Headlines News :
முகப்பு » , » தனிச் சிங்கள தேசிய கீதம் : சிங்களமயமாக்களின் நீட்சி!!? - என்.சரவணன்

தனிச் சிங்கள தேசிய கீதம் : சிங்களமயமாக்களின் நீட்சி!!? - என்.சரவணன்

 

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இனவாத அணிகள் களமிறங்கியுள்ளன. தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்ததைத் தொடர்ந்து இந்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. எதிர்த்தவர்களுக்கு பதிலடியாக அரச தரப்பு கூறும்போது ஏற்கெனவே தமிழில் பாடப்பட்டுக்கொண்டிருந்த தேசிய கீதத்தை 2010இல் இனவாத மகிந்த அரசு தடை செய்தது. அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும். அதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமில்லை.” என்றது.

சிங்கள தேசிய முன்னணி, ராவணா பலய, சிங்கள ராவய, பொதுபல சேனா, போன்ற அமைப்புகளும், விமல் வீரவங்ச (தேசிய சுதந்திர முன்னணி), உதய கம்மன்பில (பிவிதுரு ஹெல உறுமய) போன்ற இனவாத அணிகளும் வெளிப்படையாக அரசின் இந்த முடிவை எதிர்த்தும் கண்டித்தும் வருகின்றன.  ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரை தமிழில் தேசிய கீதம் பாடுவது அரசியலமைப்பை மெரும் செயல் என்று கூறி வந்த ஜாதிக ஹெல உறுமய இம்முறை பகிரங்கமாக கருத்து வைப்பதை தவிர்த்து வருகிறது. பெரும்பாலான் சிங்கள சமூக வலைத்தளங்கள் இதனை பெரிதாக ஊதிப்பெருப்பித்து வருவதுடன் மோசமான இனவாத பொய்களையும் பரப்பி வருகின்றன. தமிழில் ஏதோ இத்தனை காலம் இல்லாமல் இப்போது தான் தேசிய கீதம் பாடப்படப் போவதாக அவை பிரச்சாரம் செய்கின்றன. சமூக வலைத்தளங்களில் சிங்களத்தில் கடும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒரு வாரமாக சகல சிங்கள ஊடகங்களிலும் செய்திகள், கட்டுரைகள், விவாதங்கள் என மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருக்கிறது தேசிய கீத சர்ச்சை.

இலங்கையில் நீண்டகாலமாக இனவாதத்தை மக்கள்மயப்படுத்துவதில் தலைமைப்பாத்திரம் ஆற்றி வரும் சிங்கள நாளிதழான திவின பத்திரிகையில் 22.03.2015 தலையங்கத்தில் “தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை மிகவும் அசிங்கமான முறையில் கேலி செய்திருந்தது. தேசிய கீதத்தை ரெப் செய்து பாடி கசிப்பு குடித்துக்கொண்டு ஆடுவதை இவர்கள் பல்லின சுதந்திரம் என்று கூறினால் நாங்கள் சத்தமின்றி இருக்கவேண்டும்” என்கிறது.

அதே பத்திரிகையில் பிரபல இனவாதியான பேராசிரியர் நளின் டி சில்வாவின் வாராந்த பத்தியில் இப்படி குறிப்பிடுகிறார்
“...தமிழர்களுக்கு இப்படி கப்பம் கொடுக்காவிட்டால் மீண்டும் யுத்தத்தை தொடக்கிவிடுவார்கள் என்று சொன்னது எவன்...? இலங்கையின் சுதந்திரத்துக்காக இந்த தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழ் வெள்ளாள மேட்டுக்குடியினர் சிங்களத் தேசியவாதத்துக்கு எதிராகவு சிங்கள கலாசாரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்துக் கொண்டவர்கள். தமிழ் இனவாதத்தை தோற்கடிக்க நமக்கு நிறைவேற்று ஜனாதிபதிமுறையை தக்கவைத்துக்கொள்வது அவசியம்...”
ஏற்கெனவே அவர் “இந்த நாடு பிளவு படாமல் காக்க வேண்டுமென்றால் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் தான் இருக்க வேண்டும்” என்று கட்டுரை எழுதியிருந்தார் (திவய்ன – 10.03.2013)

தேசிய கீதத்தின் வரலாறு
தேசிய கீதத்தின் வரலாற்றுக் காலப்பகுதியை இப்படி வகுக்கலாம்
  • 1948 வரையான ஆங்கிலேயர் காலம் “God save the queen” 
  • 1948 – 1951 தேசிய கீதம் அற்ற காலம்
  • 1952 – 1961 நமோ நமோ மாத்தா
  • 1961யிலிருந்து – ஸ்ரீ லங்கா மாத்தா
1948ஆம் ஆண்டு சுதந்திரமடையும் வரை இலங்கையின் தேசிய கீதம் “god save the queen” என்று தொடங்கும் பிரித்தானிய தேசிய கீதமே இலங்கையின் தேசிய கீதமாக இருந்தது. உலகின் பல நாடுகளின் தேசிய கீதமாகவும் அதுவே இருந்தது. அனைத்து பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலும் “கடவுள் அரசியைக் காக்கட்டும்” எனும் அந்த தேசிய கீதமே பாடப்பட்டது.

1949இல் முதலாவது சுதந்திர தின விழாவின் போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டதற்க்கான சான்று இது. இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான அறிவித்தல்


1948 பெப்ரவரி 4அன்று பாடுவதற்காக தேசிய கீத தெரிவுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஆனந்த சமரகோன் 1940இல் இயற்றியிருந்த “நமோ நமோ மாதா”வும் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அது தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் அந்த தெரிவுக்குழுவை சேர்ந்த பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க ஆகிய இருவர் தயாரித்திருந்த “ஸ்ரீ லங்கா மாத்தா – பாளா யச மஹிமா” எனும் பாடலே சுதந்திர தினமன்று பாடப்பட்டது. அப்பாடலை தேசிய கீதமாக அங்கீகரிக்கவில்லை குழுவினர். 1949ஆம் ஆண்டு முதலாவது சுதந்திர தின நினைவின் போது எந்த கீதமும் உத்தியோகபூர்வமாக தெரிவாகாத நிலையில் “ஆனந்த சமரகோனின் “நமோ நமோ மாத்தா” பாடப்பட்டது. முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே தமிழிலும் இது பாடப்பட்டுவிட்டது. 1950இலும் இது தான் காலிமுகத்திடலில் தேசிய கீதமாக பாடப்பட்டது

சி.டபிள்யூ கன்னங்கரவினால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிரதியையும், தமிழ் பிரதியும்  சேர்.ஒலிவர் குணதிலக்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தேசிய கீதமாக 1951ம் ஆண்டு நவம்பர் 22ம்திகதி பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றது.

தமிழில் இதன் மொழிபெயர்ப்பை செய்தவர் அப்போதைய பிரதி கல்வி அமைச்சர் கெ.கனகரத்தினம் என்கிற ஒரு ஊகம் இன்னமும் நிலவுகிறது. ஆனால் 1958இல் புலவர் நல்லதம்பி இறந்தபின்னர் அவர் குறித்த கல்வெட்டு நினைவு நூலிலும் தேசிய கீதத்தை தமிழ்படுத்தியவர் புலவர் நல்லதம்பி என்றே இருக்கிறது. ஆனால் உத்தியோகபூர்வ குறிப்புகளில் கெ.கனகரத்தினத்தின் பெயரே உள்ளது.

1955 பெப்ரவரி 4ம்திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இக்கீதத்தை தமிழில் மீனா,சங்கரி ஆகியோர் பாடியிருந்தனர். 

1956இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் கூட தமிழ் தேசிய கீதம் தடுக்கப்படவில்லை.

1970ம் ஆண்டு பதவியேற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின் நியமிக்கப்பட்ட விசேடகுழுவொன்றின் விசாரணையின் பின் தமிழ்மொழியில் தேசிய கீதம் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது. அதுமட்டுமன்றி 1975ம் ஆண்டில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ் பாடசாலை நூல்களில் தேசிய கீதம் தமிழில் இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் முன்னைய தமிழ் பதிப்பில்கூட தேசிய கீதம் ” ஸ்ரீலங்கா தாயே” என்றிருக்கிறது.

எழுபதுகளில் வட- கிழக்கு எங்கும் இத் தேசிய கீதத்தை ஆக்கிரமிப்பு கீதமாகவே கருதி வந்தார்கள் தமிழ் மக்கள். இதன் காரணமாக பாடசாலைகளிலும் கூட்டங்களிலும் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ் வாழ்த்துப்பாடல் பாடி வந்தனர் என்பதும் முக்கியமானது.

பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரண்டாவது ஈழ யுத்தம் ஆரம்பமானதன் பின் அன்றைய அமைச்சர் வீ.ஜெ.மு. லொகுபண்டாரவின் ஆணையின் பேரில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட்டு அதன் இசை மாத்திரம் ஒலிபரப்பப்பட்டது. 1994 ஒகஸ்டில் ஆட்சிக்கு வந்த தற்போதைய சந்திரிகா அரசாங்கம் அதையும் மாற்றி தமிழ் சேவை ஒலிபரப்பு முடிந்ததன் பின் சிங்களத்திலேயே தேசிய கீதத்தை ஒலிபரப்பும் வேலையை செய்தது.

1995 செப்டம்பர் 22 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த ஒரு அரச நிகழ்வில் தமிழிலும் பாடப்பட்டதைத் தொடர்ந்து அதில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் நாடளாவிய ரீதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது அரசியல் சர்ச்சையை உருவாக்கியது. அது குறித்து விசாரணை நடத்தபோவதாக அன்றைய தொடர்புசாதன அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார் (லங்கா தீப 7.9.95). தமிழில் தேசிய கீதம் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக ஹிக்கடுவ பிரதேச சபை பிரேதச உறுப்பினர் ஒருவர் அந்த பிரதேச சபைக் கூட்டத்திற்கு வரும்போது ஜட்டியைத் தவிர தனது ஆடைகளைக் களைந்தபடி வந்தார்.


90களில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிராக போர் தொடுத்தவர் கங்கொடவில சோம ஹிமி. 90களில் மாத்திரமல்ல இன்றும் இனவாத சக்திகளுக்கு அவர் ஒரு ஞானத்தந்தை (God father). அவர் அப்போது TNL தொலைகாட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்புடன் நடத்திய விவாதத்தில் தேசிய கீதம் பற்றி அஷ்ரப்பை வம்புக்கிழுத்தார்.

சோம ஹிமி:"உலகில் எங்காவது பெரும்பான்மை மொழி தவிர்ந்த மொழிகளில் தேசியகீதம் உண்டா?"
அஷ்ரப்:"எனக்கு தெரியாது"
சோம ஹிமி:"உலகில் எங்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் கிடையாது... பெரும்பான்மை இனத்துடன் அனுசரித்து ஏனைய இனங்கள் நடந்துகொள்ள வேண்டும் "

இப்படி தொடர்கிறது இந்த வாதம். இன்னும் மோசமான பொய்களையும், புனைவுகளையும் எந்தவித தயக்கமுமின்றி சோம ஹிமி கூறியதை அருள்வாக்காக இன்றும் பல சிங்களவர்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கின்றார்கள்.

2009இல் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் 11.12.2010 மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியன பற்றிய அமைச்சரவைப் பத்திரம் இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டுமென்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு நீக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இந்த பத்திரத்தை பரிந்துரைத்தவர் பொதுநிர்வாக உட்துறை அமைச்சர் W.D.J.செனவிரத்ன. இதற்கு சிங்கப்பூரை முன்மாதிரியாக காட்டப்பட்டிருந்தது. பல்லினங்கள் வாழும்  சிங்கப்பூரில் ஒரே மொழியில் அந்த தேசிய கீதம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அந்த தேசிய கீதம் அங்கு வாழும் சிறுபான்மை மொழியிலேயே இயற்றப்பட்டிருப்பத்தையும், அங்கு வாழும் 75வீத பெரும்பான்மை சீனர்களின் மொழியில் அது இல்லை என்பதையும் வசதியாக மறைத்துவிட்டனர். விமல் வீரவங்ச போன்றோர் தனிச்சிங்கள தேசிய கீதத்தை வற்புறுத்தியிருந்தார்கள். 300 மொழிகள் பேசப்படும் இந்தியாவில் இந்தி மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் இலங்கையில் இரு மொழிகளில் அதனைப் பாடத் தேவையில்லை என்று மகிந்த கூறியதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 

இதற்கிடையில் சிங்கள தேசிய கீதத்தை தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த வலிகாமம் வலய துணைக் கல்விப்பணிப்பாளர் மாணிக்கம் சிவலிங்கம் (வயது 54) உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து 26.12.2010 இரவு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பலர் மறந்திருக்க மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெமட்டகொட விபுலானந்த தமிழ் மகா வித்தியாலய அதிபர் கல்வி திணைக்கள அதிகாரிகளால் எச்சரிக்கை செய்யப்பட்ட செய்தி பல ஊடகங்களிலும் பார்த்தோம். அதிபர் சண்முகானந்தன் துணிச்சலாக அதனை எதிர்கொண்டிருந்தார். ஏனைய தமிழ் பாடசாலை அதிபர்கள் பலர் தமது சொந்த பாதுகாப்பு நலன் கருதி அப்படி முன் வர முடியவில்லை.

பல மொழிகள் பேசும் மக்களையுடைய இந்தியாவில் இந்தி மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாக பேரினவாத தரப்பில் கூறப்படுகிறது. ஆனால்,அதுவல்ல உண்மை. இந்தியாவில் பாடப்படும் தேசிய கீதமான ”ஜனகனமன” கீதம் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலமோ அல்ல. அது ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட பெங்காலி மொழிப்பாடல் என்பதுதான் உண்மை.

இதில் உள்ள அவலம் என்னவென்றால் சாதாரண சிங்கள மக்களில் பலர் தமிழில் இத்தனை காலம் தேசிய கீதம் பாடப்பட்டு வந்ததே அறியாது இருந்தனர். தமிழ் – சிங்கள உறவு எவ்வளவு இடைவெளியுடன் இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

இலங்கையின் பல செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் படித்த ராயல் கல்லூரியில் ஆங்கிலத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டு வருவதை எவர் எதிர்த்திருக்கிறார்கள்.

மார்ச் 20ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலேயே இது குறித்து முறைபாடுகள் கடுமையாக நிலவின. அதெப்படி தமிழில் தேசிய கீதம் இருக்க முடியும் என்றார்கள் சிலர். அப்படி இருந்தால் என்ன தப்பு. அதுவும் ஏற்கெனவே அரசியலைப்பில் தான் அது இருக்கிறதே என்றும் இந்த விவாதங்கள் தொடர்ந்தன.

வாசுதேவ நாணயக்கார அரசியலமைப்பின் பக்கங்களைக் கூட எடுத்துக் காட்டினார். “இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பு” அத்தியாயம் 1இல் 7வது பிரிவில் இப்படி கூறுகிறது.
“இலங்கை குடியரசின் தேசிய கீதம் “ஸ்ரீ லங்கா தாயே” என்பதாக இருத்தல் வேண்டும் : அதன் சொற்களும் இசையமைப்பும் மூன்றாம் அட்டவணையில் தரப்பட்டவாறாக இருத்தல் வேண்டும்”
(பாராளுமன்றச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அரசியலமைப்பில்)
ஆக தமிழில் பாடப்படுவது அரசியலமைப்புக்கு விரோதமானது என்பது பச்சைப்பொய். சட்டவாக்கத்தை மேற்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களே அடிப்படை அரசியலமைப்பைப் பற்றி தெரியாது இருக்கின்றனர். சிலர் வசதியாக மூடி மறைக்கின்றனர்.

உலகில் பன்மொழி தேசிய கீதம்
ஒரு நாட்டில் ஒரு மொழியில் மாத்திரம் தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிற தர்க்கம் முன் வைக்கப்பட்டு வருகிறது. வேறெந்த நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் இல்லை என்கிற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்சு, டொச்சு, இத்தாலியன், ரோமன்சு) உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஐந்து மொழிகளில் ஒரே பாடலில் உள்ளது. கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் உள்ளன. இதைவிட பெல்ஜியம், சுரினாமி, நியுசீலாந்து, பெரு, பிலிப்பைன்ஸ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதத்தை உத்தியோகபூர்வமாக வைத்திருக்கும் இப்படி பல நாடுகளைக் காணலாம். அந்த நாடுகளிலெல்லாம் இப்படி வாடகைக்கு வீட்டைக் கொடுத்துவிட்டு பல்பை மாத்திரம் பறித்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.

தேசபக்தியைத் தராத கீதம்
எதற்கெடுத்தாலும் இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில் இருப்பதாக கூறும் பேரினவாதம், அந்த இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு குறைந்தபட்ச சமஷ்டி ஆட்சியதிகாரம் வழங்கியிருப்பதை வசதியாக மறைத்துவிடுகிறது. 

தமிழ்மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாதிருந்த 1956-1987 தனிச்சிங்கள காலத்தில் கூட தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. ஆனால் தமிழ்மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளபோது தமிலுள்ள தேசிய கீதத்தை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முரண்நகையாக உள்ளன. வடக்கு கிழக்கு பகுதிகளில் 30 வருடங்களாக தமிழில் கூட தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

தேசிய கீதம் என்பது நாட்டுப்பற்றை உணர்வுபூர்வமாக நெஞ்சிலிருத்தும் ஒரு ஓர்மம் மிக்க கீதம். அதனைப் புரியாத ஒரு மொழியில் எப்படி திணிக்க முடியும். போரின் பின்னர் பேரினவாதம் தமிழர்களிடமிருந்து ஒவ்வொன்றாக பிடுங்கி இறுதியில் பெயரளவில் மிச்சமிருந்த தேசிய கீதத்தையும் பறித்துக் கொள்ளப் பார்க்கிறது. தமிழர்களைப் பொறுத்தளவில் அது இருந்து தான் என்ன... இல்லாவிட்டால் என்ன என்கிற நிலை தான். தமிழில் தேசிய கீதத்தை பாட அனுமதித்து விட்டால் மாத்திரம் இலங்கையர் என்கிற தேசப்பற்று தமிழர்களுக்கு கிடைத்து விடுமா என்பது வேறு கதை. தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய சின்னங்கள் என அனைத்தையுமே சிங்களமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே இந்த தனிச் சிங்கள தேசிய கீதம்.

பல ஆண்டுகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு இந்த ஆட்சி முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இன்னும் பல தலைமுறைக்கும் கடத்துமா. அல்லது சிங்களமயப்படுத்தலை நிறைவேற்றும் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழில் பாடப்படுவதற்கு தடை விதிக்குமா என்பதே இன்றைய கேள்வி. அல்லது உங்கள் தேசிய கீதத்தை உங்கள் மொழியிலேயே வைத்துக்க்கொள்ளுங்கள் எங்களுக்கான சொந்த தேசிய கீதத்தை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம் என்று தமிழ் மக்கள் மீண்டும் சிங்கள தேசத்துக்கு அறிவிக்கும் காலம் விரைவிலேயே வந்துவிடுமா என்று பார்ப்போம்.



ஆனந்த சமரகோனின் தற்கொலைக்கு காரணம் தேசிய கீதம்!!!?பிறப்பால் கிறிஸ்தவரான வில்பிரட் அல்விஸ் சமரகோன் 13.01.1911இல் பாதுக்கவில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், 1931 இல் இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து, பயிற்சி பெற்றார். 1934இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ரவீந்தரநாத் தாகூரின் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகளை பார்த்தும் கேட்டும் தாகூரின் படைப்பாற்றல் மீது மோகம் கொண்ட சமரக்கோன் இசை மற்றும் ஓவியம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இந்தியாவின் சாந்தி இல்லத்திற்குச் சென்று அங்கே ரவீந்திரநாத் தாகூர், நந்தலால்போஸ் ஆகியோரிடம் இசை மற்றும் ஓவியம் ஆகியவற்றைப் பயின்றார். நாடு திரும்பியபின் 1937இல், தனது முன்னோரின் மதமான பௌத்தத்துக்கு மாறினார், பெயரையும் ஆனந்த என்று மாற்றிக்கொண்டார்.
தேசிய கீதம் பற்றி முன்மொழியும்படி அறிவிக்கப்பட்டபோது ஆனந்த சமரகோன் எழுதி வெளியிட்ட “கீத குமுதினி” எனும் கவிதைத் தொகுப்பில் உள்ள ‘நமோ நமோ மாதா’ பாடலை தேசிய கீதத் தெரிவுப் போட்டிக்கு அனுப்பி வைத்தார் மனைவி சுவர்ண டி சில்வா. 1940ஆம் ஆண்டு அதனை வெளியிட்ட அச்சக உரிமையாளரான ஆர்.கே.டபிள்யூ. ஸ்ரீவர்தனவிற்கு அச்சுக் கூலியை கொடுக்க முடியாத நிலையில், சமரக்கோன் தனது பதிப்புரிமையை அவரிடம் கையளித்தார். நமோ நமோ மாதா தெரிவு செய்யப்பட்ட போது அதன் உரிமை சமரகோனிடம் இருக்கவில்லை.
தான் எழுதிய நமோ நமோ என்கிற தேசிய கீதம் அமங்கலமான ‘ந’ எனும் எழுத்தில் தொடங்குவது அபசகுனமானது என்றும், நாட்டுக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்றும் ஒரு பிரிவினர் வாதிட்டதில், ஸ்ரீ லங்கா மாதா என்னும் வரி முதல் வரியாகச் 01.02.1961இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதை சமரக்கோன் வன்மையாக எதிர்த்ததுடன் தனது அனுமதியின்றி மாற்றியமையை எதிர்த்ததுடன் மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த கீதத்தை வெளியிட்ட அச்சகத்திற்கு பணம் கட்ட வழியில்லாத நிலையில் அதன் பதிப்புரிமையை அந்த அச்சகத்துக்கு வழங்கியிருந்தார். எனவே தேசிய கீதத்தின் பதிப்புரிமை ஆனந்த சமரகோனிடம் இருக்கவில்லை. அச்சகத்திடமிருந்தும் அரசாங்கம் 2500 ரூபாவுக்கு வாங்கியிருந்தது. எனவே அவரால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இது குறித்து பல விமர்சனங்களையும் அவர் எழுதியிருக்கிறார். இலங்கையின் இசைத்துறைக்கு பெரும் சேவை செய்தவர். ஆனால் ஒரே மகனின் அகால மரணத்தைத் தொடர்ந்து இந்தியாவில் சில காலம் வாழ்ந்தார். அவரின் ஓவியக் கண்காட்சிகள் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. 
தனது 51 வது வயதில் ஏப்ரல் 5, 1962 அன்று அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மூடியிருந்த கதவைத் தட்டியும் எழும்பாதிருந்தமையால் கதவை உடைக்க வேண்டியிருந்தது. கூடுதல் நித்திரை மாத்திரைகளை எடுத்ததால் மரணம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. தனது கீதம் எவ்வாறு உருக்குலைக்கப்பட்டது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் டட்லி சேனநாயக்கவுக்கு முறையிடும் கடிதம் ஒன்று மேசையில் கிடந்தது.
அந்த பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்து அவர் இப்படி கூறுகிறார் “இந்தப் பாடலை எழுத என் நாட்டு மீது எனக்கு ஏற்பட்ட ஆழமான பாசமும், பற்றுதலுமே காரணமாக அமைந்தது. இந்த வரிகளை எழுதுவதற்கு முன் சிந்தித்தவாறு அறையில் அங்கும் இங்கும் நடத்து கொண்டிருந்தேன். இரவு பத்து மணியளவில் அறையின் விளக்கை அணைத்துவிட்டு, கட்டிலில் சாய்ந்துவாறு இருட்டில் இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை என்னை அறியாமலே நித்திரை கொண்டு விட்டேன். அவ்வேளை கனவில் வந்தது போல் வார்த்தைகளும், அதற்கேற்ற ஸ்வரங்களும் என் மனதில் தோன்றியது. மறுநாள் காலை எழுந்து பாடலை இயற்றினேன்’. என்றார். 
அப்படிப்பட்ட ஆனந்த சமரகோன் நிம்மதியின்றி மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் “அவர்கள் எல்லோரும் சேர்ந்து என் தலையை பிடுங்கிவிட்டு வேறொரு தலையை பொருத்திவிட்டார்கள்” என்று புலம்பினார். 
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ரைம்ஸ் ஒப் சிலோன்' பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். 
“எனது கீதத்துக்கு தலையை வெட்டி விட்டனர். அது அந்த பாடலை மட்டும் அழிக்கவில்லை. அதை எழுதியவரின் வாழ்க்கையும் அழித்துவிட்டது. நான் விரக்தியிலுள்ளேன். என் இதயம் நொறுங்கிவிட்டது. ஒரு அப்பாவி கவிஞனுக்கு இப்படியெல்லாம் செய்யக் கூடிய நாட்டில் வாழ்வது துரதிஷ்டமே'. சாவதே நல்லது''
நன்றி - தினக்குரல்

20ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய கீதம் பற்றி எழுந்த சர்ச்சை குறித்து சரிநிகரில் என்.சரவணன் எழுதிய கட்டுரையின் இணைப்பையும் இத்துடன் இணைத்திருக்கிறோம். http://sinhalese.blogspot.no/2009/02/blog-post.html


கார்டூனிஸ்ட் அவந்த ஆர்டிகல தேசிய கீதம் பற்றிய சர்ச்சை குறித்து வரைந்தவை


ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
Share this post :

+ comments + 3 comments

பல மொழிகள் பேசும் மக்களையுடைய இந்தியாவில் இந்தி மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாக பேரினவாத தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அதுவல்ல உண்மை. இந்தியாவில்; பாடப்படும் தேசிய கீதமான ”ஜனகனமன” கீதம் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியோ அல்லது இணைப்பு மொழியான் ஆங்கிலமோ அல்ல. அது ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட பெங்காலி மொழிப்பாடல் என்பதுதான் உண்மை.

அது சரி... இலங்கையின் தேசிய கீதம் இலங்கை எனும் தேசத்துக்கு சொந்தமானதா? அல்லது சிங்களத்திற்கு சொந்தமானதா...?
#என்.சரவணன்
(சரிநிகர்- இதழ்-88 -11-12-95)

இன்று காலை குழந்தைகளுடன் கொழும்புமுகத்திடலில் தேசிய தினத்தை வேடிக்கை பார்க்க ஆஜரானேன். அணிவகுப்பு மாரியாதைகள் முடிந்த பின்னர் தேசிய கீதத்தை நமது பிரதேசத்தின் ஏதோ ஒரு சிங்களப் பாடசாலையின் மாணவியர் பாடினர். பொருத்தமான அளவான தொனியில் இசை வழங்கப்பட்டது. குழல், வயலின், தப்லா இத்தியாதிகளே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். திடலில் நின்றிருந்த அனைவரும் பெரும்பாலும் கீதம் முடியும்வரை இயல்பான ஆற்றொழுக்குப் போன்ற அந்த தாள லயத்தில் கட்டுண்டு நின்றனர் என்பதே பொருத்தம்.

வழமையான "போர்முரசு" தாள லயத்தில் (ட்ரம், ட்ரம்பெட், இத்தியாதிகளுடன்) விறைப்பாக நின்று நாமும் ராணுவத்தினர் போல பாசாங்கு பண்ணிக்கொண்டு பாடல் முடியும் வரை நிற்கவேண்டி இருக்கவில்லை. இலங்கையின் தேசிய கீதத்தின் அமைப்பு, எளிமையான வரிகள், தாளக் கட்டு, மற்றும் இசை வல்லுனர்கள் மட்டுமே அற்றிந்த சங்கதிகளின் சிறப்பம்சம் அது தான். இந்தப் பாடலை இரு வகையிலும் பாட முடியும். (2009 க்குப் பின்னர் அந்த வகை தேசிய கீதம் தூக்கலாகவே இருந்து வந்தது)

தமிழைப் போன்று சிங்களத்திலும் வரிக்கு வரி எனக்கு மனப்பாடம். இன்று ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வெழுச்சியில் தேசிய கீதம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பெரும் அவஸ்தையில் உழன்றேன் என்பதை மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடிகிறது! அவ்வளவு அழகாக மனதைத் தொடும் வகையில் அமைந்திருந்தது.

சிறுபான்மை சோனகரின் தேசபக்தி பேதி என்று நண்பரொருவர் பதிவிட்டிருந்தார். இலங்கையில் சிறுபான்மையினர் இம்மாதிரியான தேசிய நிகழ்வுகளில் ஒட்டி - ஒட்டாமல் இருப்பது ஒரு வெளிப்படையான உண்மை. அதை மறைக்கத் தேவையில்லை!

இப்போ விஷயத்துக்கு வருகிறேன். காலையில் என்னை வருத்திய அந்த இனம்புரியாத கொம்ப்ளெக்ஸ் உணர்வெழுச்சியின் போது ஏனோ தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரக்கோன் என் நினைவில் பளிச்சிட்டு மறைந்தார். சரவணனின் இந்தக் கட்டுரையை முழுமையாய் வாசித்த போதுதான் விபரம் புரிந்தது.

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்

இந்த வரிகளை நான் சிங்களத்தில் கேட்டுப் பொங்கிய போது ஆனந்த சமரக்கோனின் ஆவி எள்ளலோடு வந்து ஒரு பரிதாபப் பார்வையோடு வந்து என்னைத் தழுவிச் சென்றிருக்கலாம்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates