Headlines News :
முகப்பு » , , , » "ராஜீவை கொலை செய்வதே எனது இலக்கு!" - ரோஹன விஜித முனி : என்.சரவணன்

"ராஜீவை கொலை செய்வதே எனது இலக்கு!" - ரோஹன விஜித முனி : என்.சரவணன்


இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை வருகை பற்றிய சிங்கள பௌத்த பேரினவாத தரப்பின் கதையாடல்களைக் கூர்ந்து கவனிக்கையில் ரோகன விஜித்த முனியின் கருத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. விஜிதமுனியின் கருத்தை இந்த சூழலில் அறிவதற்காக பல ஊடகங்கள் போட்டியிடுகின்றனர். அப்பேர்பட்ட இந்த விஜிதமுனி யார். இலங்கை வரலாற்றில் தவிர்க்கமுடியாத பாத்திரமாக ஆனது எப்படி? ஆம் 1987ஆம் ஆண்டு கடற்படை அணிவகுப்பின் போது இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய நபர் தான் அந்த விஜித முனி.


இந்தியாவுக்கு அவமானத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திய அந்த தீர்க்கப்படாத கலங்கம் ஏற்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. மோடியின் விஜயம் குறித்து விஜிதமுனி இப்படி கூறுகிறார்.
“மோடியின் வருகையை விரும்புகிறேன். அவர் ஒரு நல்ல மனிதர். விருச்சிக நட்சத்திரத்தை சேர்ந்தவர் அவர். அப்படியானவர்கள் நேர்பட பேசுபவர்கள். மோடி பதவிக்கு வருவார் என்பதை எனது சோதிட அறிவின் மூலம் எப்போதே கூறிவிட்டேன். ஆனால் எங்களது இறைமையைப் பாதிக்கும் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். எங்கள் நாடு சுதந்திர நாடு. எமது நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிகாரம் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடையாது.”

87இல் நடந்ததென்ன
இலங்கையின் இனப்பிரச்சினையத் தீர்ப்பதற்கென்று இந்தியா 80களில் இலங்கைக்கு கொடுத்து வந்த நெருக்கடியின் விளைவு; இறுதியில் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒப்பந்தத்தை செய்துகொண்டன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இரு நாடுகளும் இணைந்து மாகாணசபை முறையைத் திணித்தன. அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 29 யூலை 1987ம் அன்று செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தமிழர்களை திருப்திபடுத்தாதது போலவே சிங்களவர்களையும் திருப்திபடுத்தவில்லை.


ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அடுத்த நாள் 30ஆம் திகதியன்று ராஜீவ் காந்தி இந்தியா திரும்புமுன்னர் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பின் போது படையணிக்கும் ராஜிவுக்கும் இடையில் 2 அடி தூரமே இருந்தது. அதன் போது கடற்படை அணியை சேர்ந்த விஜித்த ரோகன விஜேமுனி; தான் பிடித்திருந்த துப்பாக்கியின் பின்பகுதியால் அனைவர் முன்னிலையிலும் ராஜீவை திடீரென்று தாக்க - ராஜீவோ தற்செயலாக குனிந்துகொள்ள- ராஜீவின் தோள்பட்டையில் பலத்த அடி விழுந்தது. சற்று முன்னே ஓடி தப்பி பின்னர் திரும்பி பார்த்த ராஜீவ் காந்தியை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனமாக அழைத்துச் சென்றனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப இந்த சம்பவம் காண்பிக்கப்பட்டது.

இந்தியாவைக் கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது மட்டுமன்றி இந்திய மக்களின் கடும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியது இந்த நிகழ்வு.

வாக்குமூலம்
தனது 20 வது வயதில் 1985 இல் படையில் இணைந்துகொண்ட விஜேமுனி வடமராட்சி போரில் கலந்து கொண்ட நபர். குடும்பத்தில் இரு சகோதரர்களும் இராணுவத்தை சேர்ந்தவர்கள். ஒரு சகோதரன் யுத்தத்தில் கையை இழந்தவர். சமீபத்தில் விஜேமுனி மவ்பிம (23.07.2006) பத்திரிகை பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார்.

 “இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக சிறிலங்காவை இணைத்துவிட்டார்கள் என்று நினைத்தேன். எமது போரை நிர்மூலமாக்கி எங்களை எளிதில் வெற்றி கொண்டுவிட்டார் ராஜீவ். அவருக்கு வரவேற்பளிக்கப்பட்ட சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்து இரத்தம் கொதித்தது. என்னால் அந்த தொலைக்காட்சிப் பதிவுகளை தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை.
யூலை 30 அன்று நான் விரைவாக தயாராகி பேரூந்தில் ஏறி அரச தலைவர் மாளிகைக்குச் சென்றேன்.

அணிவகுப்பு மரியாதைக் குழுவில் இணைந்து கொண்டேன்.

நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது ராஜீவ் மட்டும் அதைச் செய்யாது இருந்திருந்தால் இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதத்தை அப்போதே நாம் அழித்திருப்போம்.

ராஜீவ் காந்திக்கு வணக்கம் செலுத்தி அந்தப் பாவச் செயலில் என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

கடற்படை தளபதி ஆனந்த டி சில்வா ராஜீவுக்கு பின்னால் இருந்தார்.

நான் இடதுபுறத்திலிருந்து 3 ஆம் நபராக நின்றிருந்தேன்.

என்னால் நீண்ட நேரம் பொறுமை காத்திருக்க முடியவில்லை.

ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.

நான் முன்நகர்ந்து ராஜீவை கடுமையாகத் தாக்கினேன். அது பலமான தாக்குதல். ஆனால் அத்தாக்குதல் விலகிச் சென்றுவிட்டது.

நான் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன். ராஜீவைக் கொல்வதே எனது இலக்கு.


ஆனால் அவர் மற்றொரு பக்கம் திரும்பியதால் மயிரிழையில் உயிர்தப்பிவிட்டார்.

ராஜீவின் பாதுகாவலர்கள் என்னை அங்கேயே தாக்கினர். மைதானத்தில் விழுந்துவிட்டேன். அதன் பின்னர் என்னை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். தாக்கினார்கள்.

அதேபோல் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் என்னிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

நீதிமன்றில் நிறுத்தப்பட்டேன். 1987 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் இராணுவச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. வெலிக்கடை சிறையில் எனக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அந்த காலப்பகுதியில் இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி போராட்டம் நடத்தினோம். எம்மீது துப்பாக்கி சூட்டும் நடத்தப்பட்டு காயப்பட்டேன்.”

சிங்கள தேசத்தின் கதாநாயகன்
இன்றும் விஜேமுனி சிங்கள பௌத்தர்களின் கதாநாயகன். ஒரு முன்னுதாரணத்துக்காக எதிர்காலத்தில் ராஜீவை தாக்கிய அந்த துப்பாக்கி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என்று கூட கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. மாகாண சபைக்கு எதிரான முதலாவது கலகம் ரோகன விஜேமுனியின் துப்பாக்கியிலிருந்து தொடங்குகிறது என்று சிங்கள தரப்பில் கூறப்படுவதுண்டு. 87இல் ஆயுதம் தாங்கிய ஜே.வி.பி மறுபுறம் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல வன்முறைகளை மேற்கொண்டிருந்தது. எனவே ஜே.ஆர். அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியே மேற்கொண்டிருந்தது. ரோகன விஜேமுனியின் மீதான முதற்கட்ட விசாரணையை ஜே.வி.பி.யின் சதி என்கிற கோணத்திலேயே மேற்கொண்டிருந்தது அரசாங்கம்.


6 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டபோதும் இரண்டரை வருடங்களில் அதாவது 04.04.1990 அன்று ஜனாதிபதி பிரேமதாசவினால் “ஜனாதிபதி மன்னிப்பின்”பேரில் விடுவிக்கப்பட்டார் விஜேமுனி. “நான் பதவிக்கு வந்ததும் விஜிதவுக்கு மன்னிப்பு வழங்குவேன் என்று கூறியிருந்தார் ஜனாதிபதி பிரேமதாச. அதன்படி அவர் செய்தார்” என்று ரிவிர (05.12.2011) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விஜேமுனி தெரவித்திருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் பிரேமதாச. அதுபோல இந்தியப் படையை “ஆக்கிரமிப்புப் படை” என்று அறிவித்ததுடன், இந்தியப்படை வெளியேற வேண்டும் என்று காலவரை விதித்தவர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு விஜேமுனியால் மட்டும் அவமானம் ஏற்படவில்லை அதன் பின்னர் பிரேமதாசவாலும் மேற்கொள்ளப்பட்ட மோசமாக அவமானம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் பிறேமதாசவால் விஜேமுனிக்கு அளிக்கப்பட ஜனாதிபதி மன்னிப்பு இந்தியாவுக்கு மேலும் ஆத்திரத்தையே ஊட்டியிருந்தது.

சிறைமீண்ட விஜேமுனிக்கு சிங்கள பௌத்த இனவாத சக்திகள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். 1994இல் அப்போதைய பேரினவாத கட்சியான “சிங்களயே மகா சமமத்த பூமி புத்திர பக்ஷய” எனப்படும் சிங்கள மண்ணின் மைந்தர்களின் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விஜேமுனி அதன் பின்னர் சிஹல உறுமய கட்சியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். தற்போது ஐ.தே.க கட்சியில் இருக்கும் விஜேமுனி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது.

இன்றுவரை 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருபவர்களில் விஜேமுனி முக்கியமானவர். மாகாணசபை முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்று அணிதிரளும் இனவாத சக்திகள் விஜேமுனியை தமது மேடைகளில் இணைத்துகொள்கின்றனர். 2013ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் மாகாண சபை முறையை நீக்குமாறு கோரியும் பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சேர்ந்து “தேசிய இயக்கங்களின் ஒன்றிணைவு” என்கிற அமைப்பு போராட்டங்களை நடத்தின. அந்த மேடைகளில் விஜேமுனி முக்கிய பேச்சாளர்.

நான் அன்று ராஜீவைத் தாக்கவில்லை அந்த ஒப்பந்தத்தையே தாக்கினேன் என்று பிறிதொருமுறை விஜேமுனியால் தெரிவிக்கப்பட்டிருந்தது.


சிறையிலிருந்து விஜேமுனி தனது தாய்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் இப்படி இருக்கிறது..

“இந்த நாசகர ஒப்பந்தத்தில் நானும் ஒரு பங்காளியாக இருக்க விரும்பவில்லை அம்மா. நாளை பிரபாகரன் வடக்கு கிழக்கின் முதலமைச்சரானால் எங்கள் பொடியன்களைக் கொன்ற பிரபாகரனுக்கு இது போலவே இராணுவ மரியாதையை அளிக்க நேரிடும் என்று பயந்தேன். இலங்கை இந்தியாவின் 26 வது மாநிலமாக ஆகிவிடும் என்று சிலர் எச்சரித்தார்கள். நான் சிறைச்சாலை சாப்பாடு உண்ணுவதற்காக கவலைப்படவில்லை. எனது இலக்கு தவறி விட்டதற்காவே வருந்துகிறேன்.”
(லங்காதீப பத்திரிகையில் ராஜீவ் தாக்கப்பட்ட 25 வருட நினைவு சிறப்பிதழில் வெளியான நேர்காணல் 30.07.2012)

ராஜீவ் காந்தி தாக்கப்பட்டு 25வருட நினைவை சிங்கள ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல ஆக்கங்களை 2012 இல் வெளியிட்டிருந்தன. அந்த ஆக்கங்களையும் முன்னர் வெளியிடப்பட்ட பல செய்திக்கட்டுரைகளையும் தொகுத்து அதே 2012 ஆண்டு விஜேமுனியால் “தாய்மண்ணே வணக்கம்” என்கிற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் விஜேமுனியின் மீதான வழக்கு விசாரணை குறித்த வாதங்களும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் உள்ளன. அவற்றில் சில குறிப்புகள்
“ஜோர்ஜ் புஷ்ஷுக்கு சப்பாத்தினால் தாக்கியவர்கள் என்னிடம் இருந்துதான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்” (சியத்த – 28.12.2008)
“நான் அரசுக்கு துரோகமிழைத்திருக்கலாம். ஆனால் தேசத்துக்கு துரோகமிழைக்கவில்லை.” (ரன்திவ – 01.04.2012)
விஜேமுனி தற்போது புறக்கோட்டையில் ஒரு கடையை நடத்தி வருகிறார். சிறையில் கற்றுக்கொண்ட சோதிடமே விஜேமுனியின் தற்போதைய தொழில். இலங்கையில் பிரபல சோதிடராக ஆகியிருக்கும் விஜேமுனியின் சோதிட நிகழ்ச்சிகளை பிரபல தொலைக்காட்சிகள் காண்பித்து வருகின்றன. சோதிடத்தின் மூலம் விஜேமுனி கூறும் அரசியல் எதிர்வுகூறலுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மகிந்தவின் தோல்வி, மைதிரிபாலாவின் வெற்றி குறித்து தொலைக்காட்சியில் வெளியான விரிவான சோதிட விளக்கங்கள் யூடியூப் எங்கிலும் காணக்கிடைக்கின்றன. தனது புறக்கோட்டைக் கடையில் நீண்ட காலமாக பாட்டு கசட், சீடிக்களை விற்பனை செய்துவருகிறார் விஜேமுனி. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் கடும் இந்திய எதிர்ப்பாளரான விஜேமுனியின் சீடி கடையில் அதிகம் விற்பனையாவது இந்திய இந்திப் பாடல்களே.

ராஜீவ் காந்திகொலைக்கு தமிழர்களுடன் கணக்கு தீர்த்துக்கொண்ட இந்தியா, ராஜீவ் மீதான தாக்குதல் அவமானத்தை இன்னமும் சுமந்தபடி தான் 27 வருடங்களின் பின்னர் பிரதமரை அனுப்பி வைத்திருக்கிறது. தாக்கிய நபர் மிகவும் சுதந்திரமாகவும் இறுமாப்போடும் ஒரு சிங்கள பௌத்தர்களின் வீரனாக ஆகியிருக்கிறார். இலங்கை அரசோ குறுகிய காலத்தில் மன்னிப்பு வழங்கி விடுவித்ததுவிட்டதுடன் ஆசியையும் வழங்கியிருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மாகாண சபை கூட கொடுக்கக்கூடாது என்பதில் விஜேமுனி உறுதியாக இருப்பதுடன் அதற்காக தன்னை முழு அளவில் ஈடுபடுத்தியும் வருகிறார்.

இணையத்தளமொன்றில் வெளியான விஜேமுனியின் நேர்காணல் ஒன்றுக்கு சிங்கள வாசகர் ஒருவர் இப்படி பின்னூட்டமொன்றை இட்டிருந்தார்
“நல்லவேளை ராஜீவ் விஜேமுனி கையால் சாகவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைய வரலாறு தலைகீழாக மாறியிருக்கும். தமிழ்நாட்டில் வைத்து தமிழரால் கொல்லப்பட்டதால் தான் இந்தியா தமிழருக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் இருந்து யுத்தம் நமக்கு சாதகமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates