Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டப் பெண்களும் பெண்ணியல் கருத்துக்களும்.. மலையக குருவி

பெருந்தோட்டப் பெண்களும் பெண்ணியல் கருத்துக்களும்.. மலையக குருவி


மலையக வரலாற்றுப் பார்வையில் சமூக இருப்பிற்காய் வாழ்ந்து மறைந்த பெண்ணியல் சிந்தனையாளர்களில் கோ நடேசய்யரின் பாரியாரான மீனாட்சியம்மாள் என்றென்றும் நன்றியோடு நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவராவார். சமூகமாற்றத்திற்காய் வர்க்கப் போராட்டத்தின் தத்துவார்த்தங்களுடன் பெண் விடுதலை நோக்கிய நகர்வுகளை மலையக பெண்கள் மத்தியில் பரவ செய்த சாத்வீகப் பெண் போராளி மீனாட்சியம்மாள் என்றால் மிகையாகாது.இதனைத் தொடர்ந்து பல பெண் படைப்பாளிகள் தங்களின் இலக்கியங்களினூடாக பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான பல நகர்வுகளை செய்துள்ளனர்.

மலையகத்தில் இருந்து பெண்ணியல் சார்ந்த கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் சிலவும் வந்திருந்த போதிலும் ஒரு முழுமையான இலக்கியப்படைப்போ ஆய்வு நூலோ வெளிவராமை பெரும் குறையாகவே காணப்படுகின்றது.

பெண் படைப்பாளிகள் பலர் தங்களின் படைப்புகளில் விடுதலை பேசியதுடன் தங்களின் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பெண்ணியல் சிந்தனைகளில் இருந்து நகர்ந்து குடும்ப சுமை சுமக்கும் சுமைத்தாங்கிகளாகி விட்டனர். ஆவர்களின் படைப்புக்கள் பயனற்றதாகி போய் வெறுமனே தாள்களில் பதியப்பட்ட எழுத்துக்களாக மாத்திரமே முடங்கி விட்டது. .மீனாடசியம்மாள் தனது படைப்பகளுடன் மக்களிடம் சென்று மக்களுக்காக இயங்கியதன் காரணத்தினாலேயே அவரின் பெயர் வரலாற்றில் பேசப்படுகின்றது என்பது படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்;.

மலையகத்தைப் பொருத்த மட்டில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்ணியல் கருத்துக்கள் தொடர்பான சில பத்திரிகைகளையும் செய்திக்கடிதங்களையும்வெளியிட்டு இருக்கின்றன சில மனித உரிமை அமைப்புக்கள் சில சஞ்சிகைகளையும் வெளிக் கொண்டு வந்திருப்புதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவை எந்த அளவிற்கு மலையக பெண்களின் வாழ்வியல் மாற்றத்திற்கும் விடுதலைக்கும் உந்து சக்தியாய் அமைந்தன என்பது ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டிய விடயமே.குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் எந்த அளவிற்கு பெண்ணியம் தொடர்பான கருத்தியல்களை உள்வாங்கியுள்ளார்கள் என்பதுவும் இவர்களுக்கு பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளர்கள் பெண்ணியல் கருத்துக்களை எந்த அடிப்படையில் வழங்கியுள்ளனர் என்பதுவும் பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது அது மட்டும் இன்றி மலையக பெண்களின் வளர்ச்சிக்கென பெறப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் மலையகத்தில் சரியாக பயன் படுத்தப் பட்டிருந்தால் மலையகப் பெண்கள் மத்தியில் கலைக் கலாச்சாரப் பண்பாட்டு பொருளாதார வளர்ச்சி ஓரளவேனும் உணரக்கூடியதாய் இருந்திருக்க வேண்டும்.பெண்களுக்காய் சேவை செய்கின்றோம் என்று கூறும் சில அமைப்புக்கள் சேமிப்புத்திட்டங்கள் சிறுகுழுக்கள் கடனுதவிகள் என்று திட்டங்களை செய்த போதிலும் அவை மலையகப் பெண்களின் அடிப்படைவ வாழ்வியல் மாற்றங்களுக்கு எந்த அளவு துணை நிற்கின்றன என்பது விமர்சனத்திற்குரிய விடயமாகும்.

மலையகத்தில் காணப்படும் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைமைப்பீடம் ஆணாதிக்க சிந்தனையாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மலையகத் தொழிற்சங்கங்கள் வாக்குகளுக்காகவும் மாதாந்த சந்தா பணத்திற்காகவும் மாதர்சங்கங்களை வைத்திருப்பதுடன் உழைக்கும் பெண்களுக்கு சமமான அரசியல் பிரதி நிதித்துவத்தினை வழங்குவதற்குரிய மனப்பாங்கற்றவர்களாக காணப்படுகின்றனர். மலையகத் தொழிற்சங்கங்களுக்கு அதிக விசுவாசமானவர்களும் பெண்களே. தொழிற்சங்கங்களுக்கு கிடைக்கும் சந்தா பணத்தில் கிட்டத்தட்ட 78 வீதம் பெண்கள் வழங்கும் சந்தாவாகவே உள்ளது. இந்த நிலையில் பல தொழிற்சங்கங்களில் இருக்கும் ஓரிரண்டு பெண் பிரதி நிதிகளும் படு பிற்போக்கான அடிமை சிந்தனைக் கொண்டவர்களாகவும் உழைக்கும் பெண்களை ஆணாதிக்கவாதத்தின் கோரப்பற்களுக்கு இரையாக்கும் கைங்கரியத்தினை செவ்வனே செய்து வருபவர்களாகவுமே பெரும்பாலும் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த குறிப்பிட்ட பெண்களும் அடிமைசிந்தனையில் மூழ்கிப் போயிருப்பதுடன் தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறியதும் எந்த வித சமூகப்பாதுகாப்பும் இல்லாமல் பலிவாங்கப்படுவதும் கேவலப்படுத்தப்படுவதும் பொதுவாக காணப்படும் விடயமாகும்.மலையக தொழிற்சங்கங்களின் சில முக்கிய பிரமுகர்கள் சிறுமிகளை தலைநகர பணக்காரர்களின் வீடுகளில் வேலைக்க சேர்க்கும் கீழ்த்தரமான செயலையும் செய்து வருகின்றனர்.

பெண் விடுதலைப்பற்றி புரட்சிகரமாக பேசும் சில அரசியல் அமைப்புகள் பெண்கள் தொடர்பான அதிகாரத்தினை பெண்களுக்கு வழங்காமல் ஆண்களே கையில் வைத்துக் கொண்டு ஆணைப்பிறப்பிப்பவர்களாக செயற்பட்டு வருவதும் கண்டனத்துக்குரிய விடயமாகும். பெண்களின் ஆளுமை மீது நம்பிக்கையில்லாத ஆணாதிக்க சிந்தனையாளர்களால் உண்மையான பெண் விடுதலையை நோக்கிய நகர்வினை என்றுமே செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும.

மத்தியத்தரவர்க்கப் பெண்களும் பெண்ணியல் வாத கருத்துக்களும் தொடர்பாக நோக்குமிடத்து தங்களை அனைத்து புறத்தாக்கங்களிளிருந்தும் பாதுகாத்துக் கொண்டு கௌரவத்திற்காக மாத்திரம் புரட்சி பேசும் பெண்ணியல் வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

இவர்களே அதிகமாக பெண்கள் தொடர்பான அமைப்புகளை வைத்து நடத்துபவர்களும் உழைக்கும் வர்க்கப் பெண்களை உண்மையான போராட்டப்பாதையிலிருந்து நகர்த்தி ஆண்களுக்கு எதிரான கருத்து மாத்திரமே பெண் விடுதலை என்னும் மாயையை விதைக்கும் பின்நவீனவியலாளர்களாகவும் பணத்தை மையமாகக் கொண்டு பெண்ணியம் பேசி வருபவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த மத்தியத்தரவர்க்கப் பெண்ணியல்வாதிகள் சாதி சமய மூடத்தனமான கலாச்சாரப்பண்புகள் பிற்போக்கு பண்பாடு என்பவற்றில் மூழ்கி போனவர்களாக தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்களாகவும் காணப்படுவதுடன் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையப்பற்றியும் உழைக்கும் பெண்கள் பற்றியும் மோசமான விமர்சனங்களை முன் வைத்தும் வருகின்றனர்.

பொருளாதார பின்னடைவுகள் தொடர்பாக எது வித தர்க்க ரீதியான ஆய்வுகளையும் செய்யாது விமர்சித்து வருபவர்களாகவும் காணப்படுகின்றனர். தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கத்தயங்கும் இவர்கள் சேலைக்கேற்ற ரவிக்கை அணியாதது பற்றியும் கிழிந்த சேலையைப்பற்றி ரொட்டியைய்ப்பற்றியும் பேசுபவர்களாகவும் தங்களின் நாகரீக பாங்கினை பிரச்சாரம் செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக சிறிய அழுத்தத்தைக் கூட கொடுக்க முடியாத இவ்வமைப்புக்கள் போசாக்கின்மைப்பற்றியும் மதுபாவனைப்பற்றியும் பற்றியும் ஆணுக்கு எதிராக பெண்ணை தூண்டி விடும் செயற்பாடுகளையும் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.

மலையகப் பெண்களின் போராட்ட குணாம்சம் மலையக ஆண்களை விட மிக உயர்ந்ததாகவே காணப்படுகின்றது இதற்கு சிறந்த உதாரணமாக இலத்திரனியல் ஊடகங்களில் கருத்து கூறும் பெண்கள் சரியானதையும் உண்மையையும் எந்தத் அழுத்தங்களக்கம் பயப்படாமல் தாங்களாகவே முன் வந்து கூறுவதனை காணலாம் தங்கள் குறைப்பாடுகளை உலகிற்கு தெரிவிப்பதில் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர் மலையகப் பெண்களின் போராட்ட குணம் கலந்த சக்தி ஒன்றிணைக்கப்பட்டு மக்களின் தேவைக்காக குரல் கொடுக்க மாத்திரம் அல்ல சுயமாய் சிந்திக்கவும் போராடவும் தயார்ப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்..!

மலையக குருவியின் முக நூலிலிருந்து நன்றியுடன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates