Headlines News :
முகப்பு » , , » தேசியக் கொடியா? சிங்களக் கொடியா?: வரலாற்று சர்ச்சை! - என்.சரவணன்

தேசியக் கொடியா? சிங்களக் கொடியா?: வரலாற்று சர்ச்சை! - என்.சரவணன்


சிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்னங்களை சிங்கள பௌத்தமயப்படுத்தும் எத்தனங்களைக் குறிப்பிடலாம். தேசத்தின் பெயர், தேசியக்கொடி, தேசிய கீதம் அனைத்தையுமே மாற்ற வேண்டும் என்று மைய அரசியல் இயந்திரத்துக்கு நிர்ப்பந்தத்தைக் கொடுக்கும் பணியில் பல வடிவங்களில் சளைக்காமல் இயங்கி வருகிறது பேரினவாதம்.

தமிழர்களைப் பொறுத்தளவில் இனப்பிரச்சினையின் உக்கிரத்தின் பின்னர் தேசியக்கொடி என்பது ஒரு ஆக்கிரமிப்பு கொடியாகவே கண்டு வந்துள்ளனர். வடக்கில் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது நிறைவில் தேசியக்கொடியை ஏற்றி தமது வெற்றிக்களிப்பை வெளிக்காட்டி வந்துள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் சுதந்திர தினமானது நெடுங்காலமாக கருப்பு நாளாக அனுட்டிக்கப்பட்டு அன்றைய தினம் ஏற்றப்படும் தேசியக்கொடிக்குப் பதிலாக கறுப்புக் கொடியை ஏற்றி தமது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டியும் வந்துள்ளனர்.

தமிழர்களை வெற்றிகொண்டதற்க்கு அடையாளமாக 1995இல் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த யாழ்ப்பாணத்தில் (அன்றைய நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை யாப்பா பட்டுன என்கிற சிங்கள பெயரில் அழைக்கவும் செய்தார்கள்) சிங்கக் கொடியேற்றி இறுமாப்பை வெளிப்படுத்தியதாயும் மறந்திருக்க மாட்டோம். 2009 புலிகளை தோற்கடித்ததற்கு அடையாளமாகவும் வடக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் பல நாட்களாக சிங்கக் கொடிக்கு வழங்கப்பட்டு வந்த முக்கியத்துவமும் நினைவிருக்கலாம். போரை வெற்றிகொண்டதற்காக   மகிந்தவை ஒரு “சிங்கம்” என்று புகழப்பட்ட பாடல்கள் கூட இயற்றப்பட்டன. தமிழ் மன்னன் வேண்டாம் என்று கண்டி ஆட்சியை வீழ்த்தி, அந்த ஆட்சியை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்த இனவாதம் பின்னர் கண்டி மன்னனின் கொடியை சிங்களக் கொடி என்றும் அதுவே தேசியக் கொடியாக வேண்டும் என்றும் இன்றுவரை வாதிட்டு வருகிறது.


கண்டியில் நடந்ததென்ன
200ஆண்டுகளுக்கு முன்னர் 1815 மார்ச் 2 அன்று செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தின் போது ஏற்றப்பட்டிருந்த ஆங்கிலேய யூனியன் ஜெக் (Union Jack Flag) கொடியை இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார் வாரியபொல ஸ்ரீ சுமங்கலதேரர். அவரின் நினைவாக இந்த மாதம் 2ஆம் திகதி அந்த நினைவு நாளில் அதே இடத்தில் சிங்களக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று சிங்கள ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) பெரிய ஊர்வலமாக கொழும்பிலிருந்து  கண்டிக்கு சென்றது. பொலிசாரின் எதிர்ப்பையும் மீறி பிக்குகளின் தலைமையில் அடாவடித்தனமாக ஆவேசத்துடன் நுழைந்து அங்கிருந்த தேசியக்கொடியை இறக்கி விட்டு சிங்கம் மட்டும் இருக்கின்ற “சிங்களக்” கொடியை ஏற்றினர்.


