Headlines News :
முகப்பு » » 'லயம்' என்ற சொல்லே இல்லாத யுகம் ஒன்று மலையகத்தில் மலருமா?

'லயம்' என்ற சொல்லே இல்லாத யுகம் ஒன்று மலையகத்தில் மலருமா?ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரெண்டாம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தில் தோட்ட கைத்தொழில் அமைச்சராகவிருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வா இரத்தினபுரி பிரதேச தோட்டங்களுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது தோட்டங்கள் அரச மயமாக்கப்பட்டிருந்தன. எங்களுடைய தோட்டத்துக்கு வருகை தந்தார்.

தோட்ட காரியாலயத்துக்கு தொழிலாளர்கள் அனைவரையும் வரவழைத்து தமது அமைச்சு சார்பான கருத்துக்களையும் தோட்டத் துறைக்கான தனது எதிர்கால திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். மொழி பெயர்ப்பாளரும் அச்சொட்டாக தமிழில் மொழிபெயர்த்தார். அந்த காலகட்டத்தில் எங்கள் தோட்ட தொழிற்சங்க காரியதரிசியாக இருந்த என்னை அமைச்சருடன் பேசவும் தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகளை அவருக்கு எடுத்துக்கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது தோட்டங்களிலிருந்த பிரதான பிரச்சினைகளில் குடியிருப்பு, சுகாதாரம் ஆகிய இரண்டினைப்பற்றியும் அமைச்சருக்கு எடுத்துக்கூறினேன். அமைச்சரும் மிக பொறுமையாக அனைத்தையும் கேட்டு விட்டு அவருடைய எதிர்கால திட்டங்களைப்பற்றி விளக்கினார்.

தனது இருபது வருட கால திட்டமொன்றின் ஊடாக நாட்டிலுள்ள சகல தோட்டங்களிலுள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்போவதாக உறுதிபட சொன்னார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிதியை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு இறாத்தல் (அப்போது இறாத்தல்) தேயிலையிலும் பத்து சதவீதம் சேமித்து அதை நாட்டின் திறைசேரிக்கு வழங்கி முற்றாக தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையை இருபது வருட காலத்துள் தீர்த்து விடுவதாக கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட தொழிலாளர்களின் கை தட்டலும் ஆரவாரமும் அடங்க சிறிது நேரமெடுத்தது. அந்த நேரத்தில் அவரின் பேச்சை நானும் நம்பினேன். இடதுசாரி கொள்கையைக் கொண்ட அரசாங்கம் பிரபல தொழிற்சங்க அமைப்புக்களிலிருந்து வந்த தொழிற்சங்க தலைவர்களின் கூட்டுடனான அரசாங்கம். இதன்மூலம் கட்டாயம் தொழிலாளர்களின் பிரதான பிரச்சினையான இந்த குடியிருப்பு பிரச்சினை தீர்ந்தே விடும் என்று நம்பினேன். ஆனால் நடந்ததென்ன? பொதுவுடமை கொள்கையாளர்கள் கூடி வகுத்த பொருளாதார திட்டங்களால் நாட்டில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டு மக்கள் எல்லோருக்கும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டன. அரசாங்கம் ஆட்டம் கண்டது. அம்மையார் சிறிமா தனது இடது சாரி கூட்டாளிகளை அரசிலிருந்து துரத்தி விட்டு தனது சொந்த பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டில் நிலவிய பஞ்ச நிலைமையை ஓரளவு மாற்றினார். என்றாலும் எதிர்க்கட்சி பஞ்சத்தை வைத்து அடுத்து வந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எட்டு ஆசனங்களுக்கு இறக்கி வைத்து விட்டு அமோக வெற்றி பெற்றது. அப்பொழுது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை மலை போல நம்பினார்கள். பெரும்பாலான மலையக மக்களும் மலையக தலைவர்களின் தலைவர்களும்.

இந்த முறையென்றால், மலையக மக்கள் பிரச்சினைகளில் பெரும்பாலானவை தீர்ந்தே விடும் என்று தீர்க்கமாக நம்பினார்கள். அந்த ஆட்சியிலும் மலையக மக்கள் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையான குடியிருப்பு பிரச்சினை தீர்ந்த பாடில்லை. கடைசியாக பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றார். அப்பாடா இனி பிரச்சினையே இல்லை. நமக்கெல்லாம் விடிவு காலம் வந்துவிட்டது என்று தொழிலாளர்கள் நம்பினர். அவர் ஒரே போடாக போட்டு விட்டார். தொழிலாளர்களின் லயன் காம்பிராக்கள் அவர்களுக்கு சட்டபூர்வமாக உரிமையாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

மலையக தலைவர்கள் கண்ட கனவை நமக்கும் திணித்தார்கள். முடிவில் ஆட்சியாளர்கள் அவர்களது தலையிலும் மிளகாய் அரைத்து விட்டு போய்விட்டார்கள். அடுத்து வந்த அரசாங்கமும் மலையக தொழிலாளர்களை அம்போவென்று விட்டு சென்றது.

முடிவாக மஹிந்த சிந்தனை முன்வைக்கப்பட்டது. சரி அதிலாவது ஏதாவது இருக்கிறதா என்று துலாவி பார்த்தால் அதிலும் எதுவுமில்லை. கூடவே இருந்தால் அதிகமாக தருவேன் என்று நமது மலையகத் தலைமைகளை ஏமாற்றி கூட்டிச் சென்ற அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை சந்தித்தது. மலையக மக்களும் தமது ஜனநாயக உரிமை பலத்தை காலமறிந்து காட்டி விட்டார்கள். தலைமை மாற்றம் ஏற்படுத்திய புதிய அரசாங்க தோற்றப்பாட்டில் புதிய அரசாங்கம் போல் தோன்றினாலும் காரியாலயங்களில் சதா குளறுபடியான விளக்கங்களே மக்களை சென்றடைகின்றன. மக்களும் ஏதோ வாக்களித்து விட்டோம் சரி வருவதை எதிர்கொள்வோம் என்று வாளாவிருக்கின்றனர். விலைக்குறைப்பு என்ற விசிறியை கொடுத்து விட்டு அரசு அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் அனல் காற்றில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில்தான் மலையக மக்களுக்கு சிறு நிலத்துண்டும் தனி வீடும் தரப்போவதாக சர்வதேசத்தின் காதுகள் செவிடு படும்படியான தம்பட்ட சத்தம் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. இந்த தனி வீட்டு பிரச்சினை சரியான முறையில் தீர்க்கப்படுமா? இங்கே ஒரு கேள்வியும் எழுகின்றது. இந்தியா கட்டிக்கொடுக்க இணக்கம் தெரிவித்த வீடுகள்தான் முதலில் கட்டப்படும் என்று சொல்லப்படுகின்றது. அப்படியானால் இலங்கை அரசு கட்டப்போகும் வீடுகள் எத்தனை? அது தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளி வரவில்லை. அப்படியானால், அதுவும் ஏதாவது தேர்தல் நடந்து அதில் ஆட்சி மாற்ற முறைகளால் திட்டங்கள் பின் தள்ளப்பட்டு போய்விடுமா?

தோட்டத் தொழிலாளர்கள் பக்கத்திலிருந்து நியாயமாக எழக்கூடிய சந்தேகங்களும் உண்டு.

ஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடு அமைத்துக்கொடுக்கும் திட்டமானது சரியான முறையில் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாவிடி,ன் தனி வீடு திட்டமும் லயக்காம்பிராவை உரிமையாக்கி தருவதான திட்டம் போன்று ஏமாற்று வித்தையாகி விடும். அரசை நம்பிச் சென்ற மலையக அரசியல் தலைமைகள் முன்பு ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாற்றப்படக்கூடாது.

ஆகவே, தொழிலாளர்கள் விழித்துக்கொண்டது போல தொழிலாளர்களின் தலைமைகளும் தனி வீட்டுத் திட்டத்தில் கண்களில் எண்ணெய்யை விட்டுக் கொண்டுதான் பார்த்திருக்க வேண்டும்.

எப்படியோ லயம் என்ற சொல்லே இல் லாத யுகம் மலர வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates