Headlines News :
முகப்பு » » பதுளை, கண்டி, இரத்தினபுரி மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பெறுவது எவ்வாறு? - இரா. ரமேஸ்

பதுளை, கண்டி, இரத்தினபுரி மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பெறுவது எவ்வாறு? - இரா. ரமேஸ்


சிறுபான்மையினருக்குப் போதிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்போதே உயிரோட்டமுள்ள ஜனநாயகத்தைக் காணமுடியும். ஜனநாயகத்தின் வெற்றியினை அளவிடுவதில் இது ஒரு முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பிரஜைகளின் மனக்குறைகள், தேவைகள், அபிப்பிராயங்கள் என்பவற்றை கொள்கை ஆக்க செயன்முறையில் பிரதிநிதித்துவம் செய்தல், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்காகப் பேசுதல், நியாய பிரசாரம் செய்தல் என்பவற்றை குறித்து நிற்கின்றது. சிறுபான்மையினத்தவர்களை சிறுபான்மை இனத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும்போது அவர்கள் அரசாங்கத்துடன் நெருங்கிய உறவு உண்டு என்ற உணர்வைப் பெறுவர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் சிறுபான்மையினரின் அரசியல் நிலை குறித்துப் பேசும்போது மூன்று முக்கிய வினாக்கள் எழுப்பப்படுகின்றன.

1. அவர்களின் அரசியல் உரிமைகள்

2. அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம்

3. பிரஜைகள் என்ற வகையில் தீர்மானமெடுக்கும் செயன்முறையில் அவர்களின் பங்கேற்பு என்பன முக்கியம் பெறுகின்றன.

இம்மூன்று அம்சங்களும் சிறுபான்மை மக்களின் ஜனநாயக இருப்பை உறுதி செய்ய பெரிதும் அவசிய மாகும். உண்மையில் மலையக மக்களைப் பொறுத்தவரை பிரஜா உரிமை வழங்கப்பட்ட பின்னரும் மேற்கூறிய விடயங்களில் பெரியளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது பலரின் வாதமாகும். ஒரு உண்மையான ஜனநாயகமானது அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக அமையவேண்டும். இதனடிப்படையில் நோக்கும் போது மலையக மக்கள் பரந்து வாழுகின்ற கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியதாகவுள்ளது.

ஆகவே, இக்கட்டுரை எதிர்வரும் தேர்தலில் மேற்கூறிய மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வழிமுறைகள் என்ன என்பன தொடர்பாக ஆராய முற்படுகின்றது. முதலில் கடந்த காலங்களில் இம்மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமைக்கான காரணங்களை குறிப்பிடுவது பொருத்தமாகும்.
தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமைக்கான காரணங்கள் அடையாளப்படுத்துகின்றன.

*புதிய கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தோற்றம், அவற்றுக்கிடையிலான மோதல், அதனால் வாக்குச் சிதறடிக்கப்பட்டமை.

*தனிப்பட்ட காரணங்களால் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு மாத்திரம் வாக்களித்தல், மேலும் 2ஆவது 3ஆவது விருப்பு வாக்கை பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்குதல். இதனால் வெற்றியின் எல்லையில் இருக்கின்ற பெரும்பான்மை வேட்பாளர் வெற்றி பெறுவதுடன் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடைகின்றமை.

*மலையக மக்களின் குறைந்த வாக்களிப்பு வீதம் (60–65%) ஆகும் இதனால் வெற்றிபெறுவதற்கு தேவையான வாக்குகள் (35000–40000) கிடைக்கப்பெறாமை. அதற்கு குறைந்த அளவில் வாக்குப்பதிவு இடம்பெறலும் காரணமாகும்.

*தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கும் நோக் கில் வாக்களிக்கப்படாமை, குறிப்பாக, சமூக பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்ற விடயங்களை புறந்தள்ளி வாக்களித்தல்

*இரு பிரதான கட்சிகளிலும் (UNP மற்றும் SLFP) மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற வேட்பாளர்கள் களமிறங்குதல், இதனால் வாக்குகள் சிதறல்.

*தேர்தல் பிரசாரம் தொடர்பான திட்டமிடல் இன்மை

*வாக்களிக்கும் முறை தொடர்பாகப் போதிய விழிப்புணர்வின்மை

*அதிகாரப் போட்டி மற்றும் விருப்பு வாக்கு முறையின் காரணமாக தனி விருப்பு வாக்குக்குப் பிரசாரம் செய்தல்

தேர்தல் காலங்களில் தோட்டப்புற மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுதல், வாக்கட்டைப் பறிப்பு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகுதல். இதனால் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது. இது இம்முறை தேர்தலில் அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

*வாக்களிப்பு நிலையங்கள் சிங்களக் கிராமங்களுக்கு அண்மையில் காணப்படல் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பாதுகாப்பு பிரச்சினைகள், சுதந்திரமாக வாக்குரிமையினை பயன்படுத்த முடியாமை. பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தப்படல்

*இம்மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமான அளவு உண்டு. ஆயினும், முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் இணைந்து பிரசாரம் செய்தல் பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்புதல் போன்ற உபாயங்கள் கடைப்பிடிக்கப்படாமை

*பெரும்பான்மையின வேட்பாளர்களின் பிரசார தந்திரோபாயங்களின் தாக்கம் குறிப்பாக, தோட்டப்புறங்களுக்குத் தமிழ் வேட்பாளர்களுடன் சென்று பிரசாரம் செய்தல் மற்றும் தமக்கொரு விருப்பு வாக்கை வழங்குமாறு பிரசாரம் செய்தல்

*தமிழ் வேட்பாளர்களின் பொருளாதார நிலை பலவீனமாக காணப்படுதல்.
மேற்கூறிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு அவசியமான உபாயங்களையும் குறிப்பிடுதல் அவசியமாகும்.

1. கடந்த கால தேர்தல்களில் விடப்பட்ட தவறுகளை மீளாய்வு செய்தல், குறிப்பாக தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமைக்கான காரணங்களை கண்டறிதல். அதற்கேற்ப தேர்தல் பிரசாரத்துக்கான தந்திரோபாயங்களை வகுத்தல். அன்று சில நாடுகளில் வினைத்திறன் மிக்க வகையில் தேர்தல் பிரசாரம் செய்வது எப்படி என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன, அதற்கான கைநூல்களும் காணப்படுகின்றன. அத்தகைய உபாயங்களை கையாள வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் கள ஆதரவாளர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் பெரிதும் உதவியாக அமையும். மேலும் அவர்களின் பிரசார திறனை அதிகரிக்கும்.

2. மக்கள் விரும்பும் கட்சியில் போட்டியிடல்: மக்களின் நாடித்துடிப்பை அறிந்து பிரதான கட்சிகளில் இணைந்து போட்டியிடல். அல்லது சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான அமைப்பில் தனித்துப் போட்டியிடல். இதன் மூலம் ஆகக் கூடிய மிகுதி வாக்கின்படி ஒரு ஆசனத்தை பெறும் வாய்ப்புண்டு. இத்தகைய உபாயம் கண்டி மற்றும் இரத்தினபுரிக்கு பெரிதும் அவசியம்.

3. சமூக நலன் கருதி ஒரு பிரதான கட்சியில் இரு தமிழ் வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடுதல். இதன் மூலம் வாக்கு சிதைவடைவதனை ஓரளவு தவிர்க்கலாம்.

4. கூட்டிணைந்த தேர்தல் பிரசாரம், இரு தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு வாக்காளர்களை அறிவூட்டல் மற்றும் போட்டியிடும் சிறுபான்மை வேட்பாளர்கள் தனித்தனியாக பிரசாரம் செய்யாது கூட்டாக இணைந்து செயற்படல்

5. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு அறிவூட்டல் வேண்டும். இது விடயத்தில் கல்வி கற்றோர், சிவில் சமூக அமைப்புகள், நலன் பேண் குழுக்கள், இளைஞர்கள், மாணவர்கள் கரிசனையுடன் செயற்பட வேண்டும்.

6. வேறுபட்ட கட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதனை சமூக நலன் கருதி தவிர்க்க முயற்சி செய்தல்.

7. சமூக வலைப்பின்னல்களை உருவாக்கி தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க முடியும்.

8. பொது நலனுக்காக தொழிற்சங்க அரசியலை பயன்படுத்தல், அல்லது தேர்தல் காலங்களில் தொழிற்சங்க அரசியலை மறந்து செயற்படல் சிறந்தது

9. தேர்தலுக்கு முன்னர் பரீட்சார்த்த ஆய்வு ஒன்றினைச் செய்வதன் மூலம் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான மக்களின் கருத்துக்களை கண்டறிய முடிவதுடன், ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையினையும் கண்டறியலாம். அதன் மூலம் தேர்தல் பிரசாரங்களை வினைத்திறன் மிக்க வகையில் மேற்கொள்ள முடியும்.

10.சமூகத்தில் நம்பப்படுகின்றவர்களை மற்றும் மதிக்கப்படுகின்றவர்களை தேர்தல் பிரசார பணிகளில் இணைத்துக்கொள்வதன் மூலம் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்ட முடியும்.

11.மக்களுடனான தொடர்ச்சியான தொடர்பாடல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல், தனது எல்லை மற்றும் அதிகார வரம்புக்குள் இருந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தல் மற்றும் வாக்குறுதிகளை வழங்குதல்.
இத்தகைய வழிமுறைகளை கையாள்வதன் மூலம் பதுளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். நாட்டில் வாழ்கின்ற ஏனைய சிறுபான்மை இனங்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து அதிகம் சிந்தித்து செயற்படுகின்றன. காரணம் போதிய அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அரசியல் பேரம் பேசும் சக்தி அதிகரிப்பதுடன், அது அரசாங்கத்தை அமைப்பதில் பங்காளியாதல், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல், கொள்கை மறுசீரமைப்பு, உரிமைகளை மற்றும் கோரிக்கைகளை வென்றெடுத்தல் போன்ற பல சாதகமான மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். மறுபுறமாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் மேற்கூறிய காரியங்களை செய்யக்கூடிய ஆளுமையினை, திறனை கொண்டிருக்க வேண்டும் என்பதனையும் மனங்கொள்ள வேண்டும். ஆகவே, வருகின்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உபாயங்களை மனங்கொண்டு செயற்பட வேண்டும். மறுபுறமாக மலையக மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை வீணடிக்காது வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களுக்கும் கட்சிக்கும் வழங்கி தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாக எதிர்வரும் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

நன்றி - வீரகேசரி 02.08.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates