இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்துபோய் இருக்கின்றார். அவர் இலங்கையில் தங்கி இருந்த காலப்பகுதியில் அரசியல் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டதோடு வடக்கிற்கும் அநுராதபுரத்திற்கும் சென்று முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கின்றார். எனினும் மலையக பகுதிக்கும் மோடி விஜயம் செய்வார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இது சாத்தியப்படாமல் போயுள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மோடி மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டதாகவும் கருத்துக்கள் மேலெழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசியாவில் இந்தியா ஒரு பலம் பொருந்திய நாடாக விளங்குகின்றது. அண்மைக்காலத்தில் இந்தியா பல்வேறு துறைகளிலும் கண்டுள்ள துரித வளர்ச்சியானது பலரையும் பிரமிக்கச் செய்திருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் ஆளுமை சிறப்பித்துக் கூறப்படுகிறது. அதிலும் மோடி பிரதமரான கையுடன் இந்தியா குறித்த உலகின் எதிர்பார்ப்புக்கள் பன்மடங்கு மேலேழுந்து காணப்படுகின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும். சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக உயர்வடைந்தவர் மோடி. எளிமையான போக்குடைய மோடி நாட்டு மக்களின் தேவைகளையும் இன்ப துன்பங்களையும் நன்கறிந்தவர். இந்திய இளைஞர்கள் மோடியின் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்திருந்தனர். மோடியின் வெற்றிக்கு இளைஞர்களின் வகிபாகமும் கணிசமாக இருந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்தியா என்ற நாட்டின் பெருமைமிக்க ஒரு தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது குறித்து ஊடகங்கள் சிறப்பித்து செய்திகளை வெளியிட்டு இருந்தன. அவரது வருகை இலங்கையின் அபிவிருத்தியிலும் மேன்மையிலும் மேலான பங்களிப்பை செலுத்தும் என்ற எண்ணம் நாட்டு மக்களிடையே வேரூன்றிக் காணப்பட்டது. இலங்கை – இந்திய உறவினை வலுப்படுத்தும் பின்னணியில் அவரது இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தது. 1987க்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த நிகழ்வாகவும் மோடியின் விஜயம் அமைந்திருந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மோடி தனது இலங்கை விஜயத்தின் ஒருகட்டமாக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். இதன்போது இலங்கையின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் இந்தியாவுக்கு அதிமுக்கியமானவை என்பதனை சற்று ஆழமாகவே வலியுறுத்திப் பேசியிருந்தார். மேலும் சமஷ்டிக் கூட்டுறவில் தனக்கிருக்கும் நம்பிக்கை பொருளாதாரத்தின் பாரிய வளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் தனது உரையில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இலங்கையும் இந்தியாவும் நான்கு முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டுள்ளன.
13க்கு அப்பால் செல்லவேண்டும் என்று தெரிவித்த மோடி, நல்லிணக்கத்துக்கு உதவுவதாகவும் உறுதியளித்திருந்தார். மேலும் ரயில் பாதைகளை தரமுயர்த்துவதற்கு 318 மில்லியன் டொலர்களை இந்தியா வழங்கவும் உடன்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியிலான தீர்வு, சம்பூர் அனல் மின்நிலையத்தின் மூலம் இலங்கையின் மின் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், அநுராதபுரம், மன்னார் போன்ற இடங்களுக்கு சென்ற மோடி முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தமையும் தெரிந்த விடயமாகும்.
மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய வுள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில் அவர் மலையகப் பகுதிகளுக்கு நிச்சயம் விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் நிலைமைகளை அவதானித்து அறிந்துகொள்வார் என்றும் மலையகத்தின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்ப்புக்கள் மேலோங்கிக் காணப்பட்டன. இதனடிப்படையில் குறிப்பாக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படுகின்ற நிலையில் இவ் வைத்தியசாலையை பார்வையிட மோடி வருகை தருவார் என்று கூறப்பட்டது. இவ்வைத்தியசாலைக்கு மகாத்மா காந்தி வைத்தியசாலை என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
மேலும், மாத்தளையில் அமைக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபம் அமைக்கும் பணி இந்திய அரசின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது. இதனைப் பார்வையிட மோடி வருகை தரவுள்ளதாகவும் மக்களிடையே எதிர்பார்ப்புக்கள் மேலோங்கி காணப்பட்டன. அத்தோடு, இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நான்காயிரம் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு இந்திய பிரதமர் மோடி மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக மலையக அரசியல்வாதிகள் சிலர் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனினும், மோடி மலையகப்பகுதிகளுக்கு விஜயம் செய்யாத நிலையில் அவரது பாராளுமன்ற உரையிலும் மலையக மக்கள் தொடர்பாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்டுப் பேசவில்லை. இது மலையகத்தை சார்ந்த பலருக்கும் வருத்தமளிக்கும் ஒரு விடயமாக அமைந்தது. இதேவேளை, மலையக மக்கள் தொடர்பாக, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் உரியவாறு முன்வைப்புகளை மேற்கொள்ளாமை மோடியின் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணமென்னும் சிலர் விசனம் தெரிவிப்பதையும் கேட்கக் கூடியதாக உள்ளது.
மோடியின் வருகைக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ராஜ் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் மோடியின் இலங்கை விஜயம் குறித்து விரிவாக இதன்போது ஆராய்ந்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். மலையக அரசியல்வாதிகளும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசி இருந்தனர். முன்னாள் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தின் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூதுக்குழுவினர் சுஷ்மாவை சந்தித்துப் பேசியிருந்ததையும் அறிந்திருப்பீர்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களை நில உடைமை சமுதாயமாக மாற்றுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இதன்போது முத்து சிவலிங்கம் தலைமையிலான தூதுக்குழுவினர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியிருந்தனர். கல்வி, கலை, கலாசார மேம்பாட்டுக்கு இந்தியாவின் உதவித்தேவையின் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை மலையக மக்கள் குறித்து ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை அமைச்சர்களான இராதாகிருஷ்ணன், திகாம்பரம், வேலாயுதம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளித்திருந்தனர். மலையக மக்களுக்கு தனிவீடுகள், தனியான பல்கலைக்கழகம், ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை பெறுதல், தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்தல், குடிசை கைத்தொழிலை ஆரம்பித்தல், உயர்கல்விக்கான இந்திய புலமைப்பரிசில் அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மகஜரே சுஷ்மாவிடம் கையளிக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மலையக அரசியல்வாதிகள் அனைவரும் சுஷ்மா சுவராஜிடம் சந்தித்துப்பேசிய அல்லது முன்வைத்த விடயங்கள் அனைத்தும் இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். எனினும், இந்நிலை சாத்தியப்படவில்லை என்பதையே மோடியின் பாராளுமன்ற உரை மற்றும் அவரது மலையக விஜய புறக்கணிப்பு என்பன எடுத்துக்காட்டுவதாக பலரும் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.
இதற்கிடையில் மோடியின் இலங்கை விஜயத்தின் போதும் இ.தொ.கா.வும் ஏனைய மலையக அரசியல்வாதிகளும் மோடியை சந்தித்துப் பேசி, மலையக மக்களின் நிலைமைகள், தேவைகள், எதிர்காலப் போக்குகள் என்பன குறித்து விளக்கிக் கூறியிருந்தனர். தேர்தல் மாற்றத்தால் மலையக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாய நிலை, வீடமைப்பு, கல்வி மற்றும் தொழிற்கல்வி என்பன குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மோடியிடம் வலியுறுத்து இருக்கின்றது.
இதேவேளை, அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலாயுதம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட குழுவினரும் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இப்பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கின்றார். இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், வீட்டு வசதி, காணியுரிமை, கல்வி, சிசு மரணம், சுகாதாரம் என்பன பலவற்றில் இந்திய வம்சாவளி மக்களின் பின்தங்கிய நிலைமைகள், இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியாவுக்குள்ள வகிபாகம் உள்ளிட்ட பல விடயங்கள் மோடியின் கவனத்துக்கு இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சந்திப்பின்போது தமிழர் ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ள மோடி, இலங்கை மலைநாட்டில் தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கு இருபதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவியளிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து சாதகமாக பரிசீலிப்போம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் மலையகத்தில் வாழும் பின்தங்கிய இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் இப்போது திரட்டி வருகின்றோம். எனது இந்த இலங்கை பயணத்தின் போது எமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நாம் ஆய்வு செய்வோம் என்றும் மோடி தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறெனினும் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகள் தேவைகள் குறித்து மோடி விரிவாக தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். மோடி பாராளுமன்றத்தில் மலையக மக்களைப் பற்றி பேசவில்லை. மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யவில்லை என்பது ஒரு பெரும் குறைபாடேயாகும் என்பதை பலரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அவர் மலையக பகுதிக்கு விஜயம் செய்வதில் சிரமங்கள் இருந்ததாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மோடி மனோகணேசன் குழுவினருக்கு புதுடில்லிக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மோடி மலையகப் பகுதிக்கு விஜயம் செய்யாமை குறித்து முக்கியஸ்தர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் பின்வருமாறு அமைகின்றன.
பி.இராஜதுரை பாராளுமன்ற உறுப்பினர்
மோடி இந்திய வம்சாவளியினர் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றாதது ஒரு பெரும் குறையாகும். இதற்கு மோடியை குறை சொல்வதை விட மலையக அரசியல்வாதிகள் எந்தளவுக்கு முக்கியமான தகவல்களை சுஷ்மா சுவராஜ் மற்றும் மோடி சந்திப்பின் போது முன்வைத்திருந்தார்கள் என்பது கேள்விக்குறியேயாகும். மோடியின் வருகையை உறுதிப்படுத்துவதற்கும் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை விளக்கவும் சுஷ்மாவின் இலங்கை விஜயம் உந்து சக்தியாக இருந்தது. மலையக அரசியல்வாதிகள் நல்லெண்ணமாக சென்று சுஷ்மாவை சந்தித்தார்களா? அல்லது உண்மையாக மலையக மக்களின் பிரச்சினைகள் தேவைகள் என்பவற்றை எடுத்துக்கூறி பரிகாரம் தேட முனைந்தார்களா என்பதில் சந்தேகம் உள்ளது.
மோடியை குறை சொல்வதை விட மலையக அரசியல்வாதிகளையே நொந்துகொள்ள வேண்டி இருக்கின்றது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நலன்காக்கும் அமைச்சு இந்தியாவில் உள்ளது. இது தொடர்பாக கூட பேசப்படவில்லை. எனவே மலையக மக்கள் தொடர்பான சரியான கருத்து மோடியை சென்றடையாததாலேயே அவர் மலையகம் குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது எனது கருத்தாகும்.
திருமதி சாந்தினி சந்திரசேகரன் - தலைவி மலையக மக்கள் முன்னணி
இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் மோடியின் கவனத்துக்கு உரிய வகையில் கொண்டு செல்லப்படவில்லை.மோடி சகல விடயங்களிலும் தெளிவான ஒரு அரசியல் தலைவராக இருக்கின்றார். வட பகுதிக்கு சென்று அம்மக்களின் பிரச்சினைகளை கலந்தாலோசித்தார். எனினும் தொப்புள் கொடி உறவான இந்திய வம்சாவளியினரை அவர் அணுகவில்லை. மலையக மக்கள் தொடர்பான விளக்கத்தை உரியவாறு வழங்கி இருந்தால் அவர் மலையகம் வந்திருப்பார் மோடிக்கு மலையக விஜயத்தின் அவசியம் உணர்த்தப்பட்டிருத்தல் வேண்டும்.
இது சாத்தியப்படவில்லை. எஸ். அருள்சாமி இ.தொ.கா உபதலைவர்
அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்ற அமைச்சர்களின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடே மோடியின் மலையக விஜய புறக்கணிப்பிற்கு ஏதுவாகும். இந்திய வெளியுறவு அமைச்சு இந்திய தூதரகம் ஊடாக மலையக பிரச்சினைகளை மோடியின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பின் மோடி மலையகம் வந்திருப்பார். இந்திய தூதரகத்தின் அசமந்த போக்கும் மோடியின் மலையக விஜயத்திற்கு தடையாகும். தூதரகமும் தனது செயற்பாட்டை மறந்துவிட்டது. இ.தொ.கா கடந்த காலத்தில் அரசின் பங்காளியாக இருந்த போது இத்திட்டம் முக்கியஸ்தர்கள் இலங்கை வந்த போது அவர்களை மலையகத்திற்கு அழைத்து வந்து பிரச்சினைகளை கூறி உரிய உதவிகளை பெற்றுக் கொடுத்தது இன்று அது சாத்தியப்படவில்லை. அரசின் பங்காளி அரசியல்வாதிகள் கடமை தவறிவிட்டனர். இதற்கு அவர்களே பதில் கூற வேண்டும்.
எஸ்.இராஜரட்ணம் முன்னாள் - மாகாண சபை உறுப்பினர்
மலையக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதிலிருந்து விலகிச் செல்ல கூடாது. மோடி இது குறித்து சிந்திக்க வேண்டும். மலையகத்திற்கு மோடி வராதது ஒரு பெரும் குறைபாடேயாகும். இது மிகப் பெறும் தவறு வடக்கு நிலைவரம் தொடர்பில் மோடியின் நிலைப்பாட்டை பாராட்டுகிறோம். அதே கரிசனையை மலையக விடயத்திலும் மோடி காண்பிக்க வேண்டும் என்றார்.
எவ்வாறெனினும் மோடி மலையகத்தை புறக்கணித்த நிலையானது தந்தை பிள்ளைகளை புறக்கணித்த ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. மோடி தொப்புள் கொடி உறவை துண்டித்து விட்டாரா என்று சந்தேகம் மேலேழுப்புகிறது இனியும் இப்படி நிலைமை ஏற்படக்கூடாது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...