பௌத்த காவி சீருடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனத்தை ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்க்க முடியாத பரிதாபகரமான நிலையில் போலீசார் இருந்தனர். அங்கு போலீசார் காட்டிய சிறிய தடுப்பு முயற்சியைக் கூட பிக்குமார் தேசத்துரோகமாக சித்திரித்தனர். பின்னர் இந்த அடாவடித்தனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக்கு சென்ற இடத்தில் போலீசாரை தாக்காத குறையாக விரட்டப்பட்டனர். சிங்கள தேசிய முன்னணி, பொதுபல சேனா உள்ளிட்ட பல சிங்கள அமைப்புகள் இப்போது இந்த சம்பவத்தை அரசுக்கும் போலீசாருக்கும் எதிராக கையிலெடுத்திருக்கிறது. “சிங்கள நாட்டில் சிங்களக் கொடியை ஏற்ற என்ன தடை. புலிகளுக்கும்..., அந்நிய மதத்தவர்களுக்கும் சோரம் போய்விட்டது இந்த அரசு” என்றெல்லாம் இந்த சம்பவம் குறித்து தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன பல சிங்கள அமைப்புகள். தேசிய கொடியில் சிறுபான்மை இனங்களைக் குறிக்கும் பச்சை, செம்மஞ்சள் நிற கோடுகளை நீக்கும்படி தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

கண்டி மன்னனின் கொடி சிங்களக் கொடியாகவும் தேசிய கொடியாகவும் உருவகப்படுத்தப்பட்ட கதை நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று.

தேசியக்கொடியைத் தேடிய பயணம்
1815 கண்டி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கண்டி ராஜ்ஜியத்தின் கொடியான சிங்கக் கொடியை இறக்கி அதனை 1835ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனிக்கு ஊடாக இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்ட 133 வருடங்களுக்குள் அந்த கொடியை பலரும் மறந்து போயினர். இந்த கொடி பற்றி பேர்னட் என்பவர் “சிங்கக் கொடி” பற்றி எழுதிய நூலொன்றின் மூலம் அறிந்து கொண்ட ஈ.டபிள்யு.பெரேரா தமது சகாக்களுடன் உரையாடியதன் விளைவாக ஆங்கிலேயர்கள் பறித்த இலங்கைக் கொடி எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விளைந்தார். 1912ஆம் ஆண்டு கண்டி கச்சேரிக்கு சென்று அங்குள்ள பழைய சுவடிகளை பல நாட்களாக ஆராய்ந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பயன்படுத்தப்பட்ட பிரதேச கொடிகள், ராஜதானிகளின் கொடிகள், தலதா பெரஹர, விகாரைகள், என்பன பாவித்த கொடிகளும் கிடைத்தன. அன்றைய காலத்தில் இருந்த சாதிகளின் கொடிகள் கூட கிடைத்தன. “கராவ” சாதி (தமிழ் சமூகத்தில் கரையார் சாதிக்கு நிகரான கரையோர சமூகங்களைக் குறிக்கும் சாதி) காலத்துக்கு காலம் சிங்கக் கொடியை பயன்படுத்தி வந்த விபரங்கள் தனியொரு கதை. இப்படி மயில், கழுகு, பாம்பு, புலி போன்றவை பயன்படுத்தப்பட்ட பல நிறத்தினாலான பல கொடிகளை கண்டெடுத்தபோதும் கண்டி ராஜ்ஜிய கொடி எதுவும் அந்த சேகரிப்பில் கிடைக்கவில்லை. இலங்கைக்குள் தேடும் முயற்சியும் அத்துடன் கைவிடப்பட்டது.

ஆனால் ஈ.டபிள்யு.பெரேரா சளைக்கவில்லை. குறைந்தபட்சம் இறுதியாக
ஆண்ட கண்டி ராஜ்ஜியத்தின் “சிங்கக் கொடி” எப்படி இருந்தது என்கிற வடிவத்தையாவது அறிய முற்பட்டார். அன்றைய தொல்பொருள் ஆணையாளராக இருந்த ஈ.சி.பெல் என்பவரின் வழிகாட்டலின்படி கண்டி மன்னனின் இறுதிக்கொடியைத் தேடி இங்கிலாந்து புறப்பட்டார். 1815காலப்பகுதியில் இலங்கையிலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கடத்திச்செல்லப்பட்ட மதிப்புமிக்க பல்வேறு பொருட்கள் உள்ள இடங்களில் அக்கொடியை தேடியலைந்தார். இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அதிக அக்கறை செலுத்தி பெருமளவு செலவை ஏற்றுக்கொண்டவர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரபல செல்வந்தருமான டீ.ஆர்.விஜயவர்தன. இவர் இன்றைய பிரதமர் ரணிலின் தாய்வழிப் பாட்டனார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மாமனார்.

ஈ.டபிள்யு.பெரேரா பிற்காலத்தில் அவர் தேடிய கொடிகள் குறித்து “sinhalese Banner and Standards" எனும் நூலை வெளியிட்டார். அந்த நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“பெனட் எனும் ஆங்கில ஆய்வாளரின் ஆலோசனைப்படி அந்தக் கொடியைத் தேடிக்கொண்டு United service museum சென்று தேடியதில் ஒருபலனும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடிக் கொண்டு சென்ற போது லண்டனிலுள்ள செல்சீ அரச வைத்தியசாலை (Royal Hospital Chelsea) சேமிப்பகத்தில் தற்செயலாக கிடைத்தது நமது சிங்கக் கொடி.”

அங்கு நெப்போலியனின் கொடியும் இருந்ததாக பெரேரா தெரிவித்திருந்தார். அவருக்கு கிடைத்த மூன்று கொடிகளில் இரண்டு வர்ணம் மங்கிப்போன நலையில் கிட்டியது. ஒன்று மாத்திரம் கவனமாக துப்பரவு செய்து எடுத்தபோது சற்று உருக்குலைந்த நிலையில் இலங்கை இறுதியாக ஆண்ட கண்டி அரசனின் கொடியின் வடிவத்தை மீட்க முடிந்தது. அதன் வடிவத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் டீ.ஆர்.விஜயவர்தன எப்.ஆர்.சேனநாயக, டீ.பீ.ஜயதிலக்க போன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி அந்த கொடியை சவுத்வூட் அண்ட் கொம்பனி என்கிற நிறுவனத்தின் உதவியுடன் பிரதிசெய்து நிறமூட்டி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மகிழ்ச்சியை நாட்டு மக்களுக்கு செய்தியாக தெரிவிக்க லேக்ஹவுஸ் உரிமையாளர் டீ.ஆர்.விஜயவர்தன தினமின பத்திரிகைக்கு ஊடாக அதனை வெளியிட்டார். சரியாக கண்டி அரசனின் கொடி இறக்கப்பட்ட 100வது ஆண்டில் அதே 02,03.1915 அன்று அந்த அறிவிப்பு வர்ண நிறத்தில் பிரேத்தியேகமாக வெளியிடப்பட்டது. இலங்கையின் கடைசி அரசின் கொடி எப்படி இருந்தது என்பது பற்றி அப்போது தான் பலரும் அறிந்துகொண்டார்கள்.

சிங்கள பௌத்த கொடி = தேசிய கொடி
1945 செப்டம்பர் மாதம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரச சபையில் இந்த கொடி பற்றி நீண்டதொரு உரையாற்றும்போது இந்த கொடியை இலங்கைக்கு மீண்டும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த உரையைத் தொடர்ந்து சிங்கக்கொடி இந்த நாட்டுக்கு கொணரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

1948இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது எந்த கொடியை ஏற்றுவது என்கிற கேள்வி எழுந்தது. 1815 கண்டி ஒப்பந்தத்தின் பின் இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிகப்பு நிற பின்னணியுடன், வாலேந்தியபடி இருக்கின்ற சிங்கத்தைக்கொண்ட ஸ்ரீ விக்கிரமசிங்க ராஜசிங்க மன்னனின் அரச கொடியே இலங்கையின் தேசியக்கொடியாக கொள்ளவேண்டும் என்று முதலில் பிரேரணையை கொண்டு வந்தவர் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த முதலியார் சின்ன லெப்பை. அந்த பிரேரணையை அரசவை உறுப்பினர் ஏ.ஈ.குணசிங்க ஆமோதித்ததன் மூலம் 16 ஜனவரி 1948 அன்று விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார்.
“இந்த கொடி கண்டியின் இறுதியரசனின் கொடி என்பதை அறிவோம். அந்த கண்டி அரசன் ஒரு தமிழர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவருமே ஒன்றுபோல் வாழ்ந்து வந்தார்கள்.
சிலர் அரிவாளும் சுத்தியலும் கொண்ட கொடியை ஏற்ற விரும்புவதாயு அறிவேன். ஆனால் விடுதலை தினமொன்றில் தேசியக்கொடியாக ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து அதிகாரத்தை பறித்து கீழே வீழ்த்திய சிங்களக் கொடியையே நாம் தெரிவு செய்ய வேண்டும்.”
1948இல் டீ.எஸ்.சேனநாயக்க கண்டிய சிங்கக் கொடியுடன்
அந்த பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்த போதும் அந்த கொடியின் உள்ளடக்கத்துக்கான வரைவிலக்கணம் எவருக்கும் புரியாததாக இருந்தது. நிறங்களுக்கான அர்த்தம், சிங்கம் எதன் அடையாளம், வாள் எதனைக் குறிக்கிறது போன்ற கேள்விகளுக்கு பதில் புனைய நேரிட்டது. அதனை வரைவிலக்கணப்படுத்துவதற்காகவே 1948 ஜனவரி 27 அன்று தேசியக்கொடி உருவாக்க குழு நியமிக்கப்பட்டது. மேலும் அந்த கொடிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்த போதும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கனகரத்தினம் போன்ற தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். 

சுதந்திரத் தினத்தன்றுக்கு முன்னர் கொடி குறித்த முடிவுக்கு வர முடியாத நிலையில் 1815இல் கண்டியில் ஆங்கிலேயர்களால் இறக்கி வைக்கப்பட்ட சிங்கக்கொடி 133 ஆண்டுகளுக்கு பின்னர் 1948ம் ஆண்டு, “ஒருங்கிணைந்த இலங்கைக்குரிய கொடியாக” மீண்டும் முதலாவது சுதந்திர தினத்தன்று சுதந்திர சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

தேசியக் கொடியைத் தெரிவு செய்வதற்காக பிரதமர் நியமித்திருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவராக எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும், செயலாளராக கலாநிதி செனரத் பரண விதாரனவும் செயற்பட்டனர். ஜே.ஆர்.ஜயவர்தன, சேர் லலித் ராஜபக்ஷ, சேர் ஜோன் கொத்தலாவல, ஜீ.ஜீ.பொன்னம்பலம், டி.பி.ஜாயா,  எஸ்.நடேசன் ஆகியோரும்  தெரிவு செய்யப்பட்டனர். பெரும்பான்மை சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வாளேந்திய சிங்கக் கொடியில் சிறிதளவு மாற்றத்தையேனும் செய்வதற்கு இணங்காமையால் பத்துத் தடவைக்கு மேல் தெரிவுக் குழு கூடியபோதும் தீர்க்கமான முடிவு எதனையும் பரிந்துரைக்க இயலவில்லை.

பொது மக்கள் கருத்துக் கோரப்பட்டபோது பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் நான்கையும் சேர்ந்தவர்களால் வணக்கத்துக்குரிய ஒருதலமாகப் போற்றப்படும் ஆதாமின் சிகரமாக அழைக்கப்படும் சிவனொளிபாத மலையையே சின்னமாக தேசியக்கொடி கொண்டிருத்தல் வேண்டும் என்று யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம் வலியுறுத்தியிருந்தார்.

ஆயினும் திரைக்குப் பின் சம்பவித்திருந்த சூழ்ச்சியால் திடீரென்று வாளேந்திய சிங்கக் கொடிக்குப் புறத்தே தமிழ், இஸ்லாமிய மக்களைப் பிரதிபலிப்பதாக இரு வரைகோடுகளைத் தேசியக் கொடியில் இணைப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ரி.பி.ஜாயாவும் இணக்கம் தெரிவித்தனர்.

1950ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம்திகதி இந்தக்குழு இலங்கையின் தேசியக் கொடிக்கான தமது பரிந்துரையை வெளியிட்டது. இந்தக்குழுவின் பெரும்பான்மையோர் எடுத்த இந்த முடிவுக்கு செனட்டர் நடேசன் இணக்கம் தெரிவிக்கவில்லை. கையெழுத்திடவுமில்லை. அதற்கான காரணங்களைத் தெரிவித்த அவர் 15.2.1950 அன்றே ஓர் அறிக்கையையும் வெளியிட்டார்.

சிங்களவர்களை குறிக்கும் வகையில் சிங்கமும், கொடியின் நான்கு மூலைகளிலும் பௌத்த மதத்தை குறிக்கும் அரசமரத்தின் இலைகளும் அமைக்கப்பட்டன. ஆனால் சிறுபான்மையினரைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படும் மஞ்சள் பச்சைக்கோடுகள் வாளேந்திய சிங்கத்தோடு சேர்ந்து இருக்கவில்லை. சிங்கம் இருக்கின்ற சதுரத்துக்கு அப்பால், அதற்கு வெளியேதான் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லப்படுகின்ற இந்த இரு வண்ணக்கோடுகள் இருக்கின்றன.

குறிப்பாக இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் சிங்கள தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அந்த இனங்களைத் தடுத்து நிறுத்தவதற்காக, சிங்கம் தன் கையில் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது. இந்த தேசியக் கொடி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக இருக்காது. தேசப்பிரிவினையின் குறியீடாக இருக்கும் என்று செனட்டர் எஸ்.நடேசன் எச்சரித்திருந்தார். தமிழ் தலைவர்களது எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது 02.03.1952 அன்று பாராளுமன்றத்தில் தேசியக்கொடி அங்கீகரிக்கப்பட்டது. தேசியக்கொடி அறிக்கைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சி.சுந்தரலிங்கம் எம்.பி உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியை அங்கீகரிக்காது ஆட்சேபித்து தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜிநாமா செய்து ஓர் இடைத் தேர்தலை ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து வவுனியாவுக்கான இடைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் சார்பில் முன்னாள் கொழும்பு மேயர் குரே போட்டியிட்டிருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கு.வன்னிய சிங்கம் சுந்தரலிங்கத்தை ஆதரித்து பிரசாரம்  செய்திருந்தார். வவுனியாத் தொகுதித் தமிழ் மக்கள் வாளேந்திய சிங்கக்கொடியை நிராகரித்திருந்தார்கள் என்றே கூற முடியும். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார்.

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பில் கொடியைச் சுற்றி மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது. அத்துடன் சிங்கத்தை சூழ நான்கு மூலைகளிலும் அரச இலையும் மாற்றங்களுக்கு உள்ளானது. சிங்கள பௌத்தத்துக்கான முதன்மை ஸ்தானத்தை உறுதிபடுத்தியது.

“சிங்கத்துக்கு பிறந்த சிங்களவர்கள்”?
சிங்களவர்களின் பிறப்பு மூலத்தை சிங்கத்தின் வழித்தோன்றலாக கருதும்
ஐதீகம் இன்னமும் உண்டு. மகாவம்சத்தில் சிங்கள இனத்தின் தோற்றுவாயாக கூறப்படும் விஜயனின் வருகை குறித்த கதையில் விஜயனின் தந்தை மன்னர் சிங்கபாகு சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர் என்கிறது. தமிழ் மன்னன் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனுவின் படை சிங்கக் கொடியை தாங்கிச் செல்வதாக தம்புள்ள சுவரோவியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. துட்டகைமுனுவின் கொடியாக கூறப்படும் அந்த கொடியை சிங்களவர்கள் அப்படியே நம்பி வருகிறார்கள். 90களில் சிங்கள வீர விதான இயக்கத்தின் இயக்கத்தின் (படிமுறையாக அது ஜாதிக ஹெல உறுமய இயக்கமாக இன்று மாறியிருக்கிறது) சின்னமாக அந்த கொடியைத்தான் பயன்படுத்திவந்தார்கள்.

இது தான் துட்டகைமுனுவின் கொடி என்று அறிமுகப்படுத்தியவரும் ஈ.டபிள்யுபெரேரா தான். ஆனால் அவரது நூலில் இருக்கும் அந்த கொடி உண்மையான தம்புள்ள சுவரோவியத்தில் இல்லை என்று என்கிறார்கள் வேறு ஆய்வாளர்கள்..  சிங்கத்தை முதன்மைபடுத்தும் கல்வெட்டுக்களும், சிற்பங்களும் நாட்டின் பல இடங்களிலும் கிடைக்கின்றன. சிகிரிய மலையின் வாயில் சிங்கத்தின் உருவ சாயலில் இருக்கிறது. கண்டி அரச வம்சத்தினர் சிங்கக்கொடியைத் தான் பயன்படுத்திவந்தார்களா என்று சந்தேகமெழுப்பும் பல ஆய்வுகள் கூட காணக்கிடைக்கின்றன. கண்டி அரசன் சூரியனும், சந்திரனும் உள்ள கொடியையே பயன்படுத்திவந்ததாக சில ஆங்கிலேயர்களின் சில சாட்சியங்களும் காணப்படுகின்றன. இவை பற்றி விரிவாக ஆராயப்படவேண்டியவை.

1815 – 1915 – 2015
தேசியக்கொடியை இன்றைய பேரினவாத அரசியலின் கருவிகளில் ஒன்றாக பயன்படுத்தி வருவது தொடர்ந்தே வருகிறது. தற்போதைய அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கும் புலிகளுக்கும் சார்பான அரசாங்கம் என்று தொடர் பிரச்சாரம் செய்துவரும் பேராசிரியர் நளின் டி சில்வா “ஒவ்வொரு நூறாண்டுக்கு ஒருமுறை சிங்கள பௌத்தர்கள் காட்டிக்கொடுப்புக்கும், தோல்விக்கும் உள்ளாகிவருகிறார்கள்” என்று கடந்த “கண்டி ஒப்பந்த நினைவு” குறித்து மார்ச் 1 அன்று எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது 1815, 1915, 2015.

தேசியக் கொடியானது தனியொரு இனத்தின் அடையாளத்தோடு மட்டுபடுத்த வேண்டும் என்று விடாப்பிடியாக வலியுறுத்தி வருகின்றன பேரினவாத சக்திகள். அதுபோல “தேசியக்கொடியிலுள்ள சிங்கம் நீக்கப்பட வேண்டும் இல்லையேல் சிறுபான்மை இனங்களுக்கு பாரபட்சமாகிவிடும்” என்று விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோரின்  மிகச் சிறிய குரலும் ஒலித்தபடிதான் இருக்கிறது.

காலனித்துவ சக்திகள் ஆக்கிரமித்த போது இது ஒரே நாடாக இருக்கவில்லை என்பதையும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியையும் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட “இலங்கை”யிடம் தாரை வார்த்துவிட்டு போனார்கள் ஆங்கிலேயர்கள்; என்கிற கதையை இன்று சிங்களவர்கள் நம்ப மறுப்பார்கள். “வரலாறு பலம் படைத்தவர்களால் எழுதப்படுவது” என்கிற எடுகோளின்படி தமிழர்கள் குறித்து பேரினவாதம் புனைந்திருக்கும் கதையே இன்று “தேசியக்கொடியில் உனக்கேன் பங்கு... தமிழில் தேசியகீதம் முடியாது” என்பவற்றில் முடிந்திருக்கிறது.

(இந்தக் கட்டுரையின் சற்று சுருக்கிய வடிவம் 08.03.2015 தினக்குரலில் வெளியானது.
இந்த கட்டுரை தேசியக் கொடி பற்றிய விரிவான நூலொன்றை எழுதும் முயற்சியில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை தேசிய சுவடி கூடத்திணைக்களம், கொழும்பு நூதன சாலை, தேசிய நூலக சபை போன்றவற்றில் சேகரிக்கப்பட்ட பல ஆவணங்களையும், வெறும் பல சிங்கள, ஆங்கில நூல்களையும், கட்டுரைகளையும் அடிப்படையாக வைத்து ஒரு காலத்தின் தேவைக்காக ஒரு சிறு கட்டுரையாக சுருக்கியிருக்கிறேன். 02.03.1951இல் தேசிய கொடி பற்றி பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் முக்கியமானது. சுவடிகள் திணைக்களத்தில் இருந்து நான் எடுத்த அந்த பிரதியின் உள்ளடக்கம் முழுமையாக ஏதேனும் வழியில் வெளிக்கொணரப்பட வேண்டியவை.)
-என்.சரவணன்

Share this post :

+ comments + 1 comments

கண்டி இராச்சியத்திலிருந்த கொடியானது, புத்தபெருமானையும், பௌத்தத்தினையும் அடையாளப்படுத்துவது. பண்டைய காலத்தில் புத்தபெருமான் ஆண் சிங்கம், யானை, குதிரை, எருது என்ற மிருகங்களால் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளார். புத்தபெருமான் அறப்போதனை செய்தமையானது, அறச் சக்கரத்தை உருட்டியமையானது இந்த நான்கு மிருகங்களும் அறச் சக்கரத்தை உருட்டுவதாக அசோகனின் Lion Capital இனது நடுவு உருளைக் குற்றியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மூலைகளிலும் கொடுமுடி, வெள்ளரசமிலைகள் வைக்கப்பட்ட நீள்சதுரமானது சான்கு பெரும் உண்மைகளை (the Four Noble Truths) அடையாளப்படுத்தும். தொல்காப்பியன் உரியியலில் ”வாள் ஒளியாகும்” என்றுள்ளான். ஆகவே, இந்தச் சிங்கம் சாதாரண மிருக சிங்கமல்ல. ஒளிமயமான நிலையை அடைந்த புத்தபெருமான் ஆகும். இந்தநிலையில், இலங்கையின் தேசக் கொடியில் புத்தபெருமானுடன் இஸ்லாமியரும், சைவர்களும் வைக்கப்பட்டு புத்தபெருமான் கெவலப்படுத்தப்பட்டு வருகிறார். இலங்கைக் கொடியில் சிங்களவர்கள் அடையாளப்படுத்தப்படவில்லை. இந்தக் கொடியானது உண்மையில் அறியாமையின் சின்னம் ஆகும், Symbol of Ignorance ஆகும்!! இக்கொடி மாற்றி அமைக்கப்படவேண்டும்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates