Headlines News :
முகப்பு » » மலையக மக்களின் அவலம் விற்று நிரப்பப்படும் அரசியல் இடைவெளி ஆபத்தானது - எம்.திலகராஜ்

மலையக மக்களின் அவலம் விற்று நிரப்பப்படும் அரசியல் இடைவெளி ஆபத்தானது - எம்.திலகராஜ்


அரசியல் தர்மத்தையும், ஊடக தர்மத்தையும் ஏன் மனிதத் தர்மததையம் மீறி மலையக மக்களின் அவலம் தினமும் விற்கப்பட்டுக்கொண்டிருக்கையில் முகநூலில் மாத்திரம் வீரா வசனம் பேசிவிட்டு என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. இந்த அரசியல் இடைவெளியை  நிரப்பி குறைந்த பட்சம் நமது மலையக அவலம் விறக்கப்படுகின்றது என்பதை உலகுக்கு சொல்வதற்கும் அவ்வாறு அவலம் விற்கும் வியாபாரிகளின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசத்தை நமது மக்களின் தெரிவின் ஊடாக தடுக்கும் நோக்கிலாவது நாம் இந்தக் களத்தில் இறங்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்  என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியில் தொழிலாளர் முற்போக்கு கூட்டணில் போட்டியிடும் வேட்பாளர் எம்.திலகராஜ்  இது தொடர்பில் அவர் எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் நேர்காணல் வடிவில்,
(வீரகேசரியிலிருந்து நன்றியுடன்)

மலையக அரசியலில் படித்தவர்களின் வருகை மிகவும் குறைவாக இருக்கின்றது அதற்கு பிரதான காரணம் என்ன ?

தலைமைத்துவப் பண்புக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை. பாடத்திட்டங்களை படித்து பாடமாக்கி விடை எழுதி பரீட்சையில் சித்திபெற்று படித்தர் பட்டம் சுமந்துவிடுவதனால் மாத்திரம் தலைவர்களாகிவிட முடியாது. தலைவர்கள் இயல்பாகவே தோன்றுகிறார்கள். சிலர் பரம்பரை காரணங்களால் தலைவர்களாகி விடுகிறார்கள். சிலர் பயிற்சியினால் தலைமத்துவத்தை அடைகிறார்கள். நாம் படிக்காத மேதைகளாக சில நல்ல தலைவர்களை இந்த உலகததில் பெற்றிருக்கிறோம். உதாரணமாக பெரியாரை, பெருந்தலைவர் காமராஜர் தமிழ்ச்சூழலில் சொல்லலாம். மலையகத்தில்  அரசியல் பரப்பின் ஆரம்ப கர்தாக்கல் எல்லாமே கற்றோர்தான். மலையக தொழிற்சங்க பிதாமகர் ஒரு ஊடகவியலாளரான கோ.நடேசய்யர், கூடவே துணைவந்த மீனாட்சியம்மையார் ஒரு கவிஞர். அவர்தான் ஈழத்தின் முதலாவது பெண் கவிஞரும் கூட. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் கே.ராஜலிங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் ஜனாப் ஏ.ஏ.அஸீஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத்தலைவர் வி.கே.வெள்ளையன், அதன் ஆலோசகர் சி.வி வேலுப்பிள்ளை போன்றவர்கள் உயர்ந்த கல்விப்புலம் மிக்கவர்கள். மலையக மக்கள் முன்னணி உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது முழுக்க மலையக கற்றோர் சமூகம்தான். வி.டி தர்மலிங்கம், பி.ஏ.காதர், மு.சிவலிங்கம், அ.லோரன்ஸ், மெய்யநாதன், செல்வராஜா, சந்திரசேகரன் போன்று அணிதிரண்ட கல்விச் சமூமகம்தான் அத்தகைய ஒரு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்துள்ளார்கள்.

ஆனால், இந்த கற்றோர் சமூகம் முன்னிறுத்திய அரசியல் செல்நெறி தொழிற்சங்கம் சார்ந்தது. ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணி அந்த செல்நெறி அல்லாத அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்ப முயன்ற போதும் பின்னாளில் அதுவும் தொழிற்சங்க அரசியலுக்குள் தள்ளப்பட்டது. இந்தத் தொழிற்சங்க அரசியலில் தங்கியிருக்கும் நிலைமைதான் கற்றோரை மலையக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியது. அதேநேரம் ஒதுங்கவும் செய்தது. இவை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை. இதைப்பற்றி விரிவாக பேசலாம். 

அரசியலில் கல்விமான்களின் பிரவேசத்தின் மூலம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முடியுமா?

இன்றைய நிலைமையில் 15 லட்சம் மலையக மக்கள் வாழ்கிறோம். இவர்களில் இரண்டு லட்சத்தை விட குறைவானவர்களே தோட்டத் தொழிலாளர்கள். மிகுதியில் மூன்று லட்சத்தை மாணவர் பருவத்தினருக்கும் இரண்டு லட்சத்தை வயோதிபர்களுக்கும் ஒதுக்கிவிட்டுப்பார்த்தால் மிகுதி எட்டு லட்சம் யார் எனும் கேள்வி எழுகிறது. இந்த வகுதிக்குள்தான் ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள், வர்த்தகர்கள், தோட்ட சேவையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், வீட்டுவேலை செய்வோர், வெளிநாட்டு வேலை செய்வோர் என நிலை மாற்றம் (வுசயளெகழசஅநன) பெற்ற மலையக சமூகம் வாழ்கிறது.

ஆக இன்றைய நிலையில் நாம் சிந்தக்க வேண்டிய விடயம் 15 லட்சம் பேரில் 50 சதவீதமாக  இருக்கும் இந்த சமூகம் தன்னுடைய அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளதா? 10 சதவீதமாகவுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்திய அளவுக்கு 50 வீதத்துக்கு மேற்பட்டதான நிலைமாற்றம் பெற்ற மலையக சமூகம் தன்னை அரசியல் மயப்படுத்தியுள்ளதா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. தோட்டத்தொழிலாளி  தனது நாட்கூலியில் சந்தா செலுத்தி உருவாக்கியிருக்கும ‘தொழிற்சங்க கட்டமைப்பு’ (அது எத்தனை நிறமாகவும் ,ருந்துவிட்டுப்போகட்டும்) தான் மலையக அரசியலைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. அதில் இருந்து உருவாக்கப்படும் அரசியல் தலைவர்களின் இலக்கு அந்த தொழிலாளர் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிமடுப்பதுதான். அதனை நிறைவேற்றுவததான். அந்த அரசியல் வாதிகளிடம்தான் எஞ்சியிருக்கம் எட்டு லட்சம் மலையக சமூகம் தனது அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோருகின்றது. இதன் மூலம்  தொழிற்சங்க தலைவர்களின் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த சுமையை தொழிலாளர்களின் தலையில் இறக்கி வைக்கிறார்கள்.

இந்த ஒட்டுமொத்த மலையக சமூகத்தின் சுமையை தாங்க முடியாமல் ‘தோட்டத் தொழிலாளி’ கூனிப்போயுள்ளான். எனவே இன்றைய மலையகத்தின் அரசியல் அவல நிலைக்கு யார் காணம் என்பது தெட்டத் தெளிவு. சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் தலைவர்கள் உருவாகின்றபோதும் அவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றபோதும் அவர்கள் தலைவர்களாக மதிக்கப்படும் கலாசாரம் இங்கு காணப்படவில்லை. மாறாக தேர்தலில் நின்று வாக்கு கேட்டு வெற்றிபெற்றுவிடும் எவரையும் நாம் தலைவர்களாக கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு கலாசாரம் வளர்ந்து விட்டிருக்கிறது. இதனால்தான் எழுதிக்கொடுத்தததுபோல் ஒரு குடும்பத்தில் இருந்து மட்டும் நமக்கு தலைவர்கள் ‘தருவிக்கப்படுகிறார்கள்.’. நம்மில் தலைவர்கள் உருவாகிறார்கள் இல்லை. மீறியும் உருவாகுவோர் அங்கீகரிக்கப்படுவதுமில்லை.

 இந்த நிலையில் பல படித்தவர்கள் ஏதேனும் ஒரு கட்சியில் எப்படியாவது வேட்பாளராகி தலைவர் புகழ்பாடி அரசியல்வாதிகளாகிவிட்டு அங்கிருந்து என்ன செய்வதென்று தெரியாமல் ஆண்டுக்கொரு கட்சியென்று வருடந்தோறும் தலைவர்களை மாற்றி புகழ் பாடி இறுதியில் இன்னுமொருவடிவில் மீண்டும் வேட்பாளராகி விடுகிறார்கள்.

எனவே மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வராமல் இல்லை. கற்றோர் வராமல் இல்லை. அந்த படித்தவர்கள் தங்களது சிந்தனையிலான கருத்துக்களை முன்வைத்து தங்களது அரசியலை முன்வைத்து வர வேண்டும். அப்போதுதான் மாற்றம் வேண்டிநிற்கும் மலையகத்துக்கான தலைமை வெளிப்படும்.

இந்நிலையில் நீங்கள் ஏன் பிரவேசித்தீர்கள்?

ஒரு முயற்சிதான். மேற்சொன்ன எனது சிந்தனைகள் கூட நான் தேரதல் வேட்பாளராகுவதன் மூலம்தான் பேச முடிகிறது என்ற  காரணத்தினாலும் ,ந்தக் களத்தில் ,றங்கியிருக்கிறேன். நாம் ஒன்றும் செய்யவில்லை என்பதை விட ஒன்றைச் செய்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதை விட தவறு என நினைக்கிறேன். மலையக அரசியலில் ஒரு  இடைவெளி இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்த இடைவெளியை மலையகத்தவர் இட்டு நிரப்பாததால், கட்சி வைத்து அரசியல் நடாத்த தயக்கம் காட்டுவதால் தொலைக்காட்சி வைத்து ‘தனிநபர்’களால் மலையகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்து விட முடிகின்றது. மலையகத்தில் அரசியல் இடைவெளி இருக்கினறது என்பதனை ,தனைவிட பெரிய உதாரணம் காட்டி விளக்க முடியாது.

 அரசியல் தர்மத்தையும், ஊடக தர்மத்தையும் ஏன் மனிதத் தர்மததையம் மீறி மலையக மக்களின் அவலம் தினமும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கையில் முகநூலில் மாத்திரம் வீரா வசனம் பேசிவிட்டு என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. இந்த அரசியல் இடைவெளியை நிரப்பி குறைந்த பட்சம் நமது மலையக அவலம் விற்கப்படுகின்றது என்பதை உலகுக்கு சொல்வதற்கும் அவ்வாறு அவலம் விற்கும் வியாபாரிகளின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசத்தை நமது மக்களின் தெரிவின் ஏடாக தடுக்கும் நோக்கிலாவது நாம் இந்தக் களத்தில் இறங்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கி அதனைச் செய்திருக்கிறேன்.

 நான் நேற்றுதான் திடீர் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் வேட்பாளனாக முளைக்கவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில்; ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் என்னுடைய பெயர் இருந்ததை பலரும் மறந்து விட்டார்கள். தொழிலாளர் தேசிய சங்கத்தை 2006ம் ஆண்டு மீளுருவாக்கம் செய்ததில் எனது பங்களிப்பு மறக்கப்பட்ட நிலையில் அதனையும் தாண்டி இந்த வேட்பாளர் தெரிவில் எனது பெயரை இணைத்துக்கொண்டமை எனது ஆளுமையும் பொறுமையும் சகிப்புதன்மையும்ததான்.

இன்று நுரெவலியா மாவட்டத்தில் களத்தில் இருக்கும் ஏனைய ஒன்பது தமிழ் வேட்பாளர்களும் யார்? அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள். இந்த ஒன்பது பேரின் பட்டியலில் நான் ‘ஒன்றும்’ இல்லாதவன். இதுநாள்வரை பிரதேச சபை தேரதலில் கூட போட்டியிடாதவன். அதேநேரம் பிரதேசசபை முதல் பாராளுமன்றம் வரை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக வாக்குகேட்டு அரசியல் செய்ய முன்வந்த அத்தனை பேருக்கும்; ஓடி ஓடி வாக்கு கேட்டு அவர்களை வெற்றிபெறச் செய்திருக்கிறேன். அவர்களது விருப்பு இலக்கம் பெற்றுக்கொள்வதில் இருந்து பிரசார உத்திகளை வடிவமைப்புதுவரை பல தளங்களில் செயற்பட்டுள்ளேன். அந்த அனுபவ அரசியலில் எனக்கு 15 வருட அனுபவம் இருக்கிறது. இதனை நானே சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். எனது தயவில் தேர்தல்வென்றவர்கள் என்னை தோற்கடிக்க திட்டம் போட்டாலும் எனது ‘மனதர்ம’த்தின் அப்படையில் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்வார்கள் என நம்புகிறேன். எனக்கு ‘பணதர்மம்’ செய்யும் சக்தியில்லை.

இந்த பின்புலங்களை அறிந்துகொண்டிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் என்னை இந்த தேர்தல் களத்தில் கட்சியின் இரண்டாவது வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். மலையக மக்கள் முன்னணியும் ஜனநாயக மககள் முன்னணியும் என்னை தமது வேட்பானராகவும் கூட ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பின் ஊடாகவே நானும் களம் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அரசியல் கலாசாரத்தின் சுவை மாறாது தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தபட்டுள்ளேன். பேசுவதற்கு ஆயிரமாயிரம் விடயங்கள் உண்டு. அதற்கான களம் அமையாதபோது. ஆனால் பாட்டுப்பாடி ஓட்டு கேட்கும் நிலைக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த தேர்தல் வியாபாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் காலாவதியாகப்போகும் பண்டம் என்ற அடிப்படையில் நான் விற்பனையானால்தான் வெற்றி.

மலையக மக்கள் கல்வித் துறையில் பின்தங்கிய நிலையிலிருக்கின்றார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? அவ்வாறாயின் அதற்கான காரணம் மற்றும் தீர்வு என்ன?

பின்தங்கிய நிலையில் இல்லை குறைவளர்ச்சி நிலையில் இருக்கிறார்கள். மலையகத்தின் அவலத்தை மட்டுமே ஊடகங்கள் படம்பிடிக்கின்றன. வெளிப்படுத்துகின்றன. அதற்கும் அப்பால் மலையகம் கல்வி வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது. நான் ஆசிரியனாகவும் ‘லோயல்’ திலகராஜ் என அறியப்படுபவன். உண்மையில் விசுவாசமிக்க ஆசியரிப்பணியை ஹட்டனைத் தளமாகக் கொண்டு முன்னெடுத்தவன் என்பதை இன்றைய கல்விச் சமூகம் ஏற்றுக்கொள்ளும்.

மலையக கல்விச்சமூகத்தின் கையில் அடுத்த கட்ட மலையகம் தங்கியிருக்கிறது. பாடத்திட்டத்திற்கு உட்பட்ட கல்வியில் நாம் இயல்பாக இயங்கத் தொடங்கிவிட்டோம். பாடசாலை இடைவிலகல் விடயத்தில் கவனம் எடுத்தால் மேலும் பலர் அடிமட்ட தொழிலாளர் ஆவதைத் தடுக்க முடியும்.  பாடத்திட்டத்திற்கு வெளியேயான கற்றல் குறித்து மலையகம் அதிகமே அக்கறை கொள்ள வேண்டியிருக்கிறது. கல்வி (நுனரஉயவழைn) எனபதும் கற்றல் (டுநயசniபெ) என்பதும் வேறுவேறு. மலையகம் கல்வியில் காட்டுகிற அக்கறை அளவுக்கு கற்றலில் காட்டாமைதான் உங்களது கேள்வியின் பின்னணி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் இன்னும் எவ்வாறு மாறியுள்ளன. அதன் மூலம் முன்வைக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இன்று எவ்வாறு வடிவம் பெற்றுள்ளது போன்ற விடயங்களை நாம் இன்னும் ‘கற்றுக்கொள்ளவில்லை’. அதேநேரம் பாடத்திட்ட கல்வியில் ‘அரசறிவியல்;’ பாடத்தை  புள்ளிகள் பெறும் நோக்கில் படித்துக்கொண்டிருக்கிற செயற்பாடு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

கல்வி கற்ற மலையக இளைஞர், யுவதிகள் தம துமக்களுக்கு சேவையாற்றாக்கூடிய நிலைமை இல்லாமல் தலை நகரை நோக்கிச் செல்வது பற்றி உங்களது கருத்து என்ன? இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்கால மலையக கல்வியின் நிலைமை எவ்வாறாக இருக்கும்? இந்த நிலைமையை மாற்றியமைக்கும் உங்களிடம் உள்ள தீர்வு என்ன?

மீண்டும் சொல்வேன் மலையக அரசியல் செல்நெறியில் சந்தா செலுத்தும் தொழிலாளர்கள் மாத்திரம் இலக்காகக்கொள்ளப்பட்டிருப்பதுதான் இந்த அவல நிலைக்கு காரணமாகிறது. இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் மலையக அரசியலில் ஏற்பட்டுள்ள இடைவெளி பாரிய இடைவெளியாக மாறும். எதிர்வரும்  காலப்பகுதியில் 20வது அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டுவரப்படுகையில் நமது சனத்தொகைக்கு ஏற்ற வகையில் தொகுதிவாரி பிரதிநிதித்தவத்தை நாம் பெறவேண்டியுள்ளது. பாடசாலை இடைவிலகல் போன்று மலையக சமூகம் இடைவிலகள் பெற்றுக்கொண்டு செல்கிறது. அவர்களது வாழ்விடத்தில் அவர்களுக்கான தொழில் வாய்ப்பு இல்லை. எனவே மெதுமெதுவாக மலையகத்தில் இருந்து இந்த நகர்வு ஆரம்பித்து இப்போது மலையக தோட்டங்களில் தொழிலாளர் அல்லாத சமூகம் என்ற ஒன்று உருவாகிவிட்டது. சில வேளை நமக்கே உரிய ‘கால்நடை அபிவிருத்தி’ அமைச்சை எம்மிடம் ஒப்படைத்தால் கூட அதன்மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதனை ஏற்கனவே இந்த அமைச்சினை பெற்றவர்கள் நினைக்கவில்லை. அதனால் நமது இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் முன் வைக்கப்படவில்லை. கணிணி கல்வியை வழங்குகிறோம் என உருவாக்கப்பட்ட பிரஜா சக்தியினால் குடும்ப நிதியம் வலுப்பெற்றதே தவிர நமது ,ளைஞர் யுவதிகள் பயன்பெறவில்லை. ஆந்திராவில் ,ருந்து வந்த அக்காதான் மலையகத்துக்கான கணிணி கல்வியை வடிவமைக்க வேண்டியிருந்தது. அமைச்சுப்பதவி போனதும் அக்காவும் போய்விட்டார். இப்போது அந்த திட்டம் கைவிடபட்டதற்கு அடுத்து வந்த அமைச்சரை குறை சொல்லவதா? அதில் செலிவடப்பட்ட ‘ரூபா’க்களுக்கான கண்ககை அக்காவிடம் கோருவதா என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது.

மலையக, இளைஞர் யுவதிகள் தொர்பான தரவுப்பதிவை உருவாக்கி கல்வித்தகைமை திறமை அடிப்படையில் அதனை வகைப்படுத்தி பொருத்தமான தொழில் கல்வியை வழங்கவும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் என்னிடம் திட்டம் இருக்கிறது. அதற்கு அரசியல் அதிகாரம் தேவை. வெற்றிபெறும் பட்சத்தில் முன்னெடுப்பேன்.

கடந்தகாலங்களில் மலையக அரசியல் தலைமைகள் அதிகாரத்துடன் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்துச் செல்லும் போக்கினையே கடைபிடித்துள்ளனர். இந்த இணக்க அரசியலின் மூலம் அவர்கள் சாதித்தது என்ன?

இந்த தேர்தல் முறைமையின் கீழ் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மை தேசிய இன அரசியல் கட்சிகளுக்கு இணக்க அரசியல் அவசியமானதுதான். இதனை மலையக, முஸ்லிம் கட்சிகள் செய்துகொண்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத்தலைவர் அஷ்ரப் காத்திரமான முறையிலே அதனை முன்னெடுத்து இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு துறைமுகம், பல்கலைக்கழம், கல்முனை வைத்தியசாலை, மாநகர சபை போன்றன அதற்கான அடையாளங்கள். அதேபோல மலையகக் கட்சிகளும் இணக்க அரசியலை முன்னெடுத்த போதும் மெற்சொன்னவாறு (டுயனெஅயசம) அடையாளப்படுத்தும் திட்டம் என்று எதுவும் சொல்வதற்கில்லை.லயத்துக்கு பிரதியீடாக மாடிலயம் கட்டப்பட்டது.

 இந்த இடைவெளியில் அதே இணக்க அரசியல் பயணத்தின் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக்கொண்ட மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் காணியுரிமை, வீட்டுரிமை மற்றும் மலையகப்பல் கலைக்கழகத்துக்கான படிமுறை ஆரம்பம் என்பனவற்றைப்பெற்றுக்கொண்டுள்ளன. அமரர் பெ.சந்திரசேகரன் ஆரம்பித்துவைத்து தனிவீட்டு திட்டத்தை மேலும் வலுவுள்ளதாக 7 பேர்ச் காணியில் 550 சதுர அடி அளவில் இரண்டு அறை குளியலறையுடன் கூடியதாக நியமப்படுத்தி இன்று மலையக முழுக்க தனிவீட்டு கனவு உருவாக்கப்பட்டுள்ளது. 

300 வீடுகள் அனுமதி கிடைத்த போது அதனை மலையக மாவட்டங்கள் தோறும் வழங்கி அரசாங்கத்திற்கு நுவரெலியா மாவட்டம் மாத்திரம் மலையகம் இல்லை என்ற தகவல் சொல்லப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தனிவீட்டுத்திட்டத்தை முன்னெடுக்காத எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் நிச்சயமாக புறக்கணிப்பார்கள். இந்த லட்சியத்தை மக்கள் மத்தியில் அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியும், தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்களிடத்தில் ஆழமாக விதைத்துள்ளது. 

அதேபோல மலையகப் பல்கலைக்கழத்துக்கான கோரிக்கை பல்வேறு மட்டத்திலே முன்வைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆரம்ப கட்டமாக மலையகப் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை தாபிப்பதற்கு வே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான  மலையக மக்கள் முன்னணி களம் அமைத்துள்ளது. கொத்மலை கொலப்பத்தன பிரதேசத்தில் ஜனவசமவிடம் இருந்து 5 ஏக்கர் காணி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இவையாவும் இணக்க அரசியல் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படவைதான். எனவே இணக்க அரசியல் செய்வதில் பிரச்சினை இல்லை. அதனை எவ்வாறு செய்கிறோம், அதில் மக்களுக்கு என்ன பலன் என்பதில்தான் அந்த அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates