Headlines News :
முகப்பு » » இருட்டரை வாழ்வு விடியலைத் தருமா? - சு.நிஷாந்தன்

இருட்டரை வாழ்வு விடியலைத் தருமா? - சு.நிஷாந்தன்


நல்லாட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்றது  ஆனால்,  200 வருட உழைப்பாலிகளின் வாழ்வில் என்ன மலர்ந்துள்ளது. இந்த நல்லாட்சியிலாவது   மலையக மக்களுடைய வாழ்க்கையிலும்   சுதந்திரமும் ,  சொந்த காணி, வீட்டுத் திட்டம், அடப்படை உரிமைகள் கிடைக்க வழிவகுக்குமா?
    
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இனவாதத்துக்கு நாட்டு மக்கள் நல்லப்பாடம் புகட்டினர் குறிப்பாக மலையக மக்களும் பூரணமாக நல்லாட்சிக்கு வழிவகுத்தனர்.   பெருந்தோட்டத்துறையினரின்  பலம் என்னவென்பதை அரசியல் தலைமைகள் நன்கரிந்திருபர்.  இந்நிலையில் ஆட்சி மாற்றம் புதிய அரசியல் பயண ஆரம்பம் இவற்றுக்கிடையில் மலையக மக்கள் வாழ்வில், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் பொருளாதார, அரசியல், சமூக ரீதியில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? நிகழுமா? என்பது தான் மலையகத்தவரின் எதிர்பார்பாக உள்ளது.

மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சொந்தக்காணி, தனிவீடு தொடர்பான கோ­ங்கள் கடந்த ஒக்டோபரில் மீரியபெத்தையில் நிகழ்ந்த அனர்த்தத்தினைத் தொடர்ந்து மலையகமெங்கும் எதிரொலித்தன. இது மலையக அரசியல் தலைமைகளையும் திரும்பிப் பார்க்க செய்ததோடு, அவர்களின் அரசியலிலும் திருப்பத்தை ஏற்படுத்தி நடந்து முடிந்த ஐனாதிபதி தேர்தலிலும் ஆதிக்கத்தை செலுத்தியிந்தது. இதனைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர்களுக்கன சொந்த காணி, வீடு தொடர்பில் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகளும் அரசும் உறுதியாக இருப்பதைப் போன்று தோன்றுவதோடு அதற்கான அடிக்கல்லும் மீண்டும் நடப்பட்டுள்ளது. காணி, வீடு தொடர்பாகவும் அதன் அமைவிடம் சம்பந்தமாகவும் அமைச்சு மட்டங்களிலும் அதிகாரிகள், தோட்டக் கம்பனிகள் போன்றவற்றோடு பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவ்வப்போது அரசியல் தலைமைகள் கூறுகின்றன. ஆனால், மக்கள் மத்தியில் இதன் தாக்கம் தென்படுவதாக தெரியவில்லை.

எதிர்காத்தில்  அமையப்போகும் வீடும், காணியும் 7 பேர்சச்சுக்குள் அடக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மக்கள் மத்தியிலே உடன்பாடற்ற, தெளிவற்ற தன்மையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் மக்களை கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான முடிவே ஆகும்.

வீடு கட்டும் போது கட்டுமான பணிகளை வீட்டுரிமையாளரே செய்ய சுதந்திரம் உள்ளதா? முழுப்பணமும் அவர்களது வங்கியில் இடப்படுமா? தனது வீடு தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு இம்மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா? நிர்மாணிக்கப்படும் வீடுகள் தொடர்பில் அதன் கட்டுமான பணிகள் விடயத்தில் தமது கருத்தினை தெரிவிப்பதற்கும், தலையீடு செய்வதற்கும் இவர்களுக்கு உரிமை உள்ளதா? எச்சந்தர்ப்பத்திலும் காணி தொடர்பிலோ, வீடு தொடர்பிலோ கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுவார்களா? சுதந்திர இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரஜைகளுக்கான கெளரவம் இம்மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

நிறுவனங்களோ, அரசோ கொடுப்பதை அப்படியே மக்களிடம் கொடுப்பது அதிகாரிகளின் கடமை. அதேவேளை, அரசியல் ரீதியில் தேசிய வாழ்வோடு இணைந்து பயணிக்க ஏற்ற வகையில் மக்களுக்குத் தேவையான அரசியல் சமூக உரிமைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு வலிமை சேர்ப்பதே அரசியல்வாதிகளின் பொறுப்பும் கடமையுமாகும். ஆட்சியாளர்களோடு இணைந்து இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதும், தமது குரலுக்காக மக்களை திரண்ட சக்தியாக வைத்திருப்பதும் இவர்களின் இன்னுமொரு பொறுப்பாகும். இதனையே மக்கள் மலையக அரசியல்வாதிகளிடமும் எதிர்ப்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வீட்டுத் திட்டங்கள் நடைமுறைபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டப் போதும் அவையயல்லாம் முழுமை பெறவில்லை. இதற்கு கட்சி அரசியல் சாயம் பூசப்பட்டதும் ஒரு காரணம் என்பது கவலைக்குரியது. நடைமுறைபடுத்தப்படும் புதிய திட்டம் இவற்றுக்குள் சிக்கிவிடாது, மக்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியலை மையப்படுத்தி வாழ்வை பாதுகாக்கும் திட்டமாதல் வேண்டும். மலையக மக்கள் வாழ்வின் அடிப்படை அரசியல், சமூக உரிமைகளை முழுமையாக பெற்று இந்நாட்டின் சுதந்திர கெளரவ பிரஜைகள் என்ற நிலைக்கு உயர்வடைதல் வேண்டும். அதாவது, இலங்கையில் வாழும் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளை இம்மக்களும் அனுபவித்தல் வேண்டும். இதற்கு போதுமான அளவு சொந்தக் காணியும் தாம் விரும்பியவாறு அடிப்படை தேவைகளுடனான வீடும் அமைதல் முக்கியமாகும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனிவீடு, காணி தேவை என்பன புதிய அரசின் 100 நாள் அவசர அவியலுக்கு உட்படுத்தாது, நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மலையக மக்களின் வாக்கு வங்கியை பகற் கொள்ளையடிக்கும் கவர்ச்சி திட்டமாக்காது, மலையக மக்களை வாக்களிக்கும் தொடர் இயந்திரங்களாக்காது சுயமரியாதையுள்ள கெளரவமிக்க, தனித்துவமான பிரஜைகளாக வளர்ச்சி பெறும் நோக்கோடு தனிவீடு, காணித் திட்டம் அமுலாக்கப்பட வேண்டும். இதன் மூலமே எனது காணி, எனது வீடு, எனது நாடு எனும் சிந்தனையோடும் உணர்வோடும் இந்நாட்டின் பிரஜைகளாக வாழவும், வளரவும் முடியும். இதுவே தாம் பாதுகாப்போடு வாழ்கின்றோம் எனும் மனவுறுதியையும் ஏற்படுத்தும்.

இன்று தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சுனயீனம் போன்ற காரணங்களுக்காக தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடிவதில்லை. தொழிலாளர்களின் தொகை குறைப்பு காரணமாகவும், புதிதாக தொழிலாளர்கள் இணைத்து கொள்ளாததன் காரணமாகவும், போதிய வருமானம் இன்மையாலும் வருமானத்தைத் தேடி நகர் புறத்திற்கு செல்வதும், வீட்டுப் பணிப் பெண்களாக தொழில் தேடி வெளியேறுவதும் இவர்களில் பெரும்பாலானோர் ஆடைத் தொழிற்சாலைகளிலும், கடைகளில் சிப்பந்திகளாகவும், காவலர்களாகவும் சேவையாற்ற தள்ளப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவோ  கிடைப்பதில்லை. நிரந்தர தொழிலாளர்களாக அநேகமானோர் தொழில் புரிவதுமில்லை. இன்னும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கியும் படையயடுக்கின்றனர்.

நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று உழைத்தாலும் உழைப்பின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே தொடருகின்றது. அது மாத்திரமல்ல உழைக்கும் காலத்தில் மலையகத்திற்கு வெளியில் தொடர்ச்சியாக வாழ்வதால் இவர்களின் குடும்ப மற்றும் சமூக, கலாசார வாழ்வும் சிதைவடைகின்றது. மலையக வாழ்விற்கு எதிரான ஒரு வாழ்வு முறை இவர்களால் மலையகத்திற்குள் நுழைக்கப்படுகின்றது. இதன் மூலம் மலையக தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கும் சமூக பற்றில்லாத சமூகமொன்று வளர்வதை அவதானிக்கலாம். இந்நிலையில் இருந்து மலையகம் விடுதலைபெற வேண்டுமாயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதாரத்தை தமதாக்கக் கூடிய காணியும், வீடும் சொந்தமாதல் வேண்டும்.

ஒரு திட்டமிட்ட காணிக் கொள்கை மூலம் புதிய வாழ்வுக் கலாசாரத்தை மக்கள் தமதாக்கும் போது தொழிலாளர்களின் அரசியலிலும், மலையகத்திலும் புதிய அரசியல் யுகம் பிறக்கும். மக்கள் தொகைக்கேற்ப பிரதேச சபைகளும், நகர சபைகளும் உருவாகும். புதிய தலைமைத்துவங்கள் தலையயடுக்கும். மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக அல்லாது தேசிய அரசியல் நீரோட்டத்திலும் பங்கு பற்றுவதோடு, பொருளாதாரத்தில் தன்னிறைவையும், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பங்கேற்கவும் வழிவகுக்கும்.

200 வருட காலமாக இந்நாட்டி இருட்டரையில் வாழந்து வரும் பெருந்தோட்டத்துறையினரின் நாலடி லயத்து  வாழ்க்கைக்கு இந்த நல்லாட்சியிலாவது முற்றுப்புள்ளி வைப்பார்களாக மலையக அரசியல் தலைமைகள். காலங்காலமாக இருட்டரையை உழைப்பாழிகளுக்கு சொந்த மாக்காமல் உரிய தீர்வை முன்வைக்க வேண்டும். 200 வருடங்கலாக உழைத்து உழைத்து ஒரு சொந்த வீடு கூட இல்லாமல் வாழும் ஒரே இனம் மலையக மக்களாக தான் இருக்கக் கூடும்.

இதற்கு முழு பொருப்பு மலையக அரசியல் தலைமைகள் தான் காலங்காலமாக தொழிற் சங்கம் என்ற பேரில் மக்களின் உழைப்பில் சுகபோகம் வாழ்கையை வாழ்ந்து வந்த அரசியல் தலைமைகள் இந்த மைத்திரி ஆட்சியிலாவது மலையக மக்களின் அடிப்படை பிரச்சினையாக சொந்த வீட்டுத் திட்டத்தை அவர்களுக்கு உரித்தாக்க வேண்டும்.

இல்லையயன்றால் இன்று படித்த சமூதாயமாக வளர்ந்து வரும் பெருந்தோட்டத்துறையினர் மலையக அரசியல் தலைமைகளுக்கு நல்லப்பாடம் புகட்டுவார்கள்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates