Headlines News :
முகப்பு » » பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் - ப.ஆறுமுகம்

பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் - ப.ஆறுமுகம்


2010.4.8ஆம் திகதி நடைபெற்ற நாட்டின் பொதுத் தேர்தல் முடிவு பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் சோகத்தை தந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன. பதுளை மாவட்ட அரசியல் வரலாற்றில் பாரிய ஏமாற்றமாக அமைந்து. ஆனால் 2015. 8.17ஆம் திகதி பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளமை பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும் முயற்சியினாலும், பொறுமையை காத்தும் நம்பிக்கையுடனும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கும் மலையக மண்ணிலிருந்து பாராளுமன்றம் செல்லும் சகல பிரதிநிதிகளும் சமூக மேம்பாட்டிற்காக உழைப்பதற்கும், மலையகத்தின் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்கள் என வரலாற்றில் தடம்பதிக்க மலையக மக்களது ஆசிர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் அவர்கள் பெற்றுள்ளதாக ஐயமின்றி குறிப்பிடலாம்.

பிரித்தானியர் இலங்கையை ஆண்டபோது இலங்கைக்கு கிடைத்த ஒரு பெருமைதான் பிரித்தானிய ஆசிய, ஆபிரிக்க குடியேற்ற நாடுகளில் முதன்முறையாக வாக்குரிமையை பெற்றுக்கொண்டமையும் நவீன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் தாய் நாடாக கொள்ளப்படும் பிரித்தானியாவில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில் வாக்குரிமையை 1931ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டமையும் ஆகும். இவ்வாறாக சர்வசன வாக்குரிமை வழங்கப்படுதலை எதிர்த்து டொனமூர் ஆணைக்குழுவினருடன் வாதாடியவர்கள் ஒரு பக்கமிருக்க இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாதெனவும் அவர்கள் பிரயாணப் பறவைகள் என்றும் இந்த நாட்டில் நிரந்தரமாக தங்குபவர்கள் அல்ல எனவும் வாதிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரும் வாக்குரிமையை பெற்றதுடன் 1931ஆம் ஆண்டு மற்றும் 1936ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசாங்க சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் தேர்தல்கள் கட்சி அடிப்படையிலோ, கொள்கை அடிப்படையிலோ அன்றி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி மற்றும் செய்த சேவைகளை பட்டியலிட்டோ காட்டி தேர்தலில் அபேட்சகர்கள் போட்டியிடவில்லை. அரசாங்க சபையில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சியடைக்கும் முறையும் நடைமுறையிலிருக்கவில்லை. உள் ளூர் மக்களது பிரதிநிதித்துவம் என்ற விடயமே காணப்பட்டது. 1931ஆம் ஆண்டு சர்வசன வாக்குரிமையை பயன்படுத்தியமை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளையில் இந்திய சமூகத்தை சேர்ந்தவருக்கு எதிராக கரைநாட்டு சிங்களவருக்கும், நுவரெலியாவில் இந்தியருக்கு எதிராக சிங்கள அபேட்சகருக்கும் பண்டாரவளையில் போட்டியிட்ட தோட்டத் துரைக்கு எதிராக சிங்களவருக்கும் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

அக்கால கட்டம் தனிப்பட்ட நபரை அடிப்படையாக கொள்ளப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்ற ஒரு காலமாகவே கருதப்படுகிறது. அரசியல் களத்தில் இன அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போக்கு மிகவும் பின்னர் வளர்ந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கவில்லை. எவ்வாறாயினும், 1947ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் திட்டம் அமுலுக்குவந்தது. 90 தேர்தல் தொகுதிகளிலிருந்து 95 தெரிவுப் பிரதிநிதிகளையும் 6 நியமனப் பிரதிநிதிகளையும் கொண்டதாக ஜனப்பிரதிநிதிகள் சபை அமைந்தது. இந்திய வம்சாவளியினர் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர் பதுளை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் பிரதிநிதிகள் தெரிவானார்கள். எஸ்.எம். சுப்பையா பதுளை தேர்தல் தொகுதியிலிருந்து 27,121 வாக்குகளையும் டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா தலைமையில் இயங்கிய போல்ஸ்வீக்லெனிய கட்சியின் அபேட்சகர் ஜே.சி.டீ கொத்தலாவல 16,654 வாக்குகளையும் பெற்று பதுளை தேர்தல் தொகுதியின் இரண்டாவது அங்கத்தவராக தெரிவாக முடிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர் தோல்வியை தழுவினார். அக்கால கட்டத்தில் பதுளை மாவட்டத்தில் 4 தேர்தல் தொகுதிகள் மாத்திரமே இருந்தன. அவையாவன பதுளை (இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி), பண்டாரவளை, ஹப்புத்தளை, வெலிமடை ஆகியனவாகும். பதுளை மாவட்ட அங்கத்தினர் தொகை 5ஆகும். பண்டாரவளை தேர்தல் தொகுதியிலிருந்து கே.வீ.நடராஜா சுயேச்சை அபேட்சகராக போட்டியிட்டு 5092 வாக்குகளை பெற்று ஜனப்பிரதிநிதிகள் சபைக்கு தெரிவானார். எஸ்.எம். சுப்பையா இலங்கை – இந்திய தொழிலாளர் காங்கிர ஸின் அபேட்சகராவார். பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 4 தேர்தல் தொகுதிகளில் தேர்தல் தொகுதிகளில் 2 தமிழர்கள் தெரிவானார்கள்.

1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம்திகதி இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் 1952ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து எவரும் ஜனப்பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லாது போனமை யாவரும் அறிந்ததே. 1960லிருந்து 1997ஆம் ஆண்டு வரை நியமன அங்கத்துவம் தான் ஒரே ஒரு பிரதிநிதித்துவமாகும். 1952 முதல் 1960ஆம் ஆண்டு வரை அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 1960 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை சௌமியமூர்த்தி தொண்டமானும் 1965 முதல் 1970 ஆம் ஆண்டு வரை மீண்டும் தொண்டமானும் ஏ அண்ணாமலையும் 1970 ஆம் ஆண்டு முதல் ஏ.அசிஸும் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆர் ஜேசுதாஸன் செனட் உறுப்பினாரக நியமிக்கப்பட்டார். சோல்பரி அசியல் திட்டம் பிரதம மந்திரியின் பரிந்துரையில் மகாதேசாதிபதியால் வழங்கப்பட்ட இந்நியமனத்தைப் பெறுபவர்களது முதலாவது பொறுப்பு தன்னை நியமித்தவருக்கு செல்லப் பிள்ளையாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவானவராகவும் இருத்தலாகும். இந்திய வம்சாவளி நியமன அங்கத்தினர்கள் எந்தவொரு நியமனப் பிரதிநிதியும் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் பெறவில்லை. 1970ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்ப ட்ட அரசாங்கத்தில் நியமன உறுப்பினர் செல்லையா குமாரசூரியருக்கு தபால், தந்தி அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற தொண்டமான் சிறிது காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றமையே சுதந்திர இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர் ஒரு வர் பெற்ற முதல் வாய்ப்பாகும்.

பதுளை மாவட்ட தமிழ் மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1977ஆம் ஆண்டிற்குப் பிறகு 1983இல் அடுத்த பாராளு மன்ற தேர்தல் நடத்தப்படாமல் மேலும் அதன் ஆயுட் காலத்தை ஆறு வருடங்களுக்கு நீடிக் கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின் 1989ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் பதுளை மாவட்ட ஜக்கிய தேசியக் கட்சி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக சென்னன் போட்டியிட்டாலும் போதிய விருப்பு வாக்கின்மையால் தெரிவாகவில்லை. ஆயினும், ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவிற்கு எதிராக குற்றப்பிரேரணை தாக்கல் செய்த விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக புதியவர்கள் நியமிக்கப்பட்ட போது வீ. சென்னன் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை பெற்றார்.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட சென்னன் 41,683 விருப்பு வாக்குகளை பெற்று பதுளை மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை வழங்கினார். ஆறு வருட முடிவில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு முழு பதுளை மாவட்டத்திலும் 12,092 வாக்குகளை மாத்திரம் அதாவது அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 3.35 சதவீதத்தை மாத்திரமே பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் ஆசனம் ஒன்றை பெறுவதற்கான தகுதிகாண் வாக்கான 5 சதவீதமேனும் பெறப்படவில்லை என்பதுடன் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் பல்வேறு அமைப்புகளை இணைத்து மயில் சின்னத்தில் போட்டியிட்டு பெறப்பட்ட 19,224 (6.12வீதம்) வாக்குகள் ஓராண்டு முடிவதற்குள் வீழ்ச்சி கண்டது.

2000 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொதுஐன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இரண்டாண்டுக்கு குறைவான காலப்பகுதியில் பதவியிலிருந்து இறக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 40,753 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற கே.வேலாயுதம் பதுளை மாவட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கினார்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவு பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முருகன் சச்சிதானந்தனும் வடிவேல் சுரேஷும் வெற்றிபெற்றதுடன் சிறிது காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பிரதி அமைச்சர்களாக பொறுப்பேற்றமை பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த ஓர் உயரிய வாய்ப்பாக கருதப்பட்டது.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் பதுளை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகளை கூற வாய்ப்புகிடைத்தது. பதுளை மாவட்டத்தில் பிரதான தமிழ் வேட்பாளர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் களம் இறங்கிய பிரதி அமைச்சர்களான எம். சச்சிதானந்தன், வடிவேல் சுரேஷ் ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் கே.வேலாயுதமும், மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட அ.அரவிந்தகுமாரும், மக்கள் விடுதலை முன்னணியில் ஊவா மாகாண சபை உறுப்பினரான பொ.பூமிநாதனும் வெற்றிபெற முடியாது போயிற்று. நுவரெலிய மாவட்ட தேர்தல் முடிவுகள் இந்திய வம்சாவளி மக்களுக்கு அதிகளவிலான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுத்தது. மறு பக்கமாக பதுளை தமிழ் பிரதிநிதித்துவம் பெரும் ஏமாற்றத்தை தந்தது. மக்கள் போட்டியிட்ட அபேட்சகர்களுக்கு நல்லதோர் பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் அவர்களிடையே காணப்பட்ட ஐக்கியமின்மையே தோல்விக்கு காரணம் என்றும் தமிழ் மக்களுக்கு எதிர்பார்த்த சேவைகளை அவர்கள் செய்யவில்லை என்றும் பெரும்பான்மை இன பிரதிநிதிகள் மூலம் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது இலகுவானது என வாதிட்டனர். மறுபக்கமாக போட்டியிட்ட வேட்பாளர்கள் மக்கள் மீது குற்றஞ்சுமத்தினர். தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்காமை சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களது நிலைப்பாடாக இருந்தது.

2010 தேர்தலுக்குப் பின்னரான மக்கள் சந்திப்பு

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பவர் பவுண்டேஷன் எனும் அரச சார்பற்ற நிறுவனம் பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமைக்கு யார் காரணம்? என்ன காரணம்? இதன் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கப் போகின்றது.? பதுளை மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவம் தேவையா? அவ்வாறாயின் எதிர்காலத்தில் அதனை எவ்வாறு நிலைநிறுத்துவது என்ற பல்வேறு வினாக்கள் முன்வைக்கப்பட்டு கருத்து மோதலுக்கு இடம் வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் ஒரு பக்கமாக அமரச் செய்து மறுபக்கமாக பதுளையில் செயற்படும் பல்வேறு பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்க பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகள் மறுபக்கமாக அமரச்செய்யப்பட்டனர். இக்கட்டுரையாளர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் அரசியல் கருத்துக்களம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிகரானதாகவும் மிகவும் வினைத்திறனானதாகவும் அமைந்ததாக குறிப்பிடப்பட்டது. மக்கள் எந்தளவிற்கு பிரயோக அரசியல் அறிவுடையோராய் விழிப்பாகவும் இருக்கின்றனர் என்பதை அறிய முடிந்தது. 1931ஆம் ஆண்டு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட போது சாதாரண மக்கள் அவற்றை சரியாக பிரயோகிக்கும் தகைமையை எந்தளவிற்கு கொண்டுள்ளனர் என்ற வாதம் அப்போது முன்வைக்கப்பட்ட போது டொனமூர் ஆணைக்குழுவினர் அளித்த பதில் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. வாக்குரிமையை பயன்படுத்த பெரியதோர் கல்வித் தகைமை அவசியமில்லை என்றும் படிக்காத பாமர மக்களுக்கு உள்ள பொது அறிவு, சமூக அனுபவம் போதுமானதென வாதிட்டனர்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் புத்திஜீவிகளது கலந்துரையாடல் ஒன்று ஒர் அரச சார்பற்ற நிறுவனத்தால் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கலந்துரையாடலில் எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிக்கப்படாமை அல்லது அழைக்கப்படாமை ஒரு முக்கிய அம்சமாகும். இந்த கலந்துரையாடலின் அடிப்படையாக பின்வரும் வினாக்கள் முன்வைக்கப்பட்டன. 1. பதுளை மாவட்டத்திற்கு பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் அவசியமா? 2. பெரும்பான்மை இன பாராளுமன்ற பிரதிநிதிகளை ஆதரித்து அவர்கள் மூலம் அரசாங்கம் ஒன்றிடமிருந்து மக்கள் பெறவேண்டிய சேவைகளை பெரும்பான்மை இன மக்களுக்கு சமமான வகையில் பெற்றுக்கொள்வது சாத்தியமா? 3.பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் அவசியமெனின் பாராளுமன்றத்தில் கிடைப்பதற்கு அதற்காக சிவில் சமூகமொன்றின் பங்களிப்பு யாது ?

4.தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தந்திரோபாயங்கள் யாவை? 5.பாராளுமன்றத்தில் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளது வகிபாகம் யாது? 6 அவர்கள் சமூக நலன்களை புறக்கணித்து செயற்பட்டால் அவர்களை சரியாக வழிநடத்த எத்தகைய இயந்திரமொன்று அவசியம் என்பதாகும்.

இந்த தொடர் கலந்துரையாடல்கள் மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தன. பங்குபற்றியவர்கள் சுதந்திரமாகவும் பக்கச்சார்பற்ற வகையிலும் நிலைமை பகுப்பாய்வில் ஈடுபட்டனர். மக்கள் பிரதிநிதிகளாக கடந்தகாலத்தில் பணியாற்றியவர்களும் எதிர்காலத்தில் சேவையாற்ற ஆர்வங்கொண்டோரும் இங்கு பேசப்பட்ட விடயங்கள், முன்வைக்கப்பட்ட தரவுகள், ஆலோசனைகள், கருத்துகள் என்பனவற்றை ஏதோவொரு வழியில் தெரிந்து கொண்டனர். அங்கு கூறப்பட்டவற்றை உள்வாங்கி கொண்டமை அந்த கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலம் பதுளை மாவட்ட தமிழ் அரசியல் சமூகம் தன்னை மீள சுதாரித்துக் கொள்ள வேண்டிய காலமாக அமைந்தது. 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தலிலில் பதுளை மாவட்டம் ஏற்படுத்திய மாற்றம் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி கே. வேலாயுதம் ஐக்கிய தேசிய கட்சி 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பதுளை மாவட்ட பட்டியலில் பாராளுமன்ற ஆசனம் பெற அடுத்த நிலையில் இருந்தவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பயன் காலதாமதமாகியேனும் பதுளை வாழ் தமிழ் மக்களுக்கு கிடைத்தது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து முதற்றடவையாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்று தமிழ் பிரதிநிதிகள் இருவர் தெரி வாகியுள்ளனர் ஏ. அரவிந்தகுமார் 53,741 வாக்குகளையும், வடிவேல் சுரேஷ் 52,378 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர். மூத்த தொழிற்சங்கவாதியும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இரண்டு தடவைகள் இலங்கை பாராளுமன்ற பிரதிநிதியாக பணியாற்றிய கே.வேலாயுதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. வேலாயுதம் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டிருப்பின் பதுளை மாவட்ட தமிழ் மக்களுக்கு அது இரட்டிப்பு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும்.

பதுளை மாவட்டம் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் 2015 பொதுத் தேர்தல் ஒர் ஒப்பீடு

2010ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து, 2015ஆம் ஆண்டு பிரதான தமிழ் வேட்பாளர்கள் வெவ்வேறு பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டது போன்ற நிலை இருக்கவில்லை. 2010ஆம் ஆண்டு தேர்த லில் ஒரு மும்முனைப் போட்டி நிகழ்ந்தது. ஜக்கிய தேசிய கட்சியில் மு.சச்சிதானந்தனும் கே. வேலாயுதமும் போட்டியிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அக்கட்சியின் நேரடி வேட்பாளர் வடிவேல் சுரேஷும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மலையக மக்கள் முன்னணி வேட்பாளராக அ.அரவிந்தகுமார் போட்டியிட்டார். மும்முனைப் போடடி மாத்திரமல்ல. கட்சிகளுக்கிடையிலான போட்டி மட்டுமல்ல கட்சிக்குள்ளும் போட்டி கடுமையாக இருந்தது. அரசியல் சிந்தனையாளர் தோமஸ் ஹொப்ஸ் இயற்கை சமூகத்தில், அர சற்ற நிலையில் மனிதன் வாழ்ந்த போது ஒருவனுக்கு ஒருவன் எதிரி: மனிதன் சுயநலமிக்கவனாகவும் குறுகிய ஆயுட்காலம் கொண்ட வனாயும் கொண்டவனாயும் இருந்தான் என்று கூறி யுள்ளார். முன்னெப்போதும் இல்லாதவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் ஆறு ஆசனங்களை பெற்றபோதும் சிறுபான்மை சமூகத்தவர் எவரும் தெரிவாகவில்லை. ஐக்கிய தேசிய கட்சி தமிழ் வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் னர் பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்காமை பற்றி பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களைப் போல் பதுளை மாவட்ட வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் ஒரு செயன்முறைக்கு வரவில்லை. வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகளில் பிரிந்து போட்டியிட்டு வாக்குகள் பிரிந்து போயின. ஒரே கட்சியில் போட்டியிட்டவர்கள் தம்மிடையே மோதிக்கொண்டனர். பெரும்பான்மை சகபாடிகளுக்கு மற்றய விருப்பு வாக்குகளை வழங்கும்படி பிரசாரம் செய்தனர். தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினர் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்கு மாத்திரம் தமது வாக்கை வழங்கினர். இதில் உண்மை இருந்திருக்கலாம். ஆனால், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மேற்கூறிய நிலை அந்தளவிற்கு உக்கிரமானதாக அமையவில்லை. வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளர்களின் ஐக்கியம், தேசிய பட்டியல் மூலம் கே.வேலாயுதத்திற்கு ஆசனம் வழங்க முன்வந்தமை சிறுபான்மை மக்களையும் இணைத்து செயற்படும் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமைத்துவம் பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித் துவத்திற்கு சாதாகமான சூழ்நிலையை ஏற் படுத்தியது. இந்த ஆரோக்கியமான சூழ்நிலை யை தக்கவைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட வர்கள் யாவரதும் பொறுப்பாகும்.

அரசியல் திட்டத்திற்கான 19ஆவது திருத்தத்திற்குப் பிறகான பாராளுமன்றம் முன்பிருந்த பாராளுமன்றத்தை விட பலம் வாய்ந்த பாராளுமன்றம். பிரதம மந்திரி சபையும் பலம் வாய்ந்தது. கடந்தகாலத்தில் காணப்பட்டது போல ஜனாதிபதியால் ஆட்டிப்படைக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரை, அவ்வுறுப்புரையின் (1) ஆம் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :

(1) ஜனாதிபதி, பிரகடனத்தின் மூலம், பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம், அம ர்வு நிறுத்தலாம், அத்துடன் கலைக்கலாம்:

ஆயினும், ஜனாதிபதி, பாராளுமன்றம் அதன் முதல் கூட்டத்துக்காக நியமித்த தேதி யிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்க ளுக்குக் குறையாத ஒரு காலப்பகுதி முடி வுறும் வரை, பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையின் (சமுகமளிக்காதோர் உட் பட) மூன்றிலிரண்டுக்குக் குறையாத உறு ப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானமொன்றினால் அங்ஙனம் செய்யுமாறு பாராளுமன்றம் ஜனா திபதியை வேண்டினாலொழிய அதனைக் கலைத்தலாகாது. ஓன்பது சுதந்திரமான, பாராளுமன்றத்திற்கு மட்டும் பொறுப்புச் சொல்லக்கூடிய சுதந்திர ஆணைக்குழுக்கள் செயற்பட உள்ளன. அரசியலமைப்பு பேரவை என்ற பலமிக்க அமைப்பு செயற்படவுள்ளது. அதற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள் ளது. அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை யினர் பாராளுமன்ற உறுப்பினர்களவார். அதில் எமது பதுளை மாவட்ட பிரதிநிதிகள் இடம் பெறும் வாய்ப்பை பெறல் வேண்டும்.

19ஆவது திருத்தம் மந்திரி சபையின் அந்தஸ்தை அதிகரித்துள்ளது. ஜனாதிபதியால் கையாளப்பட்ட மந்திரி சபை பிரதமரால் வழிநடத்தப்படும் மந்திரி சபையாகியுள்ளது. பல்வேறு அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கொண்ட நாட்டின் உயர் அரச நிறுவனமான இலங்கை ஜனநாயக குடியரசு அரசியல் திட்டத்தின் கீழான பாராளுமன்றத்திற்கு செல் லும் பதுளை மாவட்ட பிரதிநிதிகளால் கடந்த கால இடைவெளி நிரப்பப்படும் வகையிலான சேவைகள் நடைபெறவேண்டும். வருமானம் குறைந்தவர்களை அதிகளவில் கொண்ட மாகாணத்தின் ஒரு பகுதியாகவுள்ள பதுளை மாவட்ட மக்களது எதிர்பார்க்கைகளை இய லுமான வரையில் நிறைவேற்றுவர் என்ற உயரிய நம்பிக்கை பதுளை வாழ் மக்களிடம் நிறைந்தே காணப்படுகிறது.

பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் என்ற இலக்கை அடைந்த மக்களுக்கான இலக்குகள் இனங்காணப்பட்டு அவற்றை அவர்கள் அடைய பிரதிநிதித்துவம் பெற்ற வர்கள் சேவையாற்ற வேண்டும். அவர்கள் தமது சேவைகளை தனித்து தமிழ் மக்களுக்கு மாத்திரம் செய்யவேண்டுமென்ற குறுகிய அரசியல் சிந்தனையில் செயற்படுவது பொரு த்தமானதா என சீர்தூக்கிப் பார்த்தல் வேண் டும். ஏனைய சமூகத்தவர்களது ஆதரவையும் பெற்றுக்கொள்ளவும் அவர்களது பிரதிநிதி களது ஒத்துழைப்புடனும் மற்றய சிறுபான்மை மக்களது பிரச்சினையிலும் பங்குகொள்ளும் பிரதிநிதிகளாக செயற்படுவதே நாகரிகமான அரசியலின் அடையாளமாகும். பதுளை மாவ ட்டம் இந்த நாட்டில் நல்லாட்சிக்கு ஆரம்ப படியை எடுத்துக் கொடுத்த மாவட்டமாக அமைந்தது போல் இன ஒற்றுமைக்கும் இணக் கப்பாடான அரசியலுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக அமைதல் வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates