பெருந்தோட்டத்துறை தேசிய மயமாக்கப்பட்ட பின்னரும், தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னரும் பயிர்ச் செய்கை தொடர்பில் அண்மையில் வெளியாகியிருந்த சில கருத்துக்களுக்கான விளக்கங்களை வழங்க பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது.
பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் இலங்கை அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்கள் (SLSPC) ஆகியன மலையக அபிவிருத்தி (USA WASAMA) மற்றும் இளைஞர் அபிவிருத்தி (JANA WASAMA) ஆகியவற்றுடன் இணைந்து 130,000 ஹெக்டெயர் தேயிலை, 64,000 ஹெக்டெயர் இறப்பர் மற்றும் 22,000 ஹெக்டெயர் தென்னை செய்கைகளை மேற்கொண்டிருந்தன. இவற்றின் மூலமாக மொத்தமாக 400 தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. நாட்டின் 450,000 பேருக்கு தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
பெருந்தோட்ட அமைச்சின் தரவுகளுக்கு அமைவாக, 1980களின் பிற்பகுதியில், பொதுத் துறையின் முகாமைத்துவத்தின் கீழ் பெருந்தோட்டங்களின் வினைத்திறன் எய்தப்பட முடியாது என்பதில் பல அரசாங்க அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். இதன் காரணமாக அவை மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டனர். இரு ஸ்தாபனங்களும் தொடர்ச்சியாக இழப்புகளை பதிவு செய்திருந்தன. அரசாங்கத்தின் கீழ் இயங்கிய மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் இலங்கை அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்கள் (SLSPC) ஆகியன சுமையாக மாறத்தொடங்கின. 1992 ஆம் ஆண்டளவில் இரு ஸ்தாபனங்களின் இழப்புகள் 1.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தன. அமைச்சரவை தலைமையின் கீழ் நெவில் பியதிகமவின் மேற்பார்வையில் இயங்கிய குழுவின் மூலமாக, மாதமொன்றுக்கு திறைசேரியின் மூலமாக 400 மில்லியன் ரூபா அரசாங்க பெருந்தோட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய தேவை காணப்படுவதை உறுதி செய்திருந்தது.
1992 இல், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் இலங்கை அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்கள் (SLSPC) ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் 23 பெருந்தோட்டக் கம்பனிகளாக கம்பனிகள் சட்டம் இல. 17இற்கமைய மாற்றப்பட்டன. பெருமளவான அரச உரிமையாண்மையைப் பெற்ற பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்துக்கு பெரும் சுமையாக திகழ்ந்த பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் துறைக்கு வழங்கப்பட்டது.
அரசாங்கத்திடமிருந்து பெருந்தோட்டங்களை தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்ற போது மேற்கொள்ளப்பட்ட குத்தகை உடன்படிக்கையில், வருடாந்தம் மீள் பயிர்ச்செய்கை செய்யப்பட வேண்டிய அளவு பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. தேயிலை ஆராய்ச்சி கல்வியகம், பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்டத்துறையின் நீண்டகால உரிமையாளர்கள் ஆகியோர் மத்தியில் இடம்பெற்ற உரையாடல்களின் பிரகாரம் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் மூன்று சதவீத மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதை தேயிலை ஆராய்ச்சி கல்வியகமும் உறுதி செய்திருந்தது. தற்போதைய செலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமதிகள் போன்றவற்றை பொறுத்து, மீள் பயிர்ச்செய்கை என்பது எவ்வகையிலும் பொருளாதார ரீதியில் சகாயமானதாக அமைந்திருக்கவில்லை.
வரையறைகள், இறுக்கங்கள் மற்றும் இடர்களை பல ஆண்டுகளாக பெருந்தோட்டங்கள் எதிர்நோக்கிய போதிலும், பெருந்தோட்டக் கம்பனிகள் மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதிகளை நேர்மையான விதத்தில் முன்னெடுத்து வருகின்றன.
1992இல் தனியார்மயப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமது ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டங்களில் வசிக்கும் சமூகங்கள் மீது காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு மேலாக, சதவீத அடிப்படையில் கருத்தில் கொள்ளும்போது, பெருந்தோட்டக் கம்பனிகள், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மீள் பயிர் செய்ததைவிட அதிகளவாக மீள் பயிர்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள் தமது (VP) ரக தேயிலை செய்கை பிரதேசத்தை 26 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளனர்.
பெருந்தோட்டக் கம்பனிகள் இந்த (VP) ரக தேயிலை பயிரிடப்பட்ட பிரதேசத்தை 35 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. இது அண்ணளவாக 10 சதவீத அதிகரிப்பாகும். எனவே, வருடாந்தம் பெருந்தோட்டக் கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் மீள் பயிர் செய்கைகளின் அளவு அதிகமாக அமைந்துள்ளது.
பெருந்தோட்டக்கம்பனிகள் மூலமாக தேயிலைச் செய்கை மட்டுமே முன்னெடுக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. இவற்றின் மூலமாக இறப்பர் மற்றும் பாம் ஒயில் செய்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 2000 முதல் 2012 வரையிலான கடந்த 12 வருட காலப்பகுதியில், பெருந்தோட்டக்கம்பனிகள் மூலமாக 48,086 ஹெக்டெயர்கள் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது மொத்த இறப்பர் செய்கையின் 98 சதவீதமாகும். மேலும், 20,000 ஹெக்டெயர்கள் வணிக எரிபொருளுக்கான மரங்கள் செய்கை செய்யப்பட்டிருந்தன. அத்துடன், 7000 ஹெக்டெயர் ஒயில் பாம் மற்றும் கறுவா, தென்னை, கோப்பி, பழங்கள், டென்ரோ மரங்கள், சமூக வனாந்தர கட்டமைப்புகள், ஓர்னமென்டல் மரங்கள், பெறுமதி வாய்ந்த மரங்கள் மற்றும் இதர பயன்தரும் மரங்கள் போன்றன செய்கை பண்ணப்பட்டிருந்தன.
துறைசார்ந்த இடராக, ஏல விற்பனைகளின் போது ஆகக்குறைந்த விலைகள் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 1992இல் காணப்பட்ட தினசரி சம்பளம் மற்றும் தேயிலை விலை ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை விட தற்போது குறைவாக அமைந்துள்ளன. உயர் மட்ட தேயிலையின் சராசரி விலை கிலோ கிராம் ஒன்றுக்கு 660 ரூபாயாக அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் மூலமாக தேயிலை மற்றும் இறப்பர் சிறு செய்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் நிவாரணங்கள் மற்றும் உத்தரவாத விலைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், முக்கியமான செய்கையாளர்களாக பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எவ்விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை.
இதன் மூலமாக பெருந்தோட்டக்கம்பனிகளின் கீழ் வசிக்கும் 1 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், குறித்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ள போதிலும், எவ்விதமான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.
1992 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014 இல், மொத்த உற்பத்தி வீதத்தை 12 சதவீதத்தால் பெருந்தோட்டக் கம்பனிகள் அதிகரித்துள்ளன. இது கம்பனிகளின் வினைத்திறனான செயற்பாட்டை உறுதி செய்கின்றன. எனவே, கம்பனிகள் மீது சுமத்தப்பட்டிருந்த முறைப்பாடுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்பது உறுதியாகின்றன.
நன்றி - வீரகேசரி 02.08.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...