனிகளுக்கு சிறு அளவிலான நட்டம் ஏற்பட்டாலும் அது தோட்ட உத்தியோகத்தர்களையோ அல்லது போராட்டத்துக்கு தூண்டியவர்களையோ பாதிக்கப்போவதில்லை, மாறாக போராட்டக்காரர்களையே அது பாதிக்கின்றது.

இப்படியான நிலைமைகளுக்கு மத்தியில் தான் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோரது தலைமையில் 7ஆம் திகதி நள்ளிரவு வேளையில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது 1000 ரூபா சம்பள உணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கும் அதேநேரம் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பளத்திட்டத்துக்கு எதிராகவுமே முன்னெடுக்கப்பட்டது.

இதேநேரம் தமிழ் முற்போக்கு முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது தலவாக்கலையில் இடம்பெற்றது. முன்னணியின் தலைவரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மனோ கணேசன் முன்னணியின் உபதலைவர்களும் அமைச்சர்களுமான வி.இராதாகிருஷ்ணன் மற்றும் பி. திகாம்பரம் ஆகிய மூவர்கள் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி இருதரப்பினரது கோரிக்கையும் 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதே ஆகும். எனினும் 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக இ.தொ.கா. சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திய அதேவேளை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே தமிழ் முற்போக்கு கூட்டணி தனது சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டிருந்தது.

இதேவேளை தாம் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றைப் புதன்கிழமை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்ததன் காரணமாகவே இ.தொ.கா.வின் ஆறுமுகன் தொண்டமான் முதல் நாள் நள்ளிரவிலேயே இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாக கூட்டணியின் தலைவர் மனோகணேசன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இ.தொ.கா.வினதும் தா.மு.கா.வினதும் வெளிப்படையான நிலைப்பாடுகள் இவ்வாறு இருந்தாலும் உள்ளக நிலைப்பாடானது அரசியல் இலாபம் கருதியதாகும். கூட்டு ஒப்பந்த சம்பள விவகாரம் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றது. கூட்டு ஒப்பந்தம் மூலம் பெறப்படுகின்ற சம்பள அதிகரிப்பு இம்முறை சத்தியாக்கிரகத்தை தொடர்ந்து நடத்தினாலும் சாத்தியப்படப் போவதில்லை.

மல்லியப்பூ சந்தியானாலும் சரி தலவாக்கலை நகர மைதானமானாலும் சரி இரண்டுமே பகிரங்க அரங்கேற்றங்களே என்பதில் தவறில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய வல்லமையைக் கொண்டடிருக்கின்ற நிலையில் இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவதும் அதற்கு எதிரான சத்தியாக்கிரகம், கவனயீர்ப்பு போராட்டம் என்பனவற்றின் மூலம் படித்த சமூகத்தின் மத்தியில் முகம் சுளிக்கச்செய்கின்ற சமாச்சாரமாகும். ஆரம்பத்தில் கூறியது போன்று கூட்டு ஒப்பந்தம் மற்றும் சம்பள அதிகரிப்பு எனும் விடயங்களில் பூச்சாண்டி காட்டப்படுவது இன்றைய நிலையில் எடுபடப்போவதில்லை. மலையகத்தின் இளைஞர் சமுதாயம், ஆசிரிய சமுதாயம், புத்திஜீவிகள் சமூகம், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என சகல தரப்பினரும் மலையக அரசியலை மாற்றியமைப்பதற்கு முன்வருவார்களேயானால் அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது ஒரு பொருட்டே கிடையாது.

இதில் சம்பள அதிகரிப்பு விடயமும் உள்ளடக்கம்தான். சத்தியாக்கிரகம் செய்து சம்பளத்தை பெறுவது கடினம் என்பது போல் முதலாளிமார் சம்மேளனத்தால் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதற்கும் இடமளிக்க முடியாது. ஆகையால் முன்மொழிவுகளாக உள்ள விவகாரம் தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதே உசிதமானது. அந்தவகையில் பொறுப்புக்கூற வேண்டிய தொழிற் சங்கங்கள் தன்னிச்சையான செயற்பாடுகளை புறந்தள்ளி மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகின்றது.

மலையகத் தொழிற்சங்கங்கள், அரசியல் தலைமைகள் மாத்திரமல்லாது நாட்டின் அனைத்து அரசியல் தரப்புக்களுமே சுயலாபம் கருதிய அரசியலையே முன்னெடுக்கின்றன. அந்த வகையில் மேற்படி சம்பள விவகாரத்தில் அரசியல் ரீதியில் சுயலாபம் தேடிக் கொண்டேனும் கருமங்களை ஆற்றினால் நல்லது. மேலும் தேர்தல் இடம்பெற வருகின்ற இக்காலகட்டத்தில் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாது. என்பதால் மீண்டும் மீண்டும் மக்களுக்கு பூச்சாண்டிகாட்டுவதை தவிர்த்து நடைமுறைக்கு சாத்தியமான ஆக்கபூர்வ செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு முனைவது சிறப்பாக இருக்கும்.

அடுத்து வரும் தேர்தலில் தமது இருப்புக்கள் தொடர்பில் வயிறு கலங்கிக் கொண்டிருப்பதால் தற்போது மலையகத்தலைமைகள் தாம் செய்வது என்பது புரியாமலே சில விடயங்களை மேற்கொள்வதை மக்கள் உணராதவர்கள் அல்ல. இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அவ்வமைப்பானது மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமாகவும் அரசியல் கட்சியாகவும் இருக்கின்றது. நீண்டகால தொழிற்சங்க வரலாற்றையும் பதித்து நிற்கின்ற இ.தொ.கா மலையகத்தின் சார்பிலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பொறுப்புக் கூற பிலும் பொறுப்புக் கூற வேண்டிய பாரிய கடமையைக் கொண்டிக்கிறது.

ஆகையால் இ.தொ.கா முன்னெடுக்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். அதற்கு அக்கட்சி பொறுமையிழந்து செயற்படுவதை விடுத்து நிதானித்து செயற்படுவது மிகமிக அவசியமானது. பதற்றத்தின் உச்சியில் முடிவுகளை எடுப்பதும் தீர்மானங்களை மேற்கொள்வதும் வெற்றியைத் தருவதற்கு பதில் சங்கடத்தையே ஏற்படுத்தும். இ.தொ.கா மட்டுமல்லாது மலையக மக்களின் வாக்குகளை நம்பியிருக்கின்ற அனைத்து தரப்பினருமே பொறுப்புணர்வுடன் செயற்படுமிடத்தே தொழிலாளர்கள் வெற்றியடைவர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்டுள்ள 1000 ரூபா சம்பள அதிகரிப்பு என்ற கோரிக்கையில் கூட்டு ஒப்பந்த பங்காளிகளும் மலையகத்தின் ஏனைய தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தார்களேயானால் அந்தத்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கோ இல்லாவிட்டால் அதற்கு கிட்டிய நியாயமான தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கே வழிவகை ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

எனினும் இவ்விடயத்தில் ஒருவரை ஒருவர் காலை வாரும் கபடத்தனமான செயற்பாடுகளை அரங்கேற்ற நினைப்பதால் அதன் அனைத்துப் பாதகங்களும் மக்களையே சென்றடையும். இவ்விடயத்தில் அரசியல் செய்வதைவிட அரசியலினூடாக தந்திரோபாயங்களை மேற்கொண்டு சாதிப்பதே டு சாதிப்பதே பெருமைக்குரியதாகும்.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates