Headlines News :
முகப்பு » , » பெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும் - என்.சரவணன்

பெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும் - என்.சரவணன்


2015 தேர்தல்
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகருப்பது, தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது போன்ற கோரிக்கைகளை நிர்பந்தித்து வந்தார்கள்.

225 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது இது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம். அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 147 பெண்கள் போட்டியிட்டனர். அதேவேளை குறைந்தளவு பெண்கள் போட்டியிட்ட மாவட்டம் பதுளை . அங்கு 3 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டனர்.

சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமாக கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 30% வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாக போராடிப் பார்த்தனர். இம்முறையும் அதனை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை.  இத்தனைக்கும் பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் கொள்கையளவில் இணங்கியிருந்தபோதும் நடைமுறையில் அதனை செய்யவில்லை. பிரஜைகள் முன்னணி போன்ற கட்சி நுவரெலியா மாவட்டத்தில் பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக இறக்கியிருப்பதாக தெரிவித்துக்கொண்ட போதும் அது பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்படவில்லை. கூடவே பாமர தோட்டப் பெண்களை மோசமாக வழிநடத்தும் கும்பலிடம் அந்த பெண்கள் அகப்பட்டிருந்தார்கள்.

இறுதியில் இம்முறைத் தேர்தலில் 11 பெண்கள் மாத்திரமே தேர்தலில் தெரிவானார்கள். தேசியப்பட்டியலில் இரண்டு ஆசனங்களையும் சேர்த்து சென்ற தடவை போல் இம்முறையும் 13 பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 5.8% வீதமே. தற்போது இலங்கையின் மாகாணசபைகளில் மொத்தம் 4.1% வீதமும், உள்ளூராட்சி சபைகளில் 2.3 வீதமுமே பெண்களின் பிரதிநிதித்துவமுமே உள்ளது.

1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 ஐ இது வரைத் தாண்டியதில்லை.

தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள் பெண்களை நாட்டின் அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. “சர்வதேச பாராளுமன்ற நிறுவனம்” (IPU -international organization of Parliaments) உலக நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறித்த தர வரிசையை அட்டவணையாக இந்த மாதம் வெளியிட்டுள்ளது. அதன் படி ருவாண்டா அதிக பெண்களை பாராளுமன்றத்தில் கொண்டுள்ளது. மொத்தம் 63.8% பெண்கள் அங்கு பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அந்த அட்டவணையின்படி இலங்கை 5.8%வீதத்தையே கொண்டுள்ளது. ஆகவே இலங்கை 131வது இடத்தில் உள்ளது.

பெண்களின் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்ந்தும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்த்ததிற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று முனைப்புடன் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்த அமைப்புகள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கி வந்துள்ளன. அதன் விளைவாக இந்த அமைப்புகளின் கணிசமான கோரிக்கைகளுக்கும் இணங்கினர். குறிப்பாக பல முக்கிய கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தமது வேட்பாளர் பட்டியலில் 25% பெண் பிரதிநிதிகளை உள்ளடக்குவதாக உறுதியளித்தன. ஆனால் அது நடக்கவில்லை. 20வது திருத்தச்சட்டத்திலும் அந்த கோரிக்கையை உள்ளடக்குவதாக தற்போதைய ஆளும்கட்சி ஒப்புக்கொண்டது.

புதிய பாராளுமன்றம் ஆட்சிக்கமர்ந்ததும் 100 நாட்களில் 20 வது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட அதனை உள்ளடக்கியிருந்தன. இனி அது நிகழ்ந்தால் தான் நம்பலாம்.


2015 பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் குறித்து எந்தவொரு உத்தரவாதத்தையும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டணி வழங்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
“உள்ளூராட்சி மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒதுக்குவதற்கூடாகவும் தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 25%வீத பெண்கலுக்கு இடல் ஒதுக்குவதர்கூடாகவும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது. (3 -உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கை)

மனசாட்சியின் உறுத்தல் எனும் பெயரில் ஜேவிபி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் (பக்கம் - 84) தேசிய அளவில் பெண்களின் அரசியல் பிரதிநித்திவம் பற்றி எதுவும் கூறவில்லை மாறாக அது கிராம மட்டங்களை மாத்திரம் குறிப்பிடுகிறது.

“ஒவ்வொரு கிராமத்திற்கும் பாராளுமன்றச் சட்டத்தினால் அதிகாரத்தத்துவங்களை உரித்தளிக்கும் பொறுப்புகளைக் கொண்ட ஒரு கிராம சபையை “இந்தியாவின் பஞ்சாயத்து முறை” தாபித்து, அதற்கு சுயவிருப்பத்தில் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு முறைமையை உருவாக்குதல்' அதில் 50% வீதமான பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளீர்த்தல்.”

வடக்கு கிழக்கில் 90,000கும் மேற்பட்ட கணவரை இலனதவர்கள் உள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் பெண்களின் மீதான இரட்டைச் சுமை அதிகரித்திருக்கிறது. பெண்கள், சிறுவர்கள் மீதான் பாலியல் பிரச்சினைகள் மோசமாகிவருகிறது. தீர்மானமெடுக்கும் அங்கங்கங்களில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு சொல் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில சிறப்புகள்
இம்முறை தேர்தலில் குறிப்பிட்டு கூறக்கூடியவை சில நிகழ்ந்துள்ளன. 1989இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சுமேத ஜயசேன இலங்கையின் வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வரும் பெண்.

30 வருடங்களின் பின்னர் இம்முறை தம்பதிகள் தெரிவாகியுள்ளனர். தயா கமகே (அம்பாறை மாவட்டம்) மற்றும் அவரின் மனைவி அனோமா கமகே. இறுதியாக இதற்கு முன்னர் 1984இல் ஆர்.பி.விஜேசிறியும் அவரின் மனைவி லோகினி விஜேசிரியும் தெரிவாகியிருந்தனர். இதற்கு முன்னர் 1956, 1960, 1970 காலங்களில் இவ்வாறு தம்பதிகள் அங்கம் வகித்த வரலாறு இலங்கை பாராளுமன்றத்துக்கு உண்டு.

இம்முறை அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் தலதா அத்துகோரல. இரத்தினபுரி மாவட்டத்தில் அவர் 1,45,828 எடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.தே.க பட்டியலில் முதன்மை ஸ்தானத்தில் உள்ளார்.

சென்ற தடவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை தோல்வியுற்றார் ரோஸி சேனநாயக்க. பெண்கள்-குழந்தைகள் குறித்த விடயங்களில் அதிகம் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றியவர் ரோஸி. பல பெண்கள் அமைப்புகள் அவரை ஒரு நாயகியாகவே நோக்குகின்றனர். குறிப்பாக பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்த அவரால் தன் சொந்த பாராளுமன்ற கதிரையை காக்க முடியாது போனது. விருப்பு வாக்கு எண்ணுவதில் மோசடி நிகழ்ந்திருப்பதாக முறையீடு செய்திருக்கிறார். பல பெண்கள் அமைப்புகள் அவரை தேசியப் பட்டியலின் மூலமேனும் அங்கத்துவம் வழங்கும் படி மகஜர் கொடுத்ததுடன் போராட்டத்திலும் இறங்க தயாரானார்கள். ஆனால் கட்சியின் கட்டுப்பாடுகளை தான் மதிக்க வேண்டும் என்றும் இதனை விருப்பு குறித்த முறையீட்டை சட்டப்படி செய்கிறேன் வீதிப் போராட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

காலி மாவட்டத்தில் தெரிவான பிரபல நடிகை கீதா குமாரசிங்க தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை தோன்றியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன. அவர் ஏற்கெனவே சுவிஸ்சர்லாந்து பிரஜையாகவும் இருப்பது இந்த சட்ட சிக்கலை கொண்டுவந்துள்ளது. சட்டத்துக்கு அமைய இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி. இனி பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இம்முறை தெரிவாகியிருக்கும் பெண்களில் ஆண் உறவுமுறை அரசியல் செல்வாக்கு பின்னணியுடையோர் 9 பேர். புதிதாக 4 பேர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர். ஏனைய 9 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஐ.தே.க சார்பில் தெரிவானோர் 6 பேர். ஐ.சு.ம.மு சார்பில் 5 பேரும், தமிழரசுக் கட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். தமிழர்கள் இருவர். ஏனைய 11 பேரும் சிங்களவர்கள்.
(பார்க்க அட்டவணை)

தமிழ் பெண்கள்
நேசம் சரவணமுத்து 1932இல் கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து தேசிய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தமிழ் பெண். அது மட்டுமல்ல நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண்ணும் அவர் தான். தொடர்ந்து 10ஆண்டுகள் அவர் அங்கம் வகித்தார். அவருக்கு பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் எந்த ஒரு தமிழ் பெண்ணும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. 1980இல் ரங்கநாயகி பத்மநாதன் அவரது சகோதரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பொத்துவில் தொகுதியிலிருந்து தெரிவானார். அதன் பின்னர் ராஜமனோகரி புலேந்திரனின் அவரது கணவர் 1983ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் 1989இல் அவரை ஐ.தே.க வன்னி மாவட்டத்தில் போட்டியிடவைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக இரு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி 11 வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

சிவகாமி ஒபயசேகர என்பவர் 1965இல் மீரிகம தொகுதியில் தெரிவாகியிருக்கிறார். ஆனால் அவர் தமிழர் அல்ல. சிவகாமி என்கிற பெயர் தமிழ் அடையாள மயக்கத்தைத் தந்தபோதும் அவர் சிங்கள நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்ட ஒரு மேட்டுக்குடி பெண்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பத்மினி சிதம்பரநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தங்கேஸ்வரி கதிராமனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவானார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நடந்த 2010 தேர்தலின் போது கூட்டமைப்பு இவர்கள் இருவருக்கும் வேட்பு பட்டியலில் இடம் கொடுக்கவில்லை. ஆகவே தங்கேஸ்வரி மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்து போட்டியிட்டார். பத்மினி சிதம்பரநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டார். இருவரும் அத்தேர்தலில் தோல்வியுற்றனர். ஆனால் அந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் வெற்றி பெற்றார். விஜயகலாவின் கணவர் மகேஸ்வரன் (பா.உ) 2008ஆம் ஆண்டு துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டவர்.

இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சியின் பெயரில் போட்டியிட்டது. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு பெண் வீதம் நான்கு பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. அனால் எவரும் தெரிவாகவில்லை. கூட்டமைப்புக்கு கிடைத்த இரு தேசிய பட்டியல் உறுப்பினர்களில் ஒன்றை ஒரு பெண்ணுக்கு வழங்கும்படி நிர்பந்தங்கள் வளர்ந்தன. தேசியப் பட்டியல் குறித்த உட்கட்சி பூசலில் அது சாத்தியமாகுமா என்கிற நிலையே இருந்தது. இறுதியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்... உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவி. மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.

மலையகத்திலிருந்தோ, பறங்கி, மலே இனத்திலிருந்தோ இதுவரை எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இருவர் மட்டுமே தெரிவாகியுள்ளார்கள்.

முஸ்லிம் பெண்கள்
இலங்கையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்களிப்பு வெகு குறைவாகவே இருக்கிறது. 1949 இல் ஆயேஷா ரவுப் கொழும்பு மாநகரசபைக்கு போட்டியிட்டு தெரிவானார். அத்தோடு அவர் 1952 இல் பிரதி மேயராகவும் தெரிவானார். முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் அதிபராகவும் அவர் அதே காலத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அவரின் அதிபர் பணியை மேற்கொள்வதற்காக அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

அஞ்ஞான் உம்மா 1999 இல் மாகாண சபையின் முதல் முஸ்லிம் பெண்ணாக ஜே.வி.பி சார்பில் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ஜேவிபியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். விமல் வீரவன்ச குழுவோடு சேர்ந்து ஜேவிபியிலிருந்து வெளியேறினார். பின்னர் 2012 இல் அவர் ஐ.தே.கவில் இணைந்துகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானதன் பின்னர் 2000 தேர்தலில் போட்டியிட்டு தெரிவானார் பேரியல் அஷ்ரப். பின்னர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் காங்கிரசின் இணைத்தலைவர் பதவியை சில காலம் வகித்தார். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தையும் ஆற்றினர். அதன் பின்னர் சிங்கப்பூருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். இன்றைய நிலையில் உள்ளூராட்சி அங்கங்களுக்கு அப்பால் முஸ்லிம் பெண்களின் வகிபாகம் இல்லாமல் போயுள்ளது.

மலையகப் பெண்கள்
இதுவரை மலையகத்திலிருந்து எந்த ஒரு பெண்ணும் தெரிவானதில்லை. மாகாண சபை உள்ளூராட்சி மட்டத்தில் உறுப்பினர்களைக் காணக் கூடியதாக இருந்தாலும் அது திருப்தியளிக்கக்கூடியதல்ல. மலையகத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பெண்களின் பங்குபற்றல் இருந்தாலும் கூட அரசியல் விழிப்புணர்ச்சியை நோக்கி போதிய அளவு முன்னேறவில்லை.

பெண் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பருவகால கோஷங்களாகிவிட்டுள்ளன. தேர்தல் காலங்களிலும், அரசியல் கோரிக்கைகளாக முனைப்பு பெரும் போதும் அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிமாணம் பெறுகிறது. அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறது. இதற்காக போராடும் சிவில் அமைப்புகள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது அவசியம்.

அதிகார அசமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 80 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. தேர்தலின் பின்னர் ஏற்படும் இந்த போதாமைகளை சரி செய்வதற்காக தேசியப் பட்டியல் முறையை பயன்படுத்தும்படி கெஃபே போன்ற அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.

ஐ.நா வினால் 1979இல் கொணரப்பட்ட “பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது. 1993 இல் பெண்கள் பிரகடனத்தை கொண்டுவந்தது. 2005இலும் பெண்களுக்கான சில சிறப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அனைத்தும் கண் துடைப்பே. இதில் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தம்.

நன்றி - தினக்குரல்

பாராளுமன்றத்துக்கு இதுவரை தெரிவான பெண்களின் பட்டியல்

முதலாவது அரசுப்பேரவை (1931 - 1935)
  • திருமதி அட்லின் மொலமுறே (றுவன்வெல்ல) இடைத்தேர்தல்
  • திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு)      இடைத்தேர்தல்

(திருமதி மொலமுறே சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் ஆவார்)

இரண்டாவது அரசுப்பேரவை (1936 - 1947)
  • திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு)     
முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)     (1947 - 1952)
  • திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க (கிரியெல்ல)     
  • திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை) இடைத்தேர்தல்
  • திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கண்டி) இடைத்தேர்தல்
இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)  (1952 - 1956)

  • திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை)     
  • திருமதி டொரீன் விக்கிரமசிங்க (அக்குரஸ்ஸ)     
மூன்றாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை)     (1956 - 1959)
  • திருமதி விவியன் குணவர்தன (கொழும்பு - வடக்கு)     
  • திருமதி குசுமசிறி குணவர்தன (கிரியெல்ல)     
  • திருமதி விமலா விஜேவர்தன (மீரிகம)     
  • திருமதி குசுமா ராஜரத்ன (வெலிமட) இடைத்தேர்தல்

நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (மார்ச் - ஏப்ரல் 1960)
  • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
  • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
  • திருமதி சோமா விக்கிரமநாயக்க (தெஹியோவிட்ட)     

ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (ஜூலை 1960 - 1964)
  • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
  • திருமதி சோமா விக்ரமநாயக்க (தெஹியோவிட்ட)     
  • திருமதி விவியன் குணவர்தன (பொரல்ல) இடைத்தேர்தல்

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) (1965 - 1970)
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
  • திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம)     
  • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
  • திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம)     
  • திருமதி லிற்றீசியா ராஜபக்‍ஷ (தொடங்கஸ்லந்த)      இடைத்தேர்தல்
  • திருமதி மல்லிகா ரத்வத்த (பலாங்கொட) இடைத்தேர்தல்

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபையும் முதலாவது தேசிய அரசுப்பேரவையும்     (1970 - 1972) / (1972 - 1977)
  • திருமதி குசலா அபயவர்தன (பொரல்ல)     
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
  • திருமதி விவியன் குணவர்தன (தெஹிவளை - கல்கிஸ்ஸ)     
  • திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கலகெதர)     
  • திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம)     
  • திருமதி மல்லிகா ரத்தவத்த (பலாங்கொடை)     
இரண்டாவது தேசிய அரசுப்பேரவையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம்     (1977 - 1978) / (1978 - 1989)
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல)     
  • செல்வி ரேணுகா ஹேரத் (வலப்பன)     
  • திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க (வாரியப்பொல)     
  • திருமதி சுனேத்ரா ரணசிங்க (தெஹிவளை)     இடைத்தேர்தல்
  • செல்வி சிறியாணி டேனியல் (ஹேவாஹெட்ட)      நியமனம்
  • திருமதி ரங்கநாயகி பத்மநாதன் (பொத்துவில் - 2வது)      நியமனம்
  • திருமதி தயா சேபாலி சேனாதீர (கரந்தெனிய)      நியமனம்
  • திருமதி லோகினி விஜேசிறி (ஹரிஸ்பத்து - 2 வது)      நியமனம்
  • செல்வி கீர்த்திலதா அபேவிக்கிரம (தெனியாய)      நியமனம்
  • திருமதி சமந்தா கருணாரத்ன (ரம்புக்கன)      நியமனம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம்      1989 - 1994
  • திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க* - ஸ்ரீ.ல.சு.க. (கம்பஹா)
  • செல்வி சுமிதா பிரியங்கணி அபேவீர* - ஸ்ரீ.ல.சு.க. (களுத்துறை)     
  • திருமதி சுஜாதா தர்மவர்த்தன* - ஐ.தே.க. (புத்தளம்)     
  • திருமதி ரேணுகா ஹேரத்* - ஐ.தே.க. (நுவரெலிய)     
  • திருமதி சுமேதா ஜீ. ஜயசேன* - ஸ்ரீ.ல.சு.க. (மொனராகல)     
  • திருமதி சந்திரா கருணாரத்ன* - ஐ.தே.க. (பதுளை)     
  • திருமதி சமந்தா கருணாரத்ன* - ஐ.தே.க. (கேகாலை)     
  • திருமதி ஆர். எம். புலேந்திரன்* - ஐ.தே.க. (வன்னி)     
  • திருமதி சுனேத்ரா ரணசிங்க* - ஐ.தே.க. (கொழும்பு)     
  • திருமதி ஹேமா ரத்நாயக்க* - ஸ்ரீ.ல.சு.க. (பதுளை)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க* - ஐ.தே.க. (குருணாகல)     
  • திருமதி ரூபா சிறியாணி டேனியல்** - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்)     
  • திருமதி தயா அமரகீர்த்தி*** - ஸ்ரீ.ல.சு.க. (காலி)     
* 15.02.1989 முதல்
** 13.12.1989 முதல்
*** 22.04.1993 முதல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம்      1994 - 2000
  • திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க - பொ.ஐ.மு. (தேசியப்பட்டியல்)
  • திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க* - பொ.ஐ.மு. (கம்பஹா)
  • திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
  • திருமதி. சுமித்ரா பிரியங்கணி அபயவீர - பொ.ஐ.மு. (களுத்துறை)     
  • திருமதி நிரூபமா ராஜபக்‍ஷ - பொ.ஐ.மு. (ஹம்பாந்தோட்டை)     
  • திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • திருமதி சிறிமணி அதுலத்முதலி - பொ.ஐ.மு. (கொழும்பு)     
  • திருமதி அமரா பத்ரா திசாநாயக்க - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்)     
  • திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய)     
  • திருமதி ஆர். எம். புலேந்திரன் - ஐ.தே.க. (வன்னி)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல)     
  • திருமதி ஹேமா ரத்நாயக்க - ஐ.தே.க. (பதுளை)     

* 1994 நவம்பர் 12 ஆந் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவிக்குத் தெரிவானார்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம்      2000 - 2001
  • கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
  • கௌரவ பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • கௌரவ (திருமதி) பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல)     
  • திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல)     
  • திருமதி சுரங்கனி எல்லாவல - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருநணாகல்)     
  • திருமதி யுவோன் சிறியாணி பெர்னாண்டோ - பொ.ஐ.மு. (புத்தளம்)     
  • திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (தேசியப்பட்டியல்)     

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம்      2001 - 2004
  • கௌரவ (திருமதி) அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல்)     
  • திருமதி சுமேதா ஜி. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை)     
  • திருமதி பவித்திரா வன்னிஆரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி)     
  • திருமதி பேரியல் அஹ்ரப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல)     
  • திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (கம்பஹா)     
  • திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருணாகல்)     
  • திருமதி மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்)     
  • திருமதி மல்லிகா டி மெல் - பொ.ஐ.மு. (மாத்தறை)     
  • திருமதி சித்திரா சிறிமதி மந்திலக்க - ஐ.தே.க. (மஹநுவர)

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம்      2004 - 2010
  • கௌரவ (திருமதி.) சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை)
  • கௌரவ (திருமதி.) பவித்திரா வன்னியாரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி)
  • கௌரவ (திருமதி.) பேரியல் அக்ஷ்ரப் - ஐ.ம.சு.மு ( திகாமடுல்ல)     
  • திருமதி. அமாரா பியசீலி ரத்னாயக்க - ஐ.தே.க. (குருணாகல்)     
  • திருமதி. மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்)     
  • திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி. சுஜாதா அழகக்கூன் - ஐ.ம.சு.மு (மாத்தளை)     
  • திருமதி. தளதா அத்துகொறளை - ஐ.தே.க. (இரத்தினபுரி)     
  • திருமதி. பத்மினி சிதம்பரநாதன் இ.த.க யாழ்ப்பாணம்)     
  • செல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் இ.த.க (மட்டக்களப்பு)     
  • திருமதி. ஏ. டி. அன்ஜான் உம்மா - ஐ.ம.சு.மு (கம்பஹா)     
  • திருமதி. நிரூபமா ராஜபக்ச - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை) (நவம்பர் 25 2005 இலிருந்து)
  • திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய) 30 ஜனவரி 2006 இலிருந்து

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 
  • கௌரவ (திருமதி.) சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை)
  • கௌரவ (திருமதி.) பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி)     
  • திருமதி. நிரூபமா ராஜபக்ஷ - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை)     
  • திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்)     
  • திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க. (இரத்தினபுரி)     
  • திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு (கம்பஹா)     
  • திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு (திகாமடுல்ல)     
  • திருமதி. ரோஸி சேனாநாயக்க - ஐ.தே.க. (கொழும்பு)     
  • திருமதி. உபேக்ஷா சுவர்ணமாலி - ஐ.தே.க. (கம்பஹா)     
  • திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க. (யாழ்ப்பாணம்)     
  • திருமதி. மாலினீ பொன்சேக்கா - ஐ.ம.சு.மு
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2015 
  • சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை - கம்பஹா (UPFA)
  • விஜயகலா மகேஸ்வரன் - யாழ்ப்பாணம் (UNP)
  • ஹிருனிக்கா பிரேமச்சந்திர - கொழும்பு (UNP)
  • சுமேத குணவதி ஜயசேன - மொனராகலை (UPFA)
  • கீதா குமாரசிங்க - காலி (UPFA)
  • ரோகினி குமாரி கவிரத்ன - மாத்தளை (UNP)
  • தலதா அத்துகொரலை - இரத்தினபுரி (UNP)
  • பவித்ரா வன்னியாராச்சி - இரத்தினபுரி (UPFA)
  • துசித்தா விஜேமான்ன - கேகாலை (UNP)
  • சிறியானி விஜேவிக்கிரம - அம்பாறை (UPFA)
  • சந்திராணி பண்டார - அனுராதபுரம் (UPFA)
  • சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா - யாழ்ப்பாணம் (ITAK)
  • அனோமா கமகே - அம்பாறை (UNP)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates