நண்பர்களிடத்தில் ‘திலக்’ என்றும், இலக்கிய சூழலில் ‘திலகர்’ என்றும் கல்விச்சூழலில் ‘திலகராஜ்’ என்றும் அறியப்படும் ‘மயில்வாகனம் திலகராஜா’ நுவரெலியா மாவட்டத்தின், வட்டகொடை, மடகொம்பரை மண்ணைச் சேரந்தவர். மலையகத்தின் அரசியல் கல்வி, கலை கலை இலக்கிய ஆளுமைகள் பிறந்த இடத்தில் பிறந்த 'திலகர்' மடகொம்பரை மண்ணின் ‘புதுக்காடு’ பிரிவில் மயில்வாகனம் -பாக்கியம் ஆகியோருக்கு மகனாக பிறந்த இவர் தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் உயர்தரக் கல்வியை ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ நிதிப்பீடத்தில் வணிகமாணி சிறப்புப்பட்டம் பெற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழத்தின் கலைபீடத்தில் இதழியல் துறையில் டிப்ளோமாவினை பெற்றுக்கொண்ட இவர் குறிப்பாக இலக்கியம், அரசியல் என பலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். சிறந்ததொரு எழுத்தாளராகவும் இருந்துவரும் இவர், 1999 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களின் அரசியல் ஆலோசகராகவும் சங்கத்தின் செயலாளர் நாயகமாக இருந்து வரும் இவர் கட்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் மிகவும் துடிப்பாக களமிறங்கியுள்ளார். மலையக இளைய தலைமுறையினரினூடாக புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கியுள்ள புதிய வேட்பாளரான மயில்வாகனம் திலகராஜாவை தினக்குரலுக்காக சந்தித்த போது அவர் எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காகத் தருகின்றோம்.
இலக்கியத்துறையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த நீங்கள் அரசியலில் நுழையவேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது?
இலக்கியம் போலவே அரசியலும் நான் அதீத ஈடுபாடு கொண்ட துறைதான். ஆனால் அரசியலையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்த்து பழகிவிட்ட நமது பண்பாட்டுச்சூழல், இலக்கியத்தின் அரசியலையும் அரசியலின் இலக்கியத்தையும் புரிந்துகொள்வதில் சிக்கல்களைக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இலக்கியத்தை அரசியலில் இருந்து வேறுபட்ட ஒன்றாக நாம் பார்க்கிறோம். அரசியல்வாதிகளுள் பல இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அதேபோல இலக்கியவாதிகளில் பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இலக்கியத்திற்குள்ளும் இலக்கிய பரப்பிற்குள்ளும் இடம்பெறும் அரசியல் பற்றிய பார்வை நம் சமூகத்தில் குறைவு என நினைக்கிறேன். இலக்கியவாதிகளை அரசியலில் இருந்து தூரம் வைத்துப்பார்க்கும் அல்லது வேறுபடுத்திப்பார்க்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது. இலக்கியவாதிகள் அரசியல் வாதிகளாக ஏன் இருக்க முடியாது? உங்கள் கேள்வி கூட இலக்கியத்துறையில் அதீத ஈடுபாடு ‘கொண்டிருந்த’ என்பதற்கு பதிலாக இலக்கியத்துறையில் அதீத ஈடுபாடு ‘கொண்டிருக்கும்’ என்றுதான் வந்திருக்க வேண்டும். தேர்தல் களத்தில் இறங்கியுவுடன் இருக்கும் ஈடுபாடு நிகழ்காலத்தில் இருந்து எப்படி இறந்தகாலமாக மாறமுடியும்.
ஏனக்குள் ஒரு அரசியல் இருக்கிறது. அதனை இலக்கியத்தின் வழியாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். சமூகப், பண்பாட்டு அரசியல் வழியாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது தேர்தல் அரசியல் வழியாகவும் சொல்ல முற்பட்டுள்ளேன். ஆனால் ஏனைய முறைகளைவிட தேர்தல் அரசியல் என்று வருகிறபோது அதன் வணிக மனோபாவமும், சமூகம் இந்த தேர்தல் அரசியல் மீது கொண்டிருக்கும் அசட்டுப் பார்வையும் இலக்கியத்தின் மீதுள்ள ஈடுபாட்டில் இருந்து அரசியலின் மீதுள்ள ஈடுபாட்டை வேறுபடுத்திப்பார்க்கின்றது என்பதையே உங்களது வினா தெளிவுபடுத்துகிறது. இது யதார்த்தமானது. ஆனால் இதற்குள் ஒரு அந்நியப்படுத்தல் வெளிப்படுவது நெருடலாக உள்ளது. நாம் ஏன் தேர்தல் அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதிகள் என சொல்லிக்கொண்டு, அதேநேரம் மக்களில் இருந்து அந்நியப்படுத்தி பார்க்;கின்றோம் என புரியவில்லை.
நான் தேர்தல் அரசியலுக்குள் இன்று காலடி எடுத்து வைப்பதற்கு;கு முன்பதாகவே பண்பாட்டு அரசியல், கட்சி அரசியல் என்பனவற்றில் என்னை ஈடுபடுத்தி வந்துள்ளேன். வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை போன்ற மூத்த தொழிற்சங்கவாதிகளின் மீதுள்ள மதிப்பு காரணமாக மலையகத்தின் பழமைவாய்ந்த தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்துடன் எனக்கிருந்த அபிமானமும் தொடர்புகளும் என்னைத் தேர்தல் அரசியல் களத்துக்குள் இழுத்து வந்திருக்கின்றது.. 2007 ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் பேராளர் மாநாட்டில் பிரதிப்பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டேன். அன்று முதல் இன்றுவரை அந்தப்பதவியில் இருக்கிறேன். அதேபோல தொழிலாளர் தேசிய சங்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும் இருந்தது. 2000 ஆண்டுவரை செயற்பாட்டில் இருந்த அந்த கட்சி பின்னர் கபடர்களின் கைவரிசையினால் தேசிய ஜனநாயகக் கட்சி என பெயர் மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. எனவே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பணிகளை முன்னெடுக்க 2009 முதல் தொழிலாளர் தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியினை சங்கத்தின் தலைவரான அமைச்சர் திகாம்பரம் அவர்களை ஸ்தாபக தலைவராகவும் நான் ஸ்தாபக பொதுச்செயலாளராகவும் இருந்து செயற்படுத்தி வருகிறோம்.
இதுவரை மலையக அரசியல் தலைவர்களால் கடந்த காலங்களில் சாதிக்க முடியாதுபோன எவ்வாறான விடயங்களை உங்களால் சாதிக்க முடியும்?
மலையக அரசியல் சூழலில் சாதிப்பதற்கு நிறைய விடயங்கள் உண்டு. இன்னும் மலையக மக்கள் இலங்கை நாட்டின் முழுமையான பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் நாம் மலையக மக்கள் என அழைத்துக்கொண்டாலும் சட்ட ரீதியாக இலங்கையில் ‘இந்தியத் தமிழர்’ என்ற பதத்தினாலேயே பதிவு செய்யப்ட்டுள்ளோம். ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ என்று அழைத்துக் கொள்கிறோமே தவிர அவ்வாறு சட்டத்தில் இல்லை. என்னுடைய பிறப்பு சான்றிதழில் இனம் என்கிற கட்டத்தில் ‘இந்தியத் தமிழர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனது பிள்ளையின் பிறப்புசான்றிதழிலும் நான் அவ்வாறே குறிப்பிட்டுள்ளேன். இருநூறு வருடகாலமாக இலங்கை நாட்டின் பொருளதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த ஒரு சமூகம் தேசிய இனமாக வளர்ந்துவிட்ட நிலையில், அந்த சமூகத்தின் ஆறாம் தலைமுறையான என்னுடைய மகன் இன்னும் ‘இந்தியத்தமிழன்’ என அழைக்கப்படுவது மலையக மக்கள் இலங்கைத் தேசத்தில் இருந்து இன்னும் அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதன் ‘அரசியல் அடையாளம்’ இல்லையா..? அதனை மாற்ற வேண்டாமா? நாம் பண்பாட்டு ரீதியாக ‘மலையகம்’ என்ற சொல்லாடலை எம்மை குறிக்க பயன்படுத்திக்கொள்கிறோம். இது கூலிகள், இந்தியத்தொழிலாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், என அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் கூட்டத்தின் நாகரீக வடிவம். இதனை இலக்கிய இயக்கமும், பண்பாட்டு இயக்கமும் அடையாளப்படுத்தியுள்ளது. இன்னும் அரசியல் ரீதியாக இந்த அடையாளம் சட்டரீதியானதாக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தேவைப்படுகிறது. இதுபோல அரச நிர்வாகம், தொழில் கட்டமைப்பு, அரசியல் உரிமைகள், காணியுரிமை, வீட்டுரிமை, கலை கலாசார பண்பாட்டு உரிமை என பல்வேறு உரிமைகள் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களினால் அடையப்படாமல் உள்ளது. அவற்றை வென்றெடுக்க அரசியல் தேவைப்படுகிறது. இதுவே நான் களம் காணும் அரசியல் பிரவேசத்தின் இடைவளி. நாம் வெறுமனே ‘அபிவிருத்தி அரசியலுக்கு’ பழக்கப்பட்டு நிற்பதனால் இந்த அடிப்படை அரசியல் உரிமைகள் குறித்து மலையகத்தில் பேசுபொருள் எழும்பாமல் இருக்கிறது. இந்த பேசாபொருட்களை பேசுபொருளாக்குவது எனது தேர்தல் அரசியல் பிரவேசத்தின் நோக்கமாகிறது. இதனை சாத்தியமாக்குவதற்கு முயற்சிப்பேன்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினைகள் என நீங்கள் எதனை அடையாளம் காண்கிறீர்கள்.?
முன்னைய கேள்விக்கான பதிலையே நான் திரும்பவும் சொல்ல வேண்டும். இருந்தாலும் உங்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ற பதிலாக சுருக்கமாகச் சொன்னால், அரசியல் அடையாளம் இல்லாமை, இன்னும் காலனித்துவ முறைமை மறைமுகமாக தோட்ட கம்பனிகள் ஊடாக நடைமுறையில் உள்ளமை, அரசநிர்வாகத்திற்குள் முழுமையாக உள்வாங்கப்படாமை, நாட்டின் ஏனைய தேசிய இனங்களுடனான சமத்துவம் இல்லாமை, குறை அபிவிருத்தி நிலை என சொல்லிக்கொண்டே போகலாம். ஏன்னைப்பொறுத்தவைரை மலையகத்தில் தீர்க்கபட்டுள்ள பிரச்சினை 1948 ல் பறிக்கட்ட வாக்குரிமை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மாத்திரமே.
அதன் மூலம் இந்த மக்கள் ‘நாடற்றவர்’ பெயரில் இருந்து மாறியிருக்கிறார்களே தவிர நாடற்றவர் நிலையில் இருந்து மீட்சி பெறவில்லை. மலையக மக்கள் ‘இந்தியத் தமிழர்’ என இலங்கை சட்ட ஏற்பாடுகளில் இன்றுவரை பதியப்படுவது இதற்க மிகப்பெரிய உதாரணம். மற்றபடி வாக்குரிமை என்பது வாக்களிக்கும் யந்திரத்துக்கு சமமானதாகவே உள்ளது. இலங்கையின் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாக்களிக்கலாம். அவர்கள் வாக்களிப்பில் தெரிவு செய்யப்படும் பிரதேச சபையின் ஊடாக அவர்கள் வாழும் தோட்டப்பகுதிக்கு அவர்களால் சேவையாற்ற முடியாது என பிரதேச சபைச் சட்டத்தின் 33 வது பிரிவு சொல்கிறது. எனவே அந்த பிரதேச சபைக்கு மக்கள் வாக்களித்தது வெறும் இயந்திரத்தனமானதுதானே… இதுதான் இந்த மக்கள் வாக்களிக்கும் யந்திரமாகவே வாக்குரிமை பெற்றுள்ளார்கள் என்தற்கான ஆதாரம். இந்த நிலைமைகளை விளக்குவதற்கு நான் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதலாம். ஆனால் மாற்றுவதற்கு எனக்கு அரசியல் தேவைப்டுகிறது. அதுவே இந்த இலக்கியவாதிக்கு தேர்தல் அரசியல் தேவையான ஒன்றாகத் தெரிகிறது.
இந்தப்பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கலாம் என நினைக்கின்றீர்கள்?
ஏன்னைப்பொறுத்தவரை மலையக மக்களின் மேற்கூறிய பிரச்சினைகள் உரிய வகையில் இலங்கை அரசிடம் முன்வைக்கப்படவில்லை என நான் நினைக்கின்றேன். நாம் வாக்குரிமை பெற்றுவிட்ட வெற்றிக்களிப்பிலேயே வாழ்ந்து வருகிறோம். அதனைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற தேய்ந்த ரெக்கோர்டயே (recorder) தேர்தல் காலங்களில் பேசி வாக்களிக்கும் யந்திரமாக மக்களை வைத்து பாராளுமன்றம் வந்துவிடுகின்ற நிலைமையே இங்கு காணப்படுகின்றது. அபிவிருத்தி அரசியல் என வேடம்கட்டி பத்திரிகைக்கு போஸ் கொடுத்து பிரபலமாகிவிடுவதும், அந்த பிரபலங்களுக்கு மத்தியில் உரிமை அரசியல் பேசிக்கொண்டு ஒருவரும் அந்த மக்களை நாட முடியாத அளவுக்கு வழங்கல்-பெற்றுக்கொள்ளல் (giving - receiving mechanism) முறைமைக்கு மக்கள் மாற்றப்பட்டிருப்பதுமே, மலையக மக்களின் மாற்றத்திற்கான தடையாகவுள்ளது. எனவே மாற்றம் அங்கிருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும். மலையக மக்களின் பிரச்சினைகளை உரிய இடத்திற்கு உரிய முறையில் கொண்டுசெல்லப்பட்டு அதற்கு தீர்வுகள் ‘பெற்றுக்கொடுக்கப்படல்’ வேண்டும். அரசியல்வாதிகளால் தீர்வுகள் வழங்கமுடியாது. ஏனெனில் வழங்குவதற்கு கையில் ஒன்றுமே இல்லை. கேட்டுப் பெறவேண்டும். அதற்க வழிகாண வேண்டும்.
மலையக இளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்யப்போகும் திட்டம் என்ன?
அவர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது. ஏனெனில் மலையகத்தில் இன்னும் தொழிற்சங்க அரசியலே வேர்விட்டுள்ளது. அதனை தம் உழைப்பால் உதிரத்தால் கொண்டுச்செல்லும் ‘தோட்டத் தொழிலாளர் மக்கள்’ போற்றுதற்குரியவர்கள். அவர்கள் தவிர்ந்த மலையக சமூகத்தில் நிலைமாற்றம் அடைந்துள்ள மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் இந்தத் தொழிற்சங்க அரசியலில் தங்கி வாழ்பவர்களாகவே உள்ளோம். நானும் இதில் அடக்கம்.
தொழிற்சங்க அரசியல் ஊடாகவே என்னுடைய அரசியல் பிரவேசத்தை என்னால் செய்ய முடிந்துள்ளது. என் அரசியல் பிரவேசத்தின் பலமும் பலவீனமும் கூட இதுதான். தொழிற்சங்க அரசியல் ஊடாக களம் காண்பதால் அந்த சுவை மாறாமல் இயங்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். அதேநேரம் மாற்று அரசியல் கலாசாரம் ஒன்றினை எதர்பார்க்கும் நிலைமாற்றம் பெற்றுவரும் மத்தியதர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வேட்பாளராகவும் பார்க்கப்படுகின்றேன். ஆனால் அந்த மத்திய தர வர்க்கம் ஒரு அரசியல் அடையாளத்தின் கீழ் அணி திரண்டவர்களாக இல்லை. ஆயிரத்தெட்டு சங்கம் இருந்தாலும் தொழிற்சங்கம் என்ற கட்டமைப்புக்குள்ளும் அதன் ஊடான ஒரு அரசியல் ஊடாகவும் தோட்டத் தொழிலாளர் மக்கள் அணிதிரண்டுள்ளார்கள். அவர்களைச் சந்திப்பதும் பிரச்சாரம் செய்வதும் இலகுவாகவுள்ளது. அவர்கள் ஒரு வலைபின்னலுக்குள் இயங்குகிறார்கள். அதேநேரம், மாற்றம்பெற்றுவரும் மலையக மத்திய தரவர்க்கத்தினர் ஆசிரியர்களாக, தோட்ட உத்தியோகத்தர்களாக, அரச ஊழியர்களாக, இன்னும் பல தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில ஆசிரியர்கள், தோட்ட உத்தியோத்தர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. ஆனால், அந்த தொழிற்சங்கங்களிடம் தோட்டத் தொழிலாளர்களைப் போன்ற அரசியல் பரிமாணம் இல்லை. அரசியல் செயற்பாடுகளில் ‘கட்சிகளாக’ தங்களை அடையாளப்படுத்தாமல் ஒரு அணியாக (Team என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்) அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த அணிகளை (Team) அரசியல் மயப்படுத்த வேண்டியுள்ளது. மாற்றம் வேண்டிநிற்கும் மலையக அரசியலில் செய்யப்படவேண்டிய முதற்பணி இது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...