Headlines News :
முகப்பு » » தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் நியாயமான கோரிக்கையே - பேராசிரியர் மு.சின்னத்தம்பி

தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் நியாயமான கோரிக்கையே - பேராசிரியர் மு.சின்னத்தம்பி



இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும் கூட்டு ஒப்பந்தத்தினூடாக தோட்டத் தொழிலாளரின் வேதனங்களை நிர்ணயிக்கும் முறையானது 1998 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தோட்டத்தொழிலாளரது வேதனங்களை நிர்ணயிப்பதில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றகரமான விடயம் என்று இதனைக் கூறலாம்.

தொண்ணூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் வேதனங்கள் தொழில் நிலைமைகள் என்பன தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலேயே அது மேற்கொள்ளப்பட வேண்டுமென தோட்டத்தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

1994 இல் பதவிக்கு வந்த மக்கள் ஐக்கிய இடது சாரி முன்னணி அரசாங்கம் வேதனங்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றினைத் தயாரிக்குமாறு தொழிற்சங்கங்களையும் தோட்டக்கம்பனிகளையும் கேட்டுக் கொண்டது. இதற்கிணங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் ஒன்றினைத் தயாரித்தன. 1995 ஆம்,1996 ஆம் ஆண்டுகளில் இந்த நகல் ஒப்பந்தம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் அது கைச்சாத்திடப்படவில்லை. மறுபக்கத்தில் வேதனங்களை உயர்த்துமாறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன. இறுதியாக 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இதன்கீழ் நடைமுறையில் இருந்த 95 ரூபா நாளாந்த வேதனத்துடன் வேலை வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 6 ரூபா சேர்க்கப்பட்டு நாளாந்த வேதனம் 101 ரூபாவாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான 9 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் படி 'விலைபங்கு ஆதாரப்படி' என பெயர் மாற்றப்பட்ட விலை வேதன ஆதாரப்படியாக மேலும் 6 ரூபாவையும் சேர்த்து நாளாந்த வேதனம் 107 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக வேலை வழங்கப்படும் நாட்களில் 90 வீதத்திற்கும் அதிகமான நாட்களில் வேலைக்கு சமுகமளிப்போருக்கு வேலை வரவு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 14 ரூபா வழங்கப்பட்டு நாளாந்த வேதனம் 121 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் 90 வீதத்திற்கும் குறைவான நாட்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவு 8 ரூபாவாக குறைந்த மட்டத்தில் வழங்கப்பட்டதால் அவர்களது நாளாந்த வேதனம் 115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வேதனங்கள் மீளமைக்கப்பட்டன. இவ்வாறான மீளாய்வு 2002, 2004, 2006, 2007, 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றன. இதன்படி 2009 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி நாளாந்த வேதனம் 405 ரூபாவாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவ் ஒப்பந்தம் முடிவிற்கு வந்த போது அதே ஆண்டு ஜூன் மாதம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளின் பின்னர் கைச்சாத்தான ஒப்பந்தத்தின் படி நாளாந்த வேதனம் 515 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நாளாந்த வேதனம் ரூபா 380.00
வேலை வரவு ஊக்குவிப்புக்
கொடுப்பனவு ரூபா 105.00
விலை பங்கு ஆதாரப்படி ரூபா 30.00
மொத்தம் ரூபா 515.00

தொழிலாளி ஒருவரின் வேலை வரவு 75 வீதத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டதால் எல்லாத் தொழிலாளருமே 515 ரூபாவை வேதனமாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2013 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளின் முடிவில் நாளாந்த வேதனம் 515 ரூபாவிலிருந்து 620 ரூபாவாக 20.4 வீதத்தால் உயர்த்தப்பட்டது.

நாளாந்த வேதனம் ரூபா 450.00
விலை பங்கு ஆதாரப்படி ரூபா 30.00
வேலை வரவு ஊக்குவிப்புப்படி ரூபா 140.00
மொத்தம் ரூபா 620.00

இந்த வேதன அதிகரிப்பின் விளைவாக தொழிலாளருக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்கால கொடுப்பனவு என்பன 81 ரூபாவாக அதிகரித்ததால் மொத்த வேதனத்தின் பெறுமதி 701 ரூபாவாக உயர்ந்தது. இதற்குப்புறம்பாக மேலதிக தேயிலைத்தளிர் பறிப்பதற்கான கொடுப்பனவும் கிலோவுக்கு 3 ரூபாவால் உயர்த்தப்பட்டு அது 20 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

மேற்படி ஒப்பந்தம் இம்மாதம் முடிவிற்கு வருவதால் அதனை திருத்தி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் இடம்பெற உள்ளன. இன்றைய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூன்று மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்களும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதோடு சுமார் 50 தொழிற் சங்கங்களுடன் கலந்தாலோசிக்கவும் கம்பெனிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சியில் இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியது ஒரு விடயமாகும்.

புதிய வேதனங்கள் பேச்சுவார்த்தைகளின் மூலம் எப்பொழுது தீர்மானிக்கப்படும் என்பதை கவனத்திற் கொள்ளாது இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் அமுலாக்கப்பட வேண்டும் எனவும் கோரப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு வீட்டுத்துறை வரவு செலவுக் கணிப்பீட்டின்படி நகர்ப்புறத்துறையிலும் கிராமியத்துறையிலும் தேசிய வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளோரில் (அதாவது வறிய மக்களின் தொகை) 50 வீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தோட்டதுறையிலும் வறியோரின் விகிதாசாரம் குறைந்துள்ளபோதும் இதே அளவிற்கு அது குறையவில்லை. 1990 இல் 20.5வீதமாக இருந்தது. அது 2009 இல் 11.4 வீதமாக 11.4 வீதத்தால் மட்டுமே குறைந்தது. எனவே நகர்புற கிராமியத்துறை என்பவற்றிலும் பார்க்க தோட்டத்துறையில் வறியோரின் விகிதாசாரம் உயர்வாக உள்ளது.

இதனைக் கவனத்திற்கொண்டு தோட்டத் தொழிலாளரின் நாளாந்த வேதனங்கள் 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமெனக் கோருவது நியாயமானதாகும்.

நன்றி - வீரகேசரி 22-03-2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates