மூவாயிரம் ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் விண்ணப்பித்த பல்லாயிரக்கணக்கான பரீட்சாத்திகள் குழப்பமடைந்துள்ளனர் அதற்கான காரணம் அவர்களின் பரீட்சை பெறுபேறுகளை வழங்காமல் நேர்முகப் பரீட்சையை நடத்துவதே என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆசிரியர் உதவியாளர் போட்டிப் பரீட்சை ஏனைய அரச நியமன போட்டிப் பரீட்சையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இப்பதவி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு பாடசாலையிலும் வெற்றிடமாகவுள்ள பாடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
ஆசிரியர் வெற்றிடம் நிலவும் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனி தனி குறியீட்டு இலக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒவ்வொறு பாடசாலைக்கும் பாடங்களை அடிப்படையாக கொண்ட தனித்தனி வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது ஏனைய அரச தொழில்களுக்கு வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரே வெட்டுப்புள்ளியை நிர்ணயிக்கும் முறையிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக அமைந்திருக்க வேண்டும்.
அதனால் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு தனித்தனியாக ஒவ்வொரு பாடசாலைக்குமான பாடங்களை அடிப்படையாக கொண்டு வெட்டுப்புள்ளியையும் அந்தந்த பாடசாலைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளியையும் வெளியிட்டு கல்வி அமைச்சு தனது வெளிப்படைத் தன்மையை வெளிகாட்டியிருக்க வேண்டும்.
வரவிருக்கின்ற பொது தேர்தலை மையப்படுத்தி அரசியல் காரணங்களுக்காக கடைபிடிக்க வேண்டிய முறைகளை புறந்தள்ளிவிட்டு இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை வழங்குவதற்காக பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் பெற்ற புள்ளிகள் அனுப்பப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது பின்பற்றப்படுகின்ற நேர்முகப் பரீட்சையில் பாரிய முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிகமாக புள்ளிகள் பெற்றவர்கள் புறந்தள்ளி தமக்கு வேண்டியவர்களை உள்ளீர்க்க வாய்ப்பிருப்பதாக பரீட்சைக்கு தோற்றிய பல பரீட்சாத்திகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசிடம் முறையிட்டுள்ளனர்.
பணம் செலுத்தி பரீட்சைக்கு தோற்றியவர்களின் நியாயமான சந்தேகத்திற்கு நூறு நாள் வேலைத்திட்ட அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளே காரணமாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுரகுமார திசாநாயக்கவுடன் இணங்கிக்கொண்டதற்கினங்க குறிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு ஆசிரியர் வெற்றிடம் நிலவிய பாடசாலைகளின் பாடங்களை அடிப்படையாக கொண்ட பரீட்சை பெறுபேற்றை அனுப்பி வைக்கும்வரை நேர்முகப்பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை சரியாகவும், முறையாகவும் வழங்க தீர்மானித்ததை அரசியல் இலாபத்திற்காக அவசரத்தில் பிழையாக முடித்து வைக்க வேண்டாம் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரியுள்ளார்.
நன்றி - http://www.tamilfastnews.com/
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...