Headlines News :
முகப்பு » , , » இலங்கையின் முதலாவது கலவரத்தின் சுவட்டைத் தேடிய பயணம் – என்.சரவணன்

இலங்கையின் முதலாவது கலவரத்தின் சுவட்டைத் தேடிய பயணம் – என்.சரவணன்


இலங்கையின் முதலாவது வகுப்புக் கலவரம் ஒரு மதக் கலவரமே. அது நிகழ்ந்தது 1883 அதாவது சரியாக 1983 இனப்படுகொலை நடப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர். இந்தக் கலவரத்தை கொட்டாஞ்சேனை கலவரம் என்று அழைப்பார்கள். அன்றைய ஆங்கிலேய ஆட்சி இந்த கலவரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையை “The Kotahena Riots” என்றேஅழைத்தது.

இந்த கலவரம் பற்றி போதிய அளவு தகவல்கள் தமிழில் வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் கூட சிறிய அளவே தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

அரச சுவடிகள்

இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மற்றும் குறிப்பான படுகொலை சம்பவங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை சரிநிகரில் வெவ்வேறு பெயர்களில் எழுதி வந்திருக்கிறேன். அக்கட்டுரைகளுக்காக கள வேலைகள் நிறையவே செய்திருக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு சென்று தகவல்கள் திரட்டியிருக்கிறேன், பேட்டிகள் எடுத்திருக்கிறேன். அதுபோல மேலதிக தகவல்களுக்காக அப்போது வெளிவந்த பத்திரிகைகள், பிரசுரங்களை தேடி எடுத்து பயன்படுத்தியிருக்கிறேன். 1977க்கு முன்னரான பத்திரிகைகள் வெளியீடுகளை இலங்கை தேசிய சுவடிகூடத் திணைக்களத்திலும், (National Achives) மியூசியம் நூலகத்திலும் தேடிப் பார்க்க இயலும். 1977க்குப் பிந்திய வெளியீடுகள் பிரசுரங்களை தேசிய நூலக சேவைகள் சபை (National Library service board) இலும் பார்க்கலாம். இந்த மூன்று இடமும் ஏறத்தாழ நடந்து போகக் கூடிய தூரங்களில் அருகாமையில் தான் உள்ளன. தேவையான பகுதிகளை பிரதி எடுத்து வரமுடியும். 10 வருடங்களுக்கு முன்னர் வரை நூலொன்றில் இருந்து மூன்றில் ஒரு பகுதி வரை பிரதி எடுக்க அனுமதித்தார்கள். இப்போது அதனை நான்கில் ஒரு பகுதி மட்டுமே பிரதி எடுக்கலாம் என்கிற விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவற்றைப் பயன்படுத்தியதில் எனக்கு ஏறத்தாழ 24 வருட அனுபவம் உண்டு. தமிழ் ஆவணங்கள் பல திட்டமிட்டே காணாமல் போக செய்யப்பட்டிருக்கின்றன. அது  குறித்து விரிவாக சில கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறேன். அதுபற்றி விரிவான கட்டுரையொன்றும் எழுதப்பட வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த இடங்களை போதிய அளவு பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். இவற்றுக்குள் நுழைவதில் தமிழர்களுக்கு இருந்த கடும் நெருக்கடிகள்  முக்கிய காரணம். குறிப்பாக யுத்தம் நடந்த காலப்பகுதியில் இதற்குள் நுழையும் தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டார்கள். அங்கே சிவில் உடை தரித்த புலனாய்வுப் பிரிவினர் எப்போதும் இருந்து வந்தார்கள். 20வருடங்களுக்கு முன்னர் சிவராம், வ.ஐ.ச.ஜெபாலன் போன்றோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அங்கே போனபோது அப்படி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனக்கு இருந்த சிங்கள மொழிப் பரீட்சயத்தாலும் எனது ஊடக அடையாள அட்டையின் பாதுகாப்பிலும் என்னால் அவ்வப்போது சென்று எனது ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

கொட்டாஞ்சேனைக் கலவரம் குறித்த தகவல்களை சென்ற வருடம் 2014 இல் சென்று கண்டெடுத்த தகவல்கள் முக்கியமானவை. குறிப்பாக அப்போதைய ஆங்கிலேய அதிகாரிகளின் எழுதிய அறிக்கை குறிப்புகள் அவர்களின் கையெழுத்திலேயே கிடைத்தன. உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட “The Kotahena Riots” அறிக்கையையும் பெற்றுக்கொண்டேன். அவற்றை போட்டோகொப்பி பிரதி எடுக்க முடியாது. மிகவும் பழமையான ஆவணங்களின் தாள்கள் சற்று உக்கி பலவீனமாக இருப்பதால் அவற்றை போட்டோகொப்பி எடுத்து தரமாட்டார்கள். அப்படியான பழமையான ஆவணங்களை micro film எடுத்து தொகுக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக நடக்கின்றன. அதற்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரி எனக்கு கருப்பு வெள்ளை புகைப்படக்கலை கற்றுத்தந்த ஆசிரியர். அவரின் தகவலின் படி இன்னும் பல ஆண்டுகள் இந்த பணி நீடிக்கும். இன்னும் micro film எடுக்காத ஆவணங்கள் நமக்கு தேவைப்படும் பட்சத்தில் அப்படி micro film எடுக்கும் செலவை எம்மிடம் சுமத்துவதன் மூலம் அந்த பிரதிகளை சீடி ஒன்றில் பதிந்தே பெற்றுக்கொள்ளலாம். உடனடியாக அதனை பெற்றுக்கொள்ள முடியாது. ஒரு சில நாட்களின் பின்னர் அவர்கள் குறித்த தினத்தில் ரசீதைக் கொண்டு போய் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.

2014 இல் சென்ற போது எடுத்தது
தீபதுத்தமாறாமய

எனது பிரதேசமும் கொட்டாஞ்சேனையே. கொட்டாஞ்சேனையின் பல மூலை முடுக்குகளும் எனக்கு நன்றாக பரீச்சயமுள்ளவை. கொட்டாஞ்சேனை கலவரத்துடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலுமிருந்து தகவல்களை அறிவதற்காக அலைந்தேன். முதலில் தீபதுத்தாமாறாமய விகாரைக்கு செல்ல வேண்டும். கொட்டாஞ்சேனை போலிஸ் நிலையத்துக்கு வலப்புறமாக அதனை அண்டியபடி இருக்கிறது இந்த விகாரை. இந்த விகாரைக்கு நேரெதிரில் உப்புக்குளம் தமிழ் பாடசாலை முன்னர் இருந்தது. அங்கே தான் எனது தங்கைகள் இருவரும் படித்தனர். பின்னர் அது பிக்கரிங்க்ஸ் வீதிக்கு மாற்றப்பட்டது. நான் படித்த கெதீற்றல் கல்லூரியும் சற்று தள்ளி இருந்தது. 83 கலவரத்துடன் அந்த கல்லூரியின் தமிழ் பிரிவை முற்றாக மூடிவிட்டு சிங்கள பாடசாலயாக்கியதும் நாங்கள் நட்டாற்றில் விடப்பட்ட கதை தனியானது.  சிறு வயதில் நான் பாடசாலை முடிந்து வரும்போது தங்கை கல்யாணியை அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். எனவே அப்படி காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த தீபதுத்தாமாறாமய விகாரையில் தான் நண்பர்களோடு விளையாடுவோம். ஆனால் இப்போது அப்படி அல்ல யுத்தம் இந்த சூழலை எல்லாம் குழப்பிவிட்டது. அந்த விகாரையில் இருக்கும் இந்துக் கடவுளைக் கும்பிடக் கூட தமிழர்கள் செல்வதில்லை. அப்படிப்பட்ட அந்த விகாரைக்கு பல வருடங்களுக்குப் பின் தகவல் திரட்டுவதற்கு எப்படி செல்வேன். எனது பள்ளிக்கால சிங்களத் தோழி அந்த விகாரைக்கு சென்று வருபவர். அவர் பெயர் சாந்தி. சாந்தியின் துணையுடன் தற்போதைய விகாராதிபதியுடன் ஒரு நேரத்தை குறித்துக்கொண்டு சென்றோம்.

அங்கே அவரிடம் எனக்கு வாய்க்கப்பெற்ற சிங்கள மொழியிலேயே எனது தேவையை அறிவித்தேன். ஆனால் அந்த கலவரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த விகாரையின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக அறிய விரும்பும் நோக்கத்தை சொன்னேன். கூடவே அந்த கலவரத்தைப் பற்றியும் கேட்டேன். குனானந்த தேரோ தனது பணிகளை மேற்கொண்ட அந்த கட்டடத்தினுள் சென்று காட்டினார். எங்கள் வீடு இருக்கும் தெருவின் பெயரும் அவர் பெயரிலேயே உள்ளது. சில பிரசுரங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை நான் பிரதி செய்துவிட்டு தர அனுமதி கேட்டேன். அவர் சாந்தியின் முகத்தைப் பார்த்தார். சாந்தி தான் அதற்க்கு பொறுப்பு என்றார். இந்த சம்பவம் குறித்த முழுமையான பின்னணி குறித்தும் ஒரு நூல் ஒன்று வெளிவந்ததாகவும். அந்த நூல் இந்த விகாரையில் இருக்கிறது. எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார். அதனை பார்ப்பதற்கு கேட்டேன். அவர் மேலே சென்று சில நிமிடங்களுக்குப் பின் கொண்டு வந்தார் அந்த நூலை. “மொஹட்டிவத்தே குணானந்த வாழ்க்கை சரித்திரம்” என்கிற அந்த சிங்களநூலை எழுதியவர் விமல் அபயசுந்தர. நூலை வெளியிட்டது கொடகே சகோதரர்களின் பதிப்பகம். அந்த நூலை தயவு செய்து தாருங்கள் நான் தேவையான பக்கங்களை பிரதி செய்துவிட்டு மீண்டும் தந்து விடுகிறேன் என்று பவ்வியமாக கேட்டேன். சற்று யோசித்தார். இறுதியில் எப்போது தருவேன் என்று கேட்டார். மூன்று நாள் அவகாசம் தாருங்கள் என்றேன். மீண்டும் சாந்தியைப் பார்த்தார். சாந்தி தான் அதற்கு பொறுப்பு என்றாள். அதன்படி அந்த நூலையும் எடுத்துக்கொண்டு அவருடனான பேட்டியையும் முடித்துக்கொண்டு வெளியே வந்தோம். சுற்றி சுற்றி பல புகைப்படங்களை எடுத்தேன்.

சும்மாவா... பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இங்கிருந்து தான் தொடங்கியது. முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இந்த தீபதுத்தாமாறாமய விகாரை தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் குனானந்த தேரரை சந்திக்க இங்கு தான் வந்தார். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்குதான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.

“மொஹட்டிவத்தே குணானந்த வாழ்க்கை சரித்திரம்”  நூலை பிரதி செய்வதற்கு முன்னர் பல இடங்களில் தேடித் திரிவோம் என்று முடிவெடுத்தேன். என் தம்பி அரவிந்தனிடம் சிங்கள பௌத்த நூல்கள் கிடைக்கும் இடங்களின் பட்டியல் ஒன்றை கொடுத்து அங்கெல்லாம் போய் இந்த நூலை விசாரிக்கும்படி அனுப்பினேன்.

மருதானையிலுள்ள கொடகே பதிப்பகத்தில் இருப்பதாக தம்பியிடமிருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன். “இப்பவே தூக்கிருடா. கிடைக்காம போயிடலாம்” என்றேன். அடுத்த சில நிமிடங்களில் எனது கைகளில் அந்த நூல் இருந்தது.


புனித லூசியாஸ் தேவாலயம்

இனி அடுத்தது கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்துக்கு விரைந்தேன். எனது வாழ்க்கையில் மறக்க இயலாத நினைவுகளைக் கொண்டது இந்த தேவாலயம். பின்னேரங்களில் நண்பர்களை சந்திக்கும் டைம் அது. பல அரசியல், சமூக சண்டைகள், விவாதங்கள், உறவுகள், பிரிவுகள் எல்லாமே கிடைத்த இடம். மிகவும் பரீச்சயமான இடம்.

தேவாலயத்தின் பாதிரிமார்களை அணுகினேன். ஒரு பெரிய சிங்கள பாதிரியார் இது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் தெரியாது என்று கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் இறுதியில் ஒரு தமிழ் பாதிரியாரின் பெயரைச் சொல்லி அவரை அணுகச் சொன்னார். அவருக்காக காத்திருந்து சந்தித்தபோது என் பற்றி விரிவான அறிமுகத்தை செய்யவேண்டியிருந்தது. இப்படியான தகவல்கள் தொகுக்கும் வேளைகளில் எம்மைப்பற்றிய நம்பிக்கையை அவர்களுக்கு கொடுப்பது முக்கியம். அவரும் இது பற்றிய செய்தியை நானும் சற்று அறிவேன் ஆனால் இந்த தேவாலயத்தில் அதற்க்கான எந்த ஆவணங்களோ தகவல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என்று இறுதியில் கூறினார்.


நான் அவரிடம் எடுத்துச் சொன்னேன். “இதோ பாருங்கள் இந்த கலவரம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆவணங்களை நான் சேகரித்து இருக்கிறேன். அவற்றில் 99சதவீதமான தகவல்களும் கருத்துக்களும் ஒரு தலைப்பட்சமானவை. பெரும்பாலும் சிங்கள பௌத்தர்கள் தரப்பிலிருந்து வெளியானவை. அவற்றைப் பயன்படுத்தினால் முழுக்க முழுக்க கத்தோலிக்கர்களின் அடாவடித்தனமே இதற்க்கு காரணம் என்று தான் முடிக்க நேரிடும். எனவே உதவி செய்யுங்கள்.” கத்தோலிக்க தரப்பு கருத்து என்ன. தகவல்கள் என்ன என்பதை எங்கிருந்து பெறலாம் என்றாவது சொல்லுங்கள் என்றேன்.

இறுதியில் அவர் மருதானையிலுள்ள CSR “சமய சமூக நடுநிலையத்தில்” பல ஆய்வு நூல்களும், ஆவணங்களும் இருக்கின்றன. அங்கு விசாரியுங்கள் என்றார். கிடைக்கக்கூடும் என்றார். CSR எனக்கு நன்கு பரீட்சயமான இடம். அங்கு ஒரு பாதிரியாரை அணுகினேன். அந்த வாரத்துக்கு முன்னர் தான் இங்கு நடந்த ஒரு மனிதஉரிமை கூட்டமொன்றை பொது பல சேனா ஒரு கூட்டத்தை குழப்பி தடுத்தனர். எனவே நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அவரிடமும் தெளிவாக தேவையை குறிப்பிட்ட போதும் அங்கே அப்படி எதுவும் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார். ஆனால் என் விளக்கத்தை கேட்ட அவர் இன்னொரு ஆலோசனை கூறினார். போறல்லையிலுள்ள Bishop House போங்கள். அங்கே நான் சொல்லும் பாதிரியாரை சந்தியுங்கள் அவர் தான் பல கத்தோலிக்க ஆவணங்களுக்கு அங்கு பொறுப்பானவர். அங்கு நீங்கள் தேடியது கிடைக்கலாம்.

சரி இப்போது நேரம் மதியம் தான் இப்போதே கிளம்பிவிடுவோம் என்று தம்பி அரவிந்தனின் மோட்டார் சைக்கிள் என்னை பின்னால் வைத்துகொண்டு அடுத்த இடத்துக்கு மிதித்தது. அங்கு உள்ளே சென்று அந்த பாதிரிக்காக காத்திருந்தோம் தொலைபேசி மூலம் அவருக்கு தகவல் அனுப்பட்டிருந்தது. தான் அங்கு வருவதாக எமக்கு தொலைபேசியின் மூலம் அறிவித்தார். சில நிமிடங்களின் பின் வந்தவர். ஏன் எங்களுக்கு அந்த விபரங்கள் என்று சில விசாரணைகளை செய்தார். மீண்டும் அவர் நம்பக்கூடிய அளவுக்கு விளக்கினேன்.
“அந்த சம்பவம் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். அது ஒரு ஈஸ்டர் பண்டிகை காலத்தில் அல்லவா நடந்தது. போறல்லையிலிருந்து போன பௌத்த ஊர்வலத்தினரும் சிங்கள பெரஹரவும் மோதிக்கொண்டன அல்லவா.”
என்றவர் தொடர்ந்து சில விடயங்களைக் கூறினார் அவரிடமிருந்து புதிதாக எந்த தகவல்களும் கிட்டவில்லை. நிச்சயமாக அப்படியான ஆவணங்கள் எதுவும் இங்கு எம்முடைய சேகரிப்பில் இல்லை. என்று கூறிவிட்டார். தடவிப் பார்க்கிறேன் சில வேலை கிடைத்தால் அறிவிக்கிறேன் என்று எனது தொடர்பு விபரங்களை குறித்துக்கொண்டார். இது நடக்கிற காரியமில்லை என்று எனக்கு தெரியும். அடப்போங்கப்பா இலங்கையின் வரலாற்றில் முக்கிய ஒரு சம்பவம் பற்றி உரிய இடங்களில் எதுவும் இல்லை என்றால் எங்கு போவது. எவ்வளது அலட்சியமாக இருக்கிறார்கள். பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று தோன்றியது.

இறுதியில் கிடைத்த பல ஆவணங்களை எடுத்துக்கொண்டு நோர்வே வந்து சேர்ந்தேன். இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் சிங்கள பௌத்த போக்கின் வகிபாகம் குறித்த எனது நூல் விரைவில் வெளிவரப்போகிறது. சரிநிகரில் அது குறித்து எழுதிவந்த கட்டுரைகளையும் அதன் பின்னர் வேறு வெளியீடுகளிலும், தற்போது தினக்குரலிலும் எழுதி வரும் கட்டுரைகளும் அந்த நூலில் தொகுக்கப்படுகின்றன. இந்த வாரம் கொட்டாஞ்சேனை கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் ஆகிவிட்ட நினைவை முன்னிட்டு தினக்குரலில் அந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். கட்டுரைக்காக சுருக்கியிருக்கிற போதும். ஒரு நூலை எழுதுமளவுக்கு பல தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

கொட்டாஞ்சேனைக் கலவரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம். ஆனால் வழமை போல வராலாற்று ஆவணங்கள் எல்லாமே சிங்கள சாய்வைக் கொண்ட ஆவணங்களாகவே இருகின்றன. ஏனைய இனங்களுக்கு எதிரானவையாகவே உள்ளன. ஏனைய இனங்களின் வரலாற்று ஆவணங்களும், அவர்களுக்கு சார்பான ஆவணங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. அவை கிடைக்க முடியாதபடி இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates