காணி மற்றும் வீட்டுரிமை ஆகியன ஒரு தனி
மனிதனின் வாழ்க்கையிலும் அவனது சமூக மற்றும் குழு அடையாளத்திலும் (Social
and group identity) பெரிதும் செல்வாக்கு செலுத்தும் காரணியாக
காணப்படுகின்றது. மறுபுறமாக வீட்டுரிமை என்பது சர்வதேச ரீதியில் அடிப்படை மனித உரிமையாகவும்
மனித கௌரவத்தை ஏற்படுத்தும் ஒரு கூறாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை
நோக்கில் பார்க்கின்ற போது வீட்டுரிமை மற்றும் காணியுரிமை இன்மையானது பல அடிப்படை
மனித உரிமைகளை அனுபவிக்கத் தடையாக அமைகின்றது. இவை அபிவிருத்தி மற்றும் வறுமை
ஒழிப்பு என்பவற்றுக்கு அவசியமானதுடன் பல சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை அனுபவிக்கவும் திறவு கோலாக அமைகின்றது.
குறிப்பாக தனிவீடு என்பது தனிப்பட்ட
ஒருவரின் ஆளுமை மற்றும் இருப்பை பிரதிபலிப்பதில் பெரிதும் செல்வாக்கு செலுத்தியுள்ளது
என ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்களின்
வீடமைப்பு முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் லயன் வீடுகளில்
இருப்பவர்களை விட தனி வீடுகளில் வாழ்பவர்களின் ஆளுமை விருத்தி ஒப்பீட்டளவில் மேம்படுத்தப்படுவதாகக்
குறிப்பிடப்படுகின்றது.
அந்த அடிப்படையில் நோக்கும்போது தற்போதைய
குடியிருப்பு முறை, பெருந்தோட்ட மக்கள் மத்தியில் எண்ணப்பாங்கு
ரீதியான முரண்பாட்டையும் (Attitudinal conflict) தாழ்வு மனப்பாங்கையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். குறிப்பாக தனி வீட்டுச்சூழல்
சமூக அந்தஸ்து சமூக ஏற்புைடமை மற்றும் சமூக அடையாளம் என்பன உளவியல் ரீதியான மாற்றங்களை
தோற்றுவிக்கின்றன. மறுபுறமாக அது சமூக அசைவியக்கத்துக்கு வழி செய்கின்றது. அந்த
வகையில் இக்கட்டுரையானது பெருந்தோட்ட மக்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும்
வீடமைப்பு திட்டமானது பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்த
வேண்டும் என்பது குறித்த ஒரு சில விடயங்களை ஆராய்வதாக அமைகின்றது.
பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு என்பது
நீண்ட காலக் கனவு என்பதில் ஐயமில்லை. அந்த நீண்ட காலக் கனவு நிறைவேறும் தருணம்
கிட்டியுள்ளமை பெரிதும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். மலையக மக்களின் வாழ்க்கையில்
திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இதனை நோக்க முடியும்.
பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட
லயன் அறைகள் அப்போது தற்காலிக வதிவிடங்களாகவே கருதப்படுகின்றன. ஆயினும் அவை கால
ஓட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நிரந்தர வதிவிடங்களாகவே மாறின. இதற்கு தோட்டங்களை
முகாமை செய்த வெள்ளையர்களிடம் பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு திட்டம் காணப்படாமை மற்றும் இலாப
நோக்கத்தினைக் கொண்ட நிர்வாக மனோநிலை ஆகியன முக்கிய காரணங்களாகும். லயன் வாழ்க்கை
முறை பெருந்தோட்ட மக்களின் சமூக அடையாளத்திலும் அவர்கள் குறித்த வெளியுலக பார்வையிலும்
பெரிதும் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
ஆகவே புதிய வீடமைப்புத் திட்டமானது சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்பதில் கவனத்தில்
எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்களாக
அமைந்து விடக்கூடாது என்பது மனங்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக புதிய வீடமைப்பு,
அவர்களின் சமூக அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை
மாற்றியமைக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து அவசியமாகும்.
இன்று வீட்டுரிமை என்பது தனிப்பட்ட
வாழ்க்கை நடைமுறை மற்றும் சமூக ஊடாட்டம் என்பவற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக
மாறியுள்ளது. கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவ
சமூகத்தில் வீட்டுரிமை என்பது நாணய பெறுமதியினை (Exchange value) கொண்ட சொத்து எனக் குறிப்பிடுகின்றார். அது அவர்களிடத்தில் சொத்துரிமை என்ற எண்ணத்தை
ஏற்படுத்துகின்றது. மேலும் ஒரு தனி மனிதனின் சுய மதிப்பீட்டிலும் சுய மரியாதையிலும்
பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது. பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரை அவர்களுக்கெனத்
தனியான வீடு மற்றும் காணி உரிமை இன்மையானது அவர்கள் குறித்த மதிப்பீடு மற்றும் சுய
கௌரவத்தில் எதிர்மறையான எண்ணப்பாங்கினையே ஏற்படுத்தியுள்ளது.
தனியான வீட்டினை உரித்தாக்கிக்கொள்ளல்
என்பது ஏனையவர்களின் கட்டுப்பாடு மற்றும் அறிவுறுத்தல்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக
வாழ்வதற்கு வழி செய்கின்றது. மிக முக்கியமாக தமக்கான வீடொன்றில் உரித்துடன் வாழும்போது
தமக்கென ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மற்றும் தனிப்பட்டவர் என்ற வகையில் சுயபூர்த்தியினை
அடைந்து கொள்ள வேண்டும் முதலான மனப்பாங்கு உருவாகும்.
புதிய வீடமைப்புத் திட்டம் ஒட்டுமொத்த
பெருந்தோட்ட மக்களின் சமூக வாழ்விலும் அவர்கள் குறித்த முழு அடையாளத்திற்கும்
தோட்ட தமிழர்கள் (Estate Tamils) மாற்றத்தினை ஏற்படுத்துவதாக
அமைய வேண்டும். வீடு உணவு, உடை மற்றும்
வாழ்க்கை முறை என்பன ஒரு தனி மனித அல்லது குழு அல்லது சமூகம் குறித்த மதிப்பீட்டை
செய்வதிலும் அவர்களை அடையாளப்படுத்துவதிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.
வீட்டுரிமையுடன் பிறிதொரு முக்கிய விடயத்தினையும்
ஒப்பீட்டு நோக்கப்பட வேண்டும். அதன்படி பெருந்தோட்ட மக்களை பெரிதும் பாதிக்கும்
ஒரு பிரதான காரணி வறுமையாகும். ஆகவே வீட்டுரிமை வழங்குவதன் மூலம் அவர்கள் மத்தியில்
காணப்படும் வறுமை நிலையினை ஒப்பீட்டளவில் குறைக்க முடியும். வறுமைக்கு வெறுமனே
தொழில் மற்றும் வருமானம் மாத்திரம் செல்வாக்கு செலுத்துவதில்லை. அதனையும் தாண்டி
குறைந்த சுகாதார வசதிகள், கல்வி, வீடு, காணி, உரிமையின்மை, குடிநீர்,
அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான பாகுபாடு,
புறக்கணிப்பு, அரச நிர்வாக சேவை மறுக்கப்படல் ஆகியனவும் செல்வாக்கு செலுத்துகின்றன.
இவற்றை பொருளாதாரம் சாராத வறுமை (Non Ecnomic form of poverty) என அடையாளப்படுத்த முடியும்.
ஆகவே, தனி வீட்டுத்திட்டம் மற்றும் காணியுரிமை வழங்கப்படுகின்றமையானது
பெருந்தோட்ட மக்கள் வறுமையில் இருந்து ஓரளவு விடுபடுவதற்கு வழி செய்யும் என்பதில்
ஐயமில்லை. பொருளியல் நிபுணரான அமார்த்தியா சென் (1999) வறுமையை வெறுமனே வருமானம்
மற்றும் போசணை மட்டத்தினை அதிகரிப்பதன் ஊடாக மாத்திரம் மேற்கொள்ள முடியாது.
அது குறிப்பாக பிற்பட்ட சமூகங்களுக்கு
உரிமைத்துடமையினை வழங்கல் மற்றும் ஆற்றல் விருத்தி செய்தல் என்பவற்றிலேயே தங்கியுள்ளது
எனக்குறிப்பிடுகின்றார். இக்கருத்து பெருந்தோட்ட மக்களுக்கு பெரிதும் பொருத்த முடையதாக
இருக்கும். உண்மையில் இம்மக்களின் வறுமை நிலைக்கு வீடு காணியுரிமை இன்மை மற்றும்
தேசிய அபிவிருத்தி முழுமையாக உள்வாங்கப்படாமை உரிமை மறுப்பு பலயீனம் மற்றும் இயலாமை
என்பன முக்கிய காரணங்களாகும்.
எல்லாவற்றுக்கும் அப்பால் புதிய கட்டப்படும்
வீடுகள் போதிய வீட்டு வசதி என்ற தத்துவத்தை (adequate housing) உறுதி செய்வதாக அமைய வேண்டும். அன்றில் அவை மீண்டும் அவர்களை பழைய
வாழ்க்கை முறைமைக்குள் தள்ளுவதாக அமைந்து விடும். 1966 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
பொருளாதார சமூக கலாசார உரிமைகள் மீதான சர்வதேச மனித உரிமை சமவாயமானது (ICESCR)
போதிய வசதியுள்ள வீடு என்பது பற்றிக்கூறியுள்ள
கருத்துக்களை இங்கு கவனத்திற்கொள்வது அவசியமானது. போதிய வசதியுள்ள வீடு பின்வரும்
பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை சமவாயமானது (ICESCR) குறிப்பிடுகின்றது.
1. சட்டப்பாதுகாப்பு அல்லது சட்ட உறுதியை
வழங்கல்.
2. தேவையான சேவைகள் வளங்கள் மற்றும்
உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்தல்
3. வாழக்கூடிய சூழ்நிலைகளை கொண்டிருத்தல்
(குடும்ப அந்தரங்களை பேணிக்கொண்டு வாழக்கூடிய வசதி காணப்படல் வேண்டும்
4. அமைவிடமானது சகல தேவைகளையும் நிறைவு
செய்யக்கூடியதாக இருத்தல்
5. கலாசார விழுமியங்களை பேணக்கூடியதாக
இருத்தல்
6. சமமானது பாகுபாடற்றதுமான வீட்டு வசதியை
வழங்கல் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான தீர்மானம் எடுத்தலில் மக்களின் பங்கேற்பு
கருத்துக்களை உறுதி செய்தல் மிக முக்கியமான விடயமாகும்.
உண்மையில் மேற்கூறிய விடயங்கள் புதிய
வீடமைப்பு திட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட
ஒரு சில வீடமைப்பு திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியினை தராமைக்கு மேற்கூறிய விடயங்கள்
கவனத்தில் எடுக்கப்படாமை பெரிதும் செல்வாக்கு செலுத்தின என்ற யதார்த்தத்தினை மனங்கொள்ள
வேண்டும். அதே வழிமுறைகள் அல்லது உபாயங்கள் புதிய வீடமைப்பு திட்டத்தில் பின்பற்றப்படுமாயின்
அவை பெருந்தோட்ட மக்களின் சமூக அடையாளத்தை மாற்ற துணை புரியாது. மேற்கூறிய பண்புகளுக்கு
மதிப்பளித்து தனி வீடுகள் கட்டப்படுமெனில் அவை பெருந்தோட்ட மக்களின் மேல் நோக்கிய
நகர்வில் (Upward mobility) நேர்மறையான தாக்கத்தினை
ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எல்லாவற்றிற்கும் அப்பால் அரசாங்கம் பெருந்தோட்ட
மக்களின் வீட்டுரிமை மற்றும் காணியுரிமையினை மதிக்க வேண்டும். அதற்கிணங்க தேவையான
சட்ட நீதி நிர்வாக மற்றும் ஊக்குவிப்பு ஏற்பாடுகளை அல்லது சட்டகத்தை உருவாக்க
வேண்டும்.
இது தொடர்பில் மலையக அரசியல் தலைவர்களின்
தூரநோக்கு சிந்தனை மற்றும் அறிவுசார் அரசியல் செயற்பாடு அவசியமாகும். மேற்கொள்ளப்படும்
வீடமைப்பு திட்டம் வெறுமனே தேர்தல் கால பணியாக அமைந்து விடக்கூடாது. அது பெருந்தோட்ட
சமூகத்தின் நலன் மற்றும் கௌரவம் என்பவற்றை மனங்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.
கிடைக்க பெற்றுள்ள நல்ல சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி லயன் வாழ்க்கை முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க ஒருங்கிணைந்த அணுகு முறையினை மலையக அரசியல் தலைவர்கள் பின்பற்ற
வேண்டும். இதற்கு மலையக மக்களின் நலன் சார்ந்த செயற்படும் அனைவரும் பங்களிப்பு
செய்ய வேண்டும்.
இவ்விடத்தில் பிறிதொரு முக்கிய விடயத்தினை
குறிப்பிட வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினை
முழுமையாக 2003 ஆம் ஆண்டு தீர்க்கப்பட்ட போதும் அவர்கள் இன்னும் சமூக பிரஜாவுரிமையின்
(Social citizenship rights) பயன்களை அனுபவிக்க
முடியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக பிரஜாவுரிமையினை நான்கு முக்கிய பகுதிகளாக
பிரிக்கலாம். அவை அரசியல் சிவில் சமூக மற்றும் கலாசார பிரஜாவுரிமை என்பனவாகும். இதில்
அரசியல் பிரஜாவுரிமை என்பது அரசியல் சார்ந்த உரிமைகளையும் சிவில் பிரஜாவுரிமை என்பது
சிவில் உரிமைகளையும் கலாசார பிரஜாவுரிமை கலாசாரம் சார்ந்த உரிமைகளையும் வலியுறுத்துகின்றது.
மிக முக்கியமாக சமூக பிரஜாவுரிமை என்பது கல்வி சுகாதாரம் வீட்டுரிமை காணியுரிமை
போக்குவரத்து தொழில் ஓய்வூதியம் மற்றும் அரச பொதுச்சேவைகளை பெறுவதற்குள்ள உரிமையினை
வலியுறுத்துகின்றது. இவை சமூக உரிமைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதன் சமூக
பிரஜா உரிமையினை அனுபவிக்கும் பொழுதே ஏனைய சிவில் அரசியல் கலாசார உரிமைகளை அனுபவிக்க
முடியும் என்பது பல ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில் பார்க்கும்போது பெருந்தோட்ட
மக்கள் சமூக அபிவிருத்தியில் பின்னடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமூக
பிரஜாவுரிமையினை முழுமையாக அனுபவிக்காமையாகும். இதன் விளைவாக சிவில் அரசியல்
மற்றும் கலாசார உரிமைகளையும் பூரணமாக அனுபவிக்க முடியாதுள்ளனர். இதன் மூலம் சமூக
பிரஜாவுரிமைக்கும் ஏனைய சிவில் அரசியல் கலாசார உரிமைகளுக்கும் இடையில் நெருங்கிய
தொடர்பு உண்டு என்ற முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. சமூக பிரஜாவுரிமை விடயத்தில்
ஒரு சில முன்னேற்றங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள போதும் தேசிய அபிவிருத்தி
குறிகாட்டிகளுடன் ஒப்பிடும் போது பெரிதாக பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆகையால் தற்போதைய அரசியல்
தலைமைத்துவங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் பெருந்தோட்ட மக்களின்
சமூக பிரஜாவுரிமை குறித்த பெரியளவிலான கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கான நியாயப்பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏனைய பிரஜைகளை போன்று
பெருந்தோட்ட மக்களும் சமூக பிரஜா உரிமையினை அனுபவிக்க கொள்கை ரீதியான மாற்றங்களை
ஏற்படுத்த வேண்டும். அது முழுமையான பிரஜை (Complete citizen) என்ற அந்தஸ்துடன் மற்றும் சகல உரிமைகளுடன் வாழ வழி செய்யும் என்பது
திடமான நம்பிக்கையாகும். உண்மையில் பெருந்தோட்ட மக்களின் அரசியல் உரிமைகள்
குறித்து காட்டப்பட்ட அக்கறை சமூக உரிமை அல்லது சமூக பிரஜை உரிமை குறித்து
காட்டப்படாமை வருந்தத்தக்கது. பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை தொடர்பான பிரச்சினை
சட்ட பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னரும் தொடர்வதற்கு சமூக
பிரஜாவுரிமையின் பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளமையே முக்கிய காரணம்
என்பதனை மனங்கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி - 22.03.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...