Headlines News :
முகப்பு » » மலையக அரசியலை சிந்திக்க வைத்த புதுமுகம்

மலையக அரசியலை சிந்திக்க வைத்த புதுமுகம்


கல்விகற்ற சமூகம் தலை நிமிர்ந்தால் மலையகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கலாம் என்ற இளைய சமூகத்தினரின் எதிர்ப்பார்ப்புகளை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. ஆம்! சுமார் 200 நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட  மலையக அரசியலில் நடந்து முடிவடைந்த  நாடாளுமன்ற  தேர்தல்  ஒரு  பெரும்  திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.  தொழிற்சங்க அரசியலில் மாத்திரம் இவ்வளவு காலமும் பழக்கப்பட்டு வந்த மலையக மக்கள் இந்த 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சற்று சிந்திக்க தொடங்கியுள்ளனர் போலும். இதுவரை காலமும் நடைமுறையில்  இருந்த மலையக அரசியல் கலாசாரத்தில் இருந்து புதிய அரசியல் செல்நெறியொன்றில் மலையக அரசியல் புறப்பட்டை வலியறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.  

'அவமானத்தை தாங்கிக் கொண்டால் அரசியல்" என்ற அழகான வரிகளில் வித்தியாசமான தொனிப்பொருளுடன் அரசியலில் காலடி எடுத்து வைத்து இன்று மலையக மக்களிடம் விஷேடமாக  எமது இளைய சமூகத்தினரினது மனதில் நீங்கா இடம்பிடித்து  வித்தியாசமான அரசியல் அணுகுமுறையைக் கையாண்டு ஆறுமுகங்களையும் முந்தியடித்துள்ளார் இளம் இலக்கிய அரசியல்வாதி.  ஆம்! பாட்டு பாடி வாக்கு கேட்கும் வேட்பாளர் என்று ஊடகங்கள் மற்றும் பல தரப்பினரிடையே விமர்சிக்கப்பட்டு வந்த  மல்லியப்பு சந்தி திலகர் என்று தன்னை அறிமுகப்படுத்திய திலகராஜ் மயில்வாகனம் அனைத்து அவமானங்களையும் தாங்கிக்கொண்டு அரசியலுக்குள் வந்துவிட்டார்.  

'அவமானத்தை தாங்கிக்கொண்டால் அரசியல்” எனும் தொடர் விளம்பரத்தின் மூலம் வித்தியாசமான  கோணத்தில்  மலையக மக்களை சிந்திக்க தூண்டி, மலையக மண்ணில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இன்று மலையக மக்கள் பலரையும் தனது பேச்சு மற்றும் அனுபவத்தினூடான அறிவுத்திறமையினால் மலையக அரசியலை சிந்திக்க வைத்துள்ளார திலகர். பண்முக ஆளுமைக்கொண்ட இளம் இலக்கிய அரசியல்வாதி திலகர்  மடக்கும்பொரை மண்ணின் மைந்தன் திலகர் வருகிறார் ... என திரில்லான பாடல் ... வரிகளை கொண்டு தென்னிந்திய சினிமா பாணியில் தன்னை அறிமுகப்படுத்தி 67,761 எண்ணிக்கையிலான மலையக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது ஆச்சரியத்தக்க விடயமே. அது மாத்திரமா? மேற்படி எண்ணிக்கை என்பது எண்கள் அல்ல அது எமது மலையக மக்களின் எண்ணங்கள் என்று தனது நன்றி உணர்வையும் அழகாக கவி வரிகளில் வெளிபடுத்தி தன்னை ஒரு அரசியல் கவிஞராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.  

ஆம் விடயத்துக்கு வருவோம்!  
பொதுவாக மலையகத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் பிரதிநிதிகள்  இதுவரைக்காலமும் அபிவிருத்தி அரசியலை மாத்திரம் முன்வைத்தே தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இது மலையகத்தில் வழமையாக நடந்து வரும் ஒரு விடயம். (கூரைத்தகடுகள், நாட்காலிகள் வாங்கி தருவோம்னு பேசாட்டி ஓட்டு தர மாட்டாங்க என்ற நிலைமையும் இருப்பது வேற கத) அவ்வாறு அபிவிருத்தி அரசியல் பற்றி பேசி வந்தாலும் தேர்தல் வெற்றியின் பின்னர்  இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா? என்பது இங்கு சிந்திக்க வேண்டிய விடயமாகும். சில நேரங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் தோட்டப்பகுதி மக்கள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இது காலம் காலமாக இடம்பெற்று வரும் விடயம்...
இவ்வாறானதொரு நிலையில்  தான் ஒரு பட்டதாரி, சுயாதீன ஊடகவியலாளர், சிறந்ததொரு எழுத்தாளர், இலக்கியவாதி என தன்னை வெளிகாட்டி வந்த திலகராஜ் மயில்வாகனம் கடந்த பல வருடங்களாக தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து மேடை பிரசாரம் அல்லாத அரசியலை நடாத்தி வந்துள்ளார். தான் அரசியலில் புதியவர் அல்ல என்று தன்னை அறிமுகப்படுத்திய இவர் தனது மலையக மக்கள் இந்த 200 வருடகாலமாக தமக்கென தனியானதொரு அடையாளம் இல்லாமல் இருக்கின்றனர் என்பதையே தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது மலையக மக்களுக்கு நினைவுபடுத்தி வந்தார். வெறுமனே தோட்டப்புறங்கள் அபிவிருத்தி அடைந்து விட்டால் மாத்திரம் தமது மலையக மக்களுக்கு அடையாளம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தை மலையக மக்கள் மனதில் இருந்து தகர்த்து அடையாளம் இல்லாத மக்களை தான் அடையாளப்படுத்த வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டு இறுதி வரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியும் தேர்தலில் பெற்றுள்ளார். தான் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரம் இந்த வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பார் என்று கூட சந்தேகபட முடியாது. ஏனெனில் அவரது ஒவ்வொரு உரைகளும் உணர்வுப+ர்மாக மலையகத்தமிழர்கள் தங்களை முதலில் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது மறுப்பதற்கில்லை. 

 உண்மைதான் இன்றும் கூட மலையக மக்கள் இந்தியா தமிழர் என்று கூறப்படுகின்றனரே தவிர இலங்கைப்பிரஜை என்று அடையாளப்படுத்தப்படவில்லை. அடையாளம் இல்லாத எமது மலையக மக்களுக்கு முதலில் அடையளம் கிடைக்க வேண்டும். இந்தியாவில் இந்நிதியப்பிரஜை என்றொரு அடையாளம் இல்லாத போது  இலங்கையில் உள்ள மலைநாட்டு தமிழர்களை இந்திய வம்சாவழியினர் என்று அழைக்கப்படுவதானது எமது மலையக மக்கள் இன்றும் இலங்கை தேசத்துக்கு உரியவர்களாக  ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாக புலப்படுத்துகின்றது. ஒரு நாடோ அல்லது ஒரு குறித்த பிரதேசமோ கல்வி உட்பட முழுமையான அபிவிருத்தியை பெறவேண்டுமாயின் அந்நாட்டு தேசத்திற்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.  அதேவேளை உணரவும் வேண்டும். ஆனால், மலையகத்தைப்பொறுத்தவரையில் அது இன்னும் இடம்பெறாததாகவே உள்ளது.

கல்வி உரிமை தவிர்ந்த பிற உரிமைகள் ஏதேனும் அரச நிர்வாக கட்டமைப்போடு மலையக மக்களை இதுவரைக்காலமும் சென்று சேர வில்லை என்பது அவர்கள் இலங்கை  தேசத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது தெளிவாக புலப்படுகின்றது. ஏனெனில் ஏனைய அனைத்து உரிமைகளுக்காகவும் தனியார் நிறுவனங்களிடம் தங்கியிருக்கும் நிலைமை துரதிஸ்;டமானது. அபிவிருத்தி அரசியலை விடுத்து தமக்கான உரிமை அரசியளுக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும். என்பதை தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது திலகர் வலியுறுத்தி வந்தார். ஆம்! எமது எதிர்ப்பார்பும் அதுவாகத்தான் இருக்கின்றது. எனவே மலையக மக்களின் இன அடையாளம் அரசியல் ரீதியாக முறையாக அடையாளப்படுத்தப்பட்டு அது சட்டரீதியான அந்தஸ்துடன் பிரகடனப்படுத்தப்பட்டு   இந்த மக்கள் இந்த தேசத்திற்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட்டால் பின்வரும் சகல விடயங்களும் தானாகவே இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. 

பண்முக அளுமை கொண்ட திலகர் வருகிறார்... என்று அறிவித்தபோது இவர் வந்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது என்பது மறுப்பதற்கில்லை... ஆனால், திலகர்; வந்துவிட்டார் என்று அவரின் வருகையின் பின்னர் மலையக இளம் சமூகத்தினர் மனதில் பெரும் மாற்றம் எழுந்துள்ள அதேவேளை பெரும் எதிர்ப்பார்ப்புக்களையும் உருவாக்கியுள்ளது. அவர்களிடம் பல கேள்விகளையும் எழச் செய்துள்ளது. இது வரை காலமும் இருந்த தற்போது இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மலையக சமூகத்தின் எதிர்காலத்தை எவ்வாறு சிந்தித்தார்கள்! சிந்திக்கின்றார்கள்  என்ற தமது தெளிவான கருத்தை முன்வைத்திருக்கவில்லை. சொல்லப்போனால் அவர்களை பற்றி வெளியிடங்களில் பேசும்போது 'அவங்க காசுக்காக கட்சி மாறுபவர்கள்" என்று கருத்து நிலவி வந்தது. இவ்வாறானதொரு நிலைமையில்  எதிர்வரும் காலத்தில மாற்றம் ஏற்படும் என்று நம்புகின்றோம். 

அபிவிருத்தி என்ற பெயரில் மலையகத்தில் இடம்பெற்று அரசியலில் தற்போது அறிவு ப+ர்வமாக சிந்திக்க கூடிய நிலைமை மலையகம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. மலையக தோட்டப் பகுதிகளில் படித்த இளைஞர், யுவதிகள் பெரும் எண்ணிக்கையிலானோர் இருந்தாலும் கூட அவர்கள் தாம்  அரசியல் நீரோட்டத்தில் தங்களை கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். இதற்கெல்லாம் மலையக மக்களை குறிப்பாக இளம் சந்ததியினரை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவரின் வருகை இல்லாமை கூட காரணமாக இருக்கக்கூடும். ஆனால், தற்போது அவ்வாறானதொரு வெற்றிடமும் நிரப்பப்பட்டுள்ளது உணரக்கூடியதாக இருக்கின்றது. 

மலையக குறிப்பாக லயத்தில் பிறந்தவர்களுக்கு சாதிக்க முடியுமா?  என்ற கேள்வி... பல இடங்களிலும் தற்போதும் எழுகின்றது. அர்ப்பணிப்புடன் தன்னை சகல துறைகளிலும் விருத்தி செய்துக்கொண்டு நேர்மையாக செயல்பட்டால் லயத்து புயலும்  பாராளுமன்றத்திலும் வீச முடியும் என்று இளம் சமூகத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள திலகரின் சேவைகள் மலையக எழுச்சிக்காக தொடர வேண்டும் என்பதே சகலரது எதிர்ப்பார்ப்பாகும். இதில் ஒரேயொரு சிக்கல் என்னவென்றால் திலகராஜாவின் பார்வைச் செம்மையும் மண்பற்றிய ஸ்திரப்பாட்டையும் எவ்வளவு காலம் சமநிலையாக இணைத்துப்பேணப்போகிறார் என்பது தான் அரசியலில் இவரது சவாலாக உள்ளது. உங்கள் இலட்சியம் நிறைவேறட்டும்  வாழ்த்துக்கள். 

கபில்நாத் 
(நன்றி தினக்குரல்)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates