இலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த 83 இனப்படுகொலைச் சம்பவம் ஆயுதப் போராட்டத்தை கூர்மையடையச் செய்ததும் நாமறிவோம். ஆனால் அந்த வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்த்தப்பட்ட ஆண்டில் இருந்து சரியாக 100 வருடங்களுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். இந்த மாதம் மார்ச் 25ஆம் திகதியோடு அந்த கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் நிறைவடைகின்றன.
“கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை சிதைத்துவிட்ட பாத்திரத்தையும் அன்றே தொடக்கிவிட்டிருந்தது இந்த சம்பவம். அது எப்படி என்பதை அறிய அந்த சம்பவத்துக்கு சற்று முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளை உன்னிப்பாக அலசுவது அவசியம்.
கிறிஸ்தவ விரிவாக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிசனரிமார்களது மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக விஸ்தரிக்கப்பட்டது. ஒல்லாந்தரே முதன்முதலாக 1736 இல் சிங்கள அச்சகத்தை முதலில் நிறுவிய போதும் பிரித்தானிய மிசனரிமாரே அதனை அதிகம் மதப் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்கள். கிறிஸ்தவ பிரச்சாரங்களோடு நின்றுவிடாமல் பௌத்த மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் எதிராகவும் பிரச்சாரம் செய்தார்கள். மிசனரிமாரது பிரசார வெளியீடுகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்பட்டன. மதம் மாற்றத்துக்காக அவர்கள் ஏனைய மதங்களைத் தாக்கத்தொடங்கியதும் பௌத்த மதத்தினர் இதனை எதிர்த்து கிளர்ந்தார்கள். இதனை முறியடிக்க பல வழிகளை திட்டமிட்டார்கள்.
பிரசுரங்கள், பிரசங்கங்கள் மற்றும் விவாதங்கள் வாயிலாக, மற்றும் கல்வியின் மூலமாக இவர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினார்கள். கொழும்பில் முதலில் ஒரு அச்சகம் 1855 இல் நிறுவப்பட்டது. பின்பு காலியில் 1862 இல் இன்னொன்று தொடங்கப்பட்டது. இந்த அச்சகங்கள் பௌத்த மதம் தொடர்பான பிரசுரங்கள், விவாதங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வெளியிடுவதற்கென்றே முற்றாக செயற்பட்டன. அத்தோடு பௌத்த மறுமலர்ச்சியை முன்னெடுத்த பௌத்த பிக்குகள் மிசனரிமாருடன் பகிரங்கமான தொடர் விவாதங்களை ஏற்பாடு செய்து நடத்தினார்கள். 1873 இல் பாணந்துறை நகரத்தில் நடைபெற்ற விவாதமானது மிகவும் பிரபல்யமானது. “பாணந்துறை விவாதம்” என்கிற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் உள்ளது.
பாணந்துறை விவாதம்
இந்த விவாதம் பிரபல பௌத்த பிக்கு மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் (மொஹட்டிவத்தே குணானந்த என்றும் அழைப்பார்கள்) தலைமையில் ஹிக்கடுவ சிறீ சுமங்கல தேரர் போன்றோரும் இணைந்து கிறிஸ்தவ மதப் போதகர்களுடன் நடந்தது. அந்த விவாதத்தின் உள்ளடக்கம் பல நூல்களாக வெளிவந்துள்ளன. மிசனரி மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்க பௌத்த பாடசாலை இல்லாததும் பெரிய குறைபாடாக பௌத்தர்கள் கருதினர். 1880 இல் பிரம்மஞான சங்கத்தைச் (Theosophical Society) சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வரும் வரையில் இந்த நிலைமைகளில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. "1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற பிரபல்யமான பகிரங்க விவாதமே கேர்ணல் ஒல்கொட் இலங்கை வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இலங்கை வந்ததும் நேராக கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரை வந்து குணானந்த தேரரை சந்தித்தார். கூடவே அவர் பௌத்த மதத்தை தழுவவும் செய்தார்.
கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம் ஒருபுறம் பலமடையத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிரிப்பின் சாயலைக் கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் பௌத்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ எதிர்ப்புமே என்று குமாரி ஜெயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள், மது ஒழிப்பு உட்பட பல்வேறு பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்தார்கள். சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற்றன.
அநகாரிக்க தர்மபால
ஒல்கொட் இலங்கையில் பன்னிரண்டு கல்லூரிகளையும் நானூறுக்கும் அதிகமான பாடசாலைகளையும் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் பௌத்த மறுமலர்ச்சியில் மிகவும் முக்கிய பங்காற்றிய முதன்மையான நபர் அநாகரிக தர்மபால. கிராமப்புறத்திலிருந்து கொழும்பிற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து, அங்கு வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்ட ஒரு தீவிர பௌத்த குடும்பத்தில் பிறந்தவர். அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் டேவிட் ஹேவவிதாரன. ஒல்கொட்டின் இலங்கை வருகை டேவிட்டின் வாழ்க்கையை மாற்றியது. கூடவே கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தொடர்ந்து டேவிட்டை அதுவரை கல்வி பயின்ற கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரியிலிருந்து நீக்கிய அவரது தகப்பனார் டொன் கரோலிஸ் “மகனே இனிமேல் நீ கிறிஸ்தவ பாடசாலைக்குப் போவதை நான் விரும்பவில்லை” என்றார். அங்கிருந்து விலகி ஒல்கொட்டால் உருவாக்கப்பட்ட பரமவிஞ்ஞான சங்கத்தில் கல்வி கற்றார். அங்கு மேலும் பௌத்த உணர்வூட்டப்பட்டவராக டேவிட் என்கிற தனது பெயரை தர்மபால என்று மாற்றிகொண்டார்.
பின் வந்த காலங்களில் இலங்கையின் போக்கை இனவாத திசையில் வழிநடத்தியதில் அநகாரிக தர்மபாலாவின் வகிபாகம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. இன்று வரை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு வழிகாட்டும் தத்துவத்தின் தந்தை அநகாரிக என்றால் அது மிகையாகாது. அந்த அநகாரிகவை உருவாக்கிய சம்பவம் இந்த கொட்டாஞ்சேனைக் கலவரமாகும். இதன் பின்னர் 1915இல் சிங்கள-முஸ்லிம் கலவரத்துக்கு சித்தாந்த அடித்தளம் போடப்பட்டதும் இதன் நீட்சி தான்.
கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமய
இத்தகைய பின்னணியில் வளர்ச்சியடைந்த பௌத்த மறுமலர்ச்சியின் உந்துதலால் பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் விரிசல் அதிகரித்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. பௌத்த வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் பௌத்த எழுச்சியை ஆதரிக்கத் தொடங்கியதுடன் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிர்த்து செயல்பட்டனர்.
கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிருந்தபோது பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார்.
இதற்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் தீபதுத்தமாறாமய விகாரைக்கு சென்றார்கள். அந்த விகாரையின் ஒரு பகுதியில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாகவும் அதற்கும் பௌத்த துறவிகள் திருவிழா நடத்தியதாகவும் 1887இல் வெளிவந்த ரிவிரெச பத்திரிகை கூறுகிறது. இப்படி பெளத்தர்கள் அணிதிரள்வது தம்மை சீண்டும் நடவடிக்கையாக சந்தேகித்தனர்.
ஏற்கெனவே பாணந்துறை விவாதத்தில் குணானந்த தேரர் தலைமையிலான பௌத்த தரப்பே வென்றிருந்ததும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது.
கொட்டாஞ்சேனை தேவாலயம்
கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயம் 16ஆம் நூற்றாண்டிலிருந்து சிறியதாக இயங்கி வந்தது. 10 ஏக்கர்களைக் கொண்ட இந்த காணி ஒல்லாந்தர்களால் 1779இல் உரித்தாக்கப்பட்டிருக்கிறது. 1818இல் ஒரு சந்தர்ப்பத்தில் இது பீரங்கிக் குண்டால் தாக்கப்பட்டிருக்கிறது. அப்படி நிகழ்ந்தபோது குணானந்த தேரர் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்காக மணியோசை எழுப்பி பலரைத் திரட்டி அந்த தேவாலயத்தை பாதுகாத்ததாக சில சிங்கள நூல்கள் கூறுகின்றன. இந்த தகவலின் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. தற்போதைய தேவாலயம் 1870இல் கட்டத்தொடங்கப்பட்டு 1903இல் முடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது தேவாலயம் கட்டப்பட்டுகொண்டிருந்த காலத்தில் தான் இந்த கொட்டாஞ்சேனை கலவரம் நிகழ்ந்திருக்கிறது. தீதீபதுத்தமாறாமய விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது.
அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார். ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன.
பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகளுக்குப் பின்னர் பெரஹரவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது.
கலவரம்
அன்று இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர்.
குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.
பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது.
இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தேசாதிபதி கொட்டாஞ்சேனை விகாரைக்கு விரைந்து குனானனந்த தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை பெரஹர நடத்த அனுமதி வழங்கினார்.
சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பபட்டிருந்தது. இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிட்டதோடு சரி. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குணானந்த தேரர் பௌத்தர்களை மத ரீதியில் தூண்டுவதற்கு எப்படிப்பட்ட பிரசாரங்களை எல்லாம் மேற்கொண்டார் என்பதற்கு அதன் பின் வெளிவந்த அவரது வெளியீடுகள் சாட்சி.
கொட்டாஞ்சேனை சந்தியில் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் குணானந்த தேரருக்கு சிலை கட்டப்பட்டது. “மீகெட்டுவத்தே குணானந்த ஹிமி” பற்றிய திரைப்படத் தயாரிப்பு கடந்த மாதம் பெப்ரவரி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவரின் பாத்திரத்தில் நடிப்பவர் இன்று இனவாத முகாமில் இருக்கும் பிரபல நடிகர் ரோஜர் செனவிரத்ன.
கொட்டாஞ்சேனை - தீபதுத்தமாறாமய விகாரை பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விகாரை. பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இந்த விகாரையிலிருந்து தான் தொடங்கியது. இலங்கையின் முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இது தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் வந்தது குணானந்த தேரரை சந்திக்கத்தான். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்கு தான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.
இந்த சம்பவத்தின் பின்னர் பௌத்த மறுமலர்ச்சியின் பேரால் பௌத்த தரப்பு பலமடைந்தது. அவர்கள் நடத்திய அணிதிரள்வின் விளைவாக வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து இந்த வெசாக் விடுமுறை ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956இல் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அம்கீகரிக்கப்பட்டது.
கத்தோலிக்கர்களுக்கு எதிராக அன்று இட்ட தீப்பொறியே இன்றுவரை கத்தோலிக்கர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்ச்சியாக பேணப்பட்டு வருகிறது. இன்று வரை பேரினவாத இயக்கங்கள் கத்தோலிக்க நிறுவனங்களையும், தேவாலயங்களையும், ஏனைய சபைகளையும் எதிர்த்து வருவதுடன் ஆங்காங்கு பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் மேற்கொண்டு வருவதை அறிந்து வருகிறோம்.
மேலோட்டமாக பார்த்தால் கொட்டாஞ்சேனைக் கலவரமும் அதற்கான சித்தாந்த தயாரிப்பும் காலனித்துவ மிசனரி மதத்துக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கலாம். ஆனால் இந்த சிங்கள பௌத்த சக்திகள் நாளடைவில் சொந்த நாட்டுக்குள் சொந்த சகோதர இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிராக அந்த சித்தாந்தத்தை உருமாற்றம் செய்து நாட்டை பாரிய படுகுழிக்குள் தள்ளியது. கொட்டாஞ்சேனைக் கலவரம் அந்த வகையில் மேலும் விரிவாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
உசாத்துணையாக பயன்பட்டவை
- The Kotahena Riots – Commission report (Frank Luker Government printer, Ceylon - 1883)
- ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
- ශ්රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
- පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
- මොහොට්ටිවත්තේ ශ්රී ගුණානන්ද අපදානය - විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
- கொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன் (தினக்குரல் - 29.03.2015)
- இலங்கையின் முதலாவது கலவரத்தின் சுவட்டைத் தேடிய பயணம் – என்.சரவணன் (நமது மலையகம் இணையத்தளம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...