விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவை
எழுந்துள்ளது என்கிறது மலையக மக்கள் முன்னணி
மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம்,
அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் குறித்து இன்னும் சரியான முன்வைப்புகள்
இடம்பெறவில்லை. எனவே இது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது
என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து
தெரிவிக்கையில், மலையக மக்கள் இந்நாட்டின் தனித்துவம்
மிக்க பிரஜைகளாவர். சகல துறை அபிவிருத்தியிலும் இம்மக்களின் பங்களிப்பு அளப்பரியதாக
காணப்படுகின்றது. எனவே இம்மக்களின் மேம்பாடு குறித்து அரசாங்கம் கரிசனை காட்டுதல்
வேண்டும்.
புதிய தேர்தல் முறை குறித்து இப்போது
அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. கலப்புத் தேர்தல் முறையாக புதிய முறை அமையவுள்ளமையும்
குறிப்பிடத்தக்கதாகும். இத்தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து அதிகமான
பாதிப்பினை மலையக மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலைமை உருவாகும். புதிய தேர்தல் முறை
தொடர்பில் மலையக கட்சிகளும் சிவில் அமைப்புகளும் உரிய அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
இது ஒரு முக்கியமான விடயம் என்பதனை மறந்து கட்சிகளும் சிவில் அமைப்புகளும் செயற்படுகின்றன.
இலங்கையில் உள்ள தேர்தல் தொகுதிகளில்
ஒரேயொரு தேர்தல் தொகுதி மட்டுமே மலையக மக்களுக்கு உரியதாக இருக்கின்றது. ஆனால்
பெரும்பான்மையினருக்கு சுமார் 138 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. இலங்கையில் அதி
கூடுதலான வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக நுவரெலியா மஸ்கெலியா தேர்தல்
தொகுதி காணப்படுகின்ற நிலையில் இதுவே மலையக மக்களுக்கு சொந்தமான தேர்தல் தொகுதியாகவும்
உள்ளது. இத்தேர்தல் தொகுதியினை மூன்று அல்லது நான்காக பிரித்து உறுப்பினர்களை
தெரிவு செய்ய முடியும் இதனால் மலையக மக்களுக்கு நன்மை ஏற்படும்.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
வகையில் குறைந்த பட்சம் 16 பாராளுமன்ற உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்படுதல்
வேண்டும். நுவரேலியா மாவட்டத்தில் 6 தேர்தல் தொகுதியும் பதுளை மாவட்டத்தில் 2
தேர்தல் தொகுதியும், கண்டி மாவட்டத்தில் 2 தேர்தல் தொகுதியுமாக
மொத்தம் 10 தேர்தல் தொகுதிகள் மலையக மக்களின் நலன்கருதி உருவாக்கப்படுதல்
வேண்டும். கலப்பு முறை தேர்தலை உள்ளடக்கியே விகிதாசார முறையின் மூலம் மேலும் 6
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
இலங்கையில் 335 உள்ளூராட்சி நிறுவனங்கள்
உள்ளன. இவற்றுள் மலையக மக்களுக்கு 3 உள்ளூராட்சி நிறுவனங்கள் மட்டுமே உரியதாகவுள்ளன.
இந்நிலையில் மலையக மக்களின் நலன் கருதி 20 உள்ளூராட்சி நிறுவனங்களாவது உருவாக்கப்பட
வேண்டும். நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை போன்ற இடங்களில் உள்ளூராட்சி
நிறுவனங்களின் தொகை மேலும் அதிகரிக்கப்படல் வேண்டும். இதன் மூலம் மலையக பிரதிநிதிகளின்
தொகையும் எமது மக்களின் அரசியல் பங்கு பற்றுதலும் அதிகரிக்கும்.
இதே போன்று மாகாண சபையை பொறுத்த வரையிலும்
எமக்கு 35 மாகாணசபை உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்.
ஆனால் இப்போது 23 பேர் மட்டுமே உள்ளமையும்
குறிப்பிடத்தக்கதாகும். மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாண சபைகளில் எம்மவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கு
வழி செய்து கொடுக்கப்படல் வேண்டும். இந்நிலையில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட
உள்ள கலப்பு தேர்தல் முறை மலையக மக்களின் பிரதிநிதித்துவங்களை வெகுவாக பாதிக்க
செய்வதாக உள்ளது. இப்பாதிப்பில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள மலையக அரசியல் தலைவர்கள்
விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
மலையக மக்களின் அரசியல்
பிரதிநிதித்துவம், அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் குறித்து சரியான முன்வைப்புகள்
இடம்பெறவில்லை என்பதோடு இவை தொடர்பில் பேசப்படாதுள்ளன. ஆகவே இது ஒரு பேசுபொருளாக
மாற்றப்பட வேண்டும். புதிய தேர்தல் முறை குறித்து விழிப்புடன் செயற்படாது மௌனம்
சாதிப்போமானால் எதிர்காலத்தில் எமது சமூகம் பாரிய பின்விளைவுகளை சந்திக்க
வேண்டியேற்படும் என்றார்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...