Headlines News :
முகப்பு » » அரசியல் மயமாகிவிட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் - பானா. தங்கம்

அரசியல் மயமாகிவிட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் - பானா. தங்கம்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வும், கூட்டு ஒப்பந்தமும் இன்று தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் போட்டியை ஏற்படுத்தி அவற்றின் அரசியல், தொழிற்சங்கப் பலப் பரீட்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களது நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படுகின்றது. இறுதியாக 2013 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2015 மார்ச் மாதம் 31 ஆந் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. புதிய ஒப்பங்கம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தமும் பேச்சுவார்த்தையும்
ஆரம்ப காலத்தில் தோட்டங்கள் ஆங்கிலேயரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. 1970 களில் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகு ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். தோட்டங்கள் அரசாங்கத்தினால் அரச பெருந்தோட்ட யாக்கம் (SLPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது “சம்பள நிர்ணய சபையின்” ஊடாகத் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு, வாழ்க்கைச் செலவுப் புள்ளி அதிகரிப்புக்கு ஏற்பவும் கொடுப்பனவு கிடைத்து வந்தது. 1984 ஆம் ஆண்டு தோட்டங்களில் தொழில் புரியும் ஆண், பெண் இருபாலாருக்கும் சம சம்பளம் வழங்கப்பட்டதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கான கொடுப்பனவும் நிறுத்தப்பட்டு விட்டது.

அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த தோட்டங்கள் 1992 ஆம் ஆண்டு 23 தனியார் கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு கம்பனியும் அதனதன் விருப்பத்துக்கே ஏற்ப நிர்வாகம் செய்து கெடுபிடிகளை ஏற்படுத்தி வந்ததால் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததோடு போராட்டங்கள் செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். இவ்வாறு ஆறு வருடங்கள் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைக்கு முகங் கொடுத்து வந்த நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இறுதியில் “கூட்டு ஒப்பந்தம்” ( COLLECTIVE AGREEMENT ) நடைமுறைக்கு வந்தது

கூட்டு ஒப்பந்தத்ததில் கைச்சாத்திடுவதற்கு 40% அங்கத்துவ பலத்தைக் கொண்டனவாக தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு தொழிற்சங்கத்துக்கும் 40% அங்கத்துவ பலம் இல்லாத நிலையில், அதிக அங்கத்துவ பலம் கொண்டிருந்த இ.தொ.கா. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடத் தகுதி பெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக தொழிற்சங்க அந்கத்துவ பலம் கொண்டிருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அப்போது அதன் தலைவராக இருந்த காமினி திசாநாயக்கவால் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு 16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இன்று தோட்டங்களை நிர்வகித்து வரும் 23 கம்பனிகளின் சார்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், மூன்று தொழிற்சங்க அமைப்புகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு வருகின்ற போதிலும், இவற்றை விட அல்லது இவற்றுக்கு இணையான தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் பங்கு பற்ற முடியாத நிலையில் உள்ளன. எனவே, எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றக் கூடியதாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன..

இரண்டு வருடங்களுக்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான பிறகு தொழிலாளர்கள் எந்தவொரு வேலை நிறுத்தப் போராட்டத்தயும் மேற்கொள்ள முடியாது.

ஒப்பந்தத்துக்கு மேலதிகமாக எந்தவொரு சலுகையையும் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைமை உள்ளதால் நாட்டில் விலைவாசி எவ்வளவு தூரம் உயர்ந்தாலும் இரண்டு வருடங்களுக்கு தொழிலாளர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

தொழிலாளர்களின் பலமான ஆயுதமான வேலை நிறுத்தப் போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் சம்பள உயர்வையோ சலுகையையோ தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளவும் முடிவதில்லை.

இவ்வாறு தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் நலன்களுக்காக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இன்று அரசியல்வாதிகளின் பலப் பரீட்சைக்கு ஆடுகளமாக மாறியுள்ளது.

புதிய ஒப்பந்தமும் பேச்சுவார்த்தைகளும்
காலாவதியாகியுள்ள கூட்டு ஒப்பந்தத்துக்குப் பதிலாக புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை இம்முறை பெற்றுக் கொடுக்கப் போவதாக இ.தொ.கா. முன் கூட்டியே அறிவித்திருந்தது. எனவே, கடந்த காலங்களைப் போல ஆர்ப்பாட்டங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தன. மாறாக 1000 ரூபா சம்பள உயர்வை இ.தொ.கா கட்டாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந் நிலையில் கடந்த நான்கு மாத காலத்தில், கம்பனிகளும் மூன்று தொழிற்சங்க அமைப்புகளும் ஐந்து, ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. எனினும் இ.தொ.கா. முன்வைத்த 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு கம்பனிகள் எந்த விதமான இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இறுதியாக ஜூலை மாதம் 2 ஆந் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது ஆயிரம் ரூபா கோரிக்கைக்கு கம்பனிகள் ஒத்து வராத காரணத்தால் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து இ.தொ.கா. வெளியேறிச் சென்று விட்டது. தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்றவர்கள் அதை மேற்கொள்ளாமல் ஐந்து நிமிடத்தில் வெளியேறி விட்டமை பொறுப்பற்ற செயல் என்று எதிர்த் தரப்பு தொழிற்சங்கங்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், பேச்சுவார்த்தை நடத்த மூன்று தொழிற்சங்க அமைப்புகள் சென்றிருந்த நேரத்தில் ஏனைய இரண்டு அமைப்புகளுடன் கலந்துரையாடாமலும், சொல்லிக் கொள்ளாமலும் இ.தொ.கா தன்னிச்சையாக வெளியேறியமை கண்டிக்கத் தக்கது என்றும் இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவதாகவும் ஏனைய தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இ.தொ.கா. சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதன் தலைவர் முத்து சிவலிங்கம், பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், உபதலைவர் கே. மாரிமுத்து ஆகியோர் வெளிநடப்புச் செய்திருந்தாலும், ஏனைய இரண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.

மெதுவாக பணி செய்யும் போராட்டம்
பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய இ.தொ.கா. 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக தோட்டங்களில் மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தொழிலாளர்களைக் கேட்டிருந்தது. அதாவது தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். அங்கு இரண்டு மூன்று கிலோ கொழுந்தை காலையிலிருந்து மாலை வரை பறிக்க வேண்டும், அவ்வாறு காலையிலிருந்து மாலை வரை மலையில் 8 மணி நேரம் இருந்து விட்டால் தோட்ட நிர்வாகம் “பெயர்” போட வேண்டும். எட்டு மணித்தியாலம் வேலை செய்த ஒருவருக்கு சட்டப்படி “பெயர்” மறுக்க முடியாது. இவ்வாறு தினசரி செய்யும் போது, தோட்டங்கள் நட்டத்தை எதிர்நோக்கும். எனவே, சம்பள உயர்வை வழங்க கம்பனிகள் இறங்கி வந்து விடும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

ஆனால், இ.தொ.கா. அண்மைக் காலமாக அமைச்சு அதிகாரத்தில் இல்லாதுள்ளது. எனவே, கம்பனிகள் எதற்கும் அஞ்சாமல் தோட்டங்களில் வேலை வழங்க மறுத்து, தோட்ட உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளன. தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சிறுவர் காப்பகங்களில் குழந்தைகளை விட முடியவில்லை. பறிக்கும் கொழுந்தை ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இருந்தாலும் செலுத்துவதற்கு சாரதிகள் இல்லை. தொழிலாளர்கள் பறித்த கொழுந்துகள் வீணே கொழுந்து மடுவத்தில் கொட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தோட்டங்களுக்கு நட்டமும் தொழிலாளர்களுக்கு கஷ்டமும் ஏற்பட்டுள்ளன. ஒரு வார காலமாக மெதுவாக வேலை செய்யும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுவந்தது..

இது இவ்வாறு இருக்க, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று அமைப்புகளில் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இம் மாதம் 7 ஆந் திகதி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து கொழும்பில் கலந்துரையாடியுள்ளது. வழமையாக ஏனைய தொழிற்சங்கங்களின் அபிப்பிராயம் பெறப்படுவதில்லை. இருந்தும் இம்முறை இ.தே.தோ.தொ. சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் ஏனைய தொழிற்சங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை இ.தொ.கா. வின் மீது அவர் கொண்டுள்ள அதிருப்தியை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.. கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னரே ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுப்பதாக இ.தொ.கா தெரிவித்திருந்த போது, அவ்வாறு பெற்றுக் கொடுத்தால் மலர் தூவி வரவேற்போம் என்று வேலாயுதம் குறிப்பிட்டிருந்தார். இன்றும் கூட ஆயிரம் ரூபா கிடைப்பது சாத்தியமில்லை என்ற தோரணையிலேயே அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இருந்தும் ஆயிரம் ரூபாவை எப்படியும் பெற்றுக் கொடுக்கப் போவதாக இ.தொ.கா. சூளுரைத்து வருகின்றது.

நள்ளிரவிலும் நண்பகலிலும் சத்தியாக்கிரகங்கள்
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்காக மெதுவாகப் பணி செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இ.தொ.கா.வுக்கு வலு சேர்க்கவும் கம்பனிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் “தமிழ் முற்போக்கு கூட்டணி” சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை தலவாக்கொல்லையில் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு முதல் நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களோடு சிலர் அமர்ந்திருந்து அட்டன் மல்லியப்பூ சந்தியில் சத்தியாக்கிரகம் செய்துள்ளார்கள். ஆறுதலாக திட்டமிட்டுச் செய்திருந்தால் பகல் நேரத்தில் செய்திருக்கலாம். ஆனால், எதிரணியினருக்கு சாட்டை அடி கொடுக்கும் வகையில் அவர்களை முந்திக் கொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக திடீரென இரவு நேரத்தில் செய்து நாடகமாடியுள்ளதாக எதிரணியினர் கேலி செய்திருந்தமையும் இங்கு கவனிக்கத் தக்கது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த சத்தியாக்கிரகத்தில் அதன் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், உப தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணன் உட்பட இந்த அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் சுமார் 2000 தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள். இங்கு அவர்கள் பேசும் போது, ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும், அந்தத் தொகையை தவறாமல் இ.தொ.கா. பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடத்தப்பட்டு விரைவில் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படுமா அல்லது தேர்தல் முடியும் வரை இழுத்தடிக்கப்படுமா என்று மக்கள் குழம்பிப் போயிருந்தார்கள். தேர்தலுக்கு முன்னர் ஆயிரம் ரூபாவுக்குக் குறைந்த சம்பள உயர்வுக்கு இ.தொ.கா. இணங்கினால் அது எதிரணியினரின் பிரசாரத்துக்கு வழி சமைத்துக் கொடுத்து விடும். அதே நேரம் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டாலும் விமர்சனத்துக்கு ஆளாக நேர்ந்து விடும். அதேபோல், இ.தொ.கா. முன்வைத்துள்ள 1000 ரூபா கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதற்குக் குறைவான ஒரு தொகையை முன்வைத்தாலும் அது தேர்தல் காலத்தில் சங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இ.தொ.கா. வுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மக்களின் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போராட்டம் தேர்தல் கால காய் நகர்த்தலாகவே காணப்படுகின்றது. இதில் தொழிலாளர்கள் எத்தகைய பயனை அடையப் போகின்றார்கள் அதற்கு அரசியல்வாதிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் தேர்தல் முடிந்த பிறகுதான் சம்பள உயர்வு தொடர்பாக இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மயமாகிவிட்ட சம்பள விவகாரம்
தேர்தல் பிரசாரங்கள் மலையகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க இ.தொ.கா. தவறி விட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல், தொழிலாளர் தேசிய சங்கமும், மலையக மக்கள் முன்னணியும் சம்பள உயர்வுக்கு தடையாக செயற்பட்டதாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தேர்தல் பிரசாரத்தில் முக்கிய கருப்பொருளாக உள்ளதோடு, ஓகஸ்ட் மாதம் தோட்டத் தொழிலாளர்கள் குறைவான சம்பளத்தைப் பெற்று கஷ்டப்படப் போகின்றார்கள் என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்த நாட்களுக்கு உரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இ.தொ.கா. அறிவிக்க, அவ்வாறு கொடுக்க முடியாது என்று கம்பனிகள் கூறியுள்ளன.

தேர்தல் பிரசாரங்கள் இவ்வாறு இருக்க, நுவரெலியாவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முடிந்த பிறகு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாக ஜனாதிபதியாக இருந்த போது இந்த சம்பள உயர்வு பற்றி அலட்டிக் கொள்ளாத மகிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவிக்கு வந்த பிறகு தீர்த்து வைக்கப் போகின்றாரா என்று எதிரணி தொழிற்சங்கங்கள் கருத்து வெளியிட்டுள்ளதோடு, தொழிலாளர்களின் வீடமைப்புக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஆலோசனை முன்வைத்துவிட்டு எதையும் செய்யவில்லயே என்றும் சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளார்கள்.

மொத்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு அரசியல் மயமாகி தேர்தல் பிரசாரங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதில் யார் உண்மையிலேயே சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை தேர்தலுக்குப் பிறகு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மக்கள் ஏமாறுவார்களா அரசியல்வாதிகள் ஏமாற்றுவார்களா என்பதற்கு எதிர்காலம் பதில் கூறும்.

நன்றி - வீரகேசரி 02.08.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates