Headlines News :
முகப்பு » » தலைவிதி! - ஜே.ஜி.ஸ்டீபன்

தலைவிதி! - ஜே.ஜி.ஸ்டீபன்


மலையகத்துக்குள்ளும் மலையக அரசியலுக்குள்ளும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிகவும் ஆழமாகவும் அக்கறையாகவும் பேசப்பட்டு வருகின்ற விடயம் தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்கின்றதான நலன்புரி விடயங்களுடன் கூடிய கூட்டு ஒப்பந்தமாகும்.

கூட்டு ஒப்பந்தம் என்றதுமே அதில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களையும் முதலாளிமார் சம்மேளனத்தையுமே யாரும் நினைவு கூருவர். அதுமாத்திரமின்றி விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைப்போர் முதலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மீது விரல் நீட்டியதன் பின்னரே ஏனைய பங்காளிகள் மீதும் முதலாளிமார் சம்மேளனத்தின் மீதும் கடிந்து கொள்கின்றனர்.

இது புளித்துப் போன விடயம் என்றாலும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர்களுக்கும் சரி நலன் விரும்பிகளுக்கும் சரி இன்னும் கூறப்போனால் சில அரசியல்வாதிகளுக்கும் கூட புரிதல்கள் இல்லாதிருப்பது தெளிவாகத்தெரிகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தரப்புகளே முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயதானங்களைப் பேசி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை என்ற பேரில் ஒப்பந்தமும் கைச்சாத்திட்டு வருகின்றனர்.
இதனை மாத்திரமே நன்கு புரிந்து வைத்துள்ள தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் இணைந்து கொண்டு ஏன் ஏனைய தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தோட்டத்தொழிலாளர் சம்பள விடயத்தைப் பேசுவதற்கு கூட்டு ஒப்பந்த அணியில் இணைந்து கொள்ளக்கூடாது என்ற கேள்விகளை தொடுத்து வருகின்றனர். இவ்வாறு கேள்விகள் எழுவது நியாயமானதொன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும் இதனை சற்றுப் பின்னோக்கி அல்லது ஆழமாக தோண்டிப்பார்க்கும் போது தோட்டத் தொழிலாளரின் தலைவிதியை இலங்கை அரசியலே தீர்மானித்திருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதனினதும் தலைவிதியை படைத்தவனே நிர்ணயிக்கிறான் என்று வேதம் கூறுகின்ற போதிலும் தோட்டத்தொழிலாளி என்றதொரு சமூகத்தின் தலைவிதியை மாத்திரம் அரசியலும் அரசியல்வாதிகளுமே நிர்ணயித்திருக்கின்ற நிலைமைதான் இங்கிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தின் போது பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்தவர்தான் காமினி திசாநாயக்க. அவரது காலப்பகுதியில் தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் வகையிலான கூட்டு ஒப்பந்தம் என்ற தோற்றப்பாட்டுக்கு அத்திவாரம் இடப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் 200 வருட கால அடிமைகளாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களது சம்பளத்தை நிர்ணயிப்பதற்கென அமைக்கப்பட்ட பொறிமுறைதான் இந்த கூட்டு ஒப்பந்த பொறியாகும்.

மலையகத்தின் தொழிற்சங்கங்களில் இருந்து அறுபதாயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தொழிற்சங்கமே முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் என்றதொரு சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதாவது அரசாங்கத்தின் வசமிருந்த பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டதையடுத்தே தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதி கூட்டு ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது.

இதன் விளைவாக அன்றைய கால கூட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் அதற்கு அடுத்த படியாகவிருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. இந்த இரு தொழிற்சங்கங்களுமே அன்று இலட்சக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்டிருந்தமையால் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதைப் போன்று கம்பனிக்காரர்களுடன் சமமாக மேசையில் அமர்ந்து பேரம் பேசுவதற்கான அந்தஸ்தினை நேரடியாகப் பெற்றுக் கொண்டன. எனினும் ஏனைய சிறு தொழிற்சங்கங்களுக்கு அதிர்ஷ்டமில்லாததால் அவ்வாறான தொழிற்சங்கங்களால் நேரடியாக கூட்டு ஒப்பந்த அணிக்குள் நுழைய முடியாது போனது.

இருந்த போதிலும் முயற்சியைக் கைவிடாத விக்கிரமாதித்தன் போன்று செயற்பட்ட சிறு தொழிற்சங்கங்கள் சில கூடிப்பேசி சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒருவாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்கி 60 ஆயிரம் உறுப்பினர்கள் தமக்கு இருப்பதாக உறுதிப்படுத்தி கூட்டு ஒப்பந்த பேச்சுக்களில் தம்மை உள்வாங்கிக்கொண்டமை சிறப்புமிக்க விடயம் தான்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் மற்றும் ஏனைய விடயங்களை தீர்மானிக்கின்ற பேச்சுவார்த்தைகளின் போது மேற்படி மூன்று தரப்புக்களே பங்குபற்ற முடியும் என்பதும் ஏனைய தொழிற்சங்கங்கள் நுழைய முடியாதென்பதும் சட்டத்தால் ஆக்கப்பட்டுள்ள விதியாகும்.

இந்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கோ மலையக மக்கள் முன்னணிக்கோ இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணிக்கோ தொழிலாளர் விடுதலை முன்னணிக்கோ கூட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மேடைக்கு செல்ல முடியாது.

மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில் அவையனைத்தும் தோட்டத் தொழிலாளர்களை சார்ந்தும் அவர்களையே நம்பியும் இருந்து வருகின்றன. அப்படியானால் தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் பற்றியும் அவர்களது பொருளாதார விடயங்கள் குறித்தும் தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயத்தில் விரிவான கலந்துரையாடல்கள் ஆலோசனைகளை உள்வாங்குதல் வெளிப்படை தன்மைகள் என்பன முக்கியத்துவம் பெற வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில் மலையக மக்களின் விடயங்களை ஆராய்ந்து முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களில் நிச்சயமாக ஏனைய தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை உள்வாங்கி அதனையும் செயலுருவாக்கம் செய்வதற்கு முயற்சிக்கப்படுமானால் அது வரவேற்கக்கூடியதாக விருக்கும். எனினும் தங்களது அரசியல் சுய தேவைகளின் நிமித்தம் தோட்டத்தொழிலாளர்கள் பழி வாங்கப்படுகின்றனர்.
கூட்டு ஒப்பந்தக்கூட்டணியில் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து கொள்ள முயற்சிக்கப்பட்ட போது பல்வேறு காரணங்களைக் கூறி அது தட்டிக் கழிக்கப்பட்டது.அரசியல் காரணங்களுக்காகவும் தங்களது இருப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவுமே செயற்பட்டு வருகின்ற மலையக தொழிற்சங்கங்கள் காலை முதல் மாலைவரை காடுமலை ஏறி உழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுமறியா அப்பாவித் தொழிலாளர்களை ஏமாற்றிப் பிழைப்பது மிகவும் மோசமான மோசடியாக இருக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற மூன்று தொழிற்சங்கத்தரப்புக்களுடன் ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ள முடியாது என்பது சட்டமாக இருந்து வருகின்ற காரணத்தாலும் ஏனைய தொழிற்சங்கங்களை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாது தட்டிக் கழிக்கப்பட்டு வருவதாலும் சந்தேகமான கருத்து ஒன்றும் நிலைத்து நிற்கிறது.

இதனை இன்னும் விபரமாக விபரிப்போமானால் கூட்டு ஒப்பந்தம் எனும் போது அங்கு குறிப்பிட்ட தரப்பினரே பேச்சுவார்த்தை மேசையில் அமர்கின்றனர். இரண்டுக்கு மேற்பட்ட சுற்றுப் பேச்சுக்களும் இடம்பெறுவது வழக்கமாக இருக்கின்றது.

அது மாத்திரமன்றி பேச்சுவார்த்தைகளின் போது பேசப்படுகின்ற விடயங்கள் வெளி வருவதும் இல்லை. வெளிப்படுத்தப்படுவதும் கிடையாது. பேச்சுவார்த்தை மேசையில் அமர்கின்றவர்களால் எத்தகைய எடுத்துரைப்புகள் முன்வைக்கப்படுகின்றன என்பதும் புரிவதில்லை. ஏதோ பேசப்படுகிறது காலம் கடத்தப்படுகிறது மீண்டும் பேசப்படுகிறது. தேவைப்பட்டால் மேலும் காலப்பகுதிகள் எடுக்கப்படுகின்றன. இதன் பின்னர் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் ஒப்பந்தம் நல்ல முறையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் குறிப்பிட்டதொரு தொகையைக் குறிப்பிட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டு விட்டதாகவுமே இது வரையில் வெளிப்படுத்தப்பட்டு வந்த விடயங்களாகும். இந்த இடத்தில் தான் சந்தேகம் கிளர்ந்து பேச்சுவார்த்தை மேசையில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு தான் என்ன என்றும் இங்கு இடம்பெற்ற டீல் தான் என்ன என்பதும் தொடர்பிலும் ஏனைய தரப்புகளால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதில் தவறும் இல்லையென்றே கூற வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளின் போது தான் அரசியல்வாதிகளால் எழுதப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதி புதுப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை ஒரு நாள் சம்பளமாகப் பெற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறி வருகிறது. அதே போன்று தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளமாக 750, 800 ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இ.தொ.கா. கூறுவது போல் 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுத்தால் தோட்டத் தொழிலாளி மட்டுமல்ல முழு மலையகமே பூரிப்படையும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும் இது சாத்தியப்படாத விடயமாகும். தோட்டத் தொழிலாளர் ஒருவரின் ஒரு நாட் சம்பளம் 1000 ரூபா என்பது வாய்ப்பேச்சளவில் மட்டுமே சாத்தியமாகுமே தவிர நடைமுறையில் சூனியமே. எனவே தோட்டத் தொழிலாளர்களை இவ்வாறு ஏமாற்றத்துக்குட்படுத்துவது பொருத்தப்பாடற்ற விடயமாகும்.

1000 ரூபா கோரிக்கை நியாயமாக இருப்பின் அது வழங்கப்படா விட்டால் தவறுதான். நியாயமே இல்லாத கோரிக் கையை சாத்தியமே இல்லாத ஒரு செயற்பாட்டை அரங்கேற்ற போலியாக முயற்சிப் பதும் சாத்தியமாகாத பட்சத்தில் திசைதிருப்பல் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதும் தகாத விடயங்களாகும்.

மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கின்றது. ஆனாலும் கூட்டு ஒப்பந்த பங்காளித் தொழிற்சங்கம் ஆளும் கட்சியாகவும் அதன் பொதுச் செயலாளரானவர் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராகவும் இருப்பதால் அவரால் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கி அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியும்.

நாட்டின் வருமானத்துறையில் கணிசமான பங்கினை வகித்து வரும் தோட்டத்தொழிலாளர்களின் வருமானம் பொருளாதார நலன்புரி அடிப்படை சுகாதார விடயங்களில் கம்பனிகளை நோக்கி விரல் நீட்டி விட்டு அரசாங்கம் சும்மா இருந்து விட முடியாது.

ஆட்சியை நிர்ணயிக்கத் துணை நின்று வாக்களிக்கும் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பில் அரசாங்கத்துக்கும் பொறுப்பும் கடமையும் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் நாள் சம்பள விடயத்திலும் அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.மேலும் கூட்டு ஒப்பந்தத்தில் தற்போது கைச்சாத்திட்டு வருகின்ற தொழிற்சங்கங்கள் மாத்திரமன்றி மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

தொழிலாளர்கள் சார்பிலான கை ஓங்கி நிற்கும் பட்சத்தில் முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தங்கள் அதிகரிக்கப்படுகின்ற அதே வேளை இணக்கப்பாடுகளும் சாதகமாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவே கம்பனிகள் கூறி வருகின்றன. இது காலா காலமும் இடம்பெற்று வருகிறது. இதனை ஒரு போதும் ஏற்க முடியாது தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகின்றதே தவிர அது செயலுருவில் காட்டப்படுவது கிடையாது. இதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

தோட்டங்கள் நட்டமடைவதாக சுட்டிக்காட்டுகின்ற கம்பனிகள் இலாப மீட்டுவதை வெளிப்படுத்துவது கிடையாது.அத்துடன் கம்பனிகள் பெருந்தோட்டங்களைப் பொறுப்பெடுத்ததன் பின்னரே பராமரிப்பு பணிகள் முற்றாக கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் உண்மைகளை மூடி மறைத்து இங்கு ஒருவித அரசியல் விளையாட்டுக்களையே முதலாளிமார் சம்மேளனம் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான நிலைமைகள் அனைத்தும் தூசு தட்டப்பட்டு உண்மைத்தன்மை வாய்ந்ததும் வெளிப்படையானதுமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதற்கும் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்கின்ற தொழிற்சங்கங்களைத் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்களையும் கூட்டு ஒப்பந்த அணியில் இணைத்துக் கொள்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேவையேற்படும் பட்சத்தில் சட்டத்திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை சட்டமாக்குவதன் மூலம் எதிர்கால நிர்ணயங்களை உறுதிப்படுத்தவும் முடியும். மீண்டும் மீண்டும் பொய்க்கதைகளைப் பேசியும் மூடி மறைப்புக்களை மேற்கொண்டும் மலையகத் தொழிற்சங்கங்கள் செயற்படக் கூடாது. முதலாளிமார் சம்மேளனம் கூறுவதை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் இல்லை என்பதை இனிவரும் காலங்களில் உறுதிப்படுத்தல் அவசியம். இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் ஒன்று வரப்போவதை மனதில் இருத்தி செயற்பட்டால் நன்மை இல்லையேல் மக்களைச் குறை கூறி நிற்பதில் பயன் இருக்காது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates