Headlines News :
முகப்பு » » தொப்புள்கொடி உறவுகளை அறிந்திராத இந்திய பிரதமர் - என். நெடுஞ்செழியன்

தொப்புள்கொடி உறவுகளை அறிந்திராத இந்திய பிரதமர் - என். நெடுஞ்செழியன்


''இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலையகத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய வீடமைப்புத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பார், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பார்" என்றெல்லாம் மலையகத் தலைவர்களால் பேசப்பட்டதுடன் மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் என்ன நடந்தது? எதுவுமே நடைபெறவில்லை. மலையகத்தின் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.

மலையக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. தொப்புள்கொடி உறவுகளான தம்மை பார்க்க மோடி வருவார். பல நற்செய்திகளை வழங்குவார் என்று எதிர்பார்த்த மக்களை ஏமாற்றமடையச் செய்தது யார்? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியா? இந்தியத் தூதரகமா? அல்லது மலையத் தலைமைகளா? இவ்வாறான கேள்விகள் பல மலையக மக்களிடம் எழுந்துள்ளமை இயல்பானதே!

பொதுவாக மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி தமிழகத்திலுள்ள பெரும்பாலான தலைவர்கள் கூட அறிந்திராத நிலையே காணப்படுகிறது. அறிந்துள்ள சிலரும் கூட மலையகங்களில் அதாவது, காட்டுப்பிரதேசத்தில் வாழும் ஆதிவாசிகள் என்றே மலையக மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத் தலைவர்களே இலங்கையின் மலையக மக்களைப்பற்றி அறிந்திராத நிலையில் வட இந்தியத் தலைவர்களோ, இந்திய மத்திய அரசு அமைச்சர்களோ, அல்லது அதிகாரிகளோ எவ்வாறு அறிந்திருக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே!

எனினும் அவர்கள் அறியாமலில்லை. இலங்கையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழக இந்திய வம்சாவளித் தமிழர்கள்தான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த வருடம் கொஸ்லந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவு பற்றியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றியும் இந்திய ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன.
இ.தொ.கா.வின் முன்னாள் தலைவர் அமரர் சௌ.தொண்டமான் மற்றும் பல தலைவர்கள் மலையக மக்கள் பற்றி இந்தியத் தலைவர்களுக்கு காலத்துக்காலம் விளக்கப்படுத்தியிருக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கண்டியில் உதவி இந்தியத் தூதரகம் ஒன்றும் செயற்பட்டு வருகிறது. இந்த கண்டி உதவி இந்தியத் தூதரகம் மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பற்றியும் அவர்கள் வாழும் இடம், தொழில், கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகள் ஆகிய அனைத்துத் தகவல்களையும் வைத்திருக்கிறது. குறிப்பாக மலையக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்காகவே கண்டியில் இந்தத் தூதரகம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் கொழும்பு, அநுராதபுரம், தலைமன்னர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மட்டும் கலந்துகொண்டு தயாகம் திரும்பிவிட்டார். இந்திய நிதியுதவியுடன் டிக்கோயா கிளங்கனில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலையைத் திறந்து வைப்பதுடன் இந்திய அரசின் உதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைக்க அவர் வருவார் என்று கூறப்பட்டபோதும் அவர் வரவில்லை. இந்திய பிரதமர் இலங்கை விஜயத்தின்போது அவர் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றி ஓர் அட்டவணை (PROGRME SCHEDULE) தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் மலையக பயணம் பற்றியோ அங்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை என்று தெரியவரு கிறது
இந்திய பிரதமர் இலங்கை வருவதற்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரை மலையக தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் மூலமாக இந்திய பிரதமரை மலையகத்துக்கும் விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டிருக்கலாம்.

இல்லையெனில், கண்டி உதவி இந்தியத்தூதரகமாவது இதற்கான ஏற்பாடுகளைகச் செய்திருக்கலாம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இதேவேளை, மலையகத் தலைவர்கள் சனிக்கிழமை மாலை கொழும்பில் வைத்து இந்திய பிரதமரை சந்தித்தனர். அப்போது இந்திய பிரதமர் வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ''வடக்கு, கிழக்குக்கு வெளியே தென்னிலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பாக நான் இப்போதுதான் அறிகின்றேன். மலையகத்தில் வாழும் பின்தங்கிய இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களை நாம் இப்போது தான் திரட்டி வருகிறோம்"என்று தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து என்ன புரிகிறது? மலையக மக்களைப் பற்றிய தகவல் இந்தியாவுக்கு இன்னும் சரியாகக் கிடைக்கவில்லை என்பதுதான். மொரீஷியஸ், தென்னாபிரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலுள்ள இந்தியர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ள இந்தியா, கூப்பிடு தூரத்திலுள்ள இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரைப் பற்றி தெரிந்து கொள்ளாதிருப்பது தான் ஆச்சரியம். சில வேளை தென்னிந்திய வம்சாவளிகள் என்பதற்காக இவ்வாறு கண்டு கொள்ளாமல் தவிர்க்கப்படுகின்றனரோ தெரியாது!

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமோ அல்லது இந்திய வெளியுறவு அமைச்சோ இலங்கையின் வாழும் இந்திய வம்சாவளிகள் பற்றிய சரியான தகவல்களை இந்திய பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் வழங்க வேண்டும். அதன் மூலமே தலைவர்களின் பயணம் முழுமையாக அமையும்.

இது போன்றதொரு சந்தர்ப்பம் இனிமேல் எப்போது கிடைக்குமென்று சொல்ல முடியாது. எவ்வாறெனினும் மலையகத் தலைவர்களை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே, மலையகத் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேச வேண்டும். மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள், தேவைகள், இந்தியாவின் ஒத்துழைப்பு என்பவை பற்றி ஒரு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

இதற்கு மலையக புத்திஜீவிகள், சமூகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூக முன்னோடிகள் அனைவரையும் இணைத்துக் கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மலையகத் தலைவர்கள் இந்திய பிரதமரை சந்தித்து அறிக்கையை கையளிக்க வேண்டும். இதுவே இனிமேல் செய்யக் கூடிய ஒரே வேலைத்திட்டமாகும்!
நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates