பாராளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துப் பகிர்வுகள் தற்போது அதிகமாகவே இடம்பெற்று வருகின்றன. நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நோக்கப்படுவதே அதற்கான காரணங்களில் ஒன்றாகும். மேலும் நாட்டின் எதிர்காலப் பிரதமர் யார்? சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிக்குமா ? தேர்தல் நீதியாக இடம்பெறுமா? மலையகத்தில் பரம்பரையாக ஆண்டு வருகின்ற தொழிற்சங்கம் வெற்றி பெறுமா? இத்தேர்தலில் மலையக மக்கள் எதனை முன்னிலைப்படுத்தி வாக்களிக்கப் போகின்றார்கள் என்பன போன்ற பல விடயங்கள் பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டு வருகின்றன. சுமார் 40 ஆண்டு காலம் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த சமூகம் இன்று அரசியலில் பங்கு பற்றுதல், அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளுதல், சம பிரஜை என்ற அந்தஸ்துடன் வாழ வேண்டும் போன்ற விடயங்களில் அக்கறையுடன் இருப்பதுடன், நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மலையகத்தில் இடம்பெறுகின்ற கட்சி அரசியல் மற்றும் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்புலம் ஆகியன தொடர்பாகவும் விழிப்புடன் இருக்கின்றார்கள்.
பொதுவாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் படிப்படியாக கல்வித்துறையில் ஏற்றம் காணும்போது அச்சமூகம் தமது உரிமைகள் குறித்தும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்தும் சிந்திக்கத் தூண்டப்படுகின்றார்கள்.
இன்று மலையக சமூகத்தில் கல்வி ரீதியான எழுச்சி ஏற்பட்டு வருவதுடன், ஒரு குடும்பத்தில் ஆகக்குறைந்தது ஒரு பிள்ளையாவது கற்றுள்ள நிலை காணப்படுகின்றது. இதனால் அவர்கள் பெற்றோர்களை வழிநடத்தி வருவதுடன் அரசியல் தொடர்பான தீர்மானம் எடுத்தலின் அழுத்தம் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளார்கள். இன்றைய இளம் சமுதாயத்தினர் தேசிய அரசியல் தொடர்பாகவும் மலையகத்திலே காலம் காலமாக இடம்பெற்று வருகின்ற தொழிற்சங்க அரசியல் தொடர்பாகவும் அவதானமாக இருப்பதுடன் தமது பெற்றோர்களுக்கு தமது அரசியல் பிரதிநிதி யாராக இருக்க வேண்டும்? எத்தகைய குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டும் நிலை ஏற்பட்டுள்ளமையானது வரவேற்கத்தக்க விடயமாகும். இதனால் மலையக மக்களின் அரசியல் பங்கேற்பு அதிகரித்துள்ளதுடன் வாக்களிக்கும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு நல்ல உதாரணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலைக் குறிப்பிட முடியும். மலையக அரசியல் தலைவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறுவதற்கு முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை தீர்மானித்து விட்டார்கள். மேலும் வாக்களிப்பு வீதமும் மலையகத்தில் அதிகமாக காணப்பட்டமை (70%) பிறிதொரு கவனிக்கத்தக்க விடயமாகும். இதற்கு கல்வி ரீதியான ஏற்றம், ஊடகங்களின் தாக்கம், அதிகரித்து வரும் வெளித்தொடர்புகள் மற்றும் சிங்கள மொழி மூலமான அரசியல் கருத்துப் பகிர்வுகள் போன்ற பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.
மேலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களும் பிறிதொரு விடயத்தினை உணர்த்துகின்றது. அதாவது, ஏனைய சிறுபான்மை சமூகங்களை போல் மலையக மக்களிடம் இன தேசியவாதம் (Ethinc Nationalism) சமூக உணர்வு அல்லது இன உணர்வு அதிகரித்து வருகின்றது என்பதனேயாகும். இது தேர்தல் பெறுபேறுகளின் மூலம் சிறப்பாக வெளிப்பட்டது. தமக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதன் மூலமே தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட முடியும், சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று சிந்திக்கின்ற நிலை தோன்றியுள்ளது எனலாம்.
ஆயினும் தெரிவு செய்த பிரதிநிதிகள் அனைவருக்கும் இச்சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ளும் திறன் மற்றும் அத்தகைய பிரச்சினைகளை கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் மூலம் தீர்வு காணும் திறனை சலுகையினை அல்லது கல்வி சார்ந்த பின்புலத்தைக் கொண்டுள்ளார்களா என்பது சிந்திக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
அந்த அடிப்படையில் பார்க்கும் போது மலையத்தில் தொழில்படும் அரசியல் கட்சிகள் அத்தகைய பரந்த இலக்கினை கொண்டுள்ளனவா ? என்ற சந்தேகம் எழுகின்றது. இது தொடர்பான கருத்துப்பகிர்வுகளும் மலையகத்தில் இன்று அதிகமாகவே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மலையக மக்கள் சரியான தலைவர்களை தெரிவு செய்வதற்கு வசதியளிக்கும் வகையில் படித்தவர்களும் இளைஞர் யுவதிகளும் சமூகத்தின் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களில் ஈடுபட வேண்டும். இது மலையகத்தில் சிறந்த அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்த துணை புரியும்.
அண்மையில் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட ஓர் ஆய்வின் சில முடிவுகளை பார்க்கின்ற போது மலையக மக்கள் எவ்வளவு தூரம் அரசியல் ரீதியான விடயங்களில் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடியும். இந்த ஆய்வு 25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 1986 பேர் நேர்காணப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வறிக்கையினை வாசித்த போது 74.4% மான மலையக மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம் மக்களுக்கு அடுத்தபடியாக 80.4% தேர்தலின் நீதி மற்றும் நியாயத்தன்மை தொடர்பாக அதிக நம்பிக்கை கொண்ட சமூகமாக காணப்படுகின்றார்கள். இதற்கு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை என்பன காரணமாக அமையலாம்.
தாம் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனையும் வெளிப்படுத்துகின்றது. வேறு வகையில் கூறுவதாயின் கடந்த ஜனாதிபதி தேர்தலை போலவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள் என்பதனை மறைமுகமாக வெளிக்காட்டுகின்றது எனலாம். இதனை பின்வரும் விடயம் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இந்த ஆய்வின் முடிவின்படி 73.5% மான மலையக மக்கள் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். முஸ்லிம் மக்களில் 69% மானவர்களும் வடகிழக்கு தமிழர்களில் 55.2% மானவர்களும் சிங்களவர்களில் 35% மானவர்களும் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளனர். இதன்படி பார்க்கும் போது மலையக மக்களே முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர் சார்ந்த கட்சி அரசியலின் மீது அதிகம் வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் என்ற விடயத்தினை நோக்கும் போது 20.3% மான மலையக மக்கள் கல்வித்தகைமையினை குறிப்பிட்டுள்ளார்கள். சிங்கள மக்களில் 17.7% மானவர்களும் வடகிழக்கு தமிழர்களில் 14.8% மானவர்களும் முஸ்லிம்களில் 18.8% மானவர்களும் வேட்பாளர்களுக்கு கல்வித்தகைமை முக்கியம் என குறிப்பிட்டுள்ளனர். இந்த முடிவுகள் வெளிப்படுத்துவது யாதெனில் இன்று மலையக மக்கள் அரசியல்வாதிகளுக்கு கல்வி பின்புலம் முக்கியம் என்பதனை உணர்ந்துள்ளார்கள் என்பதாகும். வாக்களிப்பதற்கு முன்னர் அவர்களின் கல்வி பின்புலத்துக்கும் முன்னுரிமையளிக்கின்றார்கள் என்பதாகும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதானது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
தினத்தன்று முடிவெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முடிவுகள் 30 முக்கியமான விடயத்தினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக மலையக மக்கள் எவ்வளவு தூரம் அரசியல் மயமாகியுள்ளார்கள் கல்வி அரசியல் மற்றும் தேர்தல் அரசியல் தொடர்பான அவர்களின் விழிப்புணர்வு மட்டத்தினையும் காட்டுகின்றது. கட்சிகள் தேர்தல் தினத்தன்று கொடுக்கின்ற சலுகைகளுக்காக வாக்களிக்கும் வாக்காளர்களாக இனியும் நாம் இருக்கமாட்டோம் என்பதே அதன் அர்த்தமாகும். மேலும் 80.5 வீதமானவர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் அவரது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த முடிவுகள் மலையகத்திலே ஏற்பட்டு வருகின்ற சமூக மாற்றத்தினையும் சிந்தனை மாற்றத்தினையும் வெளிப்படுத்துகின்றது.
ஆகவே எதிர்வரும் தேர்தலை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி சரியான பிரதி நிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அது மலையக மக்களின் ஏற்றத்திலும் சமூக நிலை மாற்றத்திலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். மறைமுகமாக மலையத்தில் செயற்படுகின்ற சிவில் சமூக அமைப்புக்களும் புத்தி ஜீவிகளும் மலையக மக்கள் சரியான அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு வசதியளிப்போராக இருக்க வேண்டும். அறிவு சார் அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை கட்டியெழுப்புவதன் மூலமே மலையக மக்களின் பிரச்சினைகளை கொள்கை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி தீர்க்க முடியும் என்ற விடயத்தினையும் நாம் மனங்கொண்டு தேர்தல் கால செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...