இலங்கை மக்கள் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்கள். ஆனாலும், அரசியலில் அவர்களது வகிபாகம் மிகவும் குறைந்தளவே உள்ளது. உலகத்தின் முதல் பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு, மட்டுமல்லாது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பெண் ஒருவர் ஆட்சி செய்த நாடு என்ற பெருமைகளை மட்டும் கொண்டதாக இலங்கை இவ்விடயத்தில் ஒரு அரசியல் வரையறைக்குள் கட்டுண்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் பெண்கள் விவகார அமைச்சானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் 30% ஆன பெண் வேட்பாளர்களை உள்ளடக்கி வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைத்திருந்தது. ஆனால், இது எந்தளவிற்கு சாத்தியமானது என்பதை இம்முறை கட்சிகள் தெரிவு செய்திருந்த வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து அறிந்து கொள்ளலாம். முன்னைய பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே. .எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக பிரதான கட்சி ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் வேட்பாளராக களமிறங்குகின்றார். அவர் இ.தொ.கா சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா ஆவார்.
மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் தேசிய சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை தமிழ் உறுப்பினராக திருமதி சரஸ்வதி சிவகுரு மாத்திரமே இருக்கின்றார். அம்பகமுவ பிரதேச சபையின் (முன்னாள்) பெண் உறுப்பினராக திருமதி அருள்நாயகி இருந்திருக்கிறார். இந்த பெண் பிரதிநிதித்துவங்கள் எமக்கு போதாது என்றே கூற வேண்டும்.
முதல் பெண் உறுப்பினர்கள்
இலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கு (State Council) தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண்மணி லூயிசா நேசம் சரவணமுத்து ஆவார். இவர் 1932–36 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்காக இடம்பெற்ற தேர் தல்களில் கொழும்பு வடக்குத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேளை இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவான முதல் பெண்மணி திருமதி அடலின் மொலமூரே என்பவராவார் (ருவன்வல 1931) .முதலாவது அரசாங்க சபைக்கு பலாங்கொடை தொகுதியிலிருந்து திருமதி லீலாவதி என்ற தமிழ்ப்பெண்மணி போட்டியிட்டாலும் அத்தொகுதியில் அதிக ஆதரவை கொண்ட ஜே.சி.ரத்வத்தை என்பவருடன் போட்டியிட முடியாது அவர் இடையில் விலக நேரிட்டது.
பார்வையாளர்களாக மட்டும் இருக்கும் மலையகப்பெண்கள்
இன்று மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்களை எடுத்துக்கொண்டால் தொழில் ரீதியான பங்குபற்றலே அதிகமாக இருக்கின்றதே ஒழிய, அரசியல் ரீதியான பங்குபற்றலும் அது குறித்து விமர்சிக்கும் தன்மையும் மிகக்குறைவாகவே உள்ளது. இன்று இந்த சமூகத்திலிருந்து கூடுதலான பெண்கள் ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதோடு அவர்களின் தொழில் பங்குபற்றல் முடிவடைந்து விடுகிறது. மலையக தொழிற்சங்கங்களில் அதிக அங்கத்தினராக பெண்கள் இருக்கின்றனர். இவர்களை மகளிர் அணி தலைவி என்ற பதவியில் வைத்து அழகு பார்க்க மட்டுமே தொழிற்சங்கங்களும் விரும்புகின்றன. அதற்கப்பால் இவர்களின் அரசியல் பங்குபற்றலை தொடர தொழிற்சங்கங்களும் விரும்புவதில்லை அந்த தலைவிகளுக்கும் கேட்க தைரியமிருப்பதில்லை. இதன் காரணமாகவே வீட்டு வன்முறையிலிருந்து சிறுவர் கல்வி, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள், அடக்குமுறைகள் என எதையுமே பகிரங்கபடுத்த முடியாத சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளையில் ஆரம்பத்தில் நாம் கூறியது போல ஆசிரியர் தொழில்சார் நடவடிக்கைளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்களில் கணிசமானோர் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதில் அக்கறை காட்டுகின்றனர். முக்கியமான விடயம் என்னவெனில், கற்ற பெண்கள் சமூகத்தின் மத்தியில் அரசியல் என்றாலே ஒதுங்கிப்போகும் நிலைமையே மலையகத்தில் காணப்படுகின்றது. அல்லது மௌனம் காக்கின்றனர் எனலாம்.
அரசியல் அறிவு ?
கள ஆராய்வை மேற்கொள்ளும் போது பெரும்பாலான பெருந்தோட்ட பெண்களுக்கு தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் பெயர்கள் அதை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பற்றிய அறிவு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களின் பூரண சம்மதம் இன்றியே தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணமும் அறவிடப்படுகின்றது. இந்நிலையில், இவர்களுக்கு எங்ஙனம் தமது உரிமைகள் பற்றிய விடயங்கள் தெரியப்போகின்றன? மலையக பெருந்தோட்டப்புறங்களை பொறுத்தவரை இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் முழு சமூகத்திற்குமான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
அதை கடந்த காலங்களில் முறையாக முன்னெடுக்காத காரணத்தினால் இந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையினரான பெண்கள் பற்றி எவருமே வாய் திறக்கவில்லை என்பது உண்மை. இந்த நிலையில் வெறுமனே பெண் பிரதிநிதித்துவம் பற்றி பேச வேண்டும் என்பதற்காக தேர்தல் காலங்களில் மட்டும் இவர்களைப்பற்றி பிரஸ்தாபிப்பது நியாயமானதா என்பதை பெண்கள் சிவில் அமைப்புக்களும் பிரதிநிதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மலையகத்திற்கு ஏன் பெண் பிரதிநிதித்துவம் தேவை?
மலையக பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை தொழிற்றுறையிலும் குடும்பங்களை பராமரிப்பதிலும் கூடு தல் பங்குபற்றுதலை பெண்களை ஆற்றி வருகின்றனர். எனினும், அரசியல் பங்குபற்றதலில் இவர்களின் பணி வாக்களிப்பதோடு நின்று விடுகின்றது அதிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற சுதந்திரம் கூட இவர்களுக்கு ஆண் வர்க்கத்தினரால் வழங்கப்படுவதில்லை. கொழுந்து பறித்தல் செயற்பாடுகளில் கூடுதல் நேரம் வேலை செய்வதில் இன்று பெண்களை முதலிடத்தில் இருக்கின்றனர் கூறப்போனால், இன்று கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் இவர்களிடமே தங்கியிருக்கின்றன. ஆனாலும் பெண் உரிமைகள் என்ற விடயத்தில் இவர்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பெண் தொழிற்படையினராக பெருந் தோட்டப் பெண்களே உள்ளனர். எனினும், பாரம்பரிய அடக்குமுறை போன்ற அம்சங்களால் இவர்கள் மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். அரசியல் தொழிற்சங்க பங்குபற்றுதலை வீட்டிலுள்ள ஆண்கள் எடுத்துக்கொள்ள தமக்கென (பெண்களுக்கென) உள்ள உரிமைகள் பற்றி இறுதி வரை இவர்கள் வாய்திறக்காமலிருப்பதற்குக் காரணம் அது பற்றிய தெளிவின்மையே.
குடும்ப வன்முறைகளிலிருந்து தேயிலை மலைகளில் வேலைத்தள அடக்குமுறைகள், கொழுந்து நிறுப் பதில் இவர்களுக்கு ஏற்படும் பாரபட்சம், ஊதியம் போன்ற விடயங்களில் இவர்களின் குரல் அடக்கப்பட்டே வருகின்றது. 1970 கள் வரை பெருந்தோட்டப்பகுதிகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தானே யதார்த்தம்?
பெண் தலைமைத்துவம் ஊக்குவிக்கப்படவில்லை
அதே வேளை ஏற்கனவே அரசியல் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பவர்களாக இருக்கவில்லை என்ற கசப்பான உண்மையையும் இங்கு ஏற்றுக்கொள்ளல் அவசியம். ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மலையக பெருந்தோட்டம் வாழ் பெண்கள் பயன்படுத்திக்கொள்ளல் அவசியம். அதற்காக இக்கட்டுரை இ.தொ.காவுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என எவரும் நினைக்கக்கூடாது பெண் பிரதிநிதித்துவம் பற்றி ஆரம்பத்திலிருந்தே இ.தொ.காவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் நிச்சியம் பெண் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றே இ.தொ.கா தெரிவித்திருந்தது. அதன்படி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அதே வேளை பிரஜைகள் முன்னணியும் தனியாக பெண்களை மட்டுமே களமிறக்கியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட தரவாக எழுதப்பட்டது என எவரும் நினைக்கக்கூடாது பெண் பிரதிநிதித்துவம் பற்றி ஆரம்பத்திலிருந்தே இ.தொ.காவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் நிச்சியம் பெண் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றே இ.தொ.கா தெரிவித்திருந்தது. அதன்படி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அதே வேளை பிரஜைகள் முன்னணியும் தனியாக பெண்களை மட்டுமே களமிறக்கியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பெண் விடுதலை பெண்ணியம் பற்றி பேசி வருகின்றவர்கள் நிச்சியமாக கட்சி தொழிற்சங்க பேதங்களின்றியே இருப்பவர்கள் என்பது உண்மையானால் எதிர்வரும் தேர்தலில் அதை செயற்படுத்த வேண்டும்.அதை விடுத்து அவர் அந்த கட்சியை சேர்ந்தவர் இந்த தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என சொல்லிக்கொண்டிருந்தால் மலையக தமிழ் பெண் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாகவே இருக்கப்போகின்றது.
நன்றி - வீரகேசரி
+ comments + 1 comments
இக்கட்டுரையை எழுதியவர் பெயர் சிவலிங்கம் சிவகுமாரன்......
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...