மலையகப் பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் அரசியல் தலைவர்களின இலக்கு வெறுமனே பெருந்தோட்டங்களில் அபிவிருத்தியை மட்டுமன்றி, இலங்கையில் நாலாபக்கங்களிலும் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களை முன்னெடுப்பதாக இருப்பது அவசியமாகும். இவ்வாறு பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களின் அபிவிருத்தியுடன், பெருந்தோட்ட வேலைகளுக்காக குடியமர்த்தப்பட்டு இன்று நாலாபுறமும் இடம்பெயர்ந்து வாழும் இவர்களது நலன்களுக்கு தலைமைத்துவம் வகிப்பது தேசிய அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டிருத்தல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தலைமைத்துவமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின்போது அவர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் என்பது சமூக பாதுகாப்புடன் ஒன்றாகக் காணப்பட்டது. அக்காலத்தில் ஆட்சி அமைக்கப்போகும் அரசியல் கட்சிகளுடன் சுமுகமாக உறவைத் தக்கவைத்துக் கொள்ளும் அரசியல் தலைமைத்துவத்தை மக்கள் வரவேற்கின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த நிலையில் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களின் நாளாந்த வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வேகமாக இடம்பெற்றுள்ளன. பெருந்தோட்டக் கம்பனிகள் போதுமான அளவில் முதலீடுகளை மேற்கொள்ளாத நிலையில் தொழில் வாய்ப்புகள் தோட்டங்களை நம்பியதாக வளர்ச்சியடையவில்லை. தமது வாழ்வாதாரத்திற்கு தோட்ட வேலைகளைத் தொடர்ந்தும் நம்பியிருக்க முடியாத சூழ்நிலை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பெரும்பாலான மலையக இளைஞர்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிளுக்கும் இடம் பெயர்ந்து சென்று தொழில் புரிகின்றனர். பெண்களில் கணிசமானவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு சென்றுவிட்டனர்.
பெருந்தோட்டங்களைவிட்டு வெளியே வேலை செய்தாலும் அவர்களின் இருப்பிடம் மலையகத்தில் உள்ள பெருந்தோட்டங்களே ஆகும். இன்று தோட்டங்களில் பதிவுசெய்து கொண்டு தொழில் புரிபவர்களின் எண்ணிக்கை சுமார் 2,30,000 என்றாலும் இதில் இன்னுமொரு மடங்கினர் (200,000 பேர்) தற்காலிக தொழிலாளர்களாக தோட்டங்களிலேயே வாழ்கின்றனர். அவ்வாறாயின் மலையகப் பகுதிகளில் தொடர்ந்தும் சுமார் 4,30,000 தொழிலாளர்களும் அவர்களில் குடும்பமுமாக சுமார் 10,00,000 பேர் தோட்டங்களிலேயே வாழ்கின்றனர்.
இந்த 10,00,000 பேருக்கும் நிரந்தரமான வசிப்பிடம் இல்லை. அவர்கள் தமது வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான வருமானத்தை தாம் தொழில் புரியும் கம்பனி தோட்டங்களில் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. மக்களுக்கான நிரந்தர வதிவிடம், வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை தேடிக்கொள்ளும் வழிமுறைகளை விரிவாக்கும் வேலைத் திட்டமே இங்கு முன்னெடுக்கவேண்டிய வேலைத் திட்டங்களாக உள்ளன.
நிரந்தர வதிவிடம், சுயதொழில்கள், தாம் மேற்கொள்ளும் உற்பத்திக்கான உரிமையாளர்கள் என்றவாறு பெருந்தோட்ட மக்களை மாற்றியமைப்பது மலையக பிரதேசங்களில் மேற்கொள்ளும் அபிவிருத்தி முயற்சிகளாக அமையவேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.
இவர்களுக்கான வேலைத் திட்டங்கள் என்பன இவர்களை வறுமைப் பிடியிலிருந்து வெளிக் கொண்டுவர முயற்சிகளாகக் காணப்படவேண்டும். இந் நாட்டில் வறுமை ஒழிப்பு நடைமுறைபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் தோட்டங்களில் சுமார் 15 வீதமானவர்கள் போதுமான சராசரியான கலோரியை உட்கொள்ளவில்லை என்று அறிக்கைகள் காட்டுகின்றன.
பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சியை பெற்றுக் கொள்ளக் கூடிய தொழில்நுட்பம் பாடநெறிகள் இம்மக்கள் மத்தியில் பிரபல்யமாக அறியப்படவில்லை. தொழில் திறன் பெற்றுக்கொள்ளாமல் தொழில்களுக்கு தம்மை இணைத்துக் கொள்வது என்பது மற்றுமொறு வறுமை சுற்று வட்டத்தை உருவாக்கலாம். இந்நிலையில் இம்மக்களின் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பக் கல்லூரிகளை பிரபல்யப்படுத்துவோமாயின் மிகவும் பயனுள்ள, ஆரோக்கியமான சமூக அமைப்பை உருவாக்க உதவலாம்.
மேற் கூறப்பட்டவை பெருந்தோட்டங்களை மையமாகக் கொண்டு வாழ்கின்ற மக்களின் அபிவிருத்தியுடன் தொடர்புடையதாக காணப்படும். ஆனால் அதற்கு மேலாக தமது அபிவிருத்திப் பணிகளை விஸ்தரிக்க வேண்டிய பொறுப்பும் மலையகத் தலைவர்களுக்கு இருக்கின்றது. பெருந் தோட்டங்களுக்கென குடியமர்த்தப்பட்ட மக்களில் கணிசமானவர்கள் அன்று இடம்பெயர்ந்து சென்று நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். உண்மையில் அவர்கள் தங்களை மலையகத் தமிழர்கள் அல்லது இந்தியத் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றனர். குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுடன் ஒருங்கிணைந்து காணப்படுபவர்களுக்கு மலையகத் தலைமைகளின் அனுசரணை இல்லாவிட்டாலும் அத்தகைய மக்களின் அடிப்படைத் தேவைகள் அங்குள்ள ஸ்தாபனங்களால் நிறைவு செய்யப்படாதவிடத்து மலையகத் தலைமைகளின் ஈடுபாடு அவசியமாகலாம். வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற மாவட்டங்களில் இவ்வாறு குடிபெயர்ந்த மலையகத் தமிழர்கள் தனித் தனியே குடியிருப்புகளிலேயே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, தொழில் பயிற்சி மற்றும் இன்னோரன்ன விடயங்களை இனங்கண்டு அவர்களுக்குப் பணியாற்ற வேண்டியவர்களாக மலையகத் தலைவர்கள் உள்ளனர்.
வட கிழக்கில் மட்டுமன்றி தென் பகுதியில் குறிப்பாக காலி, களுத்துறை , மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 2,00,000 வரையிலான இந்தியத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
அவர்கள் தேர்தலின்போது அங்குள்ள பெரும்பான்மையான இனக் கட்சிகளுக்கு வாக்களித்தாலும் மலையகப் பகுதியில் உருவாகும் தலைமைத்துவத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். தமது தேவைகளுக்கு மலையகத் தலைவர்களையே நாடி வருகின்றனர். இதுபற்றி போதுமான அளவு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுகின்றனர். அவ்வகையில் அவர்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு தமது செயற்றிட்டத்தை உருவாக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டதுபோல களுத்துறை, காலி, மாத்தறை , இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களில் பலர் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதுடன், பல்வேறு ஸ்தாபனங்களில் தமிழ் – சிங்கள மொழி பெயர்ப்பாளர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் தமிழ், சிங்கள அமைச்சர்களின் சிங்களம் அல்லது தமிழ் மொழி பெயர்ப்பாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு மாத்திரம் அவர்களை உள்வாங்கிக்கொள்ளாது அவர்களது சமூகப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வேலைதிட்டங்கள் முன் வைப்பது அவசியமாகும்.
இதற்கு மேலாக மலையகத் தலைவர்கள் தேசிய அபிவிருத்தியில் தங்களது பங்களிப்பினை குறிப்பிட்டளவில் வழங்கியவர்களாக இருத்தல் அவசியமாகும். தாம் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதி என்று தமது மக்களின் நலனை மட்டும் அபிவிருத்தி செய்வதனை கருத்தில் கொள்ளாது தேசிய திட்டங்களின் பங்காளர்களாக மாற வேண்டும். இதற்கு இந்திய ஜனநாயகத்தில் சிறுபான்மை இனத்தவர்களான அம்பேத்கார் முன்னாள்; சபாநாயகர் சங்மா, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் ஜி.பார்த்தசாரதி, ராஜாஜி போன்றவர்களின் முயற்சியையும் படிப்பினையாக கொள்ளலாம்.
இதன்மூலம் மலையகத் தலைவர்கள் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக வளர்ச்சியடைய வேண்டும். இயலுமானால் குடிபெயர்ந்து ஆசிய நாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களில் யாவரையும் ஒன்றிணைந்த தலைமைத்துவத்திற்கு தங்களை தயார்படுத்துவது நல்லது. மலையகத் தலைவர்கள் சௌமியமூர்த்தி தொண்டமான் இத்தகையதொரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டமையையும் படிப்பினையாகக் கொள்ளவேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...