Headlines News :
முகப்பு » , » சாரல் நாடன் - அஞ்சலி குறிப்பு - மல்லியப்புசந்தி திலகர்

சாரல் நாடன் - அஞ்சலி குறிப்பு - மல்லியப்புசந்தி திலகர்


வணக்கம்
தடுக்கிடும் சேலையென்று 
தகுவதாய் மடித்துக்கட்டி
படங்கினை இடையில் சுற்றி
படர்தலை முக்காடிட்டு 
அடைமழை தவிர்க்க வேண்டி
அணிசேர் கம்பளியை
அடுக்கியே மலையிலேறும்
அஞ்சுக பாவாய் கேள்
என கொழுந்தெடுக்கும் மலையகப் பெண்ணுக்கு சேதி சொல்லும் இந்த கவிதையின் பகுதி, 1965 ஆம் ஆண்டு வெளிவந்த 'குறிஞ்சிப்பூ கவிதைகள்' எனும் மலையகக் கவிதைகள் அடங்கிய தொகுப்பில் அடங்கியுள்ளது.  மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் மலையக மக்கள் மீது பற்றுகொண்ட பிற பிரதெசத்தை சேர்ந்த கவிஞர்களுமாக 49 கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியதாக கவிஞர் ஈழகுமார் தொகுத்தளித்திருக்கும் 'குறிஞ்சிப்பூ' தொகதியில் அந்த 49 ல் ஒருவராக 'சாரல்நாடன்' அவர்கள் எழுதியிருக்கும் கவிதையின் பகுதியே அது. ஆனால் பின்னாளில் கவிதை யாத்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமே இல்லை என்பதைப் போல முழுமையாக தன்னை ஆய்வு இலக்கியக்காரராக அடையாளப்படுத்தியவர் சாரல்நாடன்.

இவரது இழப்பு நிகழ்ந்து ஒரு மாதம் நிறைவுறாத நிலையில் 'கொழும்புத் தமிழ்ச்சங்கம்' நடாத்தும் நினைவுப்பரவல் நிகழ்வில் எனக்கும் உரையாற்றக் கிடைத்த வாய்ப்புக்காக ஏற்பாட்டாளர்களுக்கு ஆரம்பத்திலேயே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஏனெனில் என்னோடு இன்று உரையாற்றும் இரண்டு ஆளுமைகளான திரு.எம்.வாமதேவன், திரு. அந்தனிஜீவா ஆகிய இருவரும் என்னுடைய நேரடி முன்னைய தலைமுறையினர். அவர்கள் இருவரும் அமரர் சாரல் நாடனின் நண்பர்கள். திரு. வாமதேவன் ஹைலன்ஸ் கல்லூரியில் அவரது காலத்தில் கல்விகற்ற நண்பர். இர.சிவலிங்கம் எனும் சிந்தனை சிற்பியின் மாணவர்கள். அந்தனிஜீவா அவர்கள் சாரல் அவர்களின் மிக நெருங்கிய இலக்கிய நண்பர். இலக்கிய உலகில் அதிகமான ஆய்வுகளையும் குறைவான நண்பர்களையும் கொண்டிருந்த சாரல்நாடன் அவர்கள் சில வருடங்கள் இலக்கிய பரப்பில் இருந்து ஒதுங்கியிருந்த சாரல்நாடன் அவர்களை மீண்டும் இலக்கியபரப்பிற்குள் இழுத்து வந்தவர் அந்தனி ஜீவா.

'அந்தனிஜீவாவின் தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால் இம்முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பது அபூர்வமே. என்னில் ஓர் இயந்திரச் சிந்தனையை அவர் எற்படுத்தி வரகின்றார்' என தனது முதலாவது நூலான 'சிவி சில சிந்தனைகள்' நூலுக்கு எழுதிய முன்னுரையிலே 'சாரல்நாடன்' அவர்களே குறிப்பிடும் அளவுக்கு அவரது நெருக்கமான நண்பர் அந்தனிஜீவா.
எனவே இந்த இரண்டு ஆளுமைகளுடன் இணைந்த ஒரு மேடையில் அடுத்த தலைமுறையினான நான் சாரல்நாடன் குறித்த நினைவுப்பகிர்வது என்பது  சவாலான பணிதான். ஆனாலும், நானும் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் என்ற வகையில் எனக்கும் சாரலுக்கும் ஏதொ ஒரு உறவு பிணைப்பு ஏற்பட்டு விடுகின்றது. அவர் 1963 ஆம் ஆண்டு ஹைலன்ஸ் கல்லூரியில் பயின்றார் என்றால், நான் 1993 ஆண்டு அங்கே உயர்தரம் படித்தேன். இது சரியாக 30 வருட இடைவெளி. ஒரு தலைமுறையின் இடைவெளி. அந்த காலத்தில் ஒரு விரிவுரையாற்றுவதற்காக 'திட்டமிடல் திணைக்களத்தில்' இருந்து வருகை தந்திருந்த திரு.எம்.வாமதெவன் அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம் என்னை இன்றுவரை அவருடன் நெருக்கமான ஒரு தோழமையை ஏற்படுத்தியிருக்கிறது. 

இத்தகைய தலைமுறை இடைவெளி கொண்ட சாரல் அவர்களுடன் எனக்கும் எனது பள்ளிக்கூட காலத்திலேயே தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன என இன்று எண்ணிப்பார்க்கும்பொது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. அந்த நினைவுகளை சுருக்கமாக பகிர்ந்துகொண்டு 'சாரல்நாடனின்' இலக்கிய பணி குறித்த எனது பார்வைக்கு வரலாம் என நினைக்கிறேன்.

1973 ஆண்டு பிறந்த நான் 1993 ஆண்டு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரத்தினை நிறைவு செய்து பல்கலைக்கழகம் வருவதற்கு முன்பு இரண்டு மொழி மூலங்களிலும்,  இலங்கையின் மலையகம் மற்றும் வடமாகாணம் எனும் இரண்டு பிரதேசங்களிலுமாக ஏழு பாடசாலைகளில் கல்வி கற்;ற சுவையான அனுபவங்களைக் கொண்டவன். இது பற்றி கடந்த வருடம் 'ஜீவநதி' இதழில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளேன். இந்த 'நாடோடி' வாழ்வில்   1989 ஆண்டு பூண்டுலோயா தமிழ்  மகா வித்தியாலத்திற்கு சென்று சேர்ந்திருந்த காலம். எங்கள் வகுப்பாசிரியரும் ஆங்கில ஆசிரியருமானவர் வே.விஸ்வநாதன். பூண்டுலோயா பாடசாலைக்கு அருகேயே அமைந்த 'குருநாதன் ஸ்டோர்ஸ்' அவரது வீடு. நல்ல மாணவனாக அவருடன் கொண்ட நெருக்கம் நாளடைவில் அவரது குடும்பத்தில் ஒருவனாகவே என்னை ஆக்கிவிட்டிருந்தது. 

ஒரு முறை ஆசிரியர் வே.விஸ்வநாதன் அவர்களது குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டுக்கு கூடவே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பூண்டுலோயா நகரில் இருந்து  சுமார் ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள டன்சினன் தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலை அருகே அமைந்திருந்த அந்த வீட்டுக்கு போனபோது அது 'பெரிய டீமேக்கர்' வீடு எனத் தெரியவந்தது. வட்டமான முகத்தோற்றத்துடன் புன்னகைத்து வரவேற்றவர் நல்லையா டீமேக்கர். தேயிலைத் தொழிற்சாலை உயர் அதிகாரிக்கு குயஉவழசல ழுககiஉநச எனும் ஆங்கில வழக்கு இருந்தபோதும் மலையக சூழலில் 'டீமேக்கர் ஐயா' தான் பிரபலம். அந்த வீட்டில் பலநூறு புத்தகங்களும் சில விருதுகளும்  அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கும், விருதுகளுக்கும் உரியவராக இருந்தவர் 'சாரல் நாடன்'.  நல்லையா டீமேக்கர்தான் 'சாரல் நாடன்' என புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கவில்லை. உண்மையைச் சொன்னால் 'விருது' வழங்கலின்போது வழங்கப்படும் அந்த 'நினைவுச்சிற்பம்' மாதிரியான ஒன்றை நான் முதன்முதலாக தொட்டுப்;பார்த்தது சாரல்நாடன் அவர்களுது இல்லத்தில்தான். என் நினைவு சரியெனில் அது தேசபக்தன் நடேசய்யர் நூலுக்காக வழங்க்கபட்ட தேசிய சாகித்திய விருதாக இருக்கக்கூடம்.  அதுவரை பெயரளவில் கேள்விப்பட்டிருந்த சாரல்நாடன் எனும் பெயருக்குரியவர் அன்று முதல் 'அங்கிள்' ஆக அறிமுகமானார். அவரது மகன் ஸ்ரீ (குமார்), மகள் ஜீவா (ஜீவகுமாரி) எனது நண்பர்கள் ஆனார்கள். மகன் குருதலாவையிலும், மகள் நுவரெலியாவிலும் கல்விகற்றார்கள்.

நான் பள்ளிநாட்களில் தமிழ்த்தினப் போட்டிகளில் கவிதை, பேச்சு, நாடகம் முதலான துறைகளில் பங்கபற்றுவதுண்டு. 1990களில் எங்களுக்கு விஞ்ஞான ஆசிரியராக இருந்த ஜி.முரளிதரன் பேராசிரயர் மௌனகுருவிடம் நாடகம் பயின்றவர். நான் கேள்விபட்டவரை அவரது 'மழை' எனும் நாடகத்தைத் தழுவியதாக 'விடியலைத் தேடும் விழிகள்' எனும் நாடகத்தை மாணவர்களாகிய எங்களை வைத்து இயக்கியிருந்தார் ஆசிரியர் முரளிதரன்.  நான் பிரதான பாத்திரமேற்று இருந்தேன். எங்கள் நாடகமே மத்திய மாகாணத்தில் முதலாவது பரிசுக்குத் தெரிவானது. 

அப்போது (1991) மத்திய அரசாங்கத்தில் இந்து கலாசார அமைச்சராகவிருந்த பி.பி.தேவராஜ் அவர்களின் தலைமையில் தேசிய சாகித்திய விழாவினை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தியிருந்தார்கள். அந்த விழாவில் எங்கள் நாடகத்தை மேடையேற்றினோம். எனக்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழும் கிடைத்தது. இந்த விழாவின்போது இரண்டு பெரியவர்கள்; மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதை அவதானித்திருக்கிறேன். அவர்களில் ஒருவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் 'சாரல்' அங்கிள். அவர் பூண்டடுலோயாகாரர் என்றவகையில் நாங்களும் பூண்டுலோயா பாடசாலை என்ற காரணத்தினால் நிகழ்ச்சிகள் பற்றி பங்குபற்றுதல் பற்றி ஆலோசனகைளை வழங்குவார். அன்றைய விழாவில் சாரல்நாடன் அவர்கள் ஆற்றிய உரைதான் பின்னாளில் 'மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்' என விரிவுபடுத்தபப்பட்ட ஆய்வு நூலாகியுள்ளதாக அறியகிடைக்டகின்றது. அன்று சாரல் அவர்களுடன்  கூடவே, மொத்தமான மூக்குக் கண்ணாடியுடன் தோளில் சோல்னா பையுடன் 'தம்பி நல்லா நடிக்கிறீங்க' என்னைத் தோளில் தட்டிப்பாராட்டியவர் மற்றைய பெரியவர். என் நினைவு சரியெனில் 23 வடுங்களுக்கு முன்பு என்னைத் தோளில் தட்டிப்பாராட்டியவர் எனக்கு முன் பேசிவிட்டு அமர்ந்திருக்கும் நமது 'அந்தனிஜீவா' அவர்கள்தான் அந்தப் பெரியவர். (அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு பலவிதத்தில் ஊக்குவிக்கும் அந்தனிஜீவா அவர்களுக்கு இந்த சந்தரப்பத்தில் எனது நன்றிகளைச் சொல்லிக்கொள்வது பொருத்தம் என நினைக்கிறேன்.)  அன்று பரபரப்பாக ஓடித்திரிந்த இவர்கள் எங்களுக்கு ஆச்சரியமூட்டும் ஆளுமைகள். இன்று வரலாற்றினை வாசிக்கும் போது இவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்களாக 'மலையக கலை இலக்கிய பேரவை' மற்றும் மலையக வெளியீட்டகம் ஆகியவற்றில் செயற்பட்ட காலமாக அது இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது. இவர்கள் இருவருடன் சு.முரளிதரன் இணைந்த மும்மூர்த்திகள் காலம் மலையகத்தில் வேறு யாரும் இலக்கியம் பற்றி மூச்சுகாட்ட முடியாது என்ற நிலையிலிருந்தது என்னவோ உண்மைதான்.

சாதாரண தரம் முடிவடைந்ததும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்துசேர்ந்து விட்டேன்;. உயர்தரத்தில் சாரல்நாடன் அவர்களின் மகள் ஜீவகுமாரி எங்களுடன் ஒன்றாகவே ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தர விஞ்ஞான பிரிவில்  கல்வி கற்றார். 'அங்கிள் எப்படி இருக்கிறார்...? என அடிக்கடி ஜீவாவிடம் விசாரித்துக்கொள்வேன். நான் தலைமுறைக் கடந்தவன் என்பதற்கு  ஜீவகுமாரியும் நானும் பள்ளித் தோழர்கள் என்பதுவும் சான்று.

பூண்டுலோயாவில் எங்கள் ஆசிரியராகவிருந்த திரு. விஸ்வநாதன் நிரந்தரமாக குடிபெயரந்து சுவீடன் நாட்டுக்கு சென்றுவிட்டார். எப்போதாவது இலங்கை வரும்போது என்னிடம் வருவார். அவரது பழைய நண்பர்களைச் சந்திக்கச் செல்வோம். அந்த நண்பர்கள் பட்டியலில் முக்கிய இடம்பிடித்தவர் சாரல்நாடன். எனவே, அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாமே சாரல்நாடன் அவர்களை இல்லத்தில் சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அப்போது இலக்கியவாதி என்ற நிலைக்கு வெளியே சாரல்நாடனாக அல்லாமல் 'நல்லையாவாக' அவர் பற்றிய சில பதிவுகளை எனக்குள் ஏற்படுத்தியவர் சாரல்நாடன். 

பின்னாளில் அவர் கொட்டகலை டிரேட்டன் தோட்டத்திற்கு மாற்றலாகி வந்திருந்ததடன் கொட்டகலையிலேயே தனதில்லத்தையும் அமைத்துக்கொண்டார். பல்கலைக்கழக புதுமுக வகுப்புகள் (ஆங்கிலம்) ஹைலன்ஸ் கல்லூரியில் மாலை வகுப்புக்களாக இடம்பெற்ற வேளையில் ஒரு செயற்றிட்ட அறிக்கையாக 'தேயிலைத் தொழிற்சாலையின் இயக்கம்' பற்றி எழுத நேர்ந்தது. அப்போது எனக்கு சாரல் அவர்களுடன் இருந்த தொடர்பின் அடிப்படையில் டிரேட்டன் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையில் பல்கலைக்கழக மாணவர்களான எங்களுக்கு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் முறை தொர்பாக 'டெமொன்ஸ்டிரேசன்' செய்தவரும் இவரே. அப்போது எழுத்தில் மட்டுமல்ல தான் சார்ந்த தொழிலிலும் அவருக்கு இருந்த நுணுக்கமான அறிவினை புரிநதுகொள்ள முடிந்தது. இன்றைய வாசிப்புகளின்போது அந்த தொழில்சார்ந்த பரீட்சைகளிலும் அவர் முதலாம் இடத்தில் தேர்வாகியுள்ளார் என்பதை அறியக்கிடைக்கின்றது.

முகாமைத்துவப் பட்டப்படிப்பின் பின்னர், இரண்டாயிரமாம் ஆண்டளவில் அதே கொழும்பு பல்கலைக்கழகத்தில் 'இதழியல் டிப்ளோமா கற்கை' நெறிக்காக வந்து சேர்ந்தேன். அப்போது நான் 'ஹட்டன் மல்லியப்பு சந்தியை' எனது தளமாகக் கொண்டிருந்தேன். ஒரு தனியார் கல்விநிறுவன நிர்வாகியாகவும், பொருளியல்துறை ஆசிரியராகவும் செயற்பட்டேன். அந்த நாட்களில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு திரு. வாமதேவன் அவர்களை 'பிரதம அதிதியாக' அழைத்திருந்தேன் என்பது நினைவக்கு வருகிறது. 

இதழியல் கல்வி விரிவுரையாளர்களாக வருகைதரும்  விரிவுரையாளர்கள் எங்களது ஊர் பெயர்களை விசாரிப்பார்கள். நான் ஹட்டன் என்றதும் 'சாரல் நாடனை' தெரியுமா? என அவரது சுகநலன்கைள விசாரித்து அறிந்தவர்கள் இருவர். ஒருவர் மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். மற்றையவர் நாடறிந்த விமர்சகர் எழுத்தாளர் அன்புக்குரிய கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள்.

டிமேக்கர் நல்லையாவாக மட்டுமே அல்லாமல் சாரல்நாடனாக நாடு முழுவதும் அயறிப்பட்ட ஆளுமையாக அவர் விளங்கியமைக்கு 'மலையக இலக்கியம்' குறித்த அவரது ஆய்வு இலக்கியமே முக்கிய பங்காற்றியிருந்தது. ஈழத்து இலக்கிய பரப்பில் 'மலையக இலக்கியம்' தொடர்பில் தனது ஆய்வு எழுத்துக்கள் மூலம் பரப்புரை செய்து முகவரி கொடுத்தவர் சாரல்நாடன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த கட்டத்தில் 'சாரலின்' படைப்புக்கள் குறித்த ஒரு பொதுப்பண்பினை வகைபடுத்தி அறிதல் பொருத்தமானது என நினைக்கிறேன். பொதுவாக இலக்கிய துறைக்குள் நுழையும் பலரும் புனைவு இலக்கியத்தினையே தெரிவு செய்கின்றனர். பலர் அப்படியே அதனைத் தொடர்ந்து செல்ல, சிலர் தம்மை ஏதேனும் ஒரு துறையில் 'ஆழமாக' ஈடுபடுத்திக்கொள்பவர்களாக தங்களை நிறுவிக்கொள்கின்றனர். அந்த வகையில் தன்னை ஒரு கவிஞனாகவும், சிறுகதையாளனாகவும் வெளிப்படுத்தி வந்த சாரல்நாடன் அவர்கள் 1980 களின் நடுப்பகுதியில் தன்னை ஆய்வு இலக்கியத்திற்குள் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

இதுவரை வெளிவந்த அவரது 14 நூல்களையும் ஒரு வகைப்படுத்தலுக்கு உள்ளாக்கினால்,

'மலைக்கொழுந்தி' சிறுகதைத் தொகுதி – 'பிணந்தின்னும் சாஸ்த்திரங்கள்' குறுநாவல் தொகுதி- 

இவையிரண்டையும் தவிர மற்றைய 12 நூல்களும் மலையக ஆய்வு இலக்கிய நூல்கள்.

சாரல்நாடன் அவர்களுக்கு இந்த ஆய்வு இலக்கிய ஈடுபாடு பாடசாலை நாட்களிலேயே இருந்து வந்துள்ளது என அவரது பள்ளிக்கால நண்பரும் எழுத்தாளருமாகிய மு.சிவலிங்கம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மாணவப்பருவத்தில் ஹைலன்ஸ் கல்லூரியின் நூலகப்பொறுப்பாளராகவும் சாரல்நாடன் அவர்களே இருந்ததாகவும் மு.சிவலிங்கம் குறிப்பிடுவார். இது அவரை பல அரிய நூல்களின் வாசிப்பாளராகவும், நூல் சேகரிப்பாளராகவும் புடம்போடச் செய்துள்ளது. அவ்வப்போது இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

மலையகத்தில் சி.வி வேலுப்பிள்ளை 'புதுமை இலக்கியம்' எனும் பத்திமூலம் ஆய்வு இலக்கியத்தை ஆரம்பித்துவைத்திருக்கிறார். தொடர்ச்சியாக பீ.மரியதாஸ், எம்.வாமதேவன், எம்.முத்துவேல், தெளிவத்தை ஜோசப், நூரலை மலைச்செல்வன், அந்தனிஜீவா, எல்.சாந்திகுமார், வ.செல்வராஜா, சு.முரளிதரன் என பலர் அந்த துறையில் நாட்டம் காட்டினாலும் சாரல்நாடன் அவர்களே முழுமையாக அந்தத்துறையை தனக்கான தனித்துவமான துறையாக தெரிவு செய்து கொண்டவாகின்றார். இன்று லெனின் மதிவானம், ஜே.சற்குருநாதன், நூலகர் மகேஸ்வரன், மல்லியப்புச்சந்தி திலகர், சு.தவச்செல்வன், சரவணகுமார், ஸ்டாலின் சிவஞானசோதி, நாவலப்பிட்டி லெட்சுமனன், நேரு.கருணாகரன் போன்றோர் இந்தப்பணியில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சாரல்நாடன் அவர்களின்  ஆய்வநூல்களை மூன்றாக வகைப்படுத்தலாம்
1. மலையக ஆளுமைகள் பற்றியது
2. மலையக கலை, இலக்கியம் பற்றியது
3. மலையக கலை இலக்கிய இயக்கங்கள் ஃ அமைப்புகள் பற்றியது.

மலையக ஆளுமைகள் என்று வரும்பொது, தேசபக்தன் கோ.நடேசய்யர் முதல் பல ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளையும் குறிப்புக்களையும் அவர் தனது ஆய்வு நூல்களிலேயே பதிவு செய்துள்ளார்.

தேசபக்தன் கோ.நடேசய்யர் - பத்திரிகையாளர் நடேசய்யர் 
என இரண்டு நூல்கள் கோ.நடேசய்யர் பற்றியது. இந்த இரண்டு நூல்களும் சாரல் நாடன் அவர்களுக்கு தேசிய சாகித்திய விருதினை பெற்றுக்கொடுத்துள்ளது. சி.வி சில சிந்தனைகள், சி.வி. வேலுப்பிள்ளை (இலங்கைத் தமிழச்சுடர் மணிகள் - குமரன் பதிப்பக தொடர் தொகுதியின் 18 வது நூல்) ஆகியன சி.வி வெலுப்பிள்ளை பற்றிய நூல்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் தேசபக்தன் கோ.நடேசய்யர் மற்றும் சி.வி.சில சிந்தனைகள் போன்ற நூல்களை  வாசித்த பின்பே அப்படியான ஆளுமைபற்றி அறிந்துகொண்டேன் என உறுதியாகச் சொல்வேன்.

சாரல் நாடன் அவர்களின் 'சி.வி.சில சிந்தனைகள்' சிறிய நூலாயினும் சி.வி. பற்றிய அறிமுகத்தை எங்களுக்கு தந்த நூல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சி.வி.மீது அதிக ஈடுபாடு கொண்டவராக சாரல் இருந்தார். குமரன் பதிப்பகம் இலங்கைத் தமிழச்சுடர் மணிகள் எனும் தொடராக வெளியிட்டு வரும் ஆளுமைகள் பற்றிய நூல்வரிசையில் சி.வி.வெலுப்பிள்ளை பற்றிய நூலினை எழுதும் பொறுப்பை சாரல் அவர்களுக்கே வழங்கியிருந்தது. அந்த நூல் இந்த (2014) வருடம் வெளியிடப்பட்டதோடு கடந்த மூன்று மாதங்களுக்குள் கொட்டகலையிலும் ஹட்டனிலுமாக இரண்டு அறிமுக நிகழ்வுகளையும் சாரல் முன்னின்று நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சி.வியின் நூற்றாண்டு என்ற வகையில் சி.விக்கு மிகப்பெருமளவிலான நூற்றாண்டு விழா ஒன்றினை எடுக்க வேண்டும் என அதிக ஆர்வத்துடன் நண்பர்களுடன் சாரல் அவர்கள் உரையாடியிருந்தார். 

சி.வி வேலுப்பிள்ளை மீது சாரல் அவர்கள் அதீத ஈடுபாடு காட்டுவதற்கு தொழிலாளர் தெசிய சங்கத்தின் மாதாந்த இதழான 'மாவலி' யில் சாரலில் நாடனின் படைப்புக்களை அதன் இணை ஆசிரியர்களாக இருந்த சி.வி அவர்களும் சக்தீ பால அய்யா அவர்களும் பிரசுரம் செய்துள்ளமை காரணமாக இருக்கலாம். ஆனாலும், சாரல் அவர்கள் எங்கேயும் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் 1970களின் பின்கூறுகளில் வந்த 'மாவலி' இதழ்களில் சாரல் நாடனின் கவிதைகளும் கட்டுரைகளும் இட்ம்பெற்றுள்ளன. இந்த கட்டத்தில் சி.வி. வேலுப்பிள்ளைப் பற்றிய ஆய்வுகளின்போது  'தொழிலாளர் தேசிய சங்கத்தை' மேற்கோள்காட்ட நேரிடும்; சந்தர்ப்பங்களில், பல இடங்களில் தே.தொ.கா என்றும் தொழிலாளர் தேசிய காங்கிரஸ் என்றும் குறிப்பிடுவதன் 'அரசியல்' என்னை ஆச்சரியப்படச் செய்வதுமுண்டு. ஒரு துறைபோன ஆய்வாளராக சாரல்நாடன் அவர்கள் தவறுதலாக இதனைச் செய்திருப்பதாக எண்ண முடியாதுள்ளது. ஐம்பதாவது வயதினை அடையயப்போகும் மலையகத்தில் பழம்பெரும் தொழிற்சங்கங்களில் ஒன்றினை பெயர் 'தொழிலாளர் தேசிய சங்கம்' (The National Union of Workers) என்று இருக்கும்; போது அதனை தொழிலாளர் தேசிய காங்கிரஸ், தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார் என்பது அவதானத்தைப்பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது.

சி.வி.வேலுப்பிள்ளையை பற்றி பேசும்போது – தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தவிர்ப்பதென்பது மின்குமிழ் பற்றி பேசும்போது மின்சாரத்தை தவிர்ப்பதற்கு ஒப்பானதாகிவிடும். இந்த சந்தர்ப்பத்தில் சாரல்நாடன் அவர்கள் 'பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின்' பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் என்பதும் நினைவு கூரத்தக்கது.

ஆளுமைகள் பற்றிய அவரது ஆய்வு படைப்பில் அடுத்த முக்கிய நூலாக அமைவது, 'இளைஞர் தளபதி இர.சிவலிங்;கம்' எனும் ஆய்வு நூல். தனது ஆசானாகத் திகழ்ந்தவர் என்றவகையிலும் 1960 களில் மலையகத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதாரமாகத் திகழ்ந்தவர் என்றவகையிலும் 'இர.சிவலிங்கம்' பற்றிய அவரது இந்த நூல் முக்கியத்துவமுடையது. இந்த நூலினை பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைவராக செயற்பட்ட கலத்தில் 'கொழும்புத் தமிழச் சங்கம்' பதிப்பிதுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆளுமைகள் பற்றிய அவரது நூல்களில் பலரும் அறியாத ஆளுமை பற்றிய நூல் 'இன்னொரு நூற்றாண்டுக்காய்' எனும் நூல். 1920 களில் இலங்கையில் வாழ்ந்த ஒரு தமிழ்ப்பெண்ணின் அரசியல், வாக்குரிமைச் சிந்தனைகள் பற்றிய ஆய்வுத்தேடலாக இந்த நூல் அமைந்துள்ளது. திருமதி நல்லம்மா சதயவாகீஸ்வரர் என்ற அந்த பெண்மணி பற்றிய நூலை 'பெண்கள் கல்வி ஆய்வகம்' 1999 ஆம் ஆண்டு வெளியீடு செய்துள்ளது. 

ஆளுமைகள் பற்றிய இன்னுமொரு நூல் 'பேரேட்டில் சில பக்கங்கள்'. 2004 ஆணடு சாரல் வெளியீட்டகத்தினூடாக வெளிவந்த இந்த நூல் மலையகத்துடன் தொடர்புடைய 57 ஆளுமைகள் பற்றிய ஒரு சுருக்க விவரணத்தைப் பதிவு செய்கிறது. இலங்கை தேயிலையின் தந்தை என போற்றப்படும் 'ஜேம்ஸ் டெயிலர்' முதல் வி.பி கணேசன் முதலான திரைப்படத்துறை ஆளுமைகள் வரை பலதுறைகளிலும் செயற்பாட்டாளர்களாக இருந்த ஆளுமைகள் பற்றிய குறிப்புகளை சாரல்நாடன் இந்த நூலிலே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக கலை இலக்கிய இயக்கங்கள் பற்றிய இவரது ஆய்வுகள், குறிப்பாக மலைநாட்ட எழுத்தாளர் மன்றம், மலையக கலை இலக்கிய பேரவை, துரைவி பதிப்பகம், சாரல் பதிப்பகம், மலையக வெளியுPட்டகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழில்பயிற்சி நிறுவனமான 'காங்கிரஸ் தொழில் நிறுவனம்'  போன்றன பற்றி பதிவு செய்வதாக உள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு காரணமான 1963 வீரகேசரி சிறுகதை போட்டி முதல் இறுதிகாலம் வரை அது முறையான செயற்பாட்டுக்கு வரவில்லை எனும் ஆதங்கத்தினையே அவர் பதிவு செய்வதை காண முடிகின்றது. கடந்த ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாகவும் 'வீரகெசரி வார இதழில்' இது குறித்து அவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதேநேரம் தான் அந்தனிஜீவா மற்றும் சு.முரளிதரன் ஆகியோரோடு இணைந்து செயற்பட்ட 'மலையக கலை இலக்கிய பேரவை' மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றி 'புதிய இலக்கிய உலகம்' எனும் நூலில் விரிவாகவே பதிவு செய்துள்ளார். இந்த நூலில் கிடைத்தற்கரிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றையும் பதிப்பித்துள்ளமை சிறப்பம்சமாகும். 'காங்கிரஸ் தொழிநுட்ப நிறவனம்' மேற்கொண்ட பயிற்சிப்பட்டறைகள் பற்றிய ஆய்வுக்குறிப்பும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.  மலையக நூல்களை வெளியீடு செய்வதில் மகத்தான சாதனைப் புரிந்துள்ள 'துரைவி' பதிப்பகத்தின் சாதனைகளை பதிவு செய்துள்ள சாரல்நாடன் அவர்கள் தனது எழுத்து, ஆய்வுப்பணிகளுக்கு மேலாக 'சாரல் வெளியீட்டகம்' எனும் பதிப்பகத்தை நிறுவிச் செயற்பட்டவர். தன்னுடைய பல் நூல்கள் உட்பட மல்லிகை சி.குமாரின் மனுஷியம், சிவி.யின் 'வாழ்வற்ற வாழ்வு' குறிஞசித் தென்னவன் கவிதைச்சரங்கள் போன்ற நூல்களைப்பதிப்பித்தவர் சாரல்நாடன் அவர்கள். குறிஞ்சித்தென்னவன் கவிதைச்சரங்கள் வெளியீடு மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் ஏற்படுத்திய கறுப்புப் புள்ளிகளும், கசப்பான அனுபவங்களும் சாரல் அவர்களை பதிப்பகத்துறையில் ஓய்வடையச் செய்தது. ஆனாலும், சாரல் பதிப்பகத்தின் பணிகளை ஒரு பதிப்பாளனாக மிகவும் உயரந்த மட்டத்தில் நான் மதிப்பீடு செய்பனாகவே உள்ளேன். தன்னுடைய நூல்களையே வெளியீடு செய்ய எழுத்;தாளர்கள் தடுமாறிக்கொண்டிரக்கையில் தன்னுடையதும் பிற எழுத்தாளர்களினதும் எழுத்துக்களை பதிப்பிக்க முன்வந்த எழுத்தாளரான சாரல்நாடன் அவர்களுது 'இலக்கிய மனம்' போற்றுதற்குரியது. எனவே, தான் சார்ந்த 'சாரல் பதிப்பகம்' குறித்து சாரல் எழுதியிருக்கும் குறிப்புககளை 'ஒரு இலக்கிய இயக்கம்' பற்றிய பதிவுகளாகவே பார்க்க தோன்றுகின்றது. 

சாரல் நாடன் அவர்களின் ஆய்வு இலக்கிய பணியில் மிகமுக்கிய பண்பு ஒன்றாக நான் அடையாளம் காண்பது, 'மலையகம்' – என்ற கருத்துருவாக்கத்தில் நிலையான கால்பதித்தவராக தனது ஆய்வினை நகர்த்திச் சென்றிருப்பதாகும்.

அதாவது மலையக மக்களை இந்திய வம்சவளியினராகவே அழைக்க வேண்டும் எனும் கோஷம் இன்றையளவில் கூட முன்வைக்கப்படும் நிலையில் தனது ஐம்பதுவருடகால இலக்கிய பணியில் தொடர்ச்சியாக 'மலையகம்' எனும் சொல்லை கருத்துருவாக்கம் செய்வதில்  சாரல்நாடன் உறுதியாக இருந்துள்ளார் என்பதை அவரது கலை இலக்கிய ஆய்வுக்கட்டுரை நூல்களின் தலைப்புக்களை வைத்தே அறியக்கூடியதாக உள்ளது.

1990 ஆம் ஆண்டு வெளிவந்த 'மலையகத் தமிழர்'
1993 ஆம் ஆண்டு வெளிவந்த 'மலையக வாய்மொழி இலக்கியம்' 
1997 ஆம் ஆண்டு வெளிவந்த 'மலையகம் வளர்த்த தமிழ்'
2000 அம் ஆண்டு வெளிவந்த 'மலையக இலக்கியம் - தொற்றமும் வளர்ச்சியும்'

2003 ஆம் ஆண்டு வெளிவந்த 'மலையகத்தமிழர் வரலாறு'
போன்றன 'மலையகம்' என்ற கருத்துருவாக்கத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டுவதாகவுள்ளது. அதே நேரம் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாத இதழான 'மாவலி'யில் 1973 ஆம் ஆண்டு எது நியாயம்? எனும் தலைப்பில்  'மலையக மக்ககளை இந்திய வம்சாவளியினராக அல்லாமல் மலையக மக்களாகவே அழைக்கவேண்டும்' என வலியுறுத்தி சாரல் நாடன் அவர்கள் எழுதிய கட்டுரையை  மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கும் 'மாவலி' கடந்த 2014 மார்ச் மாத இதழில் மறுபிரசுரம் செய்துள்ளது. அந்தக்கட்டுரையில் சாரல் நாடன் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'கண்டிச் சிங்களவர் , கரையோரச் சிங்களவர் என்ற என்ற சமூக பாகுபாடு இன்னும் இருக்கின்றதென்றாலும் பிறப்புரிமை சான்றிதழ்களிலும் குறிப்புக்களிலும் அவர்களைப் பிரித்துக்காட்டுவதில்லை. ஆனால், இந்திய வம்சாவளியினர் என்பதற்காக இந்தியத் தமிழர் என்று எல்லா இடங்களிலும் குறிப்பிடுவதில் ஏது நியாயம்' எனும் கேள்வி எழுப்பியுள்ள அதே நேரம்,

'இலங்கையைத் தாயகமாக வரித்துக்கொண்டவர்களும் இலங்கைத் தாயகத்திலே பிறந்தவர்களும் தங்களை இலங்கையர் என்ற முழு உணர்வொடு சொல்லிக்கொள்ளும் நிலையை அரசியல் சமத்துவம் ருசுபடுத்த வேண்டும். அது எப்போது நிகழும் என்பதை நாம் ஆக்கபூர்வமாக உணர்ந்திட வேண்டும். அன்றுதான் நமது பெருமையும் நிலைநாட்டப்படும்' என தனது கட்டுரையை நிறைவு செய்திருக்கும் சாரல் அவர்களின் மலையகக் கருத்துருவாக்கச் சிந்தனை மிகுந்த பொற்றுதற்குரியது.

மலையகம் என்ற கருத்துருவாக்கம் இன்று மலையக தேசிய கருத்தாடலாக பேசுபொருளாகியுள்ள நிலையில் சாரல் 40 வருடங்களுக்கு முன்பாகவே, அந்த கருத்து நிலையில் உறுதியாக இருந்துள்ளார் என்பது அவரது மிகப்பலமான அம்சமாகும். அந்த கருத்து நிலையில் நின்றே தனது ஆய்வு முன்னெடுப்புக்களைச் செய்துள்ளார் என்பது அவரை மலையகம் குறித்த மிக முக்கிய ஆய்வாளராக பேராசிரியர்கள் உள்ளிட்ட சமூக இலக்கிய ஆளுமைகள் அடையாளம் காணுவதற்கு காரணமாகின்றன எனலாம்.

'மலையகம்' என்ற சொல் புவியியல்சார் தோற்றத்தைக்காட்டுவதாக இன்றும் கூட தோற்ற மயக்கம் காணுவோருக்கு தனது ஆய்வுகட்டுரைகளிலே ஆங்காங்கே அழகாக பதிலுறுத்திச் செல்லுகின்றார் சாரல் நாடன் அவர்கள். மலையகம் வளர்த்த தமிழ் என்ற நூலில் அதே தலைப்பில் இடம்பெரும் கட்டுரையில் (பக்கம் 131)
'மலையகம் என்ற சொல் இன்று பரந்துபட்ட அர்த்தத்தில் வழக்கில் இருக்கிறது. இலங்கை வாழ் இந்தியவம்சாவளித் தமிழரை இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தாலும் மலையகத் தமிழர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்று எற்பட்டுள்ளது.  பூகோள எல்லைகளை மீறிய விதத்தில் உணர்வுபூர்வமாக ஒரு சமுதாய மக்களை இனம் காட்டும் முறையே இது' 
என மலையகம் என்ற உணர்வு பற்றி அழகாகப் பதிவு செய்கின்றார் சாரல்நாடன் அவர்கள். 
இந்த கருத்தியல் அவரிடம் செல்வாக்குப்பெறுவதற்கு அவர் நேசித்து ஆய்வுகளைச் செய்த மூன்று ஆளுமைகள் அவரில் செல்வாக்கு செலுத்தியிருக்கக் கூடும். 
முதலாமவர், கோ.நடேசய்யர். நடேசய்யர் நேரடி இந்தியராக இருந்த பொதும் இலங்கைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களோடு இரண்டரக் கலந்து தொழிற்சங்க மற்றும் சமூகப்பணிகளில் போது அந்த மக்கள் இந்திய அடையாளத்தை தவிர்த்து 'இலங்கையர்களாகவே 'இந்த நாட்டில் காலூன்ற வேண்டும் எனும் சிந்தனையை விதைத்த முதலாமவர். காந்தியின் இலங்கை வருகையின் போது அவரைச் சந்திக்க மறுத்து இந்த மக்களை இலங்கை நாட்டுக்குரியவர்களாக இருக்க விடுங்கள் என குரல் எழுப்பியவர்.
இரண்டாமவர் சி.வி.வேலப்பிள்ளை அவர்கள், தனது படைப்புக்களிலே 'hடைட உழரவெசல வுயஅடைள' எனக் குறித்துரைத்து அதன் மொழிபெயர்ப்பாக 'மலைநாடு' எனும் சொல்லாடலை அறிமுகப்படுத்தயவர். இந்த மலைநாட்டான் என்ற சொல்லின் அறிமுகம்தான் 'தோட்டாக்காட்டான்' என்ற சொல்லை தூக்கியெறிந்;து 'காட்டான்' என்றழைக்கப்பட்டவர்களை இந்த 'நாட்டான்'களாக்கியது. இலங்கை எமது நாடு எனும் விதைப்பு மேலோங்கிய காலம் சி.வி அவர்களுடையது. 
மூன்றாமவர், இர.சிவலிங்கம். இர.சிவலிங்கம் அவர்களே 'மலையகம்' என்ற சொல்லின் 'வெகஜனத் தன்மைக்கு' காரணமானவர் எனலாம். (இந்த சந்தர்ப்பத்தில் மலையகம் என்ற சொல் பயன்பாட்டில் இலங்கைத் திராவிட இயக்க முன்னோடி தலைவரான தோழர் இளங்செழியன் அவர்களையும் மனம்கொள்ளத்தக்கது) 'மலையக இலக்கியம் தொற்றமும் வளர்ச்சியும்' எனும் தனது ஆய்வு நூலில் இது பற்றி கறிப்பிடும் சாரல் நாடன் அவர்கள் 'மலைநாடு' என்ற சொல் அரசியல் சாயம் பூசப்பட்டு தொண்டமான் தலைமையில் அமைக்கப்படவிருக்கும் தனித்தமிழ் ராஜ்யத்தைக் குறிக்கும் சொல்லாக அர்த்தப்படும் அபாயமும் தொன்றியது. ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த நிலைமையை உருவாக்கினர்.  தவறாக விளங்கிக்கொள்ளும் நிலைக்கு உள்ளாகாமலும் தமது தனித்துவத்தைப் பேணவும் விரும்பி இச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மலையகம் என்ற சொல் பரந்துபட்ட பாவிப்புக்கு வரக்காணமாக அமைந்தனர்' என எழுதுகின்றார். சாரல் குறிப்பிடும் அந்த இளைஞர் கூட்டத்திற்கு தளபதியாக இருந்தவர்  இர.சிவலிங்கம் அவர்களேயாகும். 
எனவே இந்த மூன்று ஆளுமைகளின் சொல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த சாரல் நாடன் இயல்பாகவே மலையகம் என்ற கருத்துருவாக்கத்தில்  தன்னை நிலையாக கால்பதித்தவராக தனது ஆய்வுகளில் வெளிப்பட்டு நின்றார். வெற்றியும் கண்டார். 
இன்று நான் ஊடாடும் சமூக, கலை, இலக்கிய ஆளுமைகளடன் ஒப்பிடுகையில் ஆரம்பத்திலேயே அறிமகமானவராக சாரல் நாடன் அவர்கள் விளங்கிய போதும் எனக்கும் அவருக்குமான இலக்கிய உறவு நெருக்கமானதாக இருந்திருக்கவில்லை. 2007ஆம் ஆண்டு  என்னுடைய 'மல்லியப்புசந்தி' மற்றும் சி.வியின் 'தேயிலைத் தோட்டத்திலே' இரண்டாம் பதிப்பு ஆகிய வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் வருகை தந்திருக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  எழுத்தாளர் இரா.சடகோபனின் 'கசந்த கோப்பி' அறிமுக விழா ஹட்டனில் இடம்பெற்ற போது 'சி.வி.யின் தேயிலைத் தோட்டத்திலே' கவிதைத் தொகுப்பை தமிழ், ஆங்கிலம் இரண்டும் இணைந்த படைப்பாக நான் பாக்யா பதிப்பகத்தின் ஊடாக வெளியீடு செய்திருந்தமையை தனதுரையின் போது சாரல்நாடன் சிலாகித்துப் பேசியிருந்தார். அன்றைய விழா முடிவடைந்ததும் தோழர் ஓ.ஏ.ராமையா, அந்தனிஜீவா, தெளிவத்தை ஜோசப், இரா.சடகோபன் உள்ளிட்ட அவரது நண்பர்களுடன் சிறியவனான நானும் இணைந்து பகல் உணவு அருந்தியமை மறக்க முடியாத ஒரு மாலை.

கடந்த மார்ச் (2014) மாதம் பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தினரின் ஏற்பாட்டில்  ஹட்டனில் நடைபெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக்கிய பணி குறித்த இலக்கிய கருத்தாடலுக்கு சாரல்நாடன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். தலைமையுரையில் 1960 களில் கவிஞர் ஈழகுமாரினால் தொகுக்கப்பட்ட 'குறிஞ்சிப்பூ' கவிதைத் தொகுப்பு பற்றி பிரஸ்தாபித்தார். எனது நூலறிமுகவுரையின் போது 'குறிஞ்சிப்பூ' தொகுப்பில் உள்ள சாரல்நாடன் அவர்களது உரையின் ஆரம்பத்தில் வாசித்த கவிதையை படித்துக்காட்டினேன். புன்னகையுடன் ரசித்துக் கேட்டவர் அவர் அருகே அமர்ந்திருந்த தெளிவத்தை அவர்களை சுட்டிக்காட்டி 'ஜோ வின் கவிதைகளையும் வாசித்துக்காட்டுங்கள்' என்றார். தெளிவத்தை அவர்கள் அன்றைய நாளில் 'ஜோரு' எனம் புனைப்பெயரில் எழுதிய கவிதையையும் வாசித்துக்காட்டினேன். நிகழ்வில் பங்கேற்றிருந்த இளையோர், அவர்கள் இருவரினதும் இளைமைக்கால கவிதைகளை கேட்டு ரசித்தனர். உடல் நலக் குறைவுடன் வந்திருந்த போதும் அன்றைய நிகழ்வில் ஆர்வமாகப் பங்கேற்றிருந்தார் சாரல். அவரது மகிழ்ச்சி நிறைந்த முகத்துடனான நிழற்படம் ஒன்றை எனது கெமராவில் பதிவு செய்தேன். நமது மலையகம்.கொம் தோழர் சரவணன் தனது கைவண்ணத்தில் கணிணியின் உதவியுடன் அதனை மேலும் அழகாக்கி தனது கணிணி சேகரிப்பில் இணைத்துவிட்டார். இன்றைய நாளில் அநேகமாக இணையத்தளத்திலும், பத்திரிகைகளிலும்  உலாவும் சாரல்நாடன் அவர்களது புன்னகையுடனான நிழற்படத்தினை  எனது  கெமராவிலேயே பதிவு செயதேன் என்ற பூரிப்பு அந்தப் படத்தினை பார்க்கும் போதெல்லாம் தோன்றுவதண்டு.

அன்றைய நிகழ்ச்சி முடிந்து ஒரு சில வாரங்களுக்குப் பின் 2014 ஆம் ஆண்டு மாதமளவில் எனது பாக்யா பதிப்பக பதிப்பக ஹட்டன் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. 15 மலையக சிறுகதையாளர்களின் சிறுகதைகளைத் தொகத்து 'இருபதாம் நூற்றாண்டின் மலையகச் சிறுகதைகள்' என தலைப்பிடலாம்,  எனக்கூறி 10 மலையக் சிறுகதைகதையாளர்களின் பெயர்ப்பட்டியல் ஒன்றையும் அந்தக்கடிதம் காட்டியிருந்தது.  'பாக்யா பதிப்பகத்தினூடாக' அதனை வெளியீடு செய்யும் எண்ணமும் கடிதத்தில் வெளிப்படுத்தப்ப்ட்டிருந்தது. 'தங்களின் சமீபத்திய முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது. என்னால் ஆன உதவியாக இத்தொகுப்பு அமையும்' எனும் பின்குறிப்புடன் அன்புடன் சாரல்நாடன் என  அந்தக்கடிதம் விடைபெற்றிருந்தது. 

என்னிடம் மட்டுமல்லாது இலக்கிய உலகத்திலிருந்தே கடந்த மாத இறுதியில் விடைபெற்றுக்கொண்ட,  என் பள்ளிப்பருவம் முதல் நான் அருகிருந்து அறிந்திருந்த ஆளுமையான 'அங்கிள்' சாரல்நாடன் அவர்களுக்கு என் அஞ்சலிகளைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன் நன்றி. வணக்கம். !!

சாரல்நாடன் அஞ்சலியுரை – மல்லியப்புசந்தி திலகர்
-கொழும்புத் தமிழச்சங்கம் 23-08-2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates