Headlines News :
முகப்பு » , » தேர்தலில் பாசிச விருட்சம் - என்.சரவணன்

தேர்தலில் பாசிச விருட்சம் - என்.சரவணன்


இனவாதம் அரசியல் நீக்கம் பெற்ற எந்த ஒரு தேர்தலும் இலங்கையில் சாத்தியமில்லை என்கிற போக்கு உறுதியாக நிலைபெற்றுவிட்டது. இலங்கையின் அரசியல் களம் என்பது தேசியவாதத்தையோ இனவாதத்தையோ தவிர்த்துவிட்டு, மறுத்துவிட்டு எந்த அரசியல் குழுக்களும் முன்நகர முடியாது என்பதே நிதர்சம்.

இனவாத சக்திகள் பேரினவாத சித்தாந்தத்தையும், அதன் நிகழ்ச்சிநிரலையும் நாளாந்தம் புதுப்பித்துக்கொண்டு நவ வடிவங்களோடு உருவெடுக்கிறார்கள். பொதுவாக சகல அரசியல் சக்திகளும் தமது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்புவதற்கான உச்சபட்ச களமாக தேர்தல் காலத்தை பயன்படுத்துவது வழக்கம்.

பாராளுமன்றவாதத்தை நிராகரிக்கும் இடதுசாரி அரசியல் சக்திகள் கூட இத்தகைய தேர்தல் காலத்தை ஒரு பிரசார கருவியாக பயன்படுத்துவார்கள். இது மக்களிடம் செல்ல தடையற்ற காலம், பிரச்சார கருவிகளை அதி உச்ச அளவில் பயன்படுத்தக் கூடிய காலம். வெகுஜன ஊடகங்களின் கவனிப்புக்கு உள்ளாகும் காலம், அந்த ஊடகங்களில் பிரசார வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கும் காலம்.

இலங்கையில் உள்ள பாசிச சக்திகள் இந்த உத்திகளை கவனமாக கையாள்கின்றன. இந்த தேர்தல் காலத்தில் தாம் வெல்கிறோமோ இல்லையோ தமது பேரினவாத அரசியலை மக்கள் மயப்படுத்துவதில் உச்சபட்சம் தீவிர அக்கறை காட்டுகிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி வாக்குகளைப் பெறுவதிலோ, பிரதிநிதித்துவத்தை பெறுவதிலோ அல்ல. மாறாக அவர்கள் எதனை விதைத்து விட்டு போகிறார்கள் என்பதிலேயே அவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. பேரினவாத சித்தாந்தத்தை போதிய அளவு வளப்படுத்தி, மக்கள்மயப்படுத்தி தமது புனைவுகளையும், ஐதீகங்களையும், மாயைகளையும், திரிபுபடுத்தி நிலையுறுத்திவிட்டு போனால் அதுவே அவர்களின் வெற்றி.

தேசியக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் கூட சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும்வகையில் கணிசமான அளவு பயமுறுத்தும் வல்லமை இந்த சக்திகளுக்கு உண்டு. அதனை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியும் இருக்கிறாகள்.

இந்த சக்திகள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பதில்லை. அவர்கள் பிளவுற்றும் அதனை செய்யலாம். இதில் அவர்கள் தனிப்பட்ட லாபமடைய வேண்டியதில்லை. ஆனால் ஒரு திரட்சியான வெற்றி கிட்டும். அவர்கள் காலாகாலத்துக்கும் தேவையான அத்திவாரத்தை பலப்படுத்திவிட்டு போவார்கள். அவர்களிடமிருந்து இன்னொரு பெயரில் இன்னொரு காலத்தில், இன்னொரு வடிவத்தில் இன்னொரு சக்தி கைமாற்றிக்கொண்டு அதற்கடுத்த கட்டத்துக்கு அதனை நகர்த்திக்கொண்டு செல்லும். இதைத்தான் கடந்து போன நூற்றாண்டு முழுவதும் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.

பொதுஜனபெரமுன - BJP
இலங்கை வரலாற்றில் அதிகளவு பிக்குகள் போட்டியிடும் தேர்தல் இது. இம்முறை தேர்தலில் 16 மாவட்டங்களில் மொத்தம் 150பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 36 பேர் பொதுபல சேனாவின் பொதுஜன பெரமுனவின் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 225 பேரைத் தெரிவு செய்வதற்காக மொத்தம் 6151 பேர் போட்டியிடுகின்றனர்.

கடந்த வருடம் ஜூன் மாதம் அளுத்கம கலவரத்தின் பின்னர் பொதுபல சேனா அடங்கவில்லை. மாறாக திமிருடன் மேலும் அது பலமடைந்தது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் அனுசரணையுடன் அது மேலும் தம்மை பலப்படுத்திக்கொண்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெரிய அளவில் மாநாடொன்றை நடத்தியது. ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகளை கலந்து கொள்ளச் செய்ததுடன் சர்வதேச அளவில் “பௌத்த பின்லாடன்” என்று அழைக்கப்படும் விறாத்துவையும் மியான்மாரிலிருந்து விசேட அதிதியாக கலந்துகொள்ளச் செய்தது. அந்த மாநாட்டின் போது ஞானசார தேரர் இப்படி கூறியிருந்தார்.

“... நாட்டில் 25000 கிராமங்கள் இருக்கின்றன. பதிவுசெய்யப்பட்ட விகாரைகள் 12000 இருகின்றன. ஒவ்வொரு விகாரையிலிருந்தும் 1000 சிங்கள பௌத்தர்களை குறைந்தது 5000 விகாரைகளிலிருந்து உருவாக்க முடியாதா. மொத்தம் 50 லட்சங்கள். தேர்தலில் நாமே தீர்மானகரமாக இருப்போம் அல்லவா.... எதிர்வரும் தசாப்தத்தில் ஆட்சியதிகாரத்தை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்”

அதே கோசத்தை இப்போதைய தேர்தல் பிரசாரங்களிலும் கூறி வருகின்றனர் (ஜூலை 25 ஊடக மாநாடு). தாம் குறைந்தது 10 ஆசனங்களையாவது இம்முறை பெறுவோம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் நடத்திய மாநாட்டின் போது கூடியவிரைவில் தமது அமைப்பின் அரசியல் கட்சியை அறிவிப்போம் என்று அறிவித்திருந்த போதும் அது நடக்கவில்லை. ஜனவரி மாதம் 8ஆம் திகதி நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொதுபல சேனாவின் செல்வாக்கும் சரிந்தது. கிடைத்துவந்த அரசாங்க அனுசரணையும் இல்லாமல் போனது. அவர்களின் வாய்ச்சவாடல் போதிய அளவு அம்பலப்பட்ட நிலையில் ஊடக செல்வாக்கும் குறைந்தது. இந்த நிலையில் இழந்த செல்வாக்கை மீட்பதில் அவர்களின் கவனம் அதிகம் செலுத்தப்பட்டது.

அந்த இடைவெளியை இராவணா பலய, சிஹல ராவய போன்ற அமைப்புகள் பயன்படுத்திக்கொண்டன. இவ்வருடம் கண்டி ஒப்பந்தத்தின் 200 வருட நினைவு, சுமங்கல தேரர் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக்கொடியை கழற்றி சிங்கக் கொடியை ஏற்றி 200 வருட நினைவு, கண்டியில் நடந்த சிங்கள/முஸ்லிம் கலவரத்தின் 100 வருட நினைவு, மற்றும் ஹலால் விவகாரம் போன்ற விடயங்களை இந்த அமைப்புகள் பொது பல சேனாவை விட தீவிரமாக இனவாத பிரசாரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் நிலை வந்தது. வெறும் பிரச்சார களமாக மட்டுமன்றி  தம்மை நிலைநிறுத்தவும் பொது பல சேனாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தியாக வேண்டும். குறுகிய காலத்தில் ஒரு கட்சியை பதிவு செய்வதற்கான அவகாசம் அதற்கு இருக்கவில்லை. எனவே ஏற்கெனவே பதிசெய்யப்பட்டிருந்த “எக்சத் லங்கா மகாஜன பக்ஷய” (ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி) என்கிற கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனை சுவீகரித்துக்கொண்டது. அந்த கட்சியின் சார்பில் கடந்த ஜனவரி நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜயந்த குலதுங்க என்பவர் போட்டியிட்டிருந்தார். அத்தேர்தலில் நாடுமுழுவதும் ஜயந்த குலதுங்க பெற்ற வாக்குகள் 2061 மாத்திரமே. அக்கட்சியின் சார்பில் அவரது பிரச்சாரம் இனவாதத்தை கக்குவதாகவே இருந்தது. “ரஷ்யாவில் பிரிவினைவாதம் கதைப்போருக்கு 2000 ரூபிள்கள் அபராதம் விதிப்பதைப் போல இலங்கையிலும் சட்டம் இயற்ற வேண்டும்” என்று பிரசாரம் செய்தார்.
“எக்சத் லங்கா மகாஜன பக்ஷய” எனும் அக்கட்சியை “பொதுஜன பெரமுன” என்று தேர்தல் திணைக்களத்தில் பெயரை மாற்றிகொண்டது பொதுபல சேனா.

இப்போதெல்லாம் பொதுபல சேனாவுக்கு போதிய அளவு ஊடக ஆதரவு கிடைப்பதில்லை. பொதுபல சேனாவை வளர்த்தெடுத்த “திவயின” போன்ற சிங்கள இனவாத தினசரிகள் கூட இப்போது கண்டுகொள்வதில்லை. தமது கருத்தை வெளியிட ஊடகங்கள் இடம்கொடுப்பதில்லை என்று பகிரங்க கூட்டங்களில் டிலந்த விதானகேவும், ஞானசாரரும் புலம்பிவருகின்றனர். ஆகவே பொதுபல சேனா தாம் வளர்த்து வைத்துள்ள சமூக ஊடகங்களைத் தான் பெரிய அளவில் நம்பியுள்ளது. பல நூற்றுக்கணக்கான முகநூல் பக்கங்களையும், இணையத்தளங்களையும் உச்சபட்சமாக பயன்படுத்தி வருகிறது. தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மோசமான இனவாத கருத்துக்களையும், அந்நிய இனவெறுப்புணர்ச்சியையும் பெருமளவு பரப்புகின்ற பிரசாரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அங்கு புதிதுபுதிதாக காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த இருவருடங்களாக எப்போதும் பரபரப்பு, சர்ச்சை போன்றவற்றுக்கூடாக தமது இருப்பை பேணி வந்த பொதுபல சேனா சமீப கால தொய்வின் பின்னர் அதே சர்ச்சையையோ, பரபரப்பையோ மேற்கொள்ளமுடியுமா என்று உரசிப்பார்த்து வருகிறது. கடந்த காலங்களைப்போல இப்போது தம்மை சட்டத்திலிருந்து பாதுகாக்க எவரும் இல்லை. எனவே அதையும் மிகவும் கவனமாகவே மேற்கொள்ளவேண்டும். “தேசியக் கொடி”யை ஒரு விவகாரமாக ஆக்கலாமா, அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை கிளப்பலாமா, வடக்கில் புலிகளின் மீளெழுச்சி என்று பூதாகரப்படுத்திவிடலாமா என்று முனைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்தத் தேர்தலின் மூலம் ஒருபுறம் தமது இனவாத பரப்புரை நிறைவேறினாலும் வாக்குகள் குறையும் பட்சத்தில் அது மானப்பிரச்சினையாக ஆக வாய்ப்பிருக்கிறது. அப்படியிருந்தாலும் தேர்தல் களத்தில் இம்முறை  தம்மோடு போட்டியிடும் சிங்கள பௌத்த கட்சிகளை குறிப்பாக எதிர்த்து பரஸ்பரம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படாமையை கவனத்திற் கொள்ளவேண்டும். சிங்கள பௌத்த வாக்குகள் சிதறடிக்கப்படுவது குறித்து இவை முனுமுனுத்தாலும் கூட அந்த வெறுப்புணர்ச்சி முழுதும் பெரிய கட்சிகளை நோக்கியே கொட்டப்படுகிறது. சிங்கள வாக்குகள் இம்முறை மோசமாக சிதறடிக்கப்படுகிறது. மகிந்த ஆதரவு, நல்லாட்சி ஆதரவு, ஜே.வி.பி போன்ற பிரதான கட்சிகளும், சிங்கள தீவிர இனவாத கட்சிகளின் களமிறக்கம் இன்னொருபுறமுமாக சிங்கள வாக்குகளை பிளவுபடுத்தியிருப்பது என்னவோ உண்மை தான்.

BJP விஞ்ஞாபனம்
பொதுபல சேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த ஜூலை 23 அன்று தலதா மாளிகையின் முன்னால் பௌத்த பரிவாரங்களோடு வெளியிடப்பட்டது. 40 பக்கங்களைக் கொண்ட அந்த விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் முழுவதும் தெட்டத் தெளிவான சிங்கள பௌத்த பாசிச விஞாபனமாகவே இருக்கிறது. சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனையோர் அந்நியர்களாகவும், அடிமைகளாகவும் நடத்துவதற்கான சாசனமே அது. அதிலிருந்து ஒரு சில வரிகள்.
சிங்களத் தேசத்தை மீள வெற்றிகொள்வதற்கான சுதந்திர பிரவேச போராட்டத்துக்கான அறைகூவல் இது. என்கிறது விஞ்ஞாபனத்தின் சுலோகம்.
“இலங்கையில் இருப்பது, இருக்கபோவது சிங்கள தேசிய இனம் மாத்திரமே. ஏனைய தமிழ், முஸ்லிம்களை நாங்கள் இனக்குழுக்கள் என்றே கூறவேண்டும். சிங்கள தமிழர்களாகவும், சிங்கள முஸ்லிம்களாகவுமே அவர்களின் அடையாளம் இருக்கவேண்டும். அது போல சிங்கள பௌத்தர்களைப் போல சிங்கள இந்துக்கள், சிங்கள கத்தோலிக்கர்கள், சிங்கள இஸ்லாமியர்கள் என்று மத ரீதியில் குழுக்கள் இருக்க முடியும். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே நீதி.
சிங்கள பௌத்தர்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், சிங்களவர்களை இலக்காகக் கொண்டு திட்டமிட்ட மலட்டுத்தன்மைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே நாடும் பறிபோகும் நிலையில் உள்ளது.
இலங்கையின் கொடி 1815க்கு முன்னர் இருந்த சிங்கத்தை மட்டுமே கொண்ட கொடியாக ஆகவேண்டும்.
தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்க வேண்டும்
இலங்கையின் அரச மொழி சிங்கள மொழியாக வேண்டும்
ஒற்றையாட்சிக்கு எதிராக பேசுவதை தடை செய்தல் வேண்டும்”
BJP யின் 40 பக்க தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனசெத பெரமுன
ஜனசெத பெரமுன எனும் அமைப்பு ராவணா பலய எனும் இனவாத அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. இதில் சில இனவாத அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. இவர்களின் முக்கிய பிரசார பீரங்கி யார் என்றால் ராஜீவ் காந்தியை 1987இல் தாக்கிய விஜித்த ரோகன விஜேமுனி. வன்னி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் போட்டியிடுவதுடன் 17 பிக்குமாரை களமிறக்கியுள்ளது.

விஜேமுனி 1994இல் சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய (சிங்கள மண்ணின் மைந்தர்கள் கட்சி) யின் சார்பில் தேர்தலில் களமிறங்கினார். அதன் பின்னர் 2000 சிஹல உறுமய கட்சி தோற்றுவிக்கப்பட்ட போது அக்கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,645 வாக்குகள் கிடைத்தன. 3வது அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவர் விஜேமுனி. சம்பிக்க ரணவக்க, எஸ்.எல்.குணசேகர ஆகியோருக்கு முதலாவதும் இரண்டாவதும் பெரும்பான்மை விருப்பு வாக்குகள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் பொதுபல சேனாவின் அழைப்பின் பேரில் இந்த முறை பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதாக முடிவாகியிருந்தது. ஊடக சந்திப்புகளிலும் அது குறித்து பேட்டிகள் கொடுத்தார். ஆனால் ஒப்புக்கொண்டபடி கம்பஹா மாவட்ட குழுத் தலைவர் பதவியை தனக்கு கொடுக்காத நிலையில் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறினார். ஞானசார தேரரையும் பொதுபல சேனாவையும் கடுமையாக திட்டி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் விஜேமுனி. இப்போது இது ஒரு பெரிய விவாதமாக இரு தரப்பும் முகநூலில் நடத்திவருகிறார்கள். இந்த சூழலை ராவணா பலய கட்சி தமது ஜனசெத பெரமுனவுக்காக விஜேமுனியை பயன்படுத்திக்கொண்டது. ஜனசெத பெரமுன சார்பில் போட்டியிடும் விஜேமுனி, ராஜீவைத் தாக்குகின்ற படத்தையே தனது தேர்தல் விளம்பரங்களுக்கும் பயன்படுத்திவருகிறார். அந்த தாக்குதல் பற்றிய வீரக்கதைகளை சகல மேடைகளிலும் பெருமிதமாக சொல்லிதிரிகிறார்.

“ராஜீவ் அன்று இலங்கையின் மீது பாசம் காட்ட வரவில்லை. நமது நாட்டை இந்தியாவின் 26வது மாநிலமாக்குவதற்காகவே வந்தார். அன்று ராஜீவை எதிர்க்க என்னைத் தவிர முதுகெலும்புள்ள வேறெந்த சிங்கள பௌத்தனும் இருக்கவில்லை. நான் மட்டுமே தாக்கினேன். அதற்காக சிறை சென்றேன். அன்றைய ஜனாதிபதி பிரேமதாச  எனக்கு மன்னிப்பு வழங்கி விடுவித்தார். காலிமுகத்திடலில் ஒரு கூட்டமொன்றை ஒழுங்குசெய்து அங்கு எனது விடுவிப்பு பற்றி உரையாற்றும்படி விடுத்த அழைப்பை நான் அன்று நிராகரித்தேன். பல சிங்கள பௌத்த இளைஞர்களின் இரத்தம் அவர் கைகளில் இருந்ததே அதற்குக் காரணம்.” 
என்று பகிரங்க தேர்தல் மேடைகளில் பேசி வருகிறார். சமீப காலமாக பச்சை, செம்மஞ்சள் நிற கோடுகள் அகற்றப்பட்ட சிங்கக் கொடியையே இலங்கையின் தேசியக் கொடியாக ஆக்க வேண்டும் என்கிற போராட்டத்தை முன்னெடுத்துவரும் தீவிர அமைப்பு ராவணா பலய. தலதா மாளிகையில் கடந்த பெப்ரவரி மாதம் போலிசாரையும் மீறி தேசியக்கொடியை இறக்கி சிங்கக் கொடியை ஏற்றியவர்கள் இவர்களே. அதற்க்கு தலைமை தாங்கியவர் ராவண பலய கட்சியின் தலைவரான அகுலுகல்லே சிறிஜினானந்த தேரர். அவரும் இம்முறை வேட்பாளர்.

இதற்கிடையில் தேர்தல் காலத்தில் பௌத்த விகாரைகளில் அரசியல் கூட்டங்களை நடத்துவதனை தடை செய்வதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்ததை எதிர்த்து இனவாத சக்திகள் கொதித்தெழுந்து அறிக்கைவிட்டபடி இருக்கின்றனர்.

ஜாதிக ஹெல உறுமய
இம்முறை ஜாதிக ஹெல உறுமய கட்சி ஐக்கிய தேசியக் கட்சிகூட்டுடன் தம்மை இணைத்துக்கொண்டதானது அக்கட்சியை பல சிங்கள கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாத மிதவாத கட்சியாக ஆகிவிட்டது என்று பிரச்சாரம் செய்ய வாய்ப்பாகியுள்ளது. ஹெல உறுமயவைப் பொறுத்தளவில் கடந்த 15 ஆண்டு கால அனுபவத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதைவிட அதிகாரத்தில் பங்காளியாக இருந்துகொண்டு தமது அரசியலை முன்னெடுப்பது அனுகூலமானது என்று உணர்வதாகத் தெரிகிறது. 2020இல் தமது கட்டுப்பாட்டுக்குள் ஆட்சியதிகாரம் வந்துவிடும் என்கிற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அதற்காக அவர்கள் நடத்திய காய்நகர்த்தல்கள் வெற்றியளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை எட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை கூட இருந்ததாக சிங்கள விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவரும், 10 வருடங்களாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எல்லாவெல மெத்தானந்த  தேரர் கட்சி அரசியலிலிருந்து தான் முற்றாக விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். ஹெல உறுமயவின் தற்போதைய அரசியல் போக்கை விமர்சித்து வருவதுடன் பிக்குமார் அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பதே நல்லது என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

ஜாதிக ஹெல உறுமய இப்போதெல்லாம் இனத்தேசியவாதம் கதைப்பதை சற்று ஒத்திவைத்துவிட்டு ஒட்டுமொத்த இலங்கையின் தேசிய நலன் சார்ந்த விடயங்களை பேசி வருகிறது. சிறுபான்மை இனங்களை பகைததுக்கொள்வதிலிருந்து சற்று விலகி இருக்கிறது என்றே கூறலாம். இன்று இலங்கையில் இருக்கின்ற மோசமான இனவாத சித்தாந்தத் தலைமை அவர்களே. ஆனால் அந்த சித்தாந்த உருவாக்கம், விரிவாக்கம், ஸ்தாபிதம் என்பவற்றை மேற்கொள்ள அவர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்க்கப்பட்ட சக்திகள் இன்றைய களத்தில் இருக்கிறார்கள். நடைமுறை அரசியலுக்கு ஜாதிக ஹெல உறுமய இருக்கிறது. சரியான அரசியல் தருணத்தில் அவர்களின் பிரசன்னம் இருக்குமென்றே கணிக்க முடிகிறது.

சமகால இனவாத அரசியல் களத்தில் நளின் டீ சில்வாவின் பாத்திரமும் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கு செலுத்துகிறது. அதனை தனியாக பின்னர் பார்க்கலாம். பல்வேறு சக்திகள் வெவ்வேறு வடிவங்களில் சிங்கள பாசிச உறுதித்தன்மைக்கு பலமூட்டும் வேலையை கச்சிதமாக நகர்த்திக்கொண்டு போகின்றன. அதனை கச்சிதமாக விளங்கிக் கொண்டு தான் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் தந்திரோபாயங்களையும், திசைவழியையும் வடிவமைக்க வேண்டியிருக்கிறது.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates