மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மீண்டும் ஒரு முறை காத்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாகத் தெரிவாகியுள்ள 8 பேர்களில் மல்லிகைப்பூ திலகரின் வருகை ஒரு புதிய வரவாகும். மலையக மக்கள் தாம் எந்தளவில் விவேகமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் நடந்து கொண்டனரோ அதைவிட ஒருபடி முன்னோக்கிச் சென்று தாங்கள் யார் என்பதை 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர். ஒரு பக்கம் தமது முழுமையான விருப்பை பதிவு செய்துள்ள மலையக மக்கள் வெறுக்கத்தக்கவர்கள் யார் என்பதையும் யாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு "விருப்பு, வெறுப்பு" எத்தகைய பின்னணியில் உருவாகியது என்பது பற்றிய சில விடயங்கள் உள்ளடங்கலாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலில் என்னென்ன விடயங்களில் மக்கள் விருப்பமுடையவர்களாக காணப்பட்டனர் என்பதனை அவதானிக்கலாம். விருப்பம் காட்டிய முதலாவது விடயம், அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு தனித்தனி வீடுகள் கட்டுவதற்கு காணிகள் வழங்குவதை அங்கீகரித்தமையாகும். அமைச்சர் திகாம்பரம் கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 400 வீடுகள் வரையில் கட்டி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனி வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொண்டமை மக்களின் மகிழ்ச்சிக்கான முதன்மைக் காரணமாகும்.
இரண்டாவது, கட்சி மற்றும் தொழிற்சங்க வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் யாவரும் தமிழர் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பில் ஒரு சமூகமாக செயற்பட்டனர். தமக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்திருப்பது மக்களிடம் பெருவரவேற்பை ஏற்படுத்தியது. இவர்கள் தாம் ஒன்றிணைந்திருந்ததுடன் மக்களிடம் நெருங்கி உறவாடியவர்களாகவும் காணப்பட்டனர். இதுபற்றி மலையகத்திலுள்ள பலரிடம் விசாரித்தபோது தமிழர் முற்போக்குக் கூட்டணியினரை தமக்குரிய பலமான அமைப்பாகக் கருதுவதாக அறியக்கிடைத்தது. இதன் உறுப்பினர்கள் வழக்கத்திற்கு மாறாக மக்கள் நட்புடனான உறவுகளில் அக்கறை காட்டியதுடன் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர் என்பதும் முக்கியமாக எடுத்துக்கூறப்பட்டது.
மூன்றாவது விடயம், 1000 ரூபா சம்பள போராட்டத்தில் ஏற்பட்ட ஏமாற்றமும் அதனாலான பாதிப்புமாகும். 1000 ரூபா சம்பளம் கேட்டு துரைமார் சங்கத்துடன் பேரம் பேசிக் கொள்ள முடியாத நிலையில் மக்களை சம்பள அதிகரிப்பு போராட்டத்திற்கு தூண்டி விட்டனர். மெதுவாக வேலை புரியும்படி தூண்டப்பட்டனர். இரண்டு வாரங்களாக நீடித்த இந்தப் போராட்டம் எந்தவிதமான பயனையும் தரவில்லை. மாறாக மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு சம நாட் சம்பளம் வழங்கப்படவில்லை. இதன் விளைவாக கடந்த மாதம் கிடைக்கப்பெற்ற சம்பளத்தில் சுமார் 6000 ரூபா முதல் 10000 ரூபா வரையிலான சம்பளத்தை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இழந்தனர். இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. கம்பனிகளின் போக்கு, தொழிலாளர்களின் வாழ்க்கை என்பனவற்றை துச்சமாகக் கருதி அவர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாட முயல்வது இனிமேலும் ஒரு வழக்கமான நிகழ்ச்சியாக மலையகத்தில் இருக்க கூடாது என்பது மக்களின் முடிவாகவும் காணப்பட்டது.
மலையக மக்களிடையே ஒரு புதிய அரசியல் கலாசாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிந்தது. பொதுவாக தொலைக்காட்சி மூலம் மக்களிடம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையும், அதிகாரத் தொனியில் உரையாடுபவர்களுக்கே மக்கள் தமது தலைமைப்பதவியை வழங்குவர் என்ற முடிவு மலையக மக்கள் மத்தியில் பிரயோகப்படுத்தப்பட்டதாக இல்லை. இப்போது வளர்ந்துள்ள தொலைத்தொடர்புகள், தொலைக்காட்சிகளில் "ஒளி” மற்றும் "ஒலி” பரப்பப்படும் விடயங்களே மக்களிடம் செல்வாக்கு செலுத்தும். அதன்படியே மக்கள் தமது நாளாந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வர் என்பன நடைமுறையில் இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாகப் புலப்படுத்தின. மக்கள் தாம் கலந்துரையாடி நேரில் கண்டு அனுபவித்த துயரங்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒரு திரட்சியாக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு புறத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் "யுத்த காலத்திற்கான பாதுகாப்பான நிலைவரம் என்ன?” என்பதை வலியுறுத்திய மக்கள் இப்போது வாழ்வாதாரம் அபிவிருத்தி என்ற விடயத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் இனிமேலும் நாளாந்தம் தோட்டங்களில் வேர் கொள்ளும் தொழில்களை நம்பியதாக இருக்க முடியாது. அவர்கள் சுயதொழில் நாடி விடுதலை பெற வேண்டும். காலம் உருவாகி விட்டது. இப்போதைய அரசியலில் இவர்களிடம் பொருளாதார விடுதலைக்குத் தேவையான திட்டங்களை வகுத்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்து மலையக மக்களும் இந்நாட்டில் வாழ்கின்ற சராசரி பொருளாதார மனிதர்கள் என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டிய கடமை ஆர்வமுள்ள யாவரிடமும் காணப்பட வேண்டும்.
வீடுகளுக்கு PHDIஐ நம்பியும், சம்பளம் என்றால் கூட்டு ஒப்பந்தம், பேச்சுவார்த்தை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதும், சுகாதார நலன்களுக்கு "தோட்டத்துரை" என்ற நிலைவரத்தில் மக்கள் முன்னேற் றம் கண்டவர்களாக இல்லை. தேசிய வீடமைப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கான வீடுகள், தேசிய வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம் என்ற நிலைக்கு மக்களை நடத்திச் செல்லும் யுகம் ஒன்றை உருவாக்கும் பணியில் யாவரும் ஈடுபடுவதே மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கான அடிப்படை வேலைத்திட்டமாக அமையும்.
தேசிய திட்டத்தில் உள்வாங்கப்படாத எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டமும் மலையக மக்களுக்கு எவ்வித பயனையும் தந்துவிடப் போவதில்லை என் பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...