இந்நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள் மத்தியில் தொடர்ந்தும் ஐக்கியமின்மையை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் பேரினவாத, பாசிச, நவ பழமைவாதத்தை தோற்கடித்து தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாத அரசியல் பொறுப்பாகும். அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும், கடந்த காலத்தில் தொழிலாளர்களை விவசாயிகளை தேசிய இனங்களை ஒடுக்கிய வரலாற்றைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னணியை தோற்கடிக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் அவர்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. இக்கோரிக்கையானது ஐ.தே.கட்சிக்கு சாதகமானதாக இருக்கின்ற போதும் இது எவ்வகையிலும் அக்கட்சியின் நல்லாட்சிக்கான நட்சான்றிதழாக கொள்ளப்படக்கூடாது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழுவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பெருந்தோட்டத்துறையை பல்தேசிய கம்பெனிகள் கட்டுப்படுத்தினாலும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் தொழிற்சங்கங்களின் அக்கறையின்மையின் காரணமாகவும் நவதாராளவாத காலத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் நவீன அடிமைகளாகப்பட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது வர்க்க, இன அடக்குமுறைகளை நீக்ககூடிய சூழலை ஏற்படுத்தும் நிலையில் அவர்களினது அரசியல் நகர்த்தப்பட வேண்டும்.
பேரினவாத, பாசிச, நவ பழைமைவாத சக்திகளின் தலைமையிலான முன்னாள்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனவாரி மாதம் 08ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவரை தோற்கடிக்க அரசியல் தலைமையை ஏற்றுக் கொண்ட ஐ.தே.கட்சி நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள் மீது நவதாராளவாதக் கொள்கையை திணிக்கும் என்பது குறித்து சந்தேகம் கொள்ள தேவையில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தையும், அவரது கொள்கை நடைமுறைக்கு மாற்றாக நவதாராள பொருளாதார கொள்கைக்கேற்ற நவதாராள அரசியல் சூழ்நிலை ஏற்படுமானால் தொழிலாளர்கள், விவசாயிகள், அடக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய இடைவெளியியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
தொழிலாளர்கள், விவசாயிகள், அடக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு நம்பிக்கை அளிக்ககூடியவாறு சரியான வேலைத்திட்டத்துடன் இடதுசாரி கட்சியொன்றையோ கட்சிகளையோ பாராளுமன்ற தேர்தல் களத்திலோ அதற்கு வெளியிலோ காண முடியவில்லை. அந்த அளவுக்கு இடதுசாரி இயக்கம் சீரழிந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆளும் வர்க்கம் இரண்டாக பிரிந்திருந்தாலும் பலமாக இருக்கின்றது. மஹிந்த தலைமையிலான பேரினவாத, பாசிச, நவபழைமைவாத சக்திகள் ஒருபுறமும், ரணில் தலைமையிலான நவதாராளவாத சக்திகள் இன்னொரு புறமாகவும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்டு நிற்கின்றன. இரண்டையும் தோற்கடிக்க வேண்டியது இந்நாட்டின் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களினதும் அடிப்படை அரசியல் கடமையாகும். ஆனால் அது நீண்டகால சவாலாக இருக்கின்றது. அந்த நீண்டகால சவால்களுக்கு முகம் கொடுக்க ஜனநாயக இடைவெளிகள் இருப்பது சாதகமானதாகும். அவ்விடைவெளியை கூட மறுக்கின்ற மஹிந்த ராஜபக்சவின் முன்னணியை மீள அரசியல் அரங்கிற்குள் அனுமதிப்பது பேராபத்தாகும். அம்முன்னணியை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்காவிட்டால் அது அழிவு நிறைந்த எதிர்கால இலங்கையை காண்பதற்கு நாம் திடசங்கற்பம் கொள்வதாகவே அமையும்.
மஹிந்தவின் முன்னணியை தோற்கடிக்கும் அரசியல் தகுதி நவதாராளவாதத்தை அடிப்படையாக கொண்ட ஐ.தே.கட்சிக்கு இல்லையெனினும் நல்லாட்சி, மனித உரிமை, ஜனநாயகம் போன்ற நவதாராள ஜனநாயக அம்சங்களை ஏற்றுக் கொண்டு மஹிந்தவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்க அது தலைமைதாங்கியது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் நவதாராளவாதத்தை முற்றாகவே ஏற்றுக் கொண்டுள்ளதெனினும் மஹிந்தவின் பேரினவாத, பாசிச, நவபழைமைவாதத்தினால் மேலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசத்தை கவனத்தில் எடுத்தால் மஹிந்த அணி தோற்கடிக்கப்பட வேண்டியதென்பது மிகவும் தெளிவாகும்.
மக்கள் தொழிலாளர் சங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...