Headlines News :
முகப்பு » » மீண்டும் முருங்கை மரம் ஏறி விடக்கூடாது - ஜே.ஜி.ஸ்டீபன்

மீண்டும் முருங்கை மரம் ஏறி விடக்கூடாது - ஜே.ஜி.ஸ்டீபன்


அம்புலிமாமா எனும் சிறுவர் சித்திரக் கதைப்புத்தகத்தில் விக்கிரமாதித்தன் என்னும் பாத்திரமொன்றை உருவகித்து சிறுவர்களை மட்டுமல்லாது பெரியோரையும் குஷிப்படுத்தும் ஒரு முடிவில்லாத் தொடர் கதையொன்று பற்றி புதிதாகக் கூறுவதற்கில்லை. யாவரும் அதுபற்றி அறிவர். இதில் என்ன புதினம் என்றால் கதை கூறும் வேதாளம் எல்லா சந்தர்ப்பங்களிலுமே பொடிவைத்து விடுகதை கூறி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதைப் போன்று முடிந்திருக்கும். ஆனால் அது முற்றுப்பெற்றிருக்காது. இன்று வரையில் அந்தக் கதையின் இறுதியில் முற்றும் என்ற வார்த்தை பிரசுரமானதே கிடையாது.

இந்தக் குட்டிக் கதைக்கும் நமது மலையகத்தின் அரசியல் வரலாற்றுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் புலனாகிவிடும். இங்கு கூறவருவது என்னவென்றால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடாது என்பதாகவே இருக்கின்றது. இங்கு சுட்டி நிற்கின்ற சொற்றொடரானது கதையில் வருகின்ற வேதாளமானாலும் சரி நமது மலையக அரசியலானாலும் சரி இரு தரப்புக்குமே பொருந்த வேண்டியது தான். சரி இனி விடயத்துக்கு வருவோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 17 ஆம் திகதி திங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை வரையான காலப்பகுதி வரையில் நாடு முழுதும் இருந்து வந்த படபடப்பு, பதற்றம் எல்லாமே நிறைவுக்கு வந்துவிட்டன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் முதலே உஷாரான மலையகத் தலைமைகள் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தம்மைத் தயார்படுத்திக் கொண்டன. இவ்வாறு தயார்படுத்தல்களின் பயனாக அமைந்ததே ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமைந்து விட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி மறுபுறத்தில் மலையகத்தின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டமையை பாராட்டாமல் அல்லது வரவேற்காமல் இருந்துவிடமுடியாது.

நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட கூட்டணி கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் என்ற வகையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இங்கு சுயநலம் ஒன்று புதைந்து கிடந்தாலும் கூட பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாராளுமன்றத்துக்குள் மலையகத்தின் குரலை ஓங்கச் செய்வதற்கும் இத்திட்டம் வழிவகுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

அது மாத்திரமின்றி சரியான வழியில் சந்தர்ப்பங்களை உருவாக்கி தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய முத்தரப்புக்களும் தங்களது கட்சி அரசியலையும் அதன் இருப்புக்களையும் பலப்படுத்திக் கொண்டுள்ளன என்று கூறுவது பொருத்தமாகிறது.

எனினும் மலையகத்தின் நீண்ட தொழிற்சங்க, அரசியல் வரலாற்றினைக் கொண்டு இயங்கி வருகின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சாணக்கியமான தீர்மானங்களை மலையகத்திலும் மத்திய அரசிலும் காய் நகர்த்தி வந்தமை கண்கூடாக இருந்த போதிலும் அண்மைக்காலத் தீர்மானங்கள் அக்கட்சியின் அல்லது அத்தொழிற்சங்கத்தின் முன்நோக்கிய பயணங்களுக்கு பெரிதாக பாதையமைக்கவில்லை. இதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிப் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டிருப்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். நிலைமை இவ்வாறு அமைந்துவிட்டதால் எதிர்காலம் இன்னுமின்னுமாய் சவால்கள் நிறைந்தனவாகவே இருக்கப் போகின்றது. எனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்த வரையில் தலைமை முதல் கீழ்மட்டம் வரையிலானோர் தவறுகளை தேடி அறிந்து அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மலையகத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தி வருகின்ற மலையகத்தை சாராத சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஒருவர் முன்னொரு காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் அதன் தலைமைகளையும் சீண்டிப்பார்த்து அரசியல் செய்தார். ஊடகம் எனும் புனித ஆயுதத்தைக் கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் தன்னையும் கீரியும் பாம்புமாக உருவகித்துக் கொண்டவர். 2010 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் புண்ணியத்தில் பாராளுமன்றம் வருவதற்கே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை கடுமையாக சாடிவந்தார்.

இம்முறை அவரது சந்தர்ப்பவாத அரசியல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் படம் பிடித்துக்காட்டப்பட்டு விட்டதால் அங்கு அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இதனால் பச்சோந்தியைப் போன்று உடனடியாகவே நிறம் மாறி ஆறுமுகம் தொண்டமானின் காலில் விழ அவரும் ஒரு புறத்தில் மனமுருகி மறுபுறத்தில் தனது சுயநலம் கருதியவாறு அதாவது குறித்த ஊடகத்தின் மூலம் தனது கட்சிக்கு பிரசாரம் கிடைக்குமே என்ற நப்பாசையில் காலில் விழுந்த அந்த சந்தர்ப்பவாதியை தலையில் தொட்டு ஆசிர்வதித்துள்ளார்.

இவ்வாறு ஒரு சந்தர்ப்பவாதியுடனான அரசியல் உறவு அதன் பின்னர் அந்த சந்தர்ப்பவாதியால் நடத்தப்பட்ட ஊடக நாடகம் அனைத்தும் நுவரெலிய மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் அதே நேரம் மலையக மக்கள் முன்னணிக்கும் சாதகமாய் அமைந்து விட்டன.

அது மாத்திரமின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரப் போராட்டங்கள் என்று எல்லா அம்சங்களுமே கைகொடுக்காது போய் விட்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இதுவே முடிவல்ல. நிச்சயமாக மீண்டும் வர முடியும். மக்களின் மனங்களில் குடிகொள்வதற்கு இ.தொ.கா. இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. செயற்பட வேண்டியுள்ளது. சிறந்த சிந்தனையுடன் செயற்பட்டு அதனை வெற்றி கொள்ள வேண்டுமானால் அக்கட்சியின் உயர் மட்டத்தினர் தமது வறட்டுக் கௌரவங்களை சற்று ஓரம் கட்டி அனைத்து தரப்பினரதும் உள்ளங்களை வெல்வதற்கு செயற்பாட்டு ரீதியில் காய்களை நகர்த்துவது அவசியம். இது ஒரு புறம் இருக்க இரண்டு உறுப்பினர்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றுத் தரப்புக்கள் மீது பொறாமை கொள்வதையோ அல்லது மலையகத்தில் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு விட்டோமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் இறுமாப்புக் கொண்டு செயற்படுவதையோ தவிர்த்துக் கொள்வது மக்களுக்கு நன்மை பயப்பதாய் இருக்கும்.

சரி தேர்தல்கள் முடிவுற்றுள்ளன. இதில் வெற்றி தோல்வி ஏற்றுக் கொள்ளச் கூடியவைதான் என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்.யோகராஜன், பி.இராஜதுரை, எம்.உதயகுமார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட அனுஷியா சிவராஜா, மற்றும் எஸ்.சதாசிவம் ஆகியோர் தோல்வியடைந்தமை, மலையக மக்களின் பின்னடைவை சுட்டி நிற்கிறது எனலாம். எப்படி இருப்பினும் இன்று மலையகத்தில் எட்டு தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இவர்களுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தெரிவாகியுள்ள நிலையில் கூட்டணிக்கு கிடைத்துள்ள உறுப்பினரூடாக பத்து உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் மலையக மக்களின் தமிழ் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் 9 பேர் இணைந்திருப்பர். இது மலையக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.

8 மாதகால போராட்டத்தின் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் அடுத்துவரும் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் செய்யப்போவது என்ன என்பது பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தேர்தல் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் காதுகள் குளிரவும் நுனி நாக்கில் எச்சில் ஊறுமளவிற்கும் கதை கூறி வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் அதனை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

கொடுத்த வாக்குறுதிகள் என்னவென்றும் உறுதிமொழிகள் எத்தகையவை என்றும் வாக்களித்த மக்கள் அறியாமல் இல்லை. மக்கள் அறிந்து புரிந்து வைத்துள்ளார்களோ இல்லையோ மலையக இளைஞர், யுவதிகளும் மலையகத்தினின்று தொழில் நிமித்தம் தூரப்பிரதேசங்களில் தங்கி வாழும் இளைஞர், யுவதிகளும் மலையத்தின் புத்திஜீவிகள் சமூகமும் மிக அழுத்தமாக பதிந்து வைத்துள்ளனர். போதாதற்கு ஊடகங்களும் முறையாக பட்டியலிட்டு பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஆகையால் வாக்குறுதி அளித்தவர்கள் எவராக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர். இதிலிருந்து கடந்து சென்றுவிட முடியாது.

இதனைக் குறிப்பிட்டு கோடிட்டுக் கூறுவதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள விவகாரமாகும். இப்படியொரு அதிகரித்த சம்பளத் தொகையை தேர்தலின் பின்னர் பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியிருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்து வந்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள், நல்லாட்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்களுக்கு மேற்கண்டவாறு சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் கூறி வாக்கு கேட்டனர். அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்களும் வாக்களித்துள்ளனர். அப்படியானால் இந்த முதலாவது வாக்குறுதி நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான 1000ரூபா சம்பளம் கிடைக்கப் பெறுமாயின் இன்றைய மலையக தலைமைகள் மீது தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். அடுத்ததாக 7 பேர்ச் காணியுடனான தனிவீட்டுத் திட்டம், பல்கலைக்கழகம், விஞ்ஞானக் கல்லூரிகள், ஐம்பதாயிரம் வேலைவாய்ப்பு என அடுக்கிச் செல்ல முடியும்.
தேர்தல் முடிந்த கையோடு இவற்றையெல்லாம் செய்துவிட முடியுமா என்ற கேள்வியை கேட்டு எவரும் தப்பித்துச் செல்ல முற்பட கூடாது. இன்னும் ஒரு மாதமளவிலான காலத்தை செலவிட்டேனும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு எனும் வாக்குறுதி நிறைவேற்றியாகப்பட வேண்டும். இதற்கு எந்தவிதமான காரணங்களையும் கூற முடியாது.

சம்பளப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியடைந்தாலோ எதிரும் புதிருமாக இருக்கின்ற இரு சாராருக்குமே பாதிப்பு என்ற காரணத்தினாலேயே அது தேர்தல் முடியும் வரையில் பிற்போடப்பட்டது. அத்தகைய கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இவ்விடயத்தில் தாமதத்துக்கும் இழுத்தடிப்புகளுக்கும் இடமளிக்க முடியாது.

வீடமைப்புத் திட்டம், காணி உறுதி, வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதிகளும் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. இவை உடனடியாக மேற் கொள்ளப்படக் கூடியவையல்ல என்பதால் அதற்கான முன்னெடுப்புகள், காய்நகர்த்தல்கள் குறித்தேனும் வாக்குறு தியளித்தவர்கள் சிந்திப்பது சிறந் தது. மொத்தத்தில் மக்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண் டும்.
கடந்த கால அரசியல் களம் வேறு, சமகால அரசியல் களம் வேறு என்பதை மக்கள் இன்று நன்கு உணர்ந்து விட்டனர். எனவே மக்களை மடையர்களாக நினைத்து ஏமாற்றி விடலாம் என்று எவராவது நினைத்தால் இறுதியில் மக்கள் ஒன்றிணைந்து ஏமாற்றிவிடுவார்கள் என்பது திண்ணம்.

மேலும் தற்போது தேசிய அரசாங்கம் எனும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. தனிக்கட்சியொன்றினால் அமைக்கப்படும் அரசாங்கத்துக்கும் தேசிய அரசாங்கத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றமையால் மலையக அரசியல்வாதிக ளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் சாத்தியமாகப் போகின்றன என்றதொரு கேள்வியும் எழுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அது மலையகத்தில் எத்த கைய தாக்கத்தினை ஏற்படுத்தப் போகிறது என்பதும் அச்சத்துக்குரியதாகவே உள்ளது.

எப்படியிருப்பினும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத் துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் கள் மலையகம் சார் தேவைப்பாடுகள் தொடர்பில் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் இருப்பார்களாயின் சாதிப்பது இலகுவாகிவிடும்.

பாராளுமன்றத்துக்கு வெளியே கட்சி, தொழிற்சங்க அரசியலை எப்படி வேண்டுமானாலும் மலையகத் தலைமைகள் நடத்திக் கொள்ளட்டும். ஆனால், பாராளுமன்றத்திற்குள் தாம் அனைவரும் மலையக மக்களின் பிரதிநிதிகள் என்பதை நிரூபிக்கத் தவறக்கூடாது. அப்படியொரு எண்ணத்தை விதைத்துக் கொள்வதற்கு மலையகத் தலைவர்கள், பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குள் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பினதும் முஸ்லிம்களினதும் சிங் களவர்களினதும் செயற்காரியங்களை உதாரணங்களாக கைக்கொள்வது நன்மையாக இருக்கும்.

இதேவேளை பதுளை மாவட்ட த்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தான் பாரா ளுமன்றத்துக்கு செல்வதா அல்லது மாகாண சபையிலேயே அமைச்சராக நீடிப்பதா என்ற தோரணையில் தெரி வித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு சென்று எம்.பி.யாக அமர்ந்திருப்பதை விடுத்து மாகாண சபையில் அமைச்சராக இருக் கலாமே என்பது அவரது கணக்கு. எனினும் பாராளுமன்றத்துக்கு தெரி வாகிய அவர் அங்கு செல்லாது அதனை தவிர்த்து விடுவாரேயானால் பாராளுமன்றத்தில் மலையகப் பிரதி நிதியொருவர் குறைவடைவதாக ஆகிவிடும்.

அது மாத்திரமன்றி வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் பட்டி யலில் உள்ள சிங்கள உறுப்பினர் ஒருவரே பாராளுமன்றம் செல்வதற்கு ஏதுவாகிறது.

பதுளை வாழ் தமிழ் மக்களின் வாக் குகளைப் பெற்று பாராளு மன்றத் துக்குக் தெரிவானதன் பின் னர் அதனை சிங்கள உறுப்பினர் ஒரு வருக்கு தாரைவார்ப்பது சவால்களை எதிர்கொண்டு வாக்களித்த மக்களு க்கு இழைக்கும் அநீதி மட்டுமல்லாது துரோகமாகவும் ஆகிவிடும்.

அவ்வாறு இடம்பெற்று விடக் கூடாது. தாம் செல்ல விரும்பாத பாரா ளுமன்றத்துக்கு பட்டியலின் அடிப் படையில் தமிழ்ப்பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாரேயானால் அதில் எந்தத் தவறும் இருக்க முடி யாது. எனினும் தமிழ் மக்களின் வாக்குகளால் கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவி சிங்களவர் ஒருவருக்கு தாரை வார்க்கப்படுவது பதுளை மண்ணில் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறா கிவிடும். எனவே இது குறித்து தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் இன்னும் ஆழமாக சிந்திப்பது மக்களிடத்தில் செல்வாக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும். மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தளவு அதிகரித்த வாக்குகளைப் பெற்ற நான் தலைக்கணமாக செயற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்றினை ஏனைய உறுப்பினர்களும் ஏற்று கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

20 வருடகங்களின் பின்னர் கண்டி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்றிருக் கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பதுளையில் கிடைக்கப்பெற்றுள்ள இரு பிரதிநிதித்துவங்கள் உள்ளிட்ட பிரதிநிதித்துவங்களுக்கு சொந்தமானவர்கள் காலத்துக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு இடங்களையே பெற்றுக் கொண்டுள்ளது என்றும் தாம் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்றும் மலையத்தில் எவரும் பெருமை பேசமுடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளனவே தவிர இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது ஒரு புறமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் பிரதான பாத்திரத்தினை வகித்தவராவார்.

பதுளை மாவட்டத்தில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருந்த நிலையிலேயே அவரது பசறை தேர்தல் தொகுதியும் வெற்றி பெற்றுள்ளது. தனது தொகுதியை ஐ.தே.க.வுக்கு பெற்றுக் கொடுத்த கே.வேலாயுதம் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் இறுதியில் அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பது பதுளை வாழ் தமிழ் மக்களுக்கும் பசறை தொகுதி மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேசிய பட்டியலில் இடம்வழங்குவது என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே வேலாயுதம் பதுளை மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலில் தவிர்க்கப்பட்டிருந்தார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் வேலாயுதத்தை தேசியப்பட்டியலில் இணைத்துக் கொள்வதே ஐ.தே.க. தலைமையின் எண்ணமாக இருந்தது.
வேலாயுதம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருப்பின் அவரை தேசிய பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியாது. அதேவேளை வடிவேல் சுரேஷ் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அவருக்கு மாகாண அமைச்சுப்பதவி உள்ளவாறே இருத்திருக்கும். எனினும் தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் அனைத்துக் கணக்குகளும் தற்போது தப்பாகிப் போய் விட்டன.

இன்றைய நிலையில் பதுளை மாவட்டத்திலிருந்து இரு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாலேயே மேலும் ஒரு தமிழ் உறுப்பினரை உட்சேர்ப்பதில் இழுத்தடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது இப்படி இருக்க தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியில் ஆசனம் ஒன்று கிடைக்கப் பெறவிருந்த போதிலும் கூட்டணியின் தவறான அணுகுமுறைகளினாலேயே அந்த சந்தர்ப்பமும் கைநழுவிப் போயுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறாக பதுளையில் அ.அரவிந்தகுமார் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருப்பதாலேயோ அல்லது வேறு காரணங்களாலேயோ தேசியப்பட்டியல் உறுப்பினர் இடம் கைநழுவிப் போய்விடவில்லை. எப்படியிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டியலில் 13 இடங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் சிறுபான்மையினருக்கென 5 இடங்களையேனும் ஒதுக்கியிருப்பின் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனாலும் தவிர்க்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் ஆதங்கத்தையும் கவலையையும் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. இதன் விளைவுகள் எவ்வாறு அமையப் போகின்றன என் பதை பொறுத்திருந்தே பார்க்க வேண் டியுள்ளது.

எது எப்படியோ ஒட்டுமொத்த மலை யகமும் இன்று உற்று நோக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சகல தரப்பினரும் உணர்ந்து கொண்டால் சரி.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